இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்
ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்
அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும். அறிமுகத்தை வாசிக்க https://www.piraivasi.com/2022/11/zina-ul-abdeen-intro.html
QSF ஆய்வுக்குழு
QSF30. ஊமைத்தன்மைக்கான காரணத்தை குர்ஆன் சொல்கிறதா?
தப்ஸீர் குறிப்பு: - 439. ஊமைத்தன்மைக்குக் காரணம் என்ன
காதுகளில் ஏற்படும் குறைபாடுகளால் செவிட்டுத் தன்மை ஏற்படும் என்பதையும், கண்களில் ஏற்படும் கோளாறுகளால் பார்வையில் கோளாறு ஏற்படும் என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.
அது போல் ஊமைத்தன்மை ஏற்படுவதற்கு வாயில் ஏற்படும் குறைபாடு காரணமா? என்றால் இல்லை என்பதே அறிவியல் முடிவாகும்.
காதுகளில் குறைபாடு ஏற்படுவதால் மற்றவர்கள் பேசுவது உள்ளங்களில் பதிவதில்லை. எனவே தான் பிறவியில் செவிடாக இருப்பவருக்கு வாய் பேச முடிவதில்லை என்று இன்று மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.
2:18 வசனத்தில் இவர்கள் செவிடர்கள்; குருடர்கள்; ஊமைகள் என்று நயவஞ்சகர்கள் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.
இந்த மூன்று குறைபாடுகளுக்கும் காரணம் என்ன என்பது 2:7 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
அவர்களின் உள்ளங்களிலும், காதுகளிலும் முத்திரை இடப்பட்டு விட்டது என்றும் அவர்களின் கண்களில் திரை உள்ளது என்றும் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
பார்வையில் திரை உள்ளதால் அவர்கள் குருடர்கள் என்று புரிந்து கொள்கிறோம்.
செவிகளில் முத்திரை உள்ளதால் அவர்கள் செவிடர்கள் என்று புரிந்து கொள்கிறோம்.
இவ்விரண்டும் எல்லாக் காலத்திலும் மக்கள் சாதாரணமாக அறிந்த உண்மைகள் தான்.
அவர்கள் ஊமைகளாகக் காரணமாக அவர்களின் வாய்களில் முத்திரை இடப்பட்டுள்ளது எனக் கூறாமல் அவர்களின் உள்ளங்களில் முத்திரை இடப்பட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
உள்ளத்தில் முத்திரையிடப்படுவதால் தான் செவிட்டுத் தன்மை ஏற்படுகிறது என்ற உண்மை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையாகும்.
எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி அவர்கள் தமது காலத்தில் தமது சமுதாயத்தில் நிலவிய அறிவைக் கொண்டு இப்படிக் கூற முடியாது. எனவே இந்தக் கூற்று இறைவனின் புறத்தில் இருந்து வந்த கூற்றாகத்தான் இருக்க முடியும் என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.
∙∙∙∙∙·▫▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ end of tafseer ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫▫·∙∙∙∙∙
நமது மறுப்பு:-
خَتَمَ اللَّـهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ ۖ وَعَلَىٰ أَبْصَارِهِمْ غِشَاوَةٌ ۖ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
2:7. அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு.439
صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُونَ
2:18. (இவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே இவர்கள் (நல்வழிக்கு) திரும்ப மாட்டார்கள்.439
2:18ம் வசனத்தில் ஊமை, செவிடு, குருடு என்று மூன்று குறைபாடுகள் கூறப்பட்டுள்ளன, இம்மூன்றும் ஏற்படுவதற்கான காரணங்கள் 2:7ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளதாக தஃப்ஸீர் சொல்கிறது.
👉 2:18ம் வசனத்தில் இருக்கும் செவிடன் எனும் வார்த்தையை 2:7ம் வசனத்தில் இருக்கும் செவியில் முத்திரை எனும் வார்த்தையுடனும்
👉 2:18ம் வசனத்தில் இருக்கும் குருடன் எனும் வார்த்தையை 2:7ம் வசனத்தில் இருக்கும் கண்ணில் முத்திரை எனும் வார்த்தையுடனும்
👉 2:18ம் வசனத்தில் இருக்கும் ஊமை எனும் வார்த்தையை 2:7ம் வசனத்தில் இருக்கும் உள்ளத்தில் முத்திரை எனும் வார்த்தையுடனும்
ஒப்பிட்டு ஊமைத்தன்மைக்கு உள்ளம் தான் காரணம் என்று முடிவுக்கு வருகிறது தஃப்ஸீர்
செவிடுக்கு காரணம் செவியில் இடப்படும் முத்திரை, குருட்டுக்கு காரணம் கண்ணில் இடப்படும் முத்திரை ஊமைத் தன்மைக்கு காரணம் உள்ளத்தில் இடப்படும் முத்திரை என்று பொருள்கொள்ளும்படி 2:7ம் வசனம் இருந்திருந்தால் அதனை நாம் பரிசீலனைக்கு எடுத்திருப்போம். அவ்வாறுதான் 2:7ம் வசனம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
👉 உள்ளங்கள் என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் இருக்கும் வார்த்தை கல்ப் (قلب)ஆகும்
👉 செவிகள் என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் இருக்கும் வார்த்தை ஸமிஃ (سمع) ஆகும்
👉 பார்வைகள் என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் இருக்கும் வார்த்தை பஸர (بصر) ஆகும்
இதில் ஸமிஃ எனும் வார்த்தைக்கு செவி/காது என்றும் பொருள் தவறாகும். காது எனும் வார்த்தைக்கு அரபு மொழியில் إذن இஃத்ன் எனும் வார்தையுள்ளது (பார்க்க 2:19, 4:11, 5:45, 5:45, 6:25, 7:17, 7:19, 9:61, 9:61, 17:46, 18:11, 18:57, 22:46, 31:7, 41:5, 41:44, 69:12, 71:7) குறிப்பாக 2:7ல் மொழியாக்கம் செய்ததைப் போல “அவர்களின் செவிகள்” என்று மொழிபெயர்க்க வேண்டுமென்றால் ஆஃதானிஹிம் (آذَانِهِمْ) எனும் வார்த்தை வந்திருக்கவேண்டும் (பார்க்க 2:19, 6:25, 17:46, 18:11, 18:57, 41:44, 71:7)
இங்கே سَمْعِهِمْ எனும் வார்த்தைக்கு கேள்வி என்பதே சரியான போருள் ஆகும். [கேள்வி என்றால் வினா என்று பொருள்படும் கேள்வியல்ல. கேள்வித்திறன், செவிப்புலன், அல்லது கேட்கும் திறன் என்று பொருள்] ஆனால் தஃப்ஸீர் முழுக்க ஸமிஃ எனும் வார்த்தையை செவி என்றே மொழிபெயற்கக் காண்கிறோம்.
أَلَهُمْ أَرْجُلٌ يَمْشُونَ بِهَا ۖ أَمْ لَهُمْ أَيْدٍ يَبْطِشُونَ بِهَا ۖ أَمْ لَهُمْ أَعْيُنٌ يُبْصِرُونَ بِهَا ۖ أَمْ لَهُمْ آذَانٌ يَسْمَعُونَ بِهَا ۗ قُلِ ادْعُوا شُرَكَاءَكُمْ ثُمَّ كِيدُونِ فَلَا تُنْظِرُونِ ﴿١٩٥﴾
7:195. அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? "உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக!
மேலுள்ள வசனத்தைப் பாருங்கள். ஸமிஃ எனும் வார்த்தையும் இஃத்ன் எனும் வார்த்தையும் ஒருசேர வந்துள்ளது. இங்கே இரு முறை செவி என்று மொழிபெயர்க்கக் காணோம்.
6:46 قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَخَذَ اللّٰهُ سَمْعَكُمْ وَ اَبْصَارَكُمْ وَخَتَمَ عَلٰى قُلُوْبِكُمْ مَّنْ اِلٰـهٌ غَيْرُ اللّٰهِ يَاْتِيْكُمْ بِهؕ اُنْظُرْ كَيْفَ نُصَرِّفُ الْاٰيٰتِ ثُمَّ هُمْ يَصْدِفُوْنَ
6:46. "உங்கள் செவிப்புலனையும், பார்வைகளையும் அல்லாஹ் நீக்கி விட்டு, உங்கள் உள்ளங்கள் மீது முத்திரையிட்டால் அதைக் கொண்டு வருகின்ற அல்லாஹ் அல்லாத (வேறு) கடவுள் யாரேனும் உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' எனக் கேட்பீராக! சான்றுகளை எவ்வாறு விளக்குகிறோம் என்பதையும், பின்னர் அவர்கள் எவ்வாறு புறக்கணிக்கின்றனர் என்பதையும் கவனிப்பீராக!
மேலுள்ள வசனத்தைக் கவனித்தால் ஸமிஃ எனும் வார்த்தையை காது என்று மொழிபெயர்ப்பது எவ்வளவு தவறு என்று விளங்கும். இங்கே காது என்று பொருள்கொண்டால் "உங்கள் காதுகளையும் , பார்வைகளையும் அல்லாஹ் நீக்கி விட்டு” என்று மொழிபெயர்க்க வேண்டிவரும். வேடிக்கை ஆகிவிடும். இந்த வசனம் மட்டும் செவிப்புலன் என்று எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டது.
எனவே...
அவர்களது இதயங்களிலும், கேட்கும் திறனிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு (2:7)
(இவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே இவர்கள் (நல்வழிக்கு) திரும்ப மாட்டார்கள். (2:18)
என்பதே பொருத்தமான மொழியாக்கம் ஆகும்.
கேட்கும் திறனில் முத்திரை இடுதல் என்பது நேரடியாக செவிட்டுத் தன்மையையே குறிக்கும். மாறாக செவியில் முத்திரை என்று பொருள் இல்லை. பார்வையில் முத்திரை என்பதும் நேரடியாக குருட்டுத்தன்மையை குறிக்கும். கண்ணில் முத்திரை எனும் பொருள் ஒருக்காலமும் வராது.
காதுகளில் ஏற்படும் குறைபாடுகளால் செவிட்டுத் தன்மை ஏற்படும் என்றும், கண்களில் ஏற்படும் கோளாறுகளால் பார்வையில் கோளாறு ஏற்படும் என்றும் 2:7ம் வசனம் சொல்லவே இல்லை. சத்தியத்தை அறிவதிலிருந்து அவர்களின் கேள்வியும் பார்வையும் பறிக்கப்பட்டதை நேரடியாகச் சொல்கிறது. இங்கே கண் காது எனும் வார்த்தைகளை புகுத்துவது சரியா?
கண்களில் முத்திரை என்றோ காதுகளில் முத்திரை என்றோ குர்ஆன் வசனத்தில் இல்லை. பார்க்கும் திறனில் முத்திரை என்றால் குருடு என்றுதான் நேரடி பொருள். கேட்கும் திறனில் முத்திரை என்றால் செவிடு என்பதுதான் நேரடி பொருள். நேரடியாக இருக்கும் விஷயத்தை திரித்து இல்லாத வார்த்தைகளை புகுத்தி ஏதோ பெரிய விஞ்ஞானம் போல சித்தரித்துள்ளது தஃப்ஸீர்.
சத்தியத்தை காது கொடுத்து கேட்பதற்கோ கண்கூடாக காண்பதற்கோ அதனை சிந்திப்பதற்கோ காஃபிர்களுக்கு அல்லாஹ் வாய்ப்பு வழங்கவில்லை என்கிறது 2:7ம் வசனம்.
முனாஃபிக்குகளின் விஷயத்தில் அவர்கள் ஐம்புலன்கள் இருந்தும் (சத்தியத்தை அறிந்த பின்னரும்) செவிடர்கள் ஊமைகள் குருடர்கள் என்று 2:18ம் வசனத்தில் சாடுகிறது. இதில் அறிவியலைத் தேட இடமில்லை.
وَّجَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِىْۤ اٰذَانِهِمْ وَقْرًا ؕ وَاِذَا ذَكَرْتَ رَبَّكَ فِى الْقُرْاٰنِ وَحْدَهٗ وَلَّوْا عَلٰٓى اَدْبَارِهِمْ نُفُوْرًا
17:46. அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாதிருக்க அவர்களின் உள்ளங்களில் மூடிகளையும், காதுகளில் செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும்போது அவர்கள் வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.
وَمِنْهُمْ مَّنْ يَّسْتَمِعُ اِلَيْكَ ۚ وَجَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِىْۤ اٰذَانِهِمْ وَقْرًا ؕ وَاِنْ يَّرَوْا كُلَّ اٰيَةٍ لَّا يُؤْمِنُوْا بِهَا ؕ حَتّٰۤى اِذَا جَآءُوْكَ يُجَادِلُوْنَكَ يَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ
6:25. (முஹம்மதே!) உம்மிடம் (வந்து) செவிமடுப்போரும் அவர்களில் உள்ளனர். அதைப் புரிந்து கொள்ளாத வகையில் அவர்களின் உள்ளங்கள் மீது மூடிகளையும், காதுகளில் செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்தி விட்டோம். அத்தனை சான்றுகளையும் அவர்கள் பார்த்தாலும் அதை நம்ப மாட்டார்கள். (நம்மை) மறுப்போர் உம்மிடம் வரும்போது "இது முன்னோர்களின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை'' எனக் கூறி உம்மிடம் தர்க்கம் செய்வார்கள்.
وَقَالُوْا قُلُوْبُنَا فِىْۤ اَكِنَّةٍ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَيْهِ وَفِىْۤ اٰذَانِنَا وَقْرٌ وَّمِنْۢ بَيْنِنَا وَبَيْنِكَ حِجَابٌ فَاعْمَلْ اِنَّنَا عٰمِلُوْنَ
41:5. "நீர் எதை நோக்கி எங்களை அழைக்கிறீரோ அதை விட்டும் (தடுப்பதற்காக) எங்கள் உள்ளங்களில் மூடிகளும், காதுகளில் செவிட்டுத் தன்மையும் எங்களுக்கும், உமக்கும் இடையே ஒரு திரையும் இருக்கிறது. எனவே நீரும் செயல்படுவீராக! நாங்களும் செயல்படுகிறோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.
وَمَنْ اَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِاٰيٰتِ رَبِّهٖ فَاَعْرَضَ عَنْهَا وَنَسِىَ مَا قَدَّمَتْ يَدٰهُ ؕ اِنَّا جَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِىْۤ اٰذَانِهِمْ وَقْرًا ؕ وَاِنْ تَدْعُهُمْ اِلَى الْهُدٰى فَلَنْ يَّهْتَدُوْۤا اِذًا اَبَدًا
18:57. அல்லாஹ்வின் வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்பட்டு, அதைப் புறக்கணித்து, தான் செய்த வினையை மறந்தவனை விட அநீதி இழைத்தவன் யார்? அவர்களின் உள்ளங்கள் புரிந்து கொள்ளாதவாறு அவற்றின் மீது மூடிகளையும், காதுகளில் செவிட்டுத் தன்மையையும் நாம் ஏற்படுத்தினோம். நேர்வழிக்கு அவர்களை நீர் அழைத்தால் அவர்கள் ஒருபோதும் நேர்வழி பெற மாட்டார்கள்.
// அது போல் ஊமைத்தன்மை ஏற்படுவதற்கு வாயில் ஏற்படும் குறைபாடு காரணமா? என்றால் இல்லை என்பதே அறிவியல் முடிவாகும்.//
GK எனப்படும் பொது அறிவின் குறைபாட்டால் இந்த முடிவுக்கு தஃப்ஸீர் வந்துள்ளது. ஊமைத் தன்மைக்கு வாயில் ஏற்படும் குறைபாடுகளும் காரணமாக அமையும். vocal cords எனப்படும் குரல் நாண்களில் ஏற்படும் குறைபாடுகளாலும் Larynx எனப்படும் குரல் வளையில் ஏற்படும் குறைபாடுகளாலும்கூட ஊமைத்தன்மை ஏற்படலாம். நாக்கு தட்டையாக இருப்பதால் பேசமால் போன குழந்தைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். நாக்கு முடிச்சு எனும் குறைபட்டாலும் பேசாமல் போன குழந்தைகள் ஏராளம். இதுபோன்ற பொது அறிவு சார்ந்த விஷயங்களில் கோட்டை விட்டுள்ளது தஃப்ஸீர்.
பார்க்க https://en.wikipedia.org/wiki/Muteness#Causes
//காதுகளில் குறைபாடு ஏற்படுவதால் மற்றவர்கள் பேசுவது உள்ளங்களில் பதிவதில்லை. எனவே தான் பிறவியில் செவிடாக இருப்பவருக்கு வாய் பேச முடிவதில்லை என்று இன்று மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.//
பிறவி ஊமைக்கு காரணம் என்னவென்று தெளிவாக சொல்கிறது தஃப்ஸீர். அநேக பிறவி ஊமைக்கு காரணம் பிறவி செவிடே. பிறவியில் செவிடாக இருக்கும் ஒருவர் அனேகமாக பேசும் ஆற்றலுடனேயே இருப்பார். ஆனால் எந்த வார்த்தைகளையும் அவர் கேட்காததால் அவரால் எதையும் பேச இயலாமல் போகிறது. பேச இயலாமல் போனதற்கு காரணம் காது கேளாமல் போனதே தவிர உள்ளம் கெட்டுப்போனதல்ல. செவிப்புலன் இல்லாதவர் அதனை சிகிச்சை மூலம் பெற்றுவிட்டால் அதன் பின்னர் பிறரின் பேச்சுக்களை கேட்பதன் மூலம் அவரால் பேசவும் இயலும். அதன் பின்னர் தப்சீரின் இந்த வாதங்கள் அனைத்தும் செல்லாமல் போய்விடும்.
ஆக, விஞ்ஞானம் என்று தான் நம்பியதை உள்ளே கொண்டுவருவதற்காக மொழிபெயர்ப்பிலும் கையாடல் செய்து, விஞ்ஞானத்திலும் பொய் சொல்லி, எவ்வித தொடர்பும் இல்லாத விஷயங்களையும் தொடர்புபடுத்தி பித்தலாட்டம் செய்துள்ளது தஃப்ஸீர்.
மற்ற தலைப்புகளை வாசிக்க https://www.piraivasi.com/p/zina-ul-abdeen.html