*கும்ம என்றால் மேக மூட்டமா?*
பிறை தொடர்பான வாதங்கள் வரும்போதெல்லாம் பேசப்படும் முதல் ஹதீஸ்
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ النَّبِيُّ ﷺ أَوْ قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ ﷺ " صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ "
புகாரீ 1909. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இதுதான்...
இதில் சர்ச்சைக்குரிய கும்ம (ghumma) எனும் வார்த்தை இல்லை. குப்பிய (ghubbiya) எனும் வார்த்தை வந்துள்ளது. இதற்கு மேகமூட்டம் என்றும் பொருளே இல்லை. எனினும் மேக மூட்டம் என்று மொழிபெயர்க்கிறோம். ஏன் இவ்வாறு செய்கிறோம் என்பதை பின்னர் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம். மேலும் மேகமூட்டம் மட்டுமே பிறையை மறைக்கும் என்றும் நாம் வாதிடுகிறோம்.
இவ்விருவாதங்களில் இருக்கும் பிழைகளுக்கு செல்வதற்கு முன்பு இந்த சிக்கலுக்கான மூல காரணத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மேக மூட்டம் மட்டுமே பிறையை மறைத்து வைக்கிறது எனும் சிந்தனையே மற்ற அனைத்து பிழைகளுக்கும் காரணம். முதலில் பிறையை மறைப்பது எது என்று விளங்க வேண்டும்.
*மறைப்பது எது?*
இரவில் நாம் காணும் விண்மீன்களை பகலில் நாம் பார்ப்பதில்லை. சூரியன் பகலில் உதித்து இரவில் மறைவதைப் போல விண்மீன்களும் இரவில் உதித்து பகலில் மறைகின்றனவா? இல்லை. இதற்கான காரணத்தை நாம் பள்ளியில் படித்தும் மறந்துவிட்டோம். நாம் பகலில் பார்க்கும் வானத்திலும் விண்மீன்கள் உள்ளன ஆனால் பூமியை சுற்றியுள்ள வளிமண்டலத்தால் சூரிய ஒளி சிதறடிக்கப்படுகிறது. விண்மீன்களில் இருந்து வரும் ஒளியை விட வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்ட ஒளி மிகைத்திருப்பதால் நம்மால் விண்மீன்களை பார்க்க முடியவில்லை. நிலவிலிருந்து சூரியனையும் விண்மீன்களையும் பகலிலேயே ஒருசேர பார்க்க இயலும். வளிமண்டலம் இல்லாததே இதற்குக் காரணம்.
தமிழ்நாடு முழுவதுமாக நாம் பிறை தேடுகிறோம். பிறை தெரியாத மாதங்களில் தமிழ்நாடு முழுவதிலும் மேக மூட்டம் இருக்குமா? சில மாதங்களில் இலங்கையிலும் பிறை தெரியவில்லை தமிழ்நாட்டிலும் பிறை தெரியவில்லை கேரளாவிலும் பிறை தெரியவில்லை இந்தியா முழுவதும் பிறை தெரியவில்லை உமானிலும் பிறை தெரியவில்லை எனும் செய்திகளை நாம் பார்க்கிறோம். இந்த அனைத்து இடங்களிலும் ஒரு சேர மேக மூட்டமிருக்குமா?
மேகம் மட்டுமே பிறையை மறைப்பதாக நினைப்பது அறியாமை ஆகும். பிறையை மறைக்கும் முதல் காரணி விண்மீனை மறைத்த அதே வளிமண்டலம் ஆகும். சற்று சிந்தித்துப் பாருங்கள். சூரியன் மறையும் முன்னரும் அந்த பிறை வானில்தான் இருந்தது. ஆனால் நம் கண்களுக்கு தெரியவில்லை. சூரியன் மறைந்த உடனே நமக்கு பிறை தெரிகிறதா என்றால் அப்போதும் தெரியவில்லை. சூரியன் மறைந்து 20 நிமிடங்களுக்கு பிறகு அடிவானம் லேசாக இருட்டிய பிறகுதான் நம் கண்களுக்கு பிறை தெரிகிறது. எனில் அவ்வளவு நேரம் பிறையை மூடி வைத்திருந்தது மேகமா? இல்லை! பிறையை மறைத்து வைத்திருந்தது வளிமண்டலத்தின் ஒளிச்சிதறல் ஆகும்.
வானம் தெளிவாக இருக்கும் சில நாட்களில் நம்மால் பிறை பார்க்க முடிவதில்லை. இதற்கு காரணம் சூரியன் மறைந்த பிறகு அடிவானத்தில் இருக்கும் வெளிச்சத்தை தாண்டி நம் கண்களுக்கு காட்சியளிக்கும் அளவுக்கு பிறை வளரவில்லை என்பதாகும். போதிய அளவுக்கு வளராத பிறையை சூரியன் மறைந்த பிறகும் அடி வானில் உள்ள வெளிச்சம் மிகைத்துவிடும். அடிவானத்தின் வெளிச்சம் மறையும் முன்னர் நிலவு மறைந்துவிடும். அந்நாளில் பிறையை பார்க்கவே முடியாது.
வளிமண்டலமே இல்லாமல் இருந்திருந்தால் பட்டப்பகலில் காலையில் தேய்பிறை உதிப்பதையும் மதிய வேளையில் அமாவாசை நடப்பதையும் சூரியன் மறையும் முன்னரே பிறையையும் நாம் பார்த்திருப்போம். மெல்லிய பிறையை ஒளிச்சிதறல் மூலம் மறைப்பது வளிமண்டலமே. மேகம் கூட வளிமண்டலத்தில்தான் மிதக்கிறது. வளிமண்டலம் தான் பிறையை மறைக்கிறது.
*மேகமூட்டம் என்று சொன்னால் மேக மூட்டமும் இல்லாமல் பிறையும் தெரியாத நிலையில் நாம் என்ன செய்வது?*
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَيَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَابْنُ، حُجْرٍ قَالَ يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرُونَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ جَعْفَرٍ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ، دِينَارٍ أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، - رضى الله عنهما - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً لاَ تَصُومُوا حَتَّى تَرَوْهُ وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ إِلاَّ أَنْ يُغَمَّ عَلَيْكُمْ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدِرُوا لَهُ ".
முஸ்லிம் 1964. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளா(கவும் இருக்)கும். எனவே, பிறையைப் பார்க்காமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். உங்களுக்கு (வானில்) மேகமூட்டம் தென்பட்டால் தவிர, பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். அவ்வாறு உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் எனில் மேகமூட்டம் தென்படவேண்டும் என்று மேலுள்ள ஹதீஸ்கள் சொல்கின்றன. குறிப்பாக முஸ்லிம் 1964 சொல்வதைப் பாருங்கள் மேகமூட்டமாக இருந்தால் மட்டுமே மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டுமாம்.
நமக்கு பிறை தெரியாமல் போன எல்லா மாதங்களிலும் தமிழ்நாடு முழுவதிலும் மேகமூட்டம் இருப்பதில்லை நாம் பிறை தேடும் நாளில் பிறை தெரியாமல் போயுள்ளது, அதே வேளையில் மேகமூட்டமும் தெரியாமல் இருந்துள்ளது. ஆனால் நாம் 30 ஆக பூர்த்தி செய்துள்ளோம். எதை நாம் நபி வழி என்று சொன்னோமோ அதற்கு இது முரணில்லையா? மேகமூட்டம் இருந்தால்தானே 30 ஆக பூர்த்தி செய்யவேண்டும்?
கும்ம என்ற வார்த்தை ஹதீஸில் இல்லாவிட்டால்கூட மேகமூட்டம் என்று மொழிபெயர்ப்பதே இதற்குக் காரணம்.
“சரியாக விளங்கிக்கொண்டிருந்த ஆரம்ப கால முஸ்லிம்கள்”
பிறை தொடர்பான சர்ச்சைகளுக்கு முக்கிய காரணம் ஆரம்ப கால முஸ்லிம்களிடையே இருந்த வானவியல் அறிவு பிற்காலத்தில் குறைந்து கொண்டே சென்றதுதான். எடுத்துக் காட்டுக்கு. மனாசில் என்று குர்ஆனில் (10:5 & 36:39) இரண்டு இடங்களில் வரும் வார்த்தை. சஹாபாக்கள் உட்பட ஆரம்ப கால முஸ்லிம்கள் இதனை நட்சத்திர கணக்கீடு என்று சரியாக விளங்கி இருந்ததை ஹதீஸ்களிலும், அகராதிகளிலும், வரலாற்றிலும் காண முடிகிறது. ஆனால் பிற்கால முஸ்லிம்களுக்கு வானவியல் அறிவு குறையவே வளர்ந்து தேயும் சந்திர கலைதான் மனாஸில் என்று விளங்கிவிட்டனர். அது போலவே கும்ம என்றால் மறைக்கப்படுதல் என்றுதான் ஆரம்ப கால முஸ்லிம்கள் விளங்கி இருந்தனர். பிற்கால முஸ்லிம்களின் ஆர்வமினையின் காரணமாக அது மேகமூட்டமாக மாறிவிட்டது.
قَالَ فَكَانَ ابْنُ عُمَرَ إِذَا كَانَ شَعْبَانُ تِسْعًا وَعِشْرِينَ نُظِرَ لَهُ فَإِنْ رُؤِيَ فَذَاكَ وَإِنْ لَمْ يُرَ وَلَمْ يَحُلْ دُونَ مَنْظَرِهِ سَحَابٌ وَلاَ قَتَرَةٌ أَصْبَحَ مُفْطِرًا فَإِنْ حَالَ دُونَ مَنْظَرِهِ سَحَابٌ أَوْ قَتَرَةٌ أَصْبَحَ صَائِمًا . قَالَ فَكَانَ ابْنُ عُمَرَ يُفْطِرُ مَعَ النَّاسِ وَلاَ يَأْخُذُ بِهَذَا الْحِسَابِ .
(நாஃபிஉ) கூறினார்: ஷஅபான் 29 வந்துவிட்டால் இப்னு உமர் பிறையை பார்ப்பதற்காக ஒருவரை அனுப்புவார். பிறை தெரிந்தால் அதன்படியே (நோன்பிருப்பார்). பிறையும் தெரியவில்லை மேகமும் தூசு மண்டலமும் இல்லை என்றால் நோன்பு வைக்க மாட்டார். மேகமோ தூசியோ தடுத்தால் நோன்பு வைப்பார். இப்னு உமர் மக்களுடன்தான் நோன்பை விட்டு பெருநாள் கொண்டாடுவார். (ஷவ்வாலில்) இந்த கணக்கை அவர் பின்பற்றமாட்டார்.
அபூ தாவூத் 2320
இது இப்னு உமர் (ரலி) அவர்களின் வழிமுறை. மேகம் தான் பிறையை மறைக்கும் என்று அவர்கள் விளங்கி இருக்கவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது.
*மேகமூட்டம் என்று மொழி பெயர்த்தால் பொருள் இல்லாமல் தொங்கி நிற்கும் வாகன கூட்டம் ஹதீஸ்*
"மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை" என்பது பிரபலமான வாகனக் கூட்டம் ஹதீஸின் ஆரம்ப வாசகம் ஆகும். இந்த ஹதீஸின் அறிவிப்புகளில் கும்ம மற்றும் உக்மிய என இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
غُمَّ عَلَيْنَا هِلَالُ شَوَّالٍ
أُغْمِيَ عَلَيْنَا هِلاَلُ شَوَّالٍ
இதை ”மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை“ என்று நாம் மொழிபெயர்த்துவிடுகிறோம். இதற்குக் காரணம், பிறையை மறைப்பது மேகம் மட்டும்தான் எனும் சிந்தனைதான் என்றால் மிகையில்லை. ஆனால், இலக்கண அடிப்படையில் இவ்வாறு பொருள் கொள்ளவற்கு இயலாது என்பதே உண்மை.
غُمَّ عَلَيْنَا هِلَالُ شَوَّالٍ
"மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை" என்பது இதற்கு நாம் கொடுக்கும் மொழிபெயர்ப்பு.
இங்கே கும்ம-வுக்கு மேகமூட்டம் என்று பொருள் கொண்டு விட்டோம், ஆனால் “காரணமாக” மற்றும் “தென்படவில்லை” ஆகிய வார்த்தைகள் மூலத்தில் இல்லை. கருத்தை வரவைப்பதற்காக திணிக்கப்பட்ட வார்த்தைகள் இவை.
a) غُمَّ = கும்ம
b) عَلَيْنَا = எங்களுக்கு
c) هِلَالُ = பிறை
d) شَوَّالٍ = ஷவ்வால்
கும்ம என்பதற்கு மேகமூட்டம் எனும் பொருளைக் கொடுத்துக்கொண்டே இதை வாசகமாக அமைப்பதானால்...
'ஷவ்வாலின் பிறை எங்களுக்கு மேகமூட்டமிடப்பட்டது' என்றுதான் வாசகமாக மாற்றமுடியும். இப்படி வாசகத்தை அமைக்கும்போது அது இலக்கணப்படி அர்த்தமற்றதாக ஆகிவிடும். ஏனென்றால், கும்ம (غُمَّ) என்ற வார்த்தை ஒரு வினைச்சொல் (Verb) ஆகும். இதற்கு 'மேகமூட்டம்' என்று பெயர்ச்சொல்லாக பொருள்கொள்ள முடியாது.
இலக்கணப்படி இதை வாசகமாக அமைப்போம்...
கும்ம (غُمَّ) என்ற வார்த்தை ஒரு வினைச்சொல். மேலும், அது 'செயல்பாட்டு வினை' வடிவத்தில் இங்கே வந்துள்ளது (Passive Voice).
இது, 'செயல்வினை' (Active Voice) என்பதன் எதிர்ப்பதமாகும்.
அரபு மொழியின் செயப்பாட்டு வினைக்கும் தமிழ் மொழியின் செயப்பாட்டு வினைக்கும் பாரிய வேறுபாடு உள்ளது. “ஜமீல் பூனையை கொன்றான்” என்பது செயல்வினை வாக்கியம். இங்கே செயலை செய்பவன் ஜமீல். செயல் செய்யப்படும் பொருள் பூனை” செயலை செய்பவனை முன்னிலைப் படுத்தி செயப்படுபொருளை பின்னுக்குத் தள்ளினால் அது செயல்வினை வாக்கியம்.
“பூனை ஜமீலால் கொல்லப்பட்டது” என்பது செயப்பாட்டு வினை வாக்கியம். இங்கே செயப்படுபொருள் முன்னிலைப் படுத்தப்படுகிறது. இது செயப்பாட்டுவினை வாக்கியம்.
அடித்தான், வரைந்தான், ஓட்டினான் என்று செய்வனை முன்னிலைப் படுத்தினால் செயல்வினை வாக்கியம். அடிக்கப்பட்டது, வரையப்பட்டது, ஒட்டப்பட்டது என்று செயப்படுபொருளை முன்னிலைப் படுத்தினால் அது செயப்பாட்டுவினை வாக்கியம். தமிழ் மொழியைப் பொறுத்தவரை “பட்டது”, “படுகிறது”, “படும்” என்று ஒரு வினை சொல் முடிந்தால் அது செயப்பாட்டு வினை.
ஆனால் அரபு மொழியின் செயல் மற்றும் செயப்பாட்டு வினை சற்று மாறுபட்டது. மேலே சொன்ன தமிழ் மொழியின் விதிகள் அரபு மொழியிலும் உண்டு ஆனால் கூடுதலாக பின்பவரும் விதியும் உண்டு.
** ஒரு செயலை செய்தவர் இன்னார் என்று குறிப்பிடப்பட்டால் அது செயல்வினை வாக்கியம். (Active Voice)
** ஒரு செயலை செய்தவர் எவர் என்று குறிப்பிடப்படாவிட்டால் அது செயல்பாட்டு வினை வாக்கியம். (Passive Voice)
“ஜமீல் பூனையை கொன்றான்”. இது செய்வினை வாக்கியம். அடித்தவன் யார் என்பது இதில் சொல்லப்பட்டிருக்கும்.
“பூனை கொல்லப்பட்டது”. இது செயல்பாட்டுவினை வாக்கியம். அடித்தவனைப் பற்றி இதில் எதுவும் சொல்லப்பட்டிருக்காது.
தமிழ் மொழியில் “ஜமீல் பூனையை கொன்றான்” எனும் செயல்வினையை செயப்பாட்டு வினையாக மாற்றினால் “பூனை ஜமீலால் கொல்லப்பட்டது” என்று வரும். ஆனால் அரபு மொழியில் “பூனை கொல்லப்பட்டது” என்று மட்டுமே செயப்பாட்டு வினையாக சொல்ல முடியும். “பூனை ஜமீலால் கொல்லப்பட்டது” என்று செயப்பாட்டு வினையாக சொல்ல முடியாது, சொல்லவே முடியாது.
இப்போது நம்முடைய தலைப்பிற்கு வருவோம்...
“கும்ம” என்ற வார்த்தை செயல்பாட்டு வினைச் சொல்லாகும்.
அப்படியென்றால், இதற்கு எதிர்ப்பதமான 'செயல்வினை வடிவமும்' இருக்க வேண்டும். இதன் செயல்வினை வடிவம் கம்ம (غَمَّ) என்பதாகும்.
கம்ம (غَمَّ) என்ற வார்த்தைக்கு 'அது மறைத்தது' என்பதுதான் நேரிடையான அர்த்தம்.
غَمَّ القَمَرُ النُّجُومَ
“கம்மல் கமருன் நுஜூம்” என்றால் “விண்மீன்களை நிலவு மறைத்தது” என்று பொருளாகும். 'மறைத்தல்' என்ற செயலை நிலவு செய்தது என்பதை வாசகம் தெளிவுபடுத்துகிறது.
கும்ம (غُمَّ) என்ற வார்த்தைக்கு 'அது மறைக்கப்பட்டது' என்பதுதான் நேரிடையான அர்த்தம். அதாவது, செயல்பாட்டு வினைச் சொல்லாக அர்த்தம் கொடுக்க முடியுமே தவிர 'மேகம்' அல்லது 'மேகமூட்டம்' என்று பெயர்ச்சொல்லாக அர்த்தம் கொடுக்க முடியாது.
மேகம் அல்லது மேகமூட்டம் என்று பெயர்ச்சொல்லாக அழைப்பதற்கு கமாம் (غَمَامٌ) என்ற தனி வார்த்தை இருக்கிறது. கம்ம, கும்ம, கமாம் ஆகிய வார்த்தைகளின் மூல எழுத்துகள் ஒன்றாக இருப்பதால் இவற்றிற்கு மேகம் என்றே அர்த்தம் கொடுக்கப்பட்டுகிறது. கம்ம மற்றும் கும்ம ஆகிய இரண்டு வார்த்தையும் வினைச்சொற்கள்தான். இவற்றிற்கு பெயர்ச்சொல்லாக அர்த்தம் தரவே முடியாது.
கம்ம (غَمَّ) = 'அது மறைத்தது'
கும்ம (غُمَّ) = 'அது மறைக்கப்பட்டது'
கும்மல் ஹிலால் (غُمَّ الهِلَالُ) என்றால் 'பிறை மறைக்கப்பட்டது' என்று அர்த்தம்.
இங்கு, பிறையை மறைத்தது எது என்ற கேள்விக்கு பதில் இருக்காது. இந்த கேள்விக்கு பதில் தேடும் முகமாகத்தான் மேகம் என்பதை கூறினார்கள். அதாவது, பிறையானது பார்க்க முடியாமல் போனதற்குக் காரணம் மேகத்தினால் மறைக்கப்பட்டதுதான் என்ற பதிலை வழங்கினர். இதுவே, கும்ம என்ற வார்த்தைக்கு 'மேகமூட்டம்' என்ற அர்த்தத்தை பயன்பாட்டுரீதியாக கொடுக்க காரணமாக அமைந்துவிட்டது.
உண்மையில், கும்ம என்ற வார்த்தைக்கு மேகமூட்டம் என்று அர்த்தம் கொடுப்பது அகராதியின்படி பிழையானது. அதையும் மீறி கும்ம என்ற செயல்பாட்டு வினைச் சொல்லிற்குள் மேகமூட்டத்தை புகுத்தினால்...
'ஷவ்வாலின் பிறை எங்களுக்கு மேகமூட்டமிடப்பட்டது'
என்றுதான் வாசகத்தை அமைக்க முடியும். இந்த வாக்கியத்தில் ஏதேனும் பொருள் இருக்கிறதா? ஷவ்வாலின் பிறை என்பது எந்த அர்த்தமும் இல்லாமல் அங்கே தொங்கிக்கொண்டு உள்ளது.“ஷவ்வாலின் பிறை எங்களுக்கு மறைக்கப்பட்டது” என்பதே சரியான பொருளாக்கம் ஆகும்.
*கும்ம-வுக்கு மேகமூட்டம் என்று எந்த அகராதியிலும் இல்லை*
பிறையை மறைப்பது மேகம் தான் எனும் அடிப்படை நம்பிக்கை ஏற்பட்டுவிட்டதால் அதை நோக்கியே நம் தேடல்கள் அமைந்துவிட்டன. எப்படியாவது கும்ம-வுக்கு மேகமூட்டம் எனும் பொருளை கண்டுபிடிக்க வேண்டும் என்று களமிறங்கினோம். அகராதிகள் என்று நாம் அடுக்கிய ஒன்றில் கூட கும்ம என்றால் மேகமூட்டம் எனும் பொருள் இல்லவே இல்லை. நல்ல வேளை ஹிஜ்ரா கமிட்டிக்காரனுக்கு அரபு தெரியாமல் போனது.
நாம் வலை விரித்து தேடிப்பிடித்த ஆதாரங்கள் இவை. இவற்றில் கும்ம-வுக்கு மேகமூட்டம் எனும் பொருள் இல்லையென்றால் கும்ம முகமூட்டம் இல்லை எனும் முடிவுக்கு வந்துவிடலாம்.
கும்ம என்றால் பிறையை மேகம் மறைத்தல் என்று அகராதிகளில் இருந்தால் அது ஆதாரமாக அமையும். "பிறையை மேகம் மறைத்தாலோ, புகை மறைத்தாலோ, பனிமூட்டம் மறைத்தாலோ தூசு மண்டலம் மறைத்தாலோ" என்று பொத்தாம் பொதுவாக இருந்தால் அதைக் காட்டி கும்ம என்றால் மேகமூட்டம் என்று நிறுவ இயலாது. மாறாக அது மேகமூட்டத்திற்கு எதிரான ஆதாரமாக அமையும்.
ஆதாரம் 1:-
ولَيْلَةُ الغُمى: هي اللَّيلةُ التي لا يُرى فيها الهلالُ، وكذلك الغُمَيَّةُ إذا غُمَّ الهِلالُ على الناس
[المحيط في اللغة 1/ 391، بترقيم الشاملة آليا]
//லைலதுல் கும்மிய: என்றால் பிறை பார்க்கப்படாத இரவு என்று பொருளாகும். அதுபோல மக்களுக்கு பிறை மறைக்கப்படும்போதும் அல்குமைய்யா என்று சொல்லப்படும்.//
இதில் ஆதாரம் ஏதுமில்லை. மாறாக எதிரான ஆதாரமாகும். இத்தனை நாளும் இதை நாம் மேகமூட்டத்திற்கு ஆதாரமாக காட்டி வந்துள்ளோம்.
ஆதாரம் 2:-
ويقال أيضاً: غُمَّ الهلال على الناس، إذا ستره عنهم غيمٌ أو غيره فلم يُرَ
[الصحاح في اللغة 2/ 26، بترقيم الشاملة آليا]
//கும்மல் ஹிலால அலன் நாஸ் என்றால் “மேகம் அல்லது வேறு காரணிகளால் மக்கள் மீது பிறை மறைக்கப்பட்டு அவர்களால் பார்க்க இயலாமல் போனது” என்பதாகும்.//
இது மேக மூட்டம் என்பதற்கு எதிரான ஆதாரமாகும்.
ஆதாரம் 3:-
وَفِي حَدِيثٍ { فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ } أَيْ فَإِنْ سُتِرَتْ رُؤْيَتُهُ بِغَيْمٍ أَوْ ضَبَابٍ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلَاثِينَ لِيَكُونَ الدُّخُولُ فِي صَوْمِ رَمَضَانَ بِيَقِينٍ .
وَفِي حَدِيثٍ { فَاقْدُرُوا لَهُ } قَالَ بَعْضُهُمْ أَيْ قَدِّرُوا مَنَازِلَ الْقَمَرِ وَمَجْرَاهُ فِيهَا قَالَ أَبُو زَيْدٍ غُمَّ الْهِلَالُ غَمًّا فَهُوَ مَغْمُومٌ وَيُقَالُ كَانَ عَلَى السَّمَاءِ غَمٌّ وَغَمْيٌ فَحَالَ دُونَ الْهِلَالِ وَهُوَ غَيْمٌ رَقِيقٌ أَوْ ضَبَابَةٌ
[المصباح المنير في غريب الشرح الكبير 7/ 84]
//ஃபஇன் கும்ம அலைக்கும் என்றால்...
“மேகம் அல்லது பனியின் காரணமாக (பிறை) பார்த்தல் மறைக்கப்பட்டது” என்று பொருள்
கும்மல் ஹிலாலு கம்மன் (மேகத்தால் பிறை மறைக்கப்பட்டது) என்பது மஃக்மூமன் (மறைக்கப்பட்டது) ஆகும்.
மேலும் சொல்லப்படும்: வானத்தில் மேகமும் தூசியும் இருந்தது அது பிறையை மறைத்தது, (மறைத்த) அது மெல்லிய மேகம் அல்லது பனி.//
கம்மன் எனும் மேகம் எனும் வார்த்தை வரும் இடத்தை காட்டி "பாருங்க மேகமூட்டம் இருக்கு" என்று காட்டுதல் ஆதாரமல்ல. மேகம் என்று பொருள் வரக்கூடிய (ஸஹாப், கமாம், கைம்) வார்த்தைகள் எதுவும் இல்லாமல் வெறும் கும்ம என்று வரும் வாசகத்தைக் கொடுத்து அதற்கு மேகமூட்டம் என்று பொருள் இருப்பதாக காட்டுவதே ஆதாரம் ஆகும். கம்மன் என்று நேரடியாக மேகத்தைக் குறிக்கும் வார்த்தை வந்தால் மட்டுமே கும்மவுக்கு மேகமூட்டம் என்று பொருள் எடுக்க இயலும் என்பதையே இந்த ஆதாரம் காட்டுகிறது
இதுவும் மேக மூட்டம் என்பதற்கு எதிரான ஆதாரமாகும்.
ஆதாரம் 4:-
وصُمْنا للغُمَّى وللغَمَّى بالفتح والضم إذ غُمَّ عليهم الهلال في الليلة التي يرون أن فيها استهلاله وصُمْنا للغَمَّاء بالفتح والمد وصُمْنا للغُمِّيَّة وللغُمَّة كل ذلك إذا صاموا على غير رؤية وفي الحديث أنه قال صوموا لرؤيته وأَفطروا لرؤيته فإن غُمَّ عليكم فأَكملوا العدة قال شمر يقال غُمَّ علينا الهلال غَمّاً فهو مَغْموم إذا حال دون رؤية الهلال غَيْمٌ رَقِيق من غَمَمْت الشيء إذا غَطَّيته
[لسان العرب 12/ 441]
//கும்ம அலைனா ஹிலாலு கம்மன் (மேகத்தால் எங்களுக்கு பிறை மறைக்கப்பட்டது) என்றால் மெல்லிய மேகம் அல்லது மறைக்க இயன்ற ஏதேனும் ஒன்று பிறை பார்த்தலை மறைத்தல் என்று பொருள். அது மஃக்மூமன் (மறைக்கப்பட்டது) என்று சொல்லப்படும்.//
இங்கேயும் கம்மன் எனும் வார்த்தைக்கு விளக்கம் சொல்கிறார்கள். எனினும் மேகம் அல்லாதவை மறைத்தாலும் அது கம்மனை குறிக்கும் என்கிறார்கள். இதுவும் மேக மூட்டம் என்பதற்கு எதிரான ஆதாரமாகும்.
ஆதாரம் 5:
ويقال أيضا غُمَّ الهلال على الناس إذا ستره عنهم غيم أو غيره فلم يُر
[مختار الصحاح ص: 488]
இது ஆதாரம் 2ன் காப்பி பேஸ்ட்.
ஆதாரம் 6:
المحكم والمحيط الأعظم – (ج 2 / ص 390) وغُمّ الهلالُ غَماًّ: ستره الغيمُ فلم يُرَ.
//கும்ம அல்ஹிலாலு கம்மன் என்பதன் பொருள் பிறையை மேகம் மறைத்தது. அது பார்க்கப்படவில்லை என்பதாகும்.
நூல்: அல்முஹ்கம் வல் முஹீத்துல் அஃளம் என்ற அரபி அகராதி நூல் . பாகம் 2 பக்கம் 390//
கம்மன் எனும் வார்த்தை வந்துவிட்டது. இதுவும் மேக மூட்டம் என்பதற்கு எதிரான ஆதாரமாகும்.
ஆதாரம் 7:
قوله فإن غم عليكم أي فإن ستر الهلال عليكم ومنه الغم لأنه يستر القلب والرجل الأغم المستور الجبهة بالشعر وسمي السحاب غيما لأنه يستر السماء ويقال غم الهلال إذا استتر ولم ير لاستتاره بغيم ونحوه وغممت الشيء أي غطيته
-عمدة القاري شرح صحيح البخاري – (ج 16 / ص 268)
//கும்ம அலைக்கும் என்றால் சுதிரல் ஹிலாலு அலைக்கும் (பிறை உங்களுக்கு மறைக்கப்பட்டால்) என்பது பொருள். கவலைக்கு அல்கம்மு என்று கூறப்படும். ஏனென்றால் அது உள்ளத்தை மறைக்கிறது. முடியினால் நெற்றி மறைக்கப்பட்ட மனிதனுக்கு அர்ரஜூலுல் அகம்மு என்று கூறுவார்கள். மேகத்திற்கு கய்முன் என்று கூறுவார்கள். ஏனென்றால் அது வானத்தை மறைக்கிறது. கும்ம அல்ஹிலாலு என்றால் பிறை மறைக்கப்பட்டது என்பது பொருள். அதாவது மேகத்தினால் அது மறைக்கப்பட்டதினால் காணப்படவில்லை என்பதாகும்.
நூல் : உம்தத்துல் காரீ//
இங்கே கும்ம-வுக்கு மேக மூட்டம் என்கிற பொருள் வரவே இல்லை. எனினும் இறுதியில் மேகத்தினால்தான் பிறை மறைக்கப்படுகிறது எனும் கருத்தை கொண்டு வருகிறோம். ஆனால் மூலத்தில் இருப்பதை முற்றிலும் மொழிபெயர்க்காமல் பாதியில் விட்டுவிடுகிறோம். 【கும்மல் ஹிலாலு என்றால் பிறை மறைக்கப்பட்டது, காணப்படவில்லை, மேகத்தாலும் எவை மறைக்குமோ அவற்றாலும் (மறைக்கப்படும்) என்பது பொருள்.】
*இதில் எவை மறைக்குமோ அவற்றாலும் (மறைக்கப்படும்)* என்பதை வசதியாக இருட்டடிப்பு செய்துவிட்டோம்
ஆதாரம் 8
وأما قوله فإن غم عليكم فذلك من الغيم والغمام وهو السحاب يقال منه يوم غم وليلة غمة وذلك أن تكون السماء مغيمة
التمهيد – (ج 2 / ص 38)
//கும்ம அலைக்கும், இதன் பொருள் உங்களுக்கு மறைக்கப்பட்டது என்பதாகும். இதில் மறைத்தல் என்பது கைம் இன்னும் கமாம் மூலம் ஏற்படுதலாகும். கைம் கமாம் என்பது மேகம் ஆகும். வானம் மேகமூட்டமாக இருக்கும் போது யவ்முன் கம்முன் (மேகமூட்டமான நாள்) லைலத்துன் கம்மத்துன் (மேகமூட்டமான இரவு) என்று கூறுவார்கள்.//
நூல் : அத்தம்ஹீத் பாகம் 2 பக்கம் 38//
ஆதாரம் இல்லாதபோது ஃபிக்ஹ் நூலை எடுத்துள்ளோம். மேகத்தால் பிறை மறைக்கப்படுவதாக நம்பிய இமாம் இப்னு அப்துல் பர் அவ்வாறு எழுதியுள்ளார்.
கும்மல் ஹிலால் என்றால் பிறை மறைக்கப்படுதல் என்று சொல்லிவிட்டு. பிறை மேகத்தால் மறைக்கப்படலாம், பனி மூட்டத்தால் மறைக்கப்படலாம், இன்னும் மறைத்தலுக்குரிய எந்த பொருளாலும் மறைக்கப்படலாம் என்பதே அகராதிகளின் விளக்கம் ஆகும். ஓர் எடுத்துக்காட்டிற்காக மேகத்தை அகராதிகள் சொல்வதால் அது மட்டுமே பொருள் என்று நினைக்க இயலாது.
*கும்ம-வுக்கும் கமாம் என்று குர்ஆனில் வரும் மேகம் என்று பொருள் கொண்ட சொல்லுக்கும் வேர்சொல் ஒன்றுதானே*
உண்மைதான். ஆனால் ஒரே வேர்ச்சொல்லில் இருந்து பிறக்கும் அனைத்து சொற்களுக்கும் ஒரே பொருள் இருக்கும் என்று எந்த மொழியிலும் விதி இல்லை. அப்படி பார்த்தால் அல் கம்மி என்று குர்ஆனில் (3:153, 3:154, 20:40, 21:88, 22:22, 10:71) வரும் வார்த்தைக்கும் மேகத்துடன் தொடர்புபடுத்தியே பொருள் கொடுக்க வேண்டும். ஆக நமக்கு நாமே முரண்படும் வாதமிது.
*கும்ம அல்லாத வார்த்தைகள்?*
கும்ம எனும் வார்த்தை அரிதாகவே ஹதீஸ்களில் வருகின்றன. நாம் முதன்மை ஆதாரமாகக் காட்டும் புகாரீ 1909 ஹதீஸில் இருப்பதோ குbப்பிய எனும் வார்த்தை ஆகும். இதற்கு மேகமூட்டம் என்று பொருள்கொள்ள முடியுமா? அதற்கும் நாம் மேகமூட்டம் என்றுதானே பொருள் கொள்கிறோம்.
غم غمي أغمي غبي (கும்ம, கும்மிய, உக்மிய, குப்பிய) (ghumma, ghummiya, ughmiya, ghubbiya) என பல்வேறு விதங்களில் ஹதீஸ்களில் வந்துள்ளது. வார்த்தைகள் வித்தியாசமாக பல அறிவிப்புகள் இருந்தால் நாம் என்ன செய்வோம். எல்லா வார்த்தைகளும் சொல்லும் பொதுவான ஒரு பொருளைத்தானே எடுப்போம். நமக்கு விருப்பமான ஒரே ஒரு வார்த்தை வரும் மட்டும் அறிவிப்பை எடுக்க மாட்டோம் அல்லவா?
*சர்வதேச பிறை தவறு என்பதற்கும் மேகமூட்டம் ஆதாரமா?*
சர்வதேச பிறை சாத்தியமில்லை என்று நிறுவுவதறக்கும் மேகமூட்டத்தை நாம் காரணமாக சொல்கிறோம்.
மேகமூட்டம் ஏற்பட்டால் மாதத்தை 30 ஆக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, *உலகம் முழுவதும் மேகமூட்டம் ஏற்படுமா? மேகமூட்டம் இருக்கும் பகுதி 30 ஆகவும் மேகமூட்டம் இல்லாத பகுதிகள் 29ஆகவும் மாதம் முடியும் எனவே சர்வதேச பிறை கிடையாது* என்று வாதிடுகிறோம்.
இது எவ்வளவு தவறான வாதம். பிறையும் தெரியவில்லை மேகமூட்டமும் இல்லை என்றால் என்ன செய்வது?
*மேக மூட்டத்தை தாண்டி கருவிகளால் பிறையை பார்க்க முடியுமா?*
பிறையைக் கருவிகளால் பார்க்கக் கூடாதா என்று கேள்வி கேட்கப்படும்போது நாம் என்ன பதில் சொல்கிறோம்?
//மேகமூட்டம் ஏற்பட்டால் மட்டுமே மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்யவேண்டும் என்று நபி ஸல் அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள். பிறையை மேகத்திற்கு கீழிருந்து புறக்கண்ணால் பார்த்தால் மட்டும்தான் பிறையை காணாத வகையில் மேகமூட்டம் தடையாக இருக்கும். கருவிகளால் காணும்போது பிறையைக் காண்பதற்கு மேகமூட்டம் தடையாக இருக்காது. “உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்” எனும் வாசகமே பிறையை கருவிகளால் பார்க்கக்கூடாது என்று சொல்வதாக உள்ளது//
என்று வாதிடுகிறோம். இது பெரிய அறியாமை ஆகும். கண்களுக்கு தெரியும் ஒளி மூலம் இயங்கக்கூடிய சாதாரண binocular, telescope போன்ற கருவிகளால் மேகத்தை தாண்டி பார்க்க இயலாது. பிறையில் இருந்து நம் கண்களுக்கு வரும் ஒளியை மேகம் எப்படி தடுக்கிறதோ அதே போல binocular, telescope இல் விழுவதையும் தடுத்துவிடும். சாதாரண ஒளியல்லாத infra red ஒளி மூலம் இயங்கும் தொலைநோக்கிகளையும் மேகங்கள் தடுத்துவிடும். இவற்றைத் தவிர Ultraviolet, X-ray, Gamma-ray போன்ற கதிர்கள் மூலம் இயங்கும் தொலைநோக்கிகளை மேகம் என்ன வளிமண்டலமே செயல்படாமல் தடுத்துவிடும். அதனால்தான் இதுபோன்ற கருவிகளை செயற்கைக் கோள்களில் நிறுவியுள்ளார்கள்.
https://lco.global/spacebook/telescopes/space-telescopes/
*பிறை பார்த்து நோன்பு வையுங்கள், மேக மூட்டத்தைப் பார்த்து நோன்பை விடுங்கள்* என்று பிறை பார்த்தல் என்பதையும் தாண்டி மேகமூத்தையும் பார்த்தே மாதத்தை முடிவு செய்யவேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறோம்.
கும்ம-வுக்கு மறைக்கப்படுதல் என்று பொருள் கொடுத்தால் ஹிஜ்ரா கமிட்டி சொல்லும் அமாவாசை ஆகிவிடும் எனும் அச்சத்தால் இன்னமும் அதை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறோமா? கும்மவுக்கு மறைக்கப்படுதல் என்பதே பொருள். அது ஹிஜ்ரா சொல்லும் அமாவாசையல்ல.
www.piraivasi.com