Thursday, 3 November 2022

QSF40. கடலுக்கு அடியில் அலைகள் இருப்பதாக குர்ஆன் சொல்கிறதா?


இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்


அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும். அறிமுகத்தை வாசிக்க https://www.piraivasi.com/2022/11/zina-ul-abdeen-intro.html


அலை கடலும்! அதன் இருளும்!!

أَوْ كَظُلُمَاتٍ فِي بَحْرٍ لُّجِّيٍّ يَغْشَاهُ مَوْجٌ مِّن فَوْقِهِ مَوْجٌ مِّن فَوْقِهِ سَحَابٌ ۚ ظُلُمَاتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَا أَخْرَجَ يَدَهُ لَمْ يَكَدْ يَرَاهَا ۗ وَمَن لَّمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِن نُّورٍ ‎﴿٤٠﴾

24:40. அல்லது (அவர்களுடைய செயல்களுக்கு உதாரணம்:) ஆழ் கடலிலுள்ள இருள்களைப் போன்றதாகும், அதனை ஒரு அலை மூடிக் கொள்கிறது, அதற்கு மேல் மற்றோர் அலை, அதற்கு மேல் மேகம் (இவ்வாறு) பல இருள்கள், அதில் சில சிலவற்றுக்குமேல் இருக்கின்றன, (இருள்களால் சூழப்பட்ட நிலையில் பார்ப்பவன்) தன் கையை வெளியாக்கி (நீட்டி)னால் அதனை அவனால் பார்க்க முடியாது, இன்னும், எவருக்கு அல்லாஹ் ஒளியை ஆக்கவில்லையோ அவருக்கு (எங்கும்) ஒளி இல்லை.

இந்த திருக்குர்ஆன் வசனத்திற்கு பல அறிவியல் விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.

உச்சி வெயிலில் கடலுக்கடியில் ஆழமாக செல்ல செல்ல ஒவ்வொரு நிறமாக ஒளியிழந்து இறுதியில் எந்த ஒளியும் இல்லாத இருள்தான் இருக்கும். மேலும் கடலின் மேற்பரப்பில் நாம் அலைகளை பார்ப்பதைப் போல கடலின் ஆழத்திலும் பேரலைகள் இருக்கின்றன. இவை நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள். இந்த அறிவியலைத்தான் இவ்வசனம் சொல்கிறது.

இதுதான் குர்ஆனுக்கு அறிவியல் விளக்கம் கொடுப்பவர்கள் இவ்வசனத்திற்கு சொல்லும் விளக்கம்.

அறிஞர் பீஜே அவர்களும் பின்வரும் குறிப்புகளில் இவ்வசனத்திற்கு அறிவியல் தப்ஸீர் எழுதியுள்ளார்

https://www.onlinepj.in/index.php/alquran/alquran/quran-explanations/303-pala-irulkal 

https://onlinepj.in/index.php/alquran/alquran/quran-explanations/429-azkadali_alaikal 

பொதுவாக இவர்கள் அறிவியலில் இல்லாதவற்றை அறிவியல் என்று கதையளப்பார்கள். ஆனால் இங்கே இவர்கள் சொல்லும் அறிவியல் உண்மைதான்.

நீர் ஒளியை உறிஞ்சும் தன்மை கொண்டது. நீருக்குள்ளே செல்ல செல்ல ஒவ்வொரு ஆழத்திலும் ஒவ்வொரு நிறமும் ஒளி இழக்கும். இறுதியில் ஒளி மொத்தமாக உறிஞ்சப்பட்டு இருள் மட்டுமே இருக்கும்.

அதே போல கடலின் ஆழத்தில் கடல் நீரை மேலும் கீழும் தள்ளி விடும் ஆற்றல் அலைகள் உருவாகின்றன. இந்த ஆற்றல் அலைகளும் அறிவியல் கண்டுபிடிப்புதான். ஆனால் கடலுக்கு அடியே நடக்கும் இவற்றைத்தான் இந்த வசனம் பேசுகிறதா என்றுதான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம்.

*பஹ்ருல் லுஜ்ஜி என்றால் கடலின் ஆழத்தில் என்று பொருளா?*

இந்த வசனத்தின் பஹ்ருல் லுஜ்ஜி எனும் சொல்லை “ஆழ்கடல்” என்று தமிழிலும் deep-sea என்று ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கிறார்கள். உண்மையில் ஆழ்கடல் என்கிற தமிழ் சொல்லுக்கும் deepsea எனும் ஆங்கில சொல்லுக்கும் “கடலின் அடிப்பகுதி” எனும் பொருள் இல்லை. கடற்கரையில் இருந்து கடலில் பயணம் செய்து செல்லச் செல்ல கரையே தெரியாமல் சுற்றிலும் நீர் சூழ்ந்த ஆழம் அதிகமான பகுதியை அடைவோம். இந்த பகுதியை ஆழ்கடல் அல்லது deepsea என்பார்கள்.

ஆழ்கடலில் பயணம் செய்தோம் என்று ஒருவர் சொன்னால் அதன் பொருள் கடலுக்குள்ளே குதித்து அதன் ஆழத்திற்கு சென்றார் என்பதல்ல. மாறாக ஆழமான கடற்பரப்பில் படகு அல்லது கப்பலில் பயணம் செய்தார் என்று பொருள்.

பிற்காலத்தில் கடலின் ஆழத்திற்கு செல்லும் தொழில்நுட்பங்கள் வளர்ந்த பிறகு ‘ஆழ்கடல்’ அல்லது ‘deepsea’ எனும் சொற்களை கடலின் ஆழத்திற்கு செல்வதற்கும் பயன்படுத்தலானார்கள். இப்போதுதான் ஒருவர் deepsea அல்லது ஆழ்கடல் எனும் சொல்லைப் பயன்படுத்தினால் அவரே அதனை விளக்காதவரை அவர் எதை சொல்கிறார் என்று புரிந்துகொள்வது சிரமம்.

deepsea fishing என்று சொல்லப்படுவதும் ஆழ்கடல் மீன்பிடித்தல் என்று சொல்லப்படுவதும் கரையில் இருந்து வெகுதொலைவில் படகில் சென்று ஆழம் அதிகமாக இருக்கும் கடல் பரப்பில் படகிலிருந்து மீன்பிடிப்பதாகும். மாறாக கடலுக்குள்ளே குதித்து மீன் பிடிப்பதாக பொருளல்ல.

இந்த வசனத்திற்கு கடலின் ஆழப் பகுதியில் நடக்கும் நிகழ்ச்சியாக அறிவியலுடன் முடிச்சிட்டு விளக்கம் கொடுக்கப்படுவதால் தற்காலத்தில் மொழிபெயர்ப்புகளை வாசிக்கும் எவரும் வாசித்த மாத்திரத்தில் இதை கடலின் அடிப்பகுதியில் நடக்கும் நிகழ்வாகவே புரிந்துகொள்கிறார்கள்.

உண்மையில் “பஹ்ருல் லுஜ்ஜி” எனும் சொல் கடலின் அடிப்பகுதியை குறிப்பதாக பொருள் இருந்தால் அக்கால மக்களும் அந்த பொருளை எடுத்திருப்பார்கள். கடலுக்குள்ளே குதித்து அதன் ஆழத்திற்கு சென்ற ஒருத்தனால் அவனது கையக் காண இயலாமல் போய்விடும் என்று நம்புவதற்கு அவர்களுக்கு எந்த தடையும் இல்லை. அன்றைய அறிவியல் இதை சொல்லாவிட்டாலும் அந்த அரபுப் பதத்திற்கு அப்படி ஒரு பொருள் இருந்தால் அதையே அம்மக்களும் விளக்கமாக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் நாம் பார்த்தவரையில் பழைய தப்சீர்கள் எவற்றிலும் இது கடலின் ஆழப்பகுதியில் நடப்பதாக விளக்கம் இல்லை.

(فِي بَحْرٍ لُجِّيٍّ) قِيلَ: ‌هُوَ ‌مَنْسُوبُ ‌اللُّجَّةِ، ‌وَهُوَ ‌الَّذِي ‌لَا ‌يُدْرَكُ ‌قَعْرُهُ. وَاللُّجَّةُ مُعْظَمُ الْمَاءِ، وَالْجَمْعُ لُجَجٍ. وَالْتَجَّ الْبَحْرُ إِذَا تَلَاطَمَتْ أَمْوَاجُهُ، وَمِنْهُ مَا رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: (مَنْ رَكِبَ الْبَحْرَ إِذَا الْتَجَّ فَقَدْ بَرِئَتْ مِنْهُ الذِّمَّةُ). وَالْتَجَّ الْأَمْرُ إِذَا عَظُمَ وَاخْتَلَطَ.

பஹ்ருல் லுஜ்ஜீ பற்றி சொல்லப்படுவது யாதெனில்:- இது (“லிஜ்ஜிய்யின்” என்பது) “லுஜ்ஜா” வுடன் தொடர்புபடுத்தப்படக் கூடியதாகும். இது (லுஜ்ஜா என்பது) அடிப்பகுதியை அடையமுடியாத ஆழத்தை குறிப்பது. மேலும் லுஜ்ஜா எனப்படுவது நீர் சூழ்ந்திருப்பதையும் குறிக்கும். இதன் பன்மை லுஜஜ். மேலும் பேரலைகளை தொடர்ந்து வீசும்போது அதை (கடலை) அல்தஜ்ஜல் பஹ்ர் என்பார்கள்

மேலும் இது தொடர்பாக, நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது, நபி ஸல் அவர்கள் கூறினார்கள் “கடல் அலைகளால் ஆர்ப்பரிக்கும்போது யார் அதில் பயணம் செய்கிறாரோ அவரை விட்டும் பொறுப்புகள் நீங்கிவிட்டன

மேலும் ஒரு காரியம் மிகவும் குழப்பமாகிவிட்டதற்கு அல்தஜ்ஜல் அம்ரு என்று சொல்லப்படும்.

மேலுள்ளது தப்ஸீர் குர்துபியிலுள்ள விளக்கமாகும். பஹ்ருல் லுஜ்ஜி என்றால் ஆழாமன கடல் என்று விளக்கமளித்துள்ளார் குர்துபி இமாம். மேலும் ஒரு ஹதீஸை மேற்கோள் காட்டி அது அலைகளால் ஆர்ப்பரிக்கும் கடலைக் குறிக்கும் என்கிறார்.

مَثَلُ ظُلُمَاتٍ فِي بَحْرٍ لُجِّيٍّ. ‌وَنَسَبَ ‌الْبَحْرَ ‌إِلَى ‌اللُّجَّةِ، ‌وَصْفًا ‌لَهُ بِأَنَّهُ عَمِيقٌ كَثِيرُ الْمَاءِ. وَلُجَّةُ الْبَحْرِ: مُعْظَمُهُ

பஹ்ருல் லுஜ்ஜீயின் இருள்கள் போன்றது:-

"லுஜ்ஜத்துன்” என்ற சொல் கடலுக்குரிய வர்ணனையாக அதனுடன்  தொடர்புபடுத்தப்படுகிறது. ஏனெனில் அ(க்கடலான)து  ஆழமானதாகவும், பெரும் நீர் நிறைந்ததாகவும் உள்ளது

"லுஜ்ஜத்துல் பஹ்ரி” என்பது  “மிகப் பெரும் தண்ணீரைக் கொண்ட கடல் பகுதியாகும்.

இது தபரீ அவர்களின் தப்ஸீர்.

நாமறிந்து யாருமே இதனை கடலின் அடிப்பகுதியில் நடக்கும் நிகழ்வாக கருதவில்லை. ஏனென்றால் பஹ்ருல் லுஜ்ஜி என்றால் “கடலின் ஆழத்தில்” எனும் பொருள் இல்லை.

معجم اللغة العربية المعاصرة (3/ 1995)

4531 - ل ج ج

لُجّيّ [مفرد]: اسم منسوب إلى لُجَّة.

• بحر لُجِّيّ: عميق كثير الماء، متلاطم الأمواج " {أَوْ كَظُلُمَاتٍ فِي بَحْرٍ لُجِّيٍّ يَغْشَاهُ مَوْجٌ مِنْ فَوْقِهِ مَوْجٌ مِنْ فَوْقِهِ سَحَابٌ} ".

”லுஜ்ஜிய்யுன்” என்பது  “லுஜ்ஜத்துன்” என்ற சொல்லும் தொடர்புபடுத்தப்படுகிறது.

“பஹ்ருன் லுஜ்ஜிய்யுன்”  என்பதன் பொருள்  ஆழமான பகுதி, பெரும் நீரைக் கொண்ட பகுதி,  அலைகள் ஆர்ப்பரிக்கும்  பகுதி என்பதாகும்.

البارع في اللغة (ص: 567)

ولُجّة البحر حيث لا ترى أرضا ولا جبلا.

லுஜ்ஜத்துல் பஹ்ர்  (கடலின் ஆழம்)  என்பது தரையையோ,  மலையையோ காணமுடியாத அளவு (தூரத்தை) உடையதாகும்.

நூல் : அல்பாரிவு ஃபில் லுகத்

மேலுள்ளவை அரபு அகராதிகளின் விளக்கங்கள் ஆகும்.

எங்குமே பஹ்ருல் லுஜ்ஜி என்றால் கடலுக்கடியே உள்ள பகுதியை தொடர்புபடுத்தி விளக்கம் இல்லை.

பின்னர் ஏன் நவீன மொழிபெயர்ப்புகள் கடலின் அடிப்பகுதியில் நடப்பதைப் போன்ற கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துகின்றன?

இங்கே ஆழ்கடல் என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் இருக்கும் சொல் “பஹ்ருல் லுஜ்ஜி” என்பதாகும். இங்கே லுஜ்ஜி என்பது பெயரடை (பெயர் உரிச்சொல்) ஆகும், ஆங்கிலத்தில் இதனை adjective என்றும் அரபு இலக்கணத்தில் (صفة) ஸிஃபத் என்றும் சொல்வார்கள்.

பெயடரை என்றால் ஒரு பெயர் சொல்லை பற்றிய கூடுதல் விளக்கத்தை தருவதாகும். அதன் பண்பைப் பற்றி விவரிக்கும் சொல் ஆகும். அதனை வர்ணிப்பதாக அமையும்.

எடுத்துக் காட்டிற்கு “உயரமான கட்டடம்”, “அழகான பூந்தொட்டி” போன்றவற்றை குறிப்பிடலாம். இங்கே கட்டடம் என்பது பெயர்ச்சொல். கட்டடம் என்பதைப் பற்றி கூடுதல் தகவல் தரும் சொல்தான் “உயரமான” எனும் பெயரடை.

இதை எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் “எவ்வாறு இருக்கிறது” எனும் கேள்வியை ஒரு பெயர் சொல்லை நோக்கிக் கேட்டால் என்ன விடை கிடைக்குமோ அதுதான் பெயரடை ஆகும். கட்டிடம் எவ்வாறு இருந்தது எனும் கேள்விக்கு என்னென்ன விடை வருகிறதோ அவை அனைத்துமே பெயரடையாக இருக்கும்.

இதேபோல பஹ்ர் (கடல்) என்பது பெயர்சொல்லாக வந்துள்ளது. இந்த பெயர்சொல்லை பற்றி கூடுதல் தகவல் தரும் சொல்லாக “லுஜ்ஜிய்யுன்” வந்துள்ளது. அந்தக் கடல் எவ்வாறு இருந்தது என்று கேட்டால் அது “பஹ்ருல் லுஜ்ஜி” என்று இந்த வசனம் சொல்கிறது.

ஆழமான கடல்  என்பதில் ஆழம் என்பது கடலைப் பற்றிய வர்ணனை ஆகும்.

லுஜ்ஜிய்யுன் என்பது இங்கே பெயரடையாக வந்துள்ளதால் அது “அந்த கடல் எப்படிப் பட்டது” எனும் கேள்விக்கு விடையாகவே இருக்கும். அது அந்தக் கடலின் பண்பை விளக்குவதாகவே இருக்கும்.

ஆக இலக்கண விதிப்படி “ஆழமான பரந்துவிரிந்த ஆர்ப்பரிக்கும் கடல்” என்றுதான் “பஹ்ருல் லுஜ்ஜி”க்கு பொருள் செய்ய முடியுமே தவிர கடலுக்குள்ளே ஆழத்தில் நடக்கும் ஒரு நிகழ்வை பஹ்ருல் லுஜ்ஜி குறிக்காது.

பெயரடை - பெயர்ச்சொல் சங்கதியை புரிந்துகொள்ள ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

பஹ்ரில் லுஜ்ஜி என்பதில். பஹ்ர் பெயர் சொல்லாகவும் லுஜ்ஜி பெயரடையாகவும் வந்துள்ளது. இதே போல குர்ஆனில் இடம்பெற்ற மற்றொரு சொற்றொடரைப் பார்ப்பதன் மூலம் இதனை புரிந்துகொள்ள இயலும்.

حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَىٰ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ ‎﴿٢٣٨﴾‏

(ஐவேளை) தொழுகைகளையும், (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்களாக நில்லுங்கள்.  2:234

இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள “ஸலாதில் வுஸ்தா” எனும் வாக்கியத்தில் ஸலாத் என்பது பெயர் சொல்லாகும் வுஸ்தா என்பது பெயரடையாகும்.

இதை நடுத்தொழுகை என்று மொழிபெயர்ப்போம்.  ஆனால் இதனை யாரும் தொழுகையின் நடுவில் என்று பொருள்கொள்ள மாட்டோம்.

இதே போலத்தான் பஹ்ருல் லுஜ்ஜி (ஆழ் கடல்) என்பது “ஆழமுள்ள கடல்” என்றுதான் பொருளே தவிர அந்த வாசகத்தில் அது “கடலின் ஆழத்தில்” எனும் பொருளைத் தராது

ஸலாத்தில் வுஸ்தாவை தொழுகையின் நடுவில் என்று பொருள் கொள்வதும். பஹ்ருல் லுஜ்ஜியை கடலின் ஆழத்தில் என்று பொருள்கொள்வதும் சமமான பிழைகளாகும்

பஹ்ருல் லுஜ்ஜி என்று இவ்வசனம் சொல்வது ஆழமான பரந்து விரிந்த கடலின் மேற்பரப்பைதான். அதாவது கரையில் இருந்து பத்து கிலோமீட்டர் கடலில் பயணம் செய்தால் அங்கிருந்து கரையே தெரியாது. சுற்றிலும் கடலாக இருக்கும் அப்பகுதியை நடுக்கடல் என்போம். அந்த பகுதியைக் குறிக்கும் சொல்தான் பஹ்ருல் லுஜ்ஜி.

அல்குர்ஆனில் இதே சொல் மற்றுமோர் இடத்தில் பெயர்ச்சொல்லாக வந்துள்ளது

قِيلَ لَهَا ادْخُلِي الصَّرْحَ ۖ فَلَمَّا رَأَتْهُ حَسِبَتْهُ لُجَّةً ‎﴿٤٤﴾‏

27:44. அவளிடம், “இம்மாளிகையில் நுழைவாயாக!” எனக் கூறப்பட்டது, அவள் அதைப்பார்த்தபோது “தண்ணீர் தடாகம்” என்றெண்ணிவிட்டாள்

இங்கே தண்ணீர் தடாகம் என்பதற்கு சொல்லப்பட்டுள்ள அரபுச் சொல் “லுஜ்ஜா” ஆகும்.

ஆக! லுஜ்ஜா என்று சொல்லப்பட்டால் நீர் நிறைந்திருக்கும் ஒரு பகுதியை குறிக்கும் என்பதற்கு இது நேரடியான வலுவான சான்று.

ஒரு மாளிகையில் நீர் தடாகம் இருந்தால் அது எந்த அளவுக்கு ஆழமாக இருக்க முடியும்? நிச்சயமாக அழகுக்காக வைக்கப்பட்ட மிகக்குறைந்த ஆழம் கொண்ட தடாகமாகத்தான் இருக்க முடியும். அது போன்ற ஒரு தடாகம் என்றுதான் அவர் எண்ணி இருக்க முடியுமே தவிர ஆழம் என்கிற சொல்லுக்கு இங்கு வேலையே இல்லை.

பஹ்ருல் லுஜ்ஜி என்றால் நீர் சூழ்ந்த நடுக்கடல் பகுதி என்று பொருள்கொள்ள இவ்வசனமும் சான்றாக அமைகிறது.

ஆக! கையை வெளிப்படுத்தினால் தனது கையே தெரியாத அளவுக்கு இருள் இருக்கும் நிகழ்வு கடலின் ஆழத்தில் நடப்பதாக இவ்வசனம் சொல்லவே இல்லை. நடுக்கடலை பற்றியே அவ்வசனம் பேசுகிறது. நடுக்கடலில் நடக்கும் நிகழ்வைத்தான் அவ்வசனம் பெசுகிறது

ஏற்கனவே அறிவியல் விளக்கம் சொல்லப்பட்டதால் ஆழ்கடல் எனும் சொல் இந்நிகழ்வு கடலின் அடிப்பகுதியில் நடப்பதாகவே நம் மனது நமக்கு சொல்கிறது

*இந்நிகழ்வு கடலுக்கு உள்ளே நடக்கிறதா? அல்லது மேற்பரப்பில் நடக்கிறதா?*

அடுத்ததாக இவ்வசனம் يَغْشَاهُ அதனை ஓர் அலை மூடிக் கொள்கிறது” என்கிறது. “அதனை” என்று சொல்வது இருள்களைதான் என்றும் நமக்குள் ஓர் எண்ணம் ஏற்படும்.

“அதனை” என்று சொல்வதற்கு அரபு மூலத்தில் இருக்கும் சொல் ‘ஹு’ ஆகும். ‘ஹு’ என்பதன் பொருள் ‘’அவனை’’ என்பதாகும். அதாவது ஏற்கனவே ஆண் பாலில் சொல்லப்பட்ட ஒரு பொருளை மட்டுமே ‘அவன்’ எனும் பிரதிப் பெயர் குறிக்கும். இருள்கள் என்பற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் ளுலுமாத் பெண்பால் ஆகும். ஆக ஹு இருள்களை குறிப்பதற்கு வாய்ப்பே இல்லை.

அந்த வாக்கியத்தில் ஆண்பாலாக இருக்கும் ஒரே சொல் பஹ்ர் (கடல்) ஆகும். ஹு எனும் பிரதிப் பெயர் பஹ்ர் எனும் சொல்லை நோக்கியே மீள்கிறது.

ஆக “ஓர் அலை எதனை மூடுகிறது?” என்றால் “கடலையே” மூடுகிறது.

நன்றாக சிந்திப்பாருங்கள்! கடலை ஓர் அலை மூட வேண்டுமென்றால் இந்நிகழ்வு கடலின் ஆழத்தில் நிகழுமா அல்லது கடலின் மேற்பரப்பில் நிகழுமா?

எதையாவது மூட வேண்டும் என்றால் அதன் மேற்பரப்பில்தான் மூட முடியுமே தவிர உள்பகுதியை மூட முடியாது.

நிச்சயமாக கடலை மூடும் அலை கடலின் மேற்பரப்பைத்தான் மூடுமே தவிர கடலின் ஆழத்தில் இருக்கும் அதன் உட்பகுதியை மூடாது.

*அலைக்கும் இருளுக்கும் உள்ள தொடர்பு*

أَوْ كَظُلُمَاتٍ فِي بَحْرٍ لُّجِّيٍّ

1) அல்லது (அவர்களுடைய செயல்களுக்கு எடுத்துக்காட்டு) நடுக் கடலிலுள்ள இருள்களைப் போன்றதாகும்,

يَغْشَاهُ مَوْجٌ

2) அதனை (அந்தக் கடலை) ஓர் அலை மூடிக் கொள்கிறது,

مِّن فَوْقِهِ مَوْجٌ

3) அதற்கு மேல் மற்றோர் அலை,

مِّن فَوْقِهِ سَحَابٌ

3) அதற்கு மேல் மேகம்

ظُلُمَاتٌ

4) (இவ்வாறு) இருள்கள்,

بَعْضُهَا فَوْقَ بَعْضٍ

5) அதில் சில சிலவற்றுக்குமேல் இருக்கின்றன

எளிதில் புரிந்துகொள்வதற்காக அவ்வசனத்தை சிறு சிறு பாகங்களாக பிரித்து தந்துள்ளோம். இந்த வாக்கியங்களை மட்டும் மீண்டும் மீண்டும் வாசித்துப் பாருங்கள். ஓர் உண்மை புலப்படும். “அதனை ஓர் அலை மூடிக் கொள்கிறது, அதற்கு மேல் மற்றோர் அலை, அதற்கு மேல் மேகம்” என்று சொல்லிவிட்டு “(இவ்வாறு) இருள்கள்” என்கிறான் அல்லாஹ். அதாவது ஒன்றுக்கு மேல் ஒன்றாக வீசும் அலைகளையும் அதற்கு மேலிருக்கும் மேகத்தையும்தான் அல்லாஹ் இருள்கள் என்கிறான்.

அலைகளும் மேகமும் தான் நடுக்கடலில் இருளை ஏற்படுத்துவதாகவே இந்த வசனத்தை பொருள்கொள்ள முடியுமே தவிர அலைகளுக்கும் மேகத்திற்கும் நடுக்கடலில் ஏற்படும் இருளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லவே முடியாது.

அந்த வசனத்தை எவ்வித முன் முடிவும் இல்லாமல் பொறுமையாக வாசித்தால் அலைகள்தான் இருளை ஏற்படுத்துகின்றன எனும் முடிவையே எவரும் எட்டுவர்.

இவ்வசனத்திற்கு அறிவியல் விளக்கம் சொல்பவர்கள் அனைவரும் இருள் ஏற்படுவதை தனியாகவும் கடலுக்கு அடியே அலைகள் ஏற்படுவதை தனியாகவுமே விளக்குவார்கள். அவர்கள் எவரும் அல்லாஹ் சொல்வதைப்போல அலைகளாலும் மேகங்களாலும் இருள் ஏற்படுவதாக சொல்வதே இல்லை.

ஏனென்றால் அறிவியல் சொல்லும் இருளோ அல்லாஹ் சொல்லும் இருளுடன் முற்றிலும் மாறுபட்டது. அலைகள் இல்லாவிட்டாலும் நீருக்கடியே இருள் ஏற்படும் என்பதே அறிவியல். மேலும் நீருக்கடியே இருள் ஏற்படுவதற்கு கடல் தேவை இல்லை. 300மீட்டர் ஆழம் கொண்ட நன்னீர் ஏரியிலும் அதன் அடிப்பகுதி இருட்டாகவே இருக்கும்.

அறிவியல் சொல்லும் இருட்டு, அலைகளாலோ மேகங்களாலோ உப்பு நீராலோ ஏற்படுவதில்லை. அறிவியல் சொல்லும் இருட்டு தண்ணீரின் ஒளியை உறிஞ்சும் தன்மையால் ஏற்படுவதாகும்.

ஆக அறிவியல் சொல்லும் இருட்டைப் பற்றி அல்லாஹ் பேசவில்லை. என்பது தெளிவாகிறது.

*அலை என்றால் என்ன?*

தமிழில் அலை என்றும் ஆங்கிலத்தில் wave என்றும் அரபு மொழியில் மவ்ஜூ என்றும் நாம் அழைப்பது கடலில் நாம் காணும் அலைகளைதான்.

undefined

ஆனால் அலைகள் கடலில் மட்டுமே ஏற்படுபவை அல்ல. ஆன்டேரியோ ஏரியில் உருவாகும் அலைகளை படத்தில் பார்க்கிறீர்கள்.

அலைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் காற்று ஆகும். நீரில் காற்று கொடுக்கும் அழுத்தமே அலைகளை உருவாக்குகின்றன.

கடலுக்கடியே காற்றடித்து அலைகளை உருவாக்குமா? நிச்சயம் இல்லை. ஆக கடலுக்கடியே அலை என்று சொல்வது நாம் கடலுக்கு மேலே காணும் அலைகளை போன்றது அல்ல

*உள் அலைகள் (Internal Waves) என்றால் என்ன?*

கடல் நீர் உப்பானது என்று நாம் அறிவோம். இந்த உப்பின் அளவு கடலின் எல்லா பகுதிகளிலும் ஒரே அளவாக இருப்பதில்லை. கடலின் மேற்பரப்பில் இருக்கும் உப்புத் தன்மையை விட கடலின் ஆழத்திற்கு செல்ல செல்ல உப்புத் தன்மை அதிகமாகிக்கொண்டே செல்லும்.

விளக்கமாக சொல்லவேண்டும் என்றால். கடலின் மேற்பரப்பில் இருந்து ஒரு லிட்டர் நீரை எடுத்து வந்து காய்ச்சுகிறீர்கள்.நீர் மொத்தமும் ஆவியான பிறகு கிடைக்கும் உப்பை நிறுத்துப் பார்க்கிறீர்கள். 100 கிராம் உப்ப்பு கிடைப்பதாக வைப்போம்.

இப்போது நீங்கள் 50 மீட்டர் ஆழத்திற்கு சென்று அங்கிருந்து நீரை எடுத்து வந்து உப்புக் காய்ச்சினால் 110 கிராம் உப்பு கிடைக்கும். இவ்வாறே ஆழமாக செல்லச் செல்ல கடலின் உப்புத்தன்மை அதிகரிக்கும்.

உப்பு குறைந்த, அடர்த்தி குறைந்த, எடை குறைந்த நீர் மேலே மிதக்கும். எடை அதிகமான நீர் கீழே இருக்கும். இவ்வாறு இரண்டு எடை கொண்ட நீரின் மீது ஏதேனும் ஆற்றல் செலுத்தப்பட்டால் இவை இரண்டும் ஒரே மாதிரி அசையாது. இவை சீராக அசையாமல் இவ்விரண்டும் வெவ்வேறு வேகத்தில் அசையத் துவங்கும்.

பூமியின் ஈர்ப்பு விசையும், நிலவின் ஈர்ப்பு விசையும், கடலுக்கு அடியே இருக்கும் மலை போன்ற அமைப்புகளும் வேறுபட்ட அடர்த்தி கொண்ட நீருக்கு இடையே ஓர் ஆற்றலை செலுத்துகின்றன. அடர்த்தி மாற்றத்தால் இந்த ஆற்றல் மேலுள்ளே நீரையும் கீழுள்ள நீரையும் வெவ்வேறாக அசைய செய்யும்.

இதனால் இவை ஒரே மாதிரி சீராக அசையாமல் ஓர் அலை வடிவில் அசையத் துவங்கும். இதைதான் உள் அலைகள் (internal waves) என்று அறிவியல் அழைக்கிறது.

*அலை என்று அறிவியல் அழைப்பதும் அலை என்று குர்ஆன் அழைப்பதும் ஒரே விஷயத்தையா?*

அறிவியலிடம் ஒரு பழக்கமுள்ளது. தான் கண்டுபிடிக்கும் பொருட்களுக்கும் நிகழ்வுகளுக்கும் ஒன்றில் காரணப் பெயர் இடும் அல்லது ஏற்கனவே மொழிவழக்கில் பயன்பாட்டில் இருக்கும் பெயரையே அதற்கு சூட்டிவிடும்

எடுத்துக்காட்டுற்கு computer mouse கம்பியூட்டர் மௌஸ்-ஐ சொல்லலாம். (நல்லவேளை இதனை யாரும் கணினி எலி என்று மொழிபெயர்ப்பதில்லை)

ஒரு பொருள் வேலை செய்யும் விதத்தை அல்லது ஒரு நிகழ்வை ஒரு கணிதச் சமன்பாடாக எழுதி வைப்பது அறிவியலின் வேலை.

எடுத்துக் காட்டிற்கு நிலவின் இயக்கத்தைப் பற்றி ஆய்வு செய்பவர் நிலவின் இயக்கத்தை ஒரு சமன்பாடாக எழுதிவைப்பார்.  இதே போல மின்சார மோட்டாரின் இயக்கத்தை ஒரு கணித சமன்பாடாக எழுத இயலும்.

இவ்வாறு ஓர் இயக்கத்தை சமன்பாடாக எழுதிய பிறகு அதில் Sin அல்லது Cos என்றும் நாம் பத்தாம் வகுப்பில் படித்த கணித சூத்திரங்கள் இடம்பெற்றால் அந்த இயக்கத்தை waves எனும் பெயருடன் அறிவியல் அழைக்க ஆரம்பித்துவிடும்.

சைன் வேவ் இன்வர்டர் (sine wave inverter) என்று நாம் வீட்டில் பயன்படுத்தும் இன்வர்டர்களை விளம்பரப்படுத்துவார்கள். இதையும் சைன் வேவ் அதாவது சைன் அலை என்று அழைக்கிறார்களே ஒரு வேளை பேட்டரியில் இருக்கும் தண்ணீரில் அலைகள் அடிக்குமோ?

ஏன் sine wave inverter என்று அழைக்கிறார்கள் என்றால் நமது வீட்டுக்கு வரும் மின்சாரத்தின் அறிவியல் சமன்பாடு

V = 2 . 230 . Sin (2π.50.t)

மின்சாரத்தின் சமன்பாட்டில் Sin இருப்பதால் அதனை சைன் வேவ் என்று அழைக்கிறார்கள்.

︵‿︵‿︵‿︵  இதுவே சைன் வேவ்

இதே போல பல நிகழ்வுகளை அலைகள் என்று அழைக்கும் பழக்கம் இருக்கிறது. எடுத்துக்காட்டிற்கு கொரோனா பெருந்தொற்று வந்த போது  அதை முதல் இல்லை இரண்டாம் அலை என்று அழைக்க ஆரம்பித்தார்கள். ஏனென்றால்…

முதலில் யாருக்கும் நோய் இல்லாமல் இருந்து பின்னர் மெது மெதுவாக பலருக்கும் நோய் ஏற்படுவது அதிகரிக்கும். பின்னர் உச்சகட்ட பாதிப்பு ஏற்படும். பின்னர் மெது மெதுவாக குறையும். இவ்வாறு அதிகரித்து குறைவதே ஓர் அலை எனப்படுகிறது.

இதை வரைபடமாக வரைந்தால் இவ்வாறு இருக்கும்,

எடுத்துக் காட்டிற்கு நவம்பரில் யாருக்கும் நோய்த்தாக்கம் இல்லை. பின்னர் அது அதிகரித்து ஜனவரியில் உச்சத்தை அடைகிறது. பின்னர் மெதுவாக குறைந்து குறைந்து ஏப்ரலில் நோய் தாக்கியவர்களின் எண்ணிக்கை சொல்லும்படியாக இல்லை.

பார்ப்பதற்கு இந்த வரைபடம் அலைகளைப் போல இருப்பதால் இதற்கு அலைகள் என்று பெயர் வைத்துவிட்டனர். கொரோனாவின் முதல் அலை, இரண்டாம் அலை என்றனர்

இது மனித இதயத்தின் ECG ரிப்போர்ட்.

இதுவும் ஒரு வரைபடம் தான். பின்னர் இதனை ஆய்வு செய்து கணித சமன்பாடாக மாற்றுவார்கள்.

மொத்தமாக இது அலை வடிவில் இல்லை என்றாலும் இதன் ஒவ்வொரு அம்சமும் அலையாகவே உள்ளன. ECG யை படிக்கும் மாணவர்கள் இதனை P அலை , T அலை , QRS அலை என்றே படிப்பார்கள்.

இதனை ஆய்வு செய்து கணித சமன்பாடாக மாற்றியுள்ளதை இங்கே காணலாம். https://www.intmath.com/fourier-series/ecg-fourier-quartic-plusT.pdf 

இதில் sin, cos ஆகியவை இருப்பதை கவனியுங்கள்.

Definition, Mathematical Representation, Equation, Electromagnetic Spectrum,  EM Radiation Speed, Application and FAQs

படத்தில் இருப்பது மின் காந்த அலைகளின் வரைபடம்.

மின்காந்த அலைகளின் சமன்பாட்டை வரைபடமாக வரைந்து பார்த்தது அறிவியல். நாம் கடலில் பார்க்கும் அலைகளை போல முகடுகளும் பள்ளங்களையும் அந்த வரைபடம் காட்டியதால் மின்காந்த இயக்கத்தை அலைகள் என்றே அழைத்தது அறிவியல்.

In physics, mathematics, engineering, and related fields, a wave is a propagating dynamic disturbance (change from equilibrium) of one or more quantities.

இதுதான் அறிவியல். இவ்வாறு ஓர் இயக்கத்தை சமன்பாடாகவோ வரைபடமாகவோ வரையும்போது அது அலை போல இருந்தால் அதனை அலை என்றே அறிவியல் அழைக்கும்.

மின்சார அலை

மின்காந்த அலை

ஒளி அலை

ஒலி அலை

வெப்ப அலை

என பலவற்றை அறிவியல் அலை என்று அழைக்கிறது. இதே போன்ற ஓர் ஆற்றல் இயக்கத்திற்கு அலை என்று பெயரிட்டது அறிவியல். அதுதான் internal waves அல்லது உள் அலைகள்.

அடர்த்தி வேறுபாடுள்ள நீர் ஒரே மாதிரி சீராக அசையாமல் வெவ்வேறாக அசைவதே உள் அலைகள். இதை கடலில் பயணம் செய்பவர் கண்ணால் பார்க்க முடியாது. கடலுக்குள்ளே டைவிங் செய்பவர் உணர மாட்டார். இதை காணவோ உணரவோ முடியாது.

இதை உயர் தொழில் நுட்பக் கருவிகளால் அளந்தார்கள். அடர்த்தியை அளக்கும் கருவிகள், வெப்பநிலையை அளக்கும் கருவிகளைக் கொண்டு கடலின் வெவ்வேறு ஆழத்தில் இவற்றை அளக்கும்போது இவை நாம் மேலே சொன்ன sine function ஐ கொண்டு மாறுபட்டதால் அங்கே அலை இயக்கம் இருப்பதை அறிந்தார்கள்.

உண்மையில் அப்பகுதியல் இருக்கும் பொருட்கள் (மீன், அல்லது மனிதன்) இந்த இயக்கத்தால் மேலும் கீழும் தள்ளப்படும். ஆனால் அதை உணர முடியாது.

*அலை என்று குர்ஆன் சொல்வது இந்த சைன் வேவையா?*

குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டது. மற்ற மொழிகளை போல அரபு மொழியும் காலப்போக்கில் பல வளர்ச்சிகளை கண்டது. அறிவியல் ஒவ்வொன்றாக கண்டுபிடிக்க அதை ஆங்கிலத்தில் இருந்து அதே பொருளில் அரபு மொழியிலும் மொழிபெயர்ப்பார்கள்.

இவ்வாறு எல்லா மொழிகளிலும் பிற்காலத்தில் ஒரு சொல்லுக்கு வேறு பொருள் கொடுக்கப்படும். எடுத்துக் காட்டுக்கு நாம் மேலே சொன்ன கம்பியூட்டர் எலி. 300 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஆங்கில இலக்கியத்திலிருந்து mouse என்கிற வார்தையை எடுத்து வந்து “பாருங்க! எங்க ஆட்கள் mouse ஐ அறிவியல் கண்டுபிடிக்கும் முன்னரே கண்டுபிடித்துள்ளார்கள்” என்றால் எவ்வளவு வேடிக்கையாக இருக்கும்.

துப்பாக்கி எனும் சொல் திருக்குறளில் உள்ளது. “பாருங்க! 200௦ ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்” என்றால் அது எவ்வளவு வேடிக்கையாக இருக்கும்.

ஹிஜ்ரா கமிட்டியினர் ஹிஸாப் எனும் சொல்லை ஹதீசிலிருந்து எடுத்துக்காட்டி “பாருங்க இது கம்பியூட்டரை பயன்படுத்தி செய்யப்படும் வானியல் கணக்கீட்டை குறிக்கிறது” என்றார்கள்.

ஏனென்றால் நவீன அரபியில் computation என்பதற்கு حساب என்றும் computer என்பதற்கு حاسوب ஹாசூப் என்றும் அழைக்கிறார்கள்.

நவீன அரபியில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைத்தான் 1400 வருடங்களுக்கு முன்னரே ஹதீஸ் சொல்கிறது என்று ஹிஜ்ரா கமிட்டி வாதிட்டதை என்பதை நாமெல்லாம் நிராகரித்தோம்.

ஆனால் நவீன அறிவியல் ஓர் இயக்கத்தை அலை என்று அழைத்ததால் அதைத்தான் குர்ஆனும் சொல்வதாக சொல்கிறோம்.

அலை என்று குர்ஆன் சொல்வது கடலின் மேற்பரப்பில் நாம் காணும் அலைகளையேயன்றி கடலுக்குள் சைன் வேவில் உருவாகும் ஆற்றலை அல்ல.

*கடலில் மட்டுமே ஒளியிழப்பு ஏற்படுமா?*

//ஒளியை ஒரே நிறத்தில் நாம் பார்த்தாலும் அது ஏழு வண்ணங்களின் தொகுப்பாகும்//

இவ்வாறு தப்ஸீர் எழுதியுள்ளார் அறிஞர் பீஜே.

உண்மையில் ஒளியில் 7 வண்ணங்கள் மட்டுமல்ல. பல மில்லியன் வண்ணங்கள் உள்ளன.

துவக்கத்தில் கலர் மானிட்டர்கள் வெறும் 256 நிறங்களைக் கொண்டதாக இருந்தன. அதாவது அந்த திரையில் வெறும் 256 நிறங்களை மட்டுமே வேறுபடுத்திக் காட்ட இயலும். நீல நிறமும் நீல நிறத்தில் மிக சிறு வித்தியாசத்தில் வெளிர் நீல நிறமும் இருந்தால் இரண்டையும் நீலமாகவே அந்த திரை காட்டும்.

பின்னர் 4000 நிறங்களை பிரித்துக் காட்டும் தொலைபேசிகள் வந்தன. அதன் பிறகு 65000 நிறங்களை காட்டும் தொலைபேசிகள் வந்தன. பின்னர் அது 1.6 கோடி நேரங்களை பிரித்துக் காட்டும் தொலைபேசிகள் வந்தன.

ஒரு படத்தை 65,000 நிறங்களை கொண்ட போனிலும் அதே படத்தை 1.6 கோடி நிறங்களை கொண்ட போனிலும் அருகருகுகே வைத்துப் பார்த்தால் 1.6 கோடிநிறங்களை கொண்ட திரையே அழகாக தெரியும். இதற்கு காரணம் நமது கண்களால் 65,000 நிறங்களையும் 1 கோடி நிறங்களையும் பிரித்தறிய இயலும் என்பதே.

Visualizing Bit Depth

1,67,77,216 (ஒரு கோடியே அறுபத்தி எட்டு லட்சம் வண்ணங்கள்

Visualizing Bit Depth

65,536 (அறுபத்தி ஐயாயிரம் வண்ணங்கள்)

Visualizing Bit Depth

4,094 வண்ணங்கள்

Visualizing Bit Depth

1024 வண்ணங்கள்

Visualizing Bit Depth

256 வண்ணங்கள்

ஆக வண்ணங்கள் ஏழுமட்டுமல்ல. ஆனால் எத்தனை வண்ணங்கள் இருந்தாலும் அவற்றை மூன்றே மூன்று வண்ணங்களைக் கொண்டு உருவாக்கி விடலாம். அவைதான் பச்சை, நீலம் சிவப்பு.

பழைய CRT TV திரை

நீங்கள் மேலே படத்தில் பார்ப்பது உருண்டையாக பெரிதாக நமது வீடுகளை அலங்கரித்த பழைய CRT தொழில் நுட்ப தொலைக் காட்சியின் திரையின் ZOOM செய்யப்பட்ட படம். நாம் பலரும் சிறுவயதில் தொலைக் காட்சி திரை அருகே நின்று இதைப் பார்த்திருப்போம்.

அதில் மூன்று நிறங்களே இருக்கும். திரையில் மொத்தமும் நீலமாக இருந்தால் நீல நிற கட்டங்கள் மட்டுமே எரியும், பச்சை நிறக் கட்டங்களும் சிவப்பு நிறக் கட்டங்களும் கருப்பாக இருக்கும்.

திரை முழுவதும் மஞ்சளாக இருந்தால் சிவப்பு நிறக் கட்டங்களும் பச்சை நிறக் கட்டங்களும் எரியும். நீல நிறக் கட்டங்கள் கருப்பாக இருக்கும். சிவப்பு ஒளியும் பச்சை ஒளியும் கலந்து மஞ்சளாக காட்சியளிக்கும்.

மஜெந்தா நிறத்தை உருவாக்குவதற்கு சிவப்பு ஒளியையும் நீல ஒளியையும் சம அளவில் கலக்க வேண்டும்.

மஞ்சள் நிறத்தை உருவாக்குவதற்கு பச்சை நிற ஒளியையும் சிவப்பு நிற ஒளியையும் சம அளவில் கலக்க வேண்டும்.

நவீன AMOLED திரை

இது நவீன AMOLED திரை இதிலும் மூன்று நிறங்களே உள்ளன. இதை நாம் எதற்கு காட்டுகிறோம் என்றால் வெறும் மூன்று நிறங்களை கொண்டுதான் பல கோடி நிறங்களை நமது தொலைகாட்சி, தொலைபேசி, கம்பியூட்டர் திரைகள் உருவாக்குகின்றன.

பின்னர் ஏன் சூரிய ஒளியின் நிறம் ஏழு என்றும் வானவில்லின் நிறம் ஏழு என்று சொல்கிறார்கள் எனும் கேள்வி எழலாம். சூரிய ஒளி நீர் திவலைகளால் சிதறடிக்கப்பட்டு பல வண்ணங்களாக பிரிகின்றன. அதை நாம் வானவில்லாக பார்க்கிறோம். இதன் பொருள் சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் உள்ளன என்பதல்ல. மாறாக நீர் திவலைகளே சூரிய ஒளியை ஏழு நிறங்களாக பிரிக்கிறது. (வானவில்லில் தெரிவது ஏழு நிறங்கள் அல்ல, ஆறு மட்டுமே என்றொரு தனி பஞ்சாயத்து நடக்கிறது. நமது தலைப்பு தேவையற்றதால் அதை தவிர்த்துள்ளோம்)

மனித கண்களில் இரண்டு வகையான செல்கள் உள்ளன. ஒன்று குச்சி வடிவ செல்கள் Rods மற்றொன்று கூம்பு வடிவ செல்கள் Cones. குச்சி வடிவ செல்களால் மிக குறைந்த ஒளியை மட்டுமே பார்க்க இயலும். எடுத்துக் காட்டுக்கு சொல்வதாக இருந்தால் முழுநிலவு இரவில் மிக குறைந்த வெளிச்சமே இருக்கும். அப்போது இந்த் குச்சி வடிவ செல்கள் மட்டுமே நமக்கு பார்வையை தருகின்றன. குறைந்த ஒளியில் கூம்பு செல்கள் வேலை செய்யாது. மேலும் குச்சி வடிவ செல்களால் நிறங்களை வேறுபடுத்த இயலாது. இதனால்தான் முழுநிலா இரவில் நாம் கருப்பு வெள்ளை காட்சிகளையே பார்ப்போம். வண்ணங்களை பார்க்க இயலாது.

கூம்பு வடிவ செல்கள் அதிக வெளிச்சத்தில் மட்டுமே வேலை செய்யும். மேலும் அவற்றால் மட்டுமே நிறங்களை பார்க்க இயலும். கூம்பு செல்களில் மூன்று வகைகள் உள்ளன. ஒன்று நீல நிறத்தை மட்டுமே பார்க்கும், மற்றொன்று பச்சை நிறத்தையும் மூன்றாவது கூம்பு செல்கள் சிவப்பு நிறத்தையும் மட்டுமே பார்க்கும்.

அல்லாஹ்வின் படைப்பே மூன்று நிறங்களை கொண்டே கோடிக்கணக்கான நிறங்களை உருவாக்கும்படியும் மூன்று நிறங்களை கொண்டே கோடிக்கணக்கான நிறங்களை அடையாளம் காணும்படியும் அமைந்துள்ளது.

கண்களால் மூன்று நிறங்களை மட்டுமே பிரித்தறிய முடியும் என்றால் எவ்வாறு நாம் பல நிறங்களை பார்க்கிறோம் எனும் கேள்வி எழலாம். மூன்று நிறங்களை கொண்டு எவ்வாறு கோடிக்கணக்கான நிறங்கள் உருவாகிறதோ அதே அடிப்படையில்தான் மூன்று நிறங்களை கொண்டு கோடிகணக்கான நிறங்களை நம் கண்கள் பார்க்கின்றன.

எடுத்துக் காட்டுக்கு

மேலுள்ள நிறம் 100% சிவப்பு நிற ஒளியையும் 50% பச்சை ஒளியையும் 50% நீல நிற ஒளியையும் கலப்பதால் கிடைக்கும் கிடைக்கும் நிறமாகும்.

இதை உருவாக்க வேண்டுமென்றால் LED திரையில் முழு வெளிச்சத்துடன் சிவப்பு LED எரியும், நீல நிற LEDயும் பச்சை நிற LEDயும் பாதி வெளிச்சத்தில் எரியும். இவை மூன்றும் கலந்து இந்த நிறத்தை உருவாக்கும்.

சரி. இதை நமது கண்கள் எவ்வாறு அடையாளம் காண்கிறது என்றால். இந்த படம் நமது விழித்திரையில் விழும்போது அங்கிருக்கும் சிவப்பு கூம்பு செல்கள் 100% ஆக்டிவேட் செய்யப்படும், பச்சை & நீல நிற கூ கூம்பு செல்கள் 50% ஆக்டிவேட் ஆகும். ஏனென்றால் இந்த படத்தில் நீலமும் பச்சையும் 50% தான் உள்ளன. இம்மூன்று செல்களும் கொடுக்கும் சிக்னல்களை நமது மூளைதான் கலந்து சரியான இந்த வண்ணத்தை நமக்கு உணர்த்துகிறது.

அடிப்படை மூன்று நிறங்களை கலந்து எவ்வாறு ஒரு வண்ணம் உருவாகிறதோ அதே போலவே ஒரு வண்ணத்தில் இருக்கும் அடிப்படை நிறங்களை அளப்பதன் மூலம் அதே வண்ணத்தை நமது கண்களும் மூளையும் மீட்டெடுக்கின்றன.

வெள்ளை ஒளியையும் இன்ன பிற வண்ணங்களையும் உருவாக்க மூன்று அடிப்படை நிறங்கள் போதுமானது. இதனை நாம் தினமும் அனுபவித்து வருகிறோம்.

வெள்ளை ஒளியில் இருந்து நீல நிறத்தை நீக்கிவிட்டால், மீதமிருக்கும் சிவப்பும் பச்சையும் கலந்து மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும். இதுதான் வானம் நீலமாகவும் சூரியன் மஞ்சளாகவும் தெரிவதற்கான காரணம். காற்று மண்டலம் சூரிய ஒளியின் நீல நிறத்தை உறிஞ்சிக் கொள்வதாலும் சிதறடிப்பதாலும் வானம் நீல நிறமாக காட்சியளிகிறது. நீலம் நிறத்தை சிறிதாக இழந்ததால் சூரிய ஒளி மஞ்சள் நிறத்திலும் சூரியனும் மஞ்சள் நிறத்தில் தெரிகின்றன.

ஒளி இழப்பு என்பது கடலில் மட்டுமே ஏற்படுவதல்ல. காற்றிலும் ஒளி இழப்பு ஏற்படும்.

கடல் நீரில் மட்டுமே ஒளி இழப்பு ஏற்படுவதில்ல. நன்னீரிலும் ஒளி இழப்பு ஏற்படுகிறது.

https://www.youtube.com/watch?v=MM_RwdUi30Q&t=18s&ab_channel=RobStiff

இது நன்னீர் நிறைந்த ஒரு குவாரியில் எடுக்கப்பட்ட வீடியோ. இங்கேயும் நிற இழப்பு ஏற்படுகிறது.

நன்னீர் குவாரியில் internal waves (உள் அலைகள்) ஏற்படாது.

மீண்டும் மேலே சொன்னதை நினைவூட்டுகிறோம். குர்ஆனில் அல்லாஹ் அலைகளை இருள்களுடன் தொடர்பு படுத்தி பேசுகிறான். ஒன்றன் மேல் ஒன்றாக வீசும் அலையும் அதன் மேலுள்ள மேகத்தையும் ஒவ்வொரு இருள் என்கிறான் அல்லாஹ். ஆனால் இவர்கள் சொல்லும் ஒளி இழப்புக்கும் internal waves க்கும் தொடர்பே இல்லை.

*இருள்கள் என்று பன்மையாக சொல்வது ஏன்?*

அல்லா குர்ஆனில் இருளைப் பற்றி சொல்லும் இடங்களிலெல்லாம் பன்மையாக இருள்கள் என்றே சொல்கிறான். இதற்கும் அறிவியல் சாயம் பூசுகிறார்கள்.

//சூரியனின் வெளிச்சத்தில் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்கள் உள்ளன.

சூரிய ஒளியின் ஒவ்வொரு நிறத்தின் அலை வேகம் வேறுபடுவதால் கடலில் ஒவ்வொரு குறிப்பிட்ட தொலைவில் ஒவ்வொரு நிறமாகத் தடுக்கப்படுகிறது.

சிவப்புக் கதிர் கடலில் 15 மீட்டர் வரை தான் செல்லும். 15 மீட்டர் ஆழத்திற்கு மேல் சென்றால் சூரியனின் ஆறு வண்ணங்கள் தான் தெரியும். அங்கே சிவப்பான பொருட்களை மட்டும் காண முடியாத அளவுக்கு ஒரு இருள் ஏற்படுகின்றது.

இப்படி ஒவ்வொரு தொலைவிலும் ஒவ்வொரு வண்ணம் தடுக்கப்படும் போது அந்த ஒளியைப் பொறுத்த வரை இருள் ஏற்படுகிறது. எந்த இடத்தில் அனைத்து வண்ணங்களும் முழுமையாகத் தடுக்கப்படுகின்றதோ அந்த இடத்துக்கு நிகரான இருள் வேறு எதுவும் இருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.//

இவ்வாறு தப்ஸீர் எழுதியுள்ளார் அறிஞர் பீஜே.

இவர்கள் சொல்வதைப் போல, ஏழு நிறங்களை கொண்ட விளக்குகளை ஓர் அறையில் எரிய விட்டுள்ளார்கள். இப்போது அந்த ஏழு நிறங்களும் கலந்து வெள்ளை ஒளி உருவாகும். இது உண்மைதான்.

இப்போது அதில் பச்சை விளக்கு ஃப்யூஸ் ஆகிவிட்டது என்று வைத்துகொள்வோம். இவர்கள் அந்த அறையில் இருந்தால், “பச்சைக்கு அங்கே இருள் ஏற்பட்டது விட்டது” என்றும் “ஓர் இருட்டு ஏற்பட்டுள்ளது” என்றும் சொல்வார்களா?

மற்றோர் அறையில் பச்சை நிற விளக்கை மட்டும் எரிய வைத்துள்ளார்கள். அங்கே எல்லாமே பச்சையாக தெரியும். வேறு நிறங்களே தெரியாது. அப்போது இவர்கள் அங்கே “ஆறு இருட்டுகள் இருக்கிறது” என்று சொல்வார்களா?

முழுநிலா ஒளிவீசும் இரவில் நமக்கு நன்றாக பார்க்க இயலும். வேறு வெளிச்சமே இல்லாமல் இரவில் நடந்து செல்ல இயலும். அதை யாரும் இருள் என்று சொல்ல மட்டோம். ஆனால் நிறங்கள் எதையும் நிலா ஒளியில் பிரித்தறிய இயலாது. அங்கே “ஏழரை இருள்கள் இருப்பதாக” இவர்கள் சொல்வார்களா?

நிறங்கள்தாம் பல்வேறாக உள்ளன. ஒளி தான் பன்மையாக இருக்கிறது. எந்த ஒளியும் இல்லாத நிலையே இருள் எனப்படும்.

இருள்கள் என்று பன்மையாக குர்ஆன் கையாள்வது அதன் இலக்கிய நயத்திற்காகவே அன்றி வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை. அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

*சுனாமி அலைகள் உள் அலைகளா?*

2004 டிசம்பர் மாதம் வரையில் அறிஞர் பீஜே அவர்கள் பின்பவருமாறு தப்ஸீர் செய்திருந்தார்

// 303. கடல் ஆழத்தில் அலைகள்

24:40 வசனத்தில் கடலைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது அங்கே அவன் மேல் அலை அடிக்கும் எனவும். அதற்கு மேலேயும் அலை இருக்கும் எனவும் கூறுகிறான்.

கடலின் மேற்பரப்பில் அதுவும் கடற்கரை ஓரங்களில் மாத்திரமே அலை இருக்கும் என்று கருதப்பட்ட காலத்தில் கடலின் அடியில் அலைக்கு மேல் அலை இருக்கும் என்ற மாபெரும் அறிவியல் உண்மையை இவ்வசனம் கூறுகிறது. கடலின் ஆழத்தில் கடுமையான அலைகளின் சுழற்சி இருப்பதை சமீபத்தில் தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கடல் ஆழத்தைப் பற்றிய அறிவு எதுவும் இல்லாத காலத்தில் வாழ்ந்த நபியால் இதைச் சொந்தமாகக் கூறியிருக்க முடியாது.

எனவே திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் தான் என்பது இவ்வசனத்தின் மூலம் நிரூபணம் ஆகிறது//

மேலுள்ளது முழுக்க முழுக்க சிந்தானி ப்ராஜக்டின் அடித்தளத்தில் பீஜே எழுதியதாகும். ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் internal waves  என்று எதை இவ்வசனத்திற்கு விளக்கமாக சொல்லி வந்தார்களோ அதையே பீஜே அவர்களும் சொல்லி வந்தார்.

2004 சுனாமிக்குப் பிறகு இந்த வசனத்தின் தப்சீரை முழுமையாக மாற்றிவிட்டார்.

https://onlinepj.in/index.php/alquran/alquran/quran-explanations/429-azkadali_alaikal 

இந்த லிங்கில் பாருங்கள் உள் அலைகளுக்கு விளக்கமாக சுனாமியை சொல்ல ஆரம்பித்துவிட்டார். ஆனால் உள் அலைகள் வேறு சுனாமி வேறு என்கிறது அறிவியல்.

*அந்த வசனத்திற்கு என்னதான் பொருள்?*

போலி அறிவியல் விளக்கங்களை நாம் சான்றுகளுடன் மறுக்கும்போது உடனடியாக எழும் கேள்வி. “அப்படின்னா சரியான விளக்கத்தை நீ சொல்லு” என்பதாகும். அந்த குர்ஆன் வசனத்திலிருந்து எந்த தில்லுமுல்லும் செய்யாமல் எந்த வளைத்தொடிப்புகளும் இல்லாமல் நேரடியாக பெறப்படும் விளக்கம் தெளிவாக இருந்தபோதிலும் போலி அறிவியலை ஏற்றுகொண்டதால் நம்மவர்களால் அந்த நேரடிப் பொருட்களை ஏற்றுக்கொள்ள இயலுவதில்லை. இன்ஷா அல்லாஹ் விளக்குவோம்.

உவமைகளை உவமைகளாக பார்த்து அந்த உவமைகளில் சொல்லப்பட்ட அறிவுரையை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அறிவியலைத் தேடி அல்லாஹ் சொல்லும் அறிவுரைகளைத் தொலைத்துவிட்டு நிற்கிறோம்.

“இன்னும், எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அப்பொழுது அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்)காற்று அவனை வெகு தூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றதைப்போன்றோ இருக்கின்றான்.” 22:31

இவ்வசனத்தில் அறிவியலைத் தேடி ஜுராசிக் பார்க் திரைப்படத்தைப் போல சிலர் கதை எழுதிவிட்டனர். இதில் அறிவியலைத் தேடுவதற்கு என்ன இருக்கிறது. இன்றுவரை மனிதனை கொத்திச் செல்லும் பறவையும் இல்லை காற்று மனிதனை அடித்துசென்றதுமில்லை. சின்னாபின்னமாகிப் போனவனுக்கு அல்லாஹ் ஓர் உவமையை சொல்கிறான். இதுபோன்ற உவமைகள் குர்ஆனில் பல உள்ளன. அந்த உவமைகளை நாம் எடுத்து அறிவியல் ஆய்வு செய்ய இயலாது.

அதே போல 24:39 ம் வசனத்திலிருந்து நாம் துவங்க வேண்டும்.

24:39. இன்னும் நிராகரித்துவிட்டார்களே அவர்கள் - அவர்களின் செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் (நீரைப்) போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீர் என எண்ணிக் கொள்கிறான், எதுவரையெனில் (முடிவாக) அவன் அதனிடத்தில் வந்தடைந்தால் அதை அவன் ஒரு பொருளாகப் பெற்றுக் கொள்ள மாட்டான்,

இதன் தொடர்ச்சியாக இறை நிராகரிப்பாளர்களின் செயல்களை அல்லாஹ் ஓர் கடலில் உள்ள இருள்களுடன் ஒப்பிடுகிறான். அந்த கடல் பரந்துவிரிந்து ஆழமானதாக உள்ளது. அதனை அலைக்கு மேல் அலைகள் மூடுகின்றன. ஏற்கனவே இருட்டாக இருக்கும் அந்த கடலில் மேலும் இருட்டாக அலைகளும் மேகங்களும் மூடியுள்ளன. இப்போது அந்த கடலில் தத்தளிக்கும் ஒருவன் தனது கையை கடலிலிருந்து வெளிப்படுத்திப் பார்த்தால் அவனால் அதைப் பார்க்க இயலாது என்கிறான். இறை நிராகரிப்பு எனும் அவனுடைய செயல்கள் இருளானவை. அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லை எனில் அவன் இருளிலேயே விடப்படுவான் என்பதே இதன் படிப்பினை.

*முடிவு*

  • பஹ்ருல் லுஜ்ஜி என்றால் கடலின் அடிப்பகுதி என்று பொருளல்ல
  • அல்லாஹ் அலைகளையும் மேகத்தையும் இருள்களுடன் தொடர்பு படுத்தி பேசுகிறான். ஆனால் இவர்கள் சொல்லும் ஒளி இழப்புக்கும் (internal waves) உள் அலைகளுக்கும் தொடர்பே இல்லை.
  • அலைகள் என்று அல்லாஹ் சொல்வது வேறு; அலைகள் என்று அறிவியல் சொல்வது வேறு
  • அலைகள் கடலல்லாத ஏரியிலும் ஏற்படும். ஆனால் அல்லாஹ் ஒரு கடலைப் பற்றி சொல்கிறான்
  • ஏரிகளிலும் ஆழத்தில் ஒளி இழப்பு ஏற்படும். அந்த ஒளி இழப்பை பற்றி அல்லாஹ் பேசவில்லை. கடலுக்கு மேலே இருக்கும் இருளைப் பற்றி சொல்கிறான்.


மற்ற தலைப்புகளை வாசிக்க https://www.piraivasi.com/p/zina-ul-abdeen.html