Thursday, 3 November 2022

QSF28. நீருக்குள் பிரசவத்தை வைத்துகொள்ள குர்ஆன் அறிவுறுத்துகிறதா?

 

இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்


ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்

அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும். அறிமுகத்தை வாசிக்க https://www.piraivasi.com/2022/11/zina-ul-abdeen-intro.html

QSF ஆய்வுக்குழு


தப்சீர் குறிப்பு:- 436. நீருக்குள் பிரசவம்


19:23,24 வசனத்தில் நீருக்குள் நடக்கும் பிரசவத்தால் வலி இருக்காது என்ற கருத்து கூறப்படுகிறது. இன்றைய அறிவியல் உலகம் இப்போது இதைக் கண்டுபிடித்துள்ளது.


ரஷ்யாவில் பிரசவத்தை நீருக்குள் வைத்துக் கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது. நீருக்குள் பிரசவம் நடைபெறுவது பிரசவத்தை தாய்க்கு எளிதாக்குகிறது என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கருப்பையில் நீருக்குள் மிதந்தபடிதான் குழந்தை உள்ளது. எனவே நீருக்குள் பிரசவம் நடைபெறும்போது குழந்தை தனக்கு பழக்கப்பட்ட நிலையிலேயே வெளியே வருகிறது. எனவே குழந்தைக்கு இது இயல்பானதாக உள்ளது. குளிர் நீரில் பிறப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்புத் திறன் கூடுகிறது.


ரஷ்யாவில் பிரசவ மருத்துவமனைகளில் பிரசவத்துக்கென சிறப்பு நீச்சல் குளங்கள் நீருடன் தயார் நிலையில் உள்ளன.


∙∙∙∙∙·▫▫ᵒᴼᵒₒₒ▫ᵒᴼᵒₒₒ▫ᵒᴼᵒ end of tafseer ᵒᴼᵒₒₒ▫ᵒᴼᵒₒₒ▫ᵒᴼᵒ▫▫·∙∙∙∙∙


நமது மறுப்பு:-

தஃப்ஸீர் சொல்வதைப்போல அன்னை மர்யம் (அலை) அவர்களுக்கு நீருக்குள் பிரசவம் நடந்ததாக குர்ஆன் வசனம் எதுவும் இல்லை. 


பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார். பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. "நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார். "கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். "பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்'' (என்றார்). நீர், உண்டு பருகி மனநிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் "நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்'' என்று கூறுவீராக!

[குர்ஆன் 19:22-26]


மேலுள்ள வசனங்களை கொண்டு..


 பேரீச்சை மரத்துக்கடியே பிரசவம் நல்லது. 


 பிரசவத்திற்கு முன்பு பேரீச்சை மரத்தை உலுக்குவது நல்லது 


 பிரசவத்திற்கு முன்பு பேரீச்சம் பழத்தை உண்பது நல்லது. 


இப்படியெல்லாம் கட்டுரை எழுதலாமே... ஏன் ஒன்றுடன் நிறுதிவிட்டீர்கள்


மர்யம் (அலை) அவர்களுக்கு உண்பதற்கு பேரீச்சம் பழங்களையும் பருகுவதற்கு நீரையும் அல்லாஹ் ஏற்படுதிக்கொடுத்துள்ளான். நீரூற்று سَرِيًّا என்றுதான் குர்ஆனில் இருக்கிறதே தவிர நீருக்குள் நின்று பேறு நடக்கும் அளவுக்கு குளம் அல்லது குட்டை எதுவும் இருந்ததாக குர்ஆன் சொல்லவில்லை.


நீருக்குள் பிரசவம் நல்லது என்று எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இது பாதுகாப்பற்றது என்பதே அறிவியலின் நிலைபாடு ஆகும்.


தினமலர்/லங்கா ஸ்ரீ போன்ற இணையதளங்களில் வந்த செய்திகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளது தப்ஸீர்.

மற்ற தலைப்புகளை வாசிக்க https://www.piraivasi.com/p/zina-ul-abdeen.html