Thursday 3 November 2022

QSF37. இரும்பு மட்டுமே வானிலிருந்து வந்ததா?

 

இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்


ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்


QSF ஆய்வுக்குழு


அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும். அறிமுகத்தை வாசிக்க https://www.piraivasi.com/2022/11/zina-ul-abdeen-intro.html

QSF37. இரும்பு மட்டுமே வானிலிருந்து வந்ததா


தஃப்ஸீர் குறிப்பை வாசிக்க: 423. இரும்பு இறக்கப்பட்டதா?


சிவப்பு நிறத்தில் இருபது தப்சீர் குறிப்பு

நீல நிறத்தில் இருப்பது நமது மறுப்பு.



لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ وَأَنْزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ ۖ وَأَنْزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَلِيَعْلَمَ اللَّـهُ مَنْ يَنْصُرُهُ وَرُسُلَهُ بِالْغَيْبِ ۚ إِنَّ اللَّـهَ قَوِيٌّ عَزِيزٌ ﴿٢٥﴾

57:25. நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலைநாட்ட தராசையும் இறக்கினோம். இரும்பையும் இறக்கினோம்.423 அதில் கடுமையான ஆற்றலும், மக்களுக்குப் பயன்களும் உள்ளன. தனக்கும், தன் தூதர்களுக்கும் மறைவாக உதவி செய்வோரை அல்லாஹ் அடையாளம் காட்டுவான். அல்லாஹ் வலிமை உள்ளவன்; மிகைத்தவன்.


//இவ்வசனத்தில் (57:25) இரும்பை இறக்கினோம் என்று இறைவன் கூறுகின்றான்.


இரும்பை இம்மண்ணிலிருந்தே நாம் பெற்றுக் கொள்வதால் இறைவன் கூறுவது நமக்கு வியப்பை ஏற்படுத்தலாம்.


இப்பூமியிலுள்ள இரும்பு பூமியில் உருவானதல்ல என்பதை விஞ்ஞானிகள் தக்க காரணத்துடன் விளக்கியுள்ளனர்.


ஒவ்வொரு தனிமங்களும் உருவாவதற்கு, அதற்கேற்ற வெப்பம் இருக்க வேண்டும். வெப்பத்தின் தன்மையைப் பொறுத்து கார்பன், சோடியம், மக்னீசியம், நியான், அலுமினியம், சிலிகான், ஈயம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட தனிமங்கள் உருவாயின.


ஆனால் இரும்பு என்ற தனிமம் உருவாவதற்குத் தேவையான வெப்பம் பூமியில் எந்தவொரு காலகட்டத்திலும் இருக்கவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்பூமியில் கிடைக்கும் பொருட்கள் இங்கேயே உருவாவதற்கான காரணங்கள் இல்லாவிட்டால் அப்பொருள் வெளி உலகத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.//


இந்த அண்டத்தில் இருக்கும் தனிமங்களிலேயே மிகவும் லேசானது ஹைட்ரஜன். இந்த ஹைட்ரஜனைக் கூட பூமியால் உருவாக்க இயலாது. பூமியில் இருக்கும் எந்த ஒரு தனிமமும் பூமியில் உருவாகவே இல்லை. எந்த ஒரு தனிமத்தையும் பூமியால் உருவாக்க இயலாது. எல்லாமே பெருவெடிப்பில் உருவானவைதான். இரும்பை மட்டுமே பூமி உருவாக்கவில்லை என்பது அறியாமை ஆகும்.


//30 கோடி டிகிரி வரை வெப்பமுடைய பல நட்சத்திரங்கள் பால்வெளியில் உள்ளன. இந்த நட்சத்திரங்களிலிருந்து எரி கற்கள் விழும்போது அல்லது வால் நட்சத்திரங்கள் பூமியை நோக்கி விழும்போது, வளிமண்டலத்தில் அவை தடுக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. அவற்றின் துகள்கள் பூமிக்கு வந்து இறங்குகின்றன. கோடானு கோடி ஆண்டுகளாக இப்படி விழுந்த இரும்புத் துகள்களைத்தான் பூமியிலிருந்து எடுத்துப் பயன்படுத்துகிறோம்.//


பூமிக்கடியில் ஒரும் இரும்பு ஆறு எப்படி உருவானது. அந்த இரும்பு ஆறு எரிமலையாக வெடித்து வெளியேற்றும் இரும்பை பூமியில் நாம் பயன்படுத்துகிறோமே அதை எந்த கணக்கில் சேர்ப்பது? ஏதோ இணையத்தளத்தில் யாரோ எழுதியதை காப்பி பேஸ்ட் செய்துள்ளனர்.


//இது குறித்து நாசா விஞ்ஞானிகள் பின்வருமாறு கூறுகின்றனர்.

எந்த ஒரு காலத்திலும் இரும்பை உருவாக்கும் ஆற்றல் பூமிக்கு இருந்ததில்லை. சூரியனுக்கும் சூரியக் குடும்பம் எனப்படும் எந்தக் கோள்களுக்கும் இருந்ததில்லை. இரும்பின் ஒரு அணுவை உருவாக்குவதற்கு சூரியக் குடும்பத்தின் மொத்த ஆற்றலைப் போல் நான்கு மடங்கு ஆற்றல் தேவைப்படும். எனவே பூமியில் காணப்படும் இரும்பு வானத்தில் இருந்து தான் வந்திருக்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.//


நிச்சயமாக நாசா விஞ்ஞானியல்ல, எந்த விஞ்ஞானியும் அவர் விஞ்ஞானியாக இருந்தால் இவ்வாறு சொல்லவே மாட்டார். பூமி, சூரிய குடும்பம் மட்டுமல்ல, அண்ட சராசரம் அனைத்திலும் ஆக லேசான தனிமம் ஹைட்ரஜன் ஆகும். இரு ஹைட்ரஜன் அணுக்களின் அணுக்கருக்கள் இணைந்தால் (nuclear fusion) ஹீலியம் உருவாகும். ஆனால் இவை இணைவதற்கு அதிகப்படியான ஆற்றல் தேவை. ஒட்டு மொத்த சூரிய குடும்பத்திலும் ஹைட்ரஜனை ஹீலியமாக மாற்றும் ஆற்றல் சூரியனுக்கு மட்டுமே உள்ளது. ஹீலியம் அணுக்கள் அணுக்கரு இணைவின் (nuclear fusion) மூலம் கார்பனாக மாறும். அதற்கு பன்மடங்கு ஆற்றல் வேண்டும். ஆனால் இன்றுவரை ஹீலியத்தை காற்பனாக மாற்றும் ஆற்றல் சூரியனுக்கு இல்லை. பின்னர் இவ்வாறு ஒவ்வொரு தனிமமும் அணுக்கரு இணைவின் (nuclear fusion) மூலம் அதை விட கனமான தனிமமாக மாறும். இவ்வாறு அணுக்கரு இணைவின் மூலம் உருவாகும் அதிக எடையுள்ள தனிமம் இரும்பாகும். இரும்பை விட கனமான தனிமங்களாக செம்பு, வெள்ளி, தங்கள் போன்றவை அணுக்கரு இணைவால் உருவாக இயலாது. அதற்கு நியுட்ரான் பிடிப்பு (nutron capture) எனும் முறை தேவை. சூரியனின் இறுதி கட்டத்தில் அது ஹீலியத்தை கார்பனாக மாற்றும் என்று கணித்துள்ளார்களே தவிர, கார்பனுக்கு அடுத்த நிலையான ஆக்சிஜனை உருவாக்கும் ஆற்றல் கூட சூரியனுக்கு இல்லை எனும்போது இரும்பை மட்டுமே குறிப்பிட்டு அது சூரிய குடும்பத்தில் உருவாக வாய்ப்பில்லை என்று எந்த விஞ்ஞானியும் சொல்லவே மாட்டார். ஹைட்ரஜன் ஹீலியம் எனத் தொடங்கி இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த தனிமங்களின் எண்ணிக்கை 294. இதில் இரும்பை மட்டுமே குறிப்பிடும் தேவை நாசா விஞ்ஞானிகளுக்கு என்ன வந்தது.


இதில் வேடிக்கை என்னவென்றால் சூரியனால் ஹைட்ரஜனை ஹீலியமாக மாற்ற இயலுமே தவிர ஹைட்ரஜனை உருவாக்க இயலாது. சூரியனில் இருக்கும் ஹைட்ரஜனே வெளியே இருந்து வந்ததுதான்.


பூமியில் இருக்கும் இரும்பு மட்டுமே வானிலிருந்து வந்ததா?


இரும்பு வானிலிருந்து வந்தது என்றே வைப்போம். பூமியில் இருக்கும் ஈயம், அலுமினம், செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்கள் எங்கிருந்து வந்தன? இரும்பை உருவாக்கும் ஆற்றலே இல்லாதபோது அதை விட எடை அதிகமான இந்த உலோகங்கள் எங்கிருந்து வந்தன?


பூமியில் இருக்கும் எதுவும் பூமியிலோ சூரிய குடும்பத்திலோ உருவாகவில்லை. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் உட்பட அனைத்துமே வானிலிருந்து வந்ததுதான்.


பார்க்க https://en.wikipedia.org/wiki/Nuclear_fusion

https://en.wikipedia.org/wiki/Sun#Structure_and_fusion


//இரும்பு இப்பூமியில் உற்பத்தியாகவில்லை, மேலேயிருந்து தான் இறக்கப்பட்டது என்பதை அற்புதமாக அறிவித்திருப்பதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது நிரூபணமாகின்றது.//


குர்ஆனுக்கு முன்னர் எரிகற்களில் இரும்பு இருப்பதை மனித சமூகம் அறிந்தே இருந்தது.


1920ல் துத் எனும் எகிப்திய மன்னனின் மம்மியை வெளியே எடுக்கும்போது அதில் ஒரு தங்கத்தினாலான கட்டாரியும் இரும்பாலான கட்டாரியையும் கண்டெடுத்தனர். அந்த கட்டாரியை ஆய்வு செய்ததில் அதன் இரும்பு-நிக்கல்-கோபால்ட் கலவையானது நவீன இரும்புக்கு ஒத்ததாக இல்லை என்பதும் வடக்கு எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட எரிகல்லின் வேதியல் கலவைக்கு ஒத்திருப்பதையும் கண்டறிந்துள்ளனர். எரிகல்லில் இருக்கும் இரும்பை பயன்படுத்தும் யுக்தியை கிமு 1300ல் வாழ்ந்த எகிப்து மக்கள் அறிந்துள்ளனர். இதில் நாம் அறிந்துகொள்ளவேண்டியது அன்றைய எகிப்தியர்கள் இரும்பை “வானிலிருந்து வந்த உலோகம்” என்று அழைத்ததைத்தான்.


பார்க்க: https://www.nytimes.com/2016/06/03/world/middleeast/king-tuts-dagger-made-of-iron-from-the-sky-researchers-say.html



பழமையான எகிப்திய குறியீட்டு மொழியில் இரும்புக்கு “வானிலிருந்து வந்த உலோகம்” என்றே பெயர். எனவே குர்ஆன் தான் இரும்பு வானிலிருந்து வந்ததாக முதன் முதலில் சொன்னதாக வாதிட இயலாது.


குழப்பத்தின் மூலம்:


புதுப்புது அறிவியல் ஆய்வுகள் வெளிவரும் இணையதளங்களை subscribe செய்து வைத்திருப்பது. அவ்வாறு ஓர் ஆய்வு வெளிவந்த உடனே அதிலிருக்கும் வார்த்தைகளை குர்ஆன் சாப்ட்வேரில் தேடுவது. வார்த்தைகள் மேட்ச் ஆகிவிட்டால் அதைக் கொண்டு “பாருங்கள்! இன்றைக்கு வெளிவந்த ஆய்வை 1400 வருடங்களுக்கு முன்பே குர்ஆன் சொல்லி இருப்பதால் இது இறைவேதம்தான் என்று கட்டுரை எழுதி முடிப்பது”. இதையே தினசரி வேலையாக செய்துவரும் ஆட்கள் உலகமெங்கிலும் உள்ளனர். இது போன்ற செய்திகளை இணையத்தளத்தில் இருந்து காப்பியடித்து தஃப்ஸீர் எழுதுவதுதான் நம் தஃப்ஸீர் ஆசிரியரின் வேலை.


ஒரு விஷயத்தை குர்ஆன் தான் முதலில் சொல்லி இருக்கவேண்டும் என்றில்லை. இதனை QSF16ம் ஆய்வில் பார்த்தோம். முன்னர் வாழ்ந்த சமூகங்களையும் அல்லாஹ்தான் படைத்தான் அவர்களும் அல்லாஹ்தான் வாழ்வாதாரத்தை வழங்கினான். அவர்களும் பல அறிவுகளை அல்லாஹ் கற்றுக்கொடுத்துள்ளான் என்பது கண்கூடாக தெரியும் உண்மை. இதற்கு மாற்றமாக சிந்திப்பது IQ குறைவால் ஏற்படுவதாகும்.


இரும்பு எரிகற்கள் மூலம் மட்டுமே வரவில்லை. எரிகற்கள் மூலம் வந்ததை விட பெருவெடிப்பில் கிடைத்ததே ஒப்பிட இயலாத அளவுக்கு அதிகமான இரும்பாகும்.


இரும்பை வானிலிருந்து இறக்கினேன் என்றுதான் அல்லாஹ் சொல்கிறானா?


இணையத்தளத்தில் எழுதுபவர்களுக்கு அரபு தெரியாது. அவர்களால் குர்ஆனின் வேறு வசனங்களை தேட இயலாது. ஆனால் மவுலவிகள் அநேக குர்ஆன் வசனங்களை நினைவில் வைத்திருப்பார்கள். அவர்களுக்கு குர்ஆன் வசனங்கள் மிகவும் பரிச்சியமாக இருக்கும். இரும்பை மட்டும் இறக்கியதாக அல்லாஹ் சொல்கிறானா?


خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَأَنْزَلَ لَكُمْ مِنَ الْأَنْعَامِ ثَمَانِيَةَ أَزْوَاجٍ ۚ يَخْلُقُكُمْ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ خَلْقًا مِنْ بَعْدِ خَلْقٍ فِي ظُلُمَاتٍ ثَلَاثٍ ۚ ذَٰلِكُمُ اللَّـهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ ۖ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ فَأَنَّىٰ تُصْرَفُونَ ﴿٦﴾

39:6. உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான்.368 பின்னர் அவரிலிருந்து504 அவரதுஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத் தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக (அன்zல) இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில்303 உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?


ஏன் கால்நடைகளை உருவாக்கும் அளவுக்கு வெப்பம் பூமியில் இல்லை என்று வாதிடவில்லை?


يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا ۖ وَلِبَاسُ التَّقْوَىٰ ذَٰلِكَ خَيْرٌ ۚ ذَٰلِكَ مِنْ آيَاتِ اللَّـهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ ﴿٢٦﴾

7:26. ஆதமுடைய மக்களே!504 உங்கள் வெட்கத்தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு (அன்zல்னா) இறக்கினோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.


ஆடை அலங்காரமெல்லாமெல்லாம் வானிலிருந்துதான் வந்ததா?


قُلْ أَرَأَيْتُمْ مَا أَنْزَلَ اللَّـهُ لَكُمْ مِنْ رِزْقٍ فَجَعَلْتُمْ مِنْهُ حَرَامًا وَحَلَالًا قُلْ آللَّـهُ أَذِنَ لَكُمْ ۖ أَمْ عَلَى اللَّـهِ تَفْتَرُونَ ﴿٥٩﴾


10:59. "அல்லாஹ் உங்களுக்கு உணவை (அன்zல) இறக்கினான். அதில் தடுக்கப்பட்டதையும், அனுமதிக்கப்பட்டதையும் நீங்களாக ஏற்படுத்திக் கொண்டீர்கள்!'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வே உங்களுக்கு அனுமதியளித்தானா? அல்லது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுகிறீர்களா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' என்று கேட்பீராக.


இது ஈசா நபிக்கு வந்த உணவுத்தட்டல்ல. ஆக உணவும் வனத்திலிருந்துதான் வந்ததா?


لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ وَأَنْزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ ۖ وَأَنْزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَلِيَعْلَمَ اللَّـهُ مَنْ يَنْصُرُهُ وَرُسُلَهُ بِالْغَيْبِ ۚ إِنَّ اللَّـهَ قَوِيٌّ عَزِيزٌ ﴿٢٥﴾


57:25. நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலைநாட்ட தராசையும் (அன்zல்னா) இறக்கினோம். இரும்பையும் இறக்கினோம்.423 அதில் கடுமையான ஆற்றலும், மக்களுக்குப் பயன்களும் உள்ளன. தனக்கும், தன் தூதர்களுக்கும் மறைவாக உதவி செய்வோரை அல்லாஹ் அடையாளம் காட்டுவான். அல்லாஹ் வலிமை உள்ளவன்; மிகைத்தவன்.


எந்த வசனத்திற்கு தப்ஸீர் எழுதப்பட்டதோ அதே வசனத்தில் தராசையும் இறக்கினோம் என்கிறான் அல்லாஹ். தராசும் வானிலிருந்துதான் இறங்கியதா?


நzல என்பதற்கு அருளினோம் எனும் பொருளும் உள்ளது. மேற்கண்ட அனைத்து இடங்களிலும் அருளினோம் என்றும் பொருளே வரும்.


மற்ற தலைப்புகளை வாசிக்க https://www.piraivasi.com/p/zina-ul-abdeen.html