இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்
ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்
QSF ஆய்வுக்குழு
அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும்.
அறிமுகத்தை வாசிக்க https://www.piraivasi.com/2022/11/zina-ul-abdeen-intro.html
QSF 25 கலக்காத இரு கடல்கள் உள்ளனவா?
305 கடல்களுக்கு இடையே திரை
أَمَّن جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا ۗ أَإِلَـٰهٌ مَّعَ اللَّـهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ
பூமியை வசிப்பிடமாக்கி, அதனிடையே ஆறுகளை உருவாக்கி, அதற்கு முளைகளையும்248 அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா?305 அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை. (அல்குர்ஆன் : 27:61)
وَمَا يَسْتَوِي الْبَحْرَانِ هَـٰذَا عَذْبٌ فُرَاتٌ سَائِغٌ شَرَابُهُ وَهَـٰذَا مِلْحٌ أُجَاجٌ ۖ وَمِن كُلٍّ تَأْكُلُونَ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُونَ حِلْيَةً تَلْبَسُونَهَا ۖ وَتَرَى الْفُلْكَ فِيهِ مَوَاخِرَ لِتَبْتَغُوا مِن فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
இரண்டு கடல்கள் சமமாகாது. இது இனிமையானதும், அடர்த்தி குறைந்ததும், அருந்த ஏற்றதுமாகும். அதுவோ உப்பும், கசப்பும் உடையது. ஒவ்வொன்றிலிருந்தும் பசுமையான மாமிசத்தை உண்ணுகின்றீர்கள்.171 நீங்கள் அணிகின்ற ஆபரணத்தை (அதிலிருந்து) வெளிப்படுத்துகின்றீர்கள். நீங்கள் அவனது அருளைத் தேடவும், நன்றி செலுத்திடவும் அதைக் கிழித்துக் கொண்டு கப்பல்கள் செல்வதைக் காண்கிறீர். (அல்குர்ஆன் : 35:12)
وَهُوَ الَّذِىْ مَرَجَ الْبَحْرَيْنِ هٰذَا عَذْبٌ فُرَاتٌ وَّهٰذَا مِلْحٌ اُجَاجٌ ۚ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًا مَّحْجُوْرًا
அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும், தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும், வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்.305 (அல்குர்ஆன் : 25:53)
مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ ﴿١٩﴾ بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ
இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.305
(அல்குர்ஆன் : 55:19 & 55:20)
இவ்வசனங்களில் (27:61, 35:12, 55:19,20) இரண்டு கடல்களுக்கு இடையே கண்களுக்குத் தெரியாத தடுப்பு உள்ளது என்றும், இதனால் அவை ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்து விடாது என்றும் கூறப்படுகின்றது.
இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பு உள்ளதை இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல விதமான ஆய்வுகளுக்குப் பின் அவர்கள் கண்டுபிடித்த இந்த உண்மையை திருக்குர்ஆன் அன்றே சொல்லி இருக்கிறது.
மத்தியத் தரைக்கடலும், கருங்கடலும் நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டிருந்தன. 12,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு பிரளயத்தின்போது இரண்டும் இணைந்தன. இரண்டு கடல்களும் சந்திக்கும் இடத்தில் இரண்டும் சமமான அடர்த்தியில் இல்லாததால் அடர்த்தி மிகுந்த கடலின் நீர் கீழேயும், அடர்த்தி குறைந்த கடலின் நீர் மேலேயும் சென்று 200 அடி அளவுக்கு ஒன்றின் மேல் ஒன்றாக நிற்கிறது. 12,000 ஆண்டுகள் ஆன பின்பும் அவை ஒன்றாகக் கலந்து விடவில்லை.
அட்லாண்டிக் கடலும், இந்தியப் பெருங்கடலும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தாலும் திடத்திலும், நிறத்திலும் வேறுபட்டு நிற்கின்றன. ஒன்றுடன் ஒன்று கலந்துவிடவில்லை.
அதுபோல் மத்திய தரைக்கடலும், அட்லாண்டிக் கடலும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு உள்ளன. மத்திய தரைக்கடல் அடர்த்தியுடன் வெதுவெதுப்பாக உள்ளதால் அட்லாண்டிக் கடலுடன் சேருமிடத்தில் அதன் மீது ஆயிரம் அடிகளுக்கு மேல் அழுத்திக் கொண்டு சுமார் 100 மைல்கள் வரை ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பரவி நிற்கின்றது. ஒன்றுடன் ஒன்று கலந்துவிடவில்லை.
திருக்குர்ஆன் 25:53 வசனத்தில், நல்ல தண்ணீர் கடலுடன் கலப்பதைப் பற்றிக் குறிப்பிடும்போது, "இரண்டுக்குமிடையே ஒரு திரையையும் வலுவான தடுப்பையும்'' ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றது.
இரண்டு கடல்கள் சந்திக்கும்போது ஒரு திரை இருப்பதாகக் கூறிய திருக்குர்ஆன், கடலுடன் நல்ல தண்ணீர் கலக்கும்போது இரண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறது.
இதிலும் மிகப் பெரிய அறிவியல் உண்மை அடங்கியுள்ளது.
கடலுடன் நல்ல தண்ணீரைக் கொண்ட ஆறு சேரும்போது அடர்த்தி வித்தியாசத்தின் காரணமாக மேலே நாம் காட்டியுள்ள ஒரு தடையுடன், உப்புத் தண்ணீரும் நல்ல தண்ணீரும் சிறிதளவு சேர்ந்த கலவை ஒன்று உருவாகி அது மற்றொரு தடையாக நிற்கின்றது.
இது எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன் எப்படித் தெரியும்?
எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.
∙∙∙∙∙·▫▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ end of tafseer ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫▫·∙∙∙∙∙
நமது மறுப்புகள்:-
இந்த குர்ஆன் வசனங்களுக்கு பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன.
https://www.youtube.com/watch?v=T1ua9iBRWQU
https://www.youtube.com/watch?v=8gAE9Duo6qw
https://youtu.be/wCxwAtZkGjM?list=RDT1ua9iBRWQU
இவை போன்று பல்வேறு வீடியோக்களும் படங்களும் இணையத்தளத்தில் உலாவுகின்றன. இவைதான் அல்லாஹ் சொல்லும் இரு கடல்களுக்கிடையேயான தடுப்பு என்றும் அந்த இணையதள ஆக்கங்கள் வாதிடுகின்றன.
உண்மையாகவே இரு கடல்கள் கலக்கவில்லையா? ஆற்று நீர் கடலில் கலக்கவில்லையா?
மேலுள்ள குர்ஆன் வசனங்களின் மொழிபெயர்ப்புகள் நமக்கு சொல்வது.
① இரண்டு கடல்கள் உள்ளன
② அவை ஒன்றையொன்று சந்திக்கின்றன
③ அந்த சந்திக்கும் இடத்தில் ஒரு வலுவான தடுப்புள்ளது
④ அந்த தடுப்பை அவ்விரு கடல்களும் கடப்பதில்லை. அவை கலப்பதில்லை.
⑤ அதில் ஒரு கடல் இனிப்பான லேசான குடிநீரைக் கொண்டது (கடல் என்று தர்ஜமா சொல்கிறது. அது கடலல்ல ஆறு என்று தஃப்ஸீர் விளக்கம் சொல்கிறது)
⑥ மற்றொரு கடல் கடுமையான உப்புநீரைக் கொண்டது
“இதுதான் அவ்விரு கடல்கள்” எனும் பெயரில் வரும் வீடியோக்களில் இன்றுவரை யாராவது அவற்றில் ஒரு கடலின் நீரை குடித்துக்காட்டி அது இனிப்பாக இருப்பதாக நிறுவியுள்ளார்களா?
இனிப்பு நீர் அல்லது சாதாரண குடி நீர் கொண்ட கடல் ஏதேனும் உலகில் உள்ளதா?
அவர்கள் வீடியோக்களில் காட்டும் அந்நீர் நிலைகள் வருடத்தில் எல்லா நாட்களிலும் அதே போல இரண்டு நிறமுடன் காணப்படுகின்றனவா? அல்லது குறிப்பிட்ட காலத்தில் மட்டும் அவ்வாறு நிகழ்கின்றனவா?
இக்கேள்விகளை மனதில் நிறுத்திக்கொண்டு சில அடிப்படை உண்மைகளைப் பார்ப்போம். இந்த தஃப்ஸீர் சொல்வதைப் போல இது கடல்கள் கலக்கும் இடத்தில் அடர்த்தி குறைந்த நீர் மேலேயும் அடர்த்தி அதிகமான நீர் கீழேயும் இருப்பது உண்மை. ஆனால் இவை அவ்வாறே நிரந்தமாக கலக்காமல் இருப்பதில்லை. மெதுவாக கலக்கின்றன. அதேபோல “ஆறுகள் கடலில் கடக்கும் இடத்திலும் அவை இரண்டும் கலந்த கலவை நிலை ஒன்று உள்ளது. இந்நிலை ஆற்று நீரையும் கடல் நீரையும் கலக்காமல் தடுத்து வைக்கிறது” என்று நினைப்பதும் அறியாமை ஆகும். அவ்வாறு கலக்காமல் இருந்தால் கடலுக்குள் பாயும் ஆறு கடலுக்குள்ளே ஆறாக ஓடிக்கொண்டிருக்க வேண்டும். கடலுக்குள் நன்னீராக ஓடும் ஆறுகள் ஏதேனும் உள்ளனவா? அவ்வாறில்லை. கடலுடன் ஆறுகள் இரண்டறக் கலந்துவிடுகின்றன.
நீராலான ஒரு திரவம் நீராலான இன்னொரு திரவத்துடன் கலக்காமல் இருப்பதில்லை. நீரும் எண்ணெயும் மட்டுமே கலக்காது. எண்ணையால் ஆன இரு திரவங்கள் கலக்கும். நீரால் ஆன இரு திரவங்கள் கலந்துவிடும். இதனை வேதியலில் chemical polarity என்பார்கள். Polar திரவங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்துவிடும். non-polar திரவங்கள் அவற்றுக்குள் இரண்டறக் கலக்கும். ஒரு polar திரவமும் ஒரு non-polar திரவமும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை. நன்னீரும் H₂O மூலக்கூறினால் ஆனது உப்பு நீரும் H₂O மூலக்கூறினால் ஆனதே. இவை இரண்டும் கலக்காமல் இருப்பதாக சொன்னால் வேதியலைப் படிக்கும் சிறு பிள்ளை கூட ஒப்புக்கொள்ளாது.
https://en.wikipedia.org/wiki/Chemical_polarity
ஒரு குவளையில் குடிநீரை எடுத்துக்கொண்டு அதில் உணவில் சேர்க்கும் நிறத்தையோ துணிகளுக்கு இடும் ஊதா நிறத்தையோ கலந்துகொள்ள வேண்டும். இன்னொரு குவளையில் நீர் எடுத்துக்கொண்டு, அதற்குமேல் உப்பு அதில் கரையாது எனும் அளவுக்கு அதில் உப்பைக் கொட்டிக் கரைக்க வேண்டும். பின்னர் ஒரு கண்ணாடிக் குவளையில் முதலில் உப்பு நீரை பாதிக்கு மேல் ஊற்றிக்கொள்ள வேண்டும். இப்போது மெதுவாக கண்ணாடி குழாயை சாய்த்து பிடித்தவாறு நிறம் கலந்த நீரை கண்ணாடிக் குவளையின் சுவர் வழியாக மிக மெதுவாக அதில் ஊற்ற வேண்டும். பின்னர் மெதுவாக குவளையை நிமிர்த்தால் நிறமில்லாத உப்பு நீர் கீழேயும் நிறம் கலந்த குடிநீர் மேலையும் ஒன்றுகொன்று கலக்காமல் நிற்பதைக் காண இயலும். இந்த ஆதாரம் போதாதா? என்று நீங்கள் எண்ணலாம். சில மணி நேரத்திற்கு பிறகு அந்த குவளையைப் பாருங்கள். எல்லாம் கலந்து ஒரே நிறத்தில் இருக்கும். எந்த அசைவும் இல்லாமல் நிலையாக இருந்த குவளையிலேயே இரு வேறு அடர்த்திகொண்ட இரு நீர்கள் கலந்துவிட்டன. பாயும் ஆறும், எப்போதும் நீரோட்டம் கொண்ட கடலும் கலக்காமல் இருக்குமா?
குளிர் காலத்தில் குளிர்ந்த நீர் இருக்கும் ஒரு பக்கட்டில் மெதுவாக வெந்நீரை ஊற்றுங்கள். பின்னர் அந்த பக்கத்தில் கையை நுழைத்தால் மேலே வெந்நீரும் கீழே குளிர்ந்த நீரும் இருக்கும். அவை உடனே கலக்காது. இதை நாம் பலரும் நம்முடைய வாழ்க்கையில் அனுபவித்திருப்போம்.
osmosis (சவ்வூடுபரவல்) என்றொரு பௌதீக நிகழ்வைப் பற்றி நாம் பள்ளிக்கூடத்தில் படித்திருப்போம்.
சாதரணமாக இது போன்று ஒரு U வடிவ குழாயில் நீரை நிரப்பினால் அதன் இரு புலன்களிலும் ஒரே அளவில்தான் நீர் நிற்கும்.
இது நாம் எல்லோரும் அறிந்திருக்கும் ஒன்று. அவ்வாறான ஒரு U வடிவ குழாயின் நடுப்பகுதியில் semipermeable membrane என்று சொல்லக்கூடிய நுண்துளை தடுப்பானை வைக்க வேண்டும். இந்த அந்த தடுப்பில் இருக்கும் நுண் துளை எந்த அளவுக்கு சிறியது என்றால் நுண்ணுயிர்களான கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா வைரஸ்களை விட இந்த நுண் துளைகள் அளவில் சிறிதாக இருக்கும். தண்ணீரில் கரைந்திருக்கும் உப்பு நமது கண்களுக்கு தெரியுமா? அந்த உப்பு அணுக்களை விட இதன் நுண் துளைகள் சிறிதாக இருக்கும். நீர் மூலக்கூறுகளை தவிர இந்த நுண் துளை வழியாக வேறெதுவும் வெளியேறாது. நீர் கூட எளிதில் வெளியேறிவிடும் என்று நினைக்கக் கூடாது. இந்த நுண் துளை வழியாக நீர் வெளியேறி வரும்போது அதனை நாம் உணர்வதற்குள் அது ஆவியாகி விடும். அந்த அளவுக்கு நீரைத்தான் அந்த தடுப்பான் அனுமதிக்கும்.
சுடப்பட்ட மண் பானையைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம். இரும்பைப் போன்றோ செம்பைப் போன்றோ தண்ணீரால் ஊடுருவ இயலாத பொருளல்ல மண்பாண்டம். அதன் வழியாக தண்ணீர் ஊடுருவுகிறது. தண்ணீர் ஊடுருவி வெளியேறி ஆவியாதலால்தான் மண் பானையில் ஊற்றி வைக்கப்படும் நீர் குளிர்கிறது. எனினும் மண் பானையில் தண்ணீர் கசிவதை நாம் பார்க்க இயலாது. அத்தகைய மண் பானையின் நுண் துளையை விட மிக மிக நுட்பமானது நாம் சொல்லும் இந்த தடுப்பானின் துளைகள்.
அத்தகைய தடுப்பானை நடுப்பகுதியில் வைத்துவிட்டு. குழாயின் ஒரு புலத்தில் நல்ல நீரையும் மறு புறத்தில் உப்பு நீரையும் ஊற்றி வைத்தால் நல்ல நீரானது இந்த நுண்துளை தடுப்பானை ஊடுருவி உப்பு நீரில் கலக்கும். இவ்வாறு நன்னீர் உப்பு நீர் பகுதிக்கு சென்றுவிடுவதால் நன்னீரின் அளவு குறைந்து உப்பு நீரின் அளவு அதிகரிக்கும். இறுதில் final state எனும் படத்தில் இருப்பதை போல ஆகிவிடும்.
நன்னீரும் உப்பு நீரும் தடையை தாண்டி கலக்கும் இந்த நிகழ்வே osmosis ஆகும். [இதன் எதிர் விளைவைப் பயன்படுத்தியே இன்று reverse osmosis எனும் தொழில் நுட்பதின் மூலம் நீரை சுத்திகரிக்கிறோம். நம் வீட்டில் இருக்கும் RO ஃபில்டர் இவையே.] தடையைத் தாண்டி நன்னீர் உப்பு நீருடன் கலக்கிறது. எனில் எந்த தடையும் இல்லாமல் சந்திக்கும் ஆற்று நீரும் கடல் நீரும் கலக்காமல் இருக்குமா? கடல்கள் கலக்காமல் இருக்குமா?
இதை விளங்குவதற்கு அறிவியல் எதுவும் தேவையில்லை. நீருடன் கலக்காமல் இருக்கவேண்டுமென்றால் அப்பொருள் எண்ணெய்யாக மட்டுமே இருக்க முடியும். நீரால் ஆன இரண்டு திரவங்கள் கலக்காமல் இருப்பதே இல்லை. அவை உடனே கலந்துவிடமால் மெதுவாக கலக்கலாம்.
அமெரிக்காவின் வடகிழக்குபகுதியை ஒட்டியுள்ள அட்லாண்டிக் கடலுக்கடியே உப்புத்தன்மையுள்ள நன்னீர் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். பார்க்க https://www.livescience.com/65779-giant-freshwater-aquifer-east-coast.html இதன் அளவு 2,800 கன கிலோமீட்டர்கள் ஆகும். [நாகர்ஜுனா சாகர் அணைக்கட்டின் மொத்த கொள்ளளவு 11.56 கன கீமீ. எனில் இது கிட்டத்தட்ட 1800 மடங்கு நாகர்ஜுனா சாகர் அணைக்கட்டின் கொள்ளளவை ஒத்ததாகும்] இந்த ஆய்வை விஞ்ஞான முஸ்லிம் ஆர்வலர்கள் அறிந்தால் உடனே இதை தான் குர்ஆன் சொல்கிறது என்று கொடிபிடித்து இறங்குவார்கள். அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கடலடி நன்னீர் தேக்கம் 20,000 ஆண்டுகளுக்கு முன்னால் பனிக்கட்டிகள் உருகியதால் ஏற்பட்டிருக்கலாம் என்று கணிக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக இந்த நீர் கடலுடன் கலக்கவில்லையல்லவா? இதை ஏன் அல்லாஹ் சொல்லும் திரையாக எடுத்துகொள்ளக் கூடாது?
இரு நீர்நிலைகளுக்கான தடுப்பை மிகவும் வலுவானதாகவும் அவை ஒன்றுடன் ஒன்று கலக்கவே இயலாதவாறும் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளதாக குர்ஆனில் சொல்கிறான். ஆனால் இதுவரை இவர்கள் சொன்ன அனைத்து ஆறுகளும் கடல்களும் கலந்துகொண்டுதான் இருக்கின்றன. அல்லாஹ் ஏற்படுத்திய தடுப்பு எப்படிப்பட்டது என்று அல்லாஹ்வே சொல்கிறான். அது வலுவான தடுப்பு. அந்த தடுப்பை கடல்களோ ஆறுகளோ கடக்காது என்கிறான். அல்லாஹ் சொன்ன தடுப்பைத் தாண்டி ஒரு சொட்டு நீர் கூட கலக்கவே இயலாது என்பதை நினைவில் கொள்க. மேலே நாம் சொன்ன அமெரிக்க கடலடி நீரும் கலக்காமல் இல்லை. அது மெது மெதுவாக கடல் நீருடன் கலந்துகொண்டே வருகிறது. கடலின் உப்பை விட குறைந்த உப்புத்தன்மை உடையதாக இருந்தாலும் குடிநீரை விட இது 15மடங்கு உப்புத்தன்மையுடன் நேரடியாக குடிக்க உகந்ததாக இல்லை. நன்னீராக இருந்தது மெதுவாக கடலுடன் கலப்பதே இதற்குக் காரணம்.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இரு ஆறுகள் சங்கமிக்கும் இடங்களில் அவை கலக்காமல் பல கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடுவதைப் பார்க்கிறோம். இவை முற்றிலும் கலக்காமல் ஓடுகின்றனவா அல்லது சிறிது சிறிதாக கலக்கின்றனவா என்று சிந்திக்கத் தவறுகிறோம். http://earthporm.com/11-incredible-points-world-major-bodies-water-join-together/ இதில் இருக்கும் படங்களைப் பாருங்கள். கருப்பு நிறத்தில் இருக்கும் ஒரு ஆற்று நீருக்கடியே சேற்று நிறத்தில் இருக்கும் மற்றொரு ஆறு கலந்துகொண்டுதான் இருக்கிறது. அவை ஏற்கனவே ஓடிவரும் வேகத்தாலும் இரு வேறு அடர்த்தியினாலும் அவை உடனே கலக்காமல் சிறிது தூரம் ஓடிச் சென்று மெது மெதுவாகக் கலக்கின்றன. பார்க்க https://en.wikipedia.org/wiki/Meeting_of_Waters
https://www.youtube.com/watch?v=O0hS0uwMmfE
http://awesci.com/rivers-that-meet-but-do-not-mix/
மேலுள்ள விடியோக்களை எடிட் செய்துதான் குர்ஆன் கூறும் அற்புதம் என்று பரப்புகின்றனர். இவற்றில் பெரும்பாலானவை இரு ஆறுகளாகும். சில மழைக்காலத்தில் ஆறுகள் கடலில் கலக்கும் நிகழ்வுகளாகும். மழைக்காலத்தில் சேற்று நீராக இருக்கும் ஆற்று நீர் கடலுடன் கலக்கும்போது கடல் நீர் நீல நிறமாகவும் ஆற்றுநீர் சேற்று நிறத்திலும் இருப்பதை நாம் பார்க்க இயலும். இரண்டும் கலக்காமல் இருப்பது போல தோன்றினாலும் அவை கலப்பதை சில நாட்களிலேயே பார்க்க இயலும். இதை கடற்கரையோரம் வசிப்பவர்கள் அறிவர்.
https://www.islam-guide.com/ch1-1-e.htm
http://www.islamtomorrow.com/quran/miracles/quran_seas_rivers.asp
போன்ற இணையதளங்களில் ஆறும் கடலும் சந்திக்கும் இடத்தில் நன்னீரும் கடல் நீரும் சந்திக்கும் இடத்தில் அவை கலந்த கலவை ஒரு தடுப்பாக மாறி அவற்றை கலக்காமல் தடுக்கிறது என்கிறார்கள். ஆறும் கடலும் சந்திக்கும் இடத்தில் இரு நீர்களும் கலந்து உருவாகும் கலவை ஆற்று நீரையும் கலக்க விடாமல் செய்வதாக சொல்வதிலும் எந்த விஞ்ஞானமும் இல்லை.
The partition (zone of separation) என்று அவர்கள் காட்டுவது ஒரு தடுப்பாக இருந்தால் அதைத் தாண்டி ஆறுகள் கடலுக்குள் பாயாது. சற்று சிந்தித்துப்பாருங்கள். ஆறுகள் கடலில் கலக்கும் இடத்தில் இதுபோன்று ஒரு சுவரிருந்தால் என்ன ஆகும்? தடையை தாண்டி பாய இயலாமல் ஆற்று நீர் மட்டம் உயரும். எங்கேயாவது ஒரு வழியைக் கண்டு பிடித்து பாயாத வரையில் அதன் நீர் மட்டம் உயர்ந்துகொண்டே இருக்கும். இறுதியில் அந்த ஆறு நிலத்தில் பாய்ந்து ஊரையே அழிக்கும். இதுதான் நடக்கிறதா?
ஆறும் கடலும் சந்திக்கும் இடையே தடுப்பு இருப்பதாக வாதிடுபவர்கள் கடலில் பாயும் ஆற்று நீர் என்ன ஆனது, எங்கே போகிறது, கடலுக்கடியில் ஆறாக ஓடுகிறதா எனும் கேள்விகளுக்கு விடை சொல்ல வேண்டும்.
இந்த கருத்துக்கள் அனைத்தும் ஒரே ஒரு மூளையில் உதித்தவை. அதை காப்பியடித்து பலரும் பல விதத்தில் எழுதுவதால் பலர் ஆய்வு செய்து சொன்னதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
Principles of Oceanography, Davis, pp. 92-93.
Oceanography, Gross, p. 242.
Oceanography, Gross, p. 244,
Introductory Oceanography, Thurman, pp. 300-301.
குறிப்பாக மேலுள்ள புத்தகங்களை மேற்கோள் காட்டிதான் அந்த ஒரு மூளை வாதிடுகிறது. இதுபோன்ற புத்தகங்களில் கடல்கள் கலக்கவில்லை என்றும் ஆறும் கடலும் கலக்கவில்லை என்றும் ஆதாரம் இருப்பதாக வாதிடுகிறார்கள். இந்த புத்தகங்களை யாராவது முழுமையாக வாசித்தால் உண்மை விளங்கும். இதே புத்தகங்களில் ஆறுகள் கடலில் பாயும்போது அவை எவ்வாறு கலக்கின்றன எனும் estuary mechanismஐ விளக்கியுள்ளனர். அதில் இருப்பதுதான் மேலுள்ள படம். இரண்டு நீரும் மெதுவாக கலப்பதைக் காட்டும் படமாகும். இதைக் காட்டிவிட்டு அவை கலக்கவில்லை என்பது வேடிக்கையே.
இதே புத்தகங்களில் கடல் நீரோட்டம் பற்றியும் உலக கடல் எனும் ஒரே நீர் நிலையில் பசிபிக் கடலில் உள்ள நீர் இந்தியப் பெருங்கடலை தாண்டி அட்லாண்டிக் கடலுடன் கலந்து ஆர்க்டிக் அண்டார்க்டிக் கடல்கள் வரை எவ்வாறு பாய்கிறது என்பதை விளக்கியுள்ளனர்.
அரை குறை அறிவுடன் சிலர் இப்புத்தகங்களை அணுகி அவற்றில் தங்களுக்கு ஆதாரம் என்று கண்ணில் பட்டதைவைத்து கதை எழுதியுள்ளனர்.
https://archive.org/details/principlesofocea0000davi
https://archive.org/details/oceanography00gros
https://archive.org/details/introductoryocea00thur
அவர்கள் குறிப்பிடும் புத்தகங்களை மேலே தந்துள்ளோம். இவற்றை முழுமையாக வாசித்தால் உண்மை விளங்கும்.
அட்லாண்டிக் கடலும் மத்திய தரைக்கடலும் சந்திக்கும் இடமாகட்டும் அல்லது கருங் கடலும் மத்திய தரைக்கடலும் சந்திக்கும் இடமாக்கட்டும் அல்லது பால்டிக் கடலும் வட கடலும் சந்திக்கும் இடமாகட்டும் அவை உடனே கலக்காமல் மெதுவாக கலக்கின்றன.
கடல்களை பொறுத்தவரை அட்லாண்டிக், பசிபிக், இந்தியன், ஆர்க்டிக், அண்டார்க்டிக் பெருங்கடல் என பெருங்கடல்களாகவும் அரபி, வாங்காள விரிகுடா, கரீபியன், மெக்சிகன், சீனக்கடல், பிலிப்பைன்ஸ் கடல் என கடல்களாகவும் மனிதன்தான் பிரித்து வைத்துள்ளான். உண்மையில் இவை அனைத்தும் ஒரே நீர் நிலைகள் தாம். இவற்றுக்கிடையே எந்த எல்லையும் இல்லை. எந்த தடுப்பும் இல்லை.
https://en.wikipedia.org/wiki/Borders_of_the_oceans
https://en.wikipedia.org/wiki/Maritime_boundary
இந்த அடிப்படையை விளங்கிகொண்டாலே பல குழப்பங்கள் தானாக விலகி விடும். அட்லாண்டிக் கடலின் நீரும் இந்தியப்பெருங்கடலின் நீரும் ஒன்றுதான். மேலும் “கடல் நீரோட்டம்” (ocean currents) எனப்படும் இயற்கை நிகழ்வையும் நாம் புரிந்துகொண்டால் இதுபோன்ற அறியாமை நம்மை விட்டு அகலும். கடலுக்குள்ளேயே ஆறுகள் போன்று தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். இந்த நீரோட்டத்தின் வேகம் மணிக்கு 5 கிலோமீட்டர் வரைக்கும் செல்லக்கூடியவை.
https://ta.wikipedia.org/wiki/பெருங்கடல்_நீரோட்டம்
https://en.wikipedia.org/wiki/Ocean_current
https://hypertextbook.com/facts/2002/EugeneStatnikov.shtml
உலகத்தில் உள்ள அனைத்து கடல் நீரும் இணைந்து உலகப் பெருங்கடல் என்று அழைக்கப்படுகிறது https://en.wikipedia.org/wiki/World_Ocean. இதைத் தவிர நிலத்தால் சூழப்பட்ட கடல்களும் உள்ளன. கருங்கடல், மத்திய தரைக் கடல், பால்டிக் கடல் போன்றவை ஒரு ஆற்றுடன் ஒப்பிடும் அளவுக்கு மிக சிறிய அளவிலான பகுதியில்தான் பெருங்கடலுடன் கலக்கின்றன. இவை ஒரு காலத்தில் நன்னீர் நிலைகளாக இருந்ததாகவும் பின்னர் கடலுடன் கலந்ததாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. இவை பெருங்கடலுடன் கலக்கும் வேகத்தை விட இவற்றில் பாயும் நன்னீரின் வேகம் அதிகமாக இருப்பதால் நிலத்தால் சூழப்பட்ட இந்த கடல்கள் எப்போதுமே பெருங்கடலுடன் உப்புத்தன்மையிலும் அடர்த்தியிலும் குறைவாக உள்ளன. ஆனால் இவை கலக்காமல் இருப்பதாக சொல்வது கற்பனை ஆகும்.
https://en.wikipedia.org/wiki/Mediterranean_Sea
https://en.wikipedia.org/wiki/Black_Sea
https://en.wikipedia.org/wiki/Baltic_Sea
அவை கலந்துகொண்டிருப்பதை மேலுள்ள லிங்குகளை வாசித்தால் அறிந்துகொள்ளலாம். இந்த கடல்களின் பெயர்களை சொல்லி கதையளப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
நிறம்:
அட்லாண்டிக் கடலும் இந்தியப் பெருங்கடலும் நிறத்தால் மாறுபட்டிருப்பதாக தஃப்ஸீர் கதை சொல்லி இருக்கிறது. கடலுக்கு நீல நிறம் ஏற்படக் காரணம் கடல் நீர் நில நிறத்தில் இருப்பதால் அல்ல. ஒரு டாங்கர் நிறைய நீரை கடலில் இருந்து எடுத்து வந்து பரிசோதித்தாலும் அது நீல நிறமாக இருக்காது. சூரிய ஒளியின் மற்ற நிறங்களை நீர் உறிஞ்சிவிடும். நீல நிறம் மட்டுமே பிரதிபலிக்கப் படுவதால் கடல் நீல நிறத்தில் காட்சியளிக்கிறது. கடல் நீருக்கான காரணம் என்ன என்பது இக்கால LKG பிள்ளைகளுக்கும் தெரியும்.
https://science.nasa.gov/earth-science/oceanography/living-ocean/ocean-color
https://en.wikipedia.org/wiki/Ocean_color
குர்ஆன் என்ன சொல்கிறது
இன்னும், இரு கடல்களும் சமமாகிவிடாது (இரண்டில்) இது மிக்க மதுரமான (தாகம் தீர்க்கக்கூடியதான,) அதை அருந்துவதற்கு இலேசானது, இதுவோ, உப்பும் மிக்க கசப்பும் (உடைய நீர்) ஆகும். 35:12
உலகத்தில் அருந்தத்தக்க, லேசான, இனிப்பான நீரைக் கொண்ட கடல் எதுவுமே இல்லை. உலகில் உள்ள எல்லா கடல்களுமே உப்பு நீரக்கதான் உள்ளன. ஆனால் இங்கே அல்லாஹ் ஒரு கடல் குடிநீரைக் கொண்டதாக உள்ளது என்கிறான். இரு கடல்கள் என்று சொல்லப்பட்ட இடத்தில் இருக்கும் வார்த்தை பஹரைன் என்பதாகும். இது பஹர் எனும் வார்த்தையின் இருமை ஆகும். பஹர் என்பதற்கு கடல் என்று மட்டுமே பொருள் கிடையாது.
(لسان العرب)
البَحْرُ: الماءُ الكثيرُ، مِلْحاً كان أَو عَذْباً
பெரிய நீர்நிலைகளுக்கும் அரபு மொழியில் பஹர் என்று சொல்லப்படும். அது நன்நீரானாலும் உப்பு நீரானாலும். (லிசானுல் அரப்)
மேலும் இரு வேறு பொருட்களைச் சேர்த்து அவற்றுள் ஒன்றின் பெயரைக் கொண்டு அழைப்பதும் அரபு மொழியின் இயல்பே
القَمَرانِ: الشمس والقمر
சூரியனையும் (ஷம்ஸ்) சந்திரனையும் (கமர்) சேர்த்து கமறாணி என்று அழைப்பார்கள். உமரையும் (ரலி) அபூ பக்ரையும் (ரலி) சேர்த்து உமராணி என்று அழைப்பார்கள்.
35:12ம் வசனத்தை இரு நீர்நிலைகளை என்று பொருள்கொண்டு ஒன்றைக் கடல் என்றும் மற்றொன்றை பெரிய ஆறு என்றும் எடுத்துக்கொண்டால் குர்ஆன் சொல்வது எளிதாக விளங்கும்.
(25:53)ம் வசனத்தில் “அவனே இரண்டு நீர்நிலைகளை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும், தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும், வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்.” என்றும் குர்ஆன் சொல்கிறது.
இங்கே சேர்த்துள்ளான் என்றும் 55:19 வசனத்தில் சந்திக்க விட்டான் என்றும் பொருள் கொண்டுள்ள இடத்தில் இருக்கும் வார்த்தை مَرَجَ என்பதாகும். இவ்வார்த்தைக்கு விடுதல் என்பதே நேரடி பொருளாகும். “சுதந்திரமாக விடுதல்” என்பதே பொருத்தமான பொருளாக்கம். விலங்குகளை சுதந்திரமாக மேய விடுவதற்கு இந்த மறஜ எனும் வார்த்தை பயன்படுத்தப்படும். பூமியில் பெரிய பெரிய பெருங்கடல்களையும் அல்லாஹ் படைத்துள்ளான். அழிவை ஏற்படுத்தும் பெரிய ஆறுகளையும் அல்லாஹ் படைத்துள்ளான். மனிதன் உருவாக்கிய எல்லா தடைகளையும் மீறி இந்த நதிகள் அழிவு ஏற்படுத்துவதைப் பார்க்கிறோம். இவற்றை சுதந்திரமாக இந்த பூமியில் அல்லாஹ் ஓட விட்டுள்ளதே காரணம். அல்லாஹ் நாடியிருந்தால் இவற்றை கலக்க செய்திருக்கலாம். மழை நீர் பூமியை ஊடுருவி நிலத்தடி நீராக மாறுவதை நாம் பார்க்கிறோம். ஆனால் எவ்வளவு ஆழமாக இருந்தாலும் கடலில் உள்ள நீர் நிலத்தடி நீருடன் கலக்காமல் இருக்கிறது. நன்னீர் நிலைகளையும் உப்பு நீரையும் பிரித்து வைத்து நமக்கு ஆறுகளில் இருந்தும் நிலத்தடியில் இருந்தும் குடிநீரை வழங்கி அருள் செய்துள்ளான். மேலுள்ள வசனங்களைப் பாருங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் அருளைப்பற்றி பேசுகின்றன. கடல்களையும் நதிகளையும் கலக்க விட்டு பூமியில் குடிநீரே இல்லாமல் ஆக்கிவிடாமல் நமக்கு குடிநீரை வழங்கி பாக்கியம் செய்ததை அல்லாஹ் விவரிக்கிறான்.
وَإِذْ قَالَ مُوسَىٰ لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّىٰ أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا
فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا
"இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தை அடையும் வரை சென்றுகொண்டே இருப்பேன். அல்லது என் பயணத்தை நீண்டகாலம் தொடர்வேன்'' என்று மூஸா தமது ஊழியரிடம் கூறியதை நினைவூட்டுவீராக! அவ்விரண்டும் சங்கமிக்கும் இடத்தை அவ்விருவரும் அடைந்த போது தமது மீனை மறந்தனர். அது கடலைப் பிளந்து தனது பாதையை அமைத்துக் கொண்டது. [குர்ஆன் 18:60-61]
மூஸா நபி (அலை) அவர்களின் சம்பவத்தில் இரு நீர்நிலைகள் சங்கமிக்கும் இடம் என்று சொல்லும்போது அல்லாஹ் மரஜ எனும் வார்த்தையை பயன்படுத்த வில்லை. மஜ்மஃ எனும் வார்த்தையை பயன்படுத்துகிறான் என்பதையும் கவனிக்கவும். அல்லாஹ் நுண்ணறிவாளன்.
இரண்டு *நீர்நிலைகள் (கடலும் ஆறும்)* சமமாகாது. இது இனிமையானதும், அடர்த்தி குறைந்ததும், அருந்த ஏற்றதுமாகும். அதுவோ உப்பும், கசப்பும் உடையது. ஒவ்வொன்றிலிருந்தும் பசுமையான மாமிசத்தை உண்ணுகின்றீர்கள். நீங்கள் அணிகின்ற ஆபரணத்தை (அதிலிருந்து) வெளிப்படுத்துகின்றீர்கள். நீங்கள் அவனது அருளைத் தேடவும், நன்றி செலுத்திடவும் அதைக் கிழித்துக் கொண்டு கப்பல்கள் செல்வதைக் காண்கிறீர். (அல்குர்ஆன் : 35:12)
அவனே இரண்டு *நீர்நிலைகளை (கடல்களையும் ஆறுகளையும்) (சுதந்திரமாக) விட்டுள்ளான்.* இது மதுரமாகவும், தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும், வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான். (அல்குர்ஆன் : 25:53)
பூமியை வசிப்பிடமாக்கி, அதனிடையே ஆறுகளை உருவாக்கி, அதற்கு முளைகளையும் அமைத்து இரண்டு *நீர்நிலைகளுக்கிடையே* தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை. (அல்குர்ஆன் : 27:61)
இரண்டு *நீர்நிலைகளை (கடல்களையும் ஆறுகளையும்) (சுதந்திரமாக) விட்டுள்ளான்.* இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.
(அல்குர்ஆன் : 55:19 & 55:20)
இவ்வாறு பொருள்கொண்டால் எந்த விபரீதமும் ஏற்படாது.
மேலுள்ள வசனங்களில் இருக்கும் புதிரை விளக்கும் விதமாக பின்வரும் வசனம் அமைந்துள்ளது.
أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ ﴿٦٨﴾ أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ ﴿٦٩﴾ لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ ﴿٧٠﴾
நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நீங்கள் நன்றி செலுத்த மாட்டீர்களா?
56:68-70
இரு நீர்நிலைகளை ஆறு கடல் என்றால், அவை கலக்காமல் இருக்கவேண்டுமே? ஆனால் ஆறுகளும் கடல்களும் கலக்கின்றனவே?
இவ்வாறு ஒரு கேள்வி எழலாம். நியாயம்தான்! இரு நீர்நிலைகள் என்று அல்லாஹ் சொல்வது ஆறு மற்றும் கடல் என்றால் அல்லாஹ் சொல்வதைப் போல அவை கலக்காமல் இருக்கவேண்டும். ஆனால் ஆறுகள் கடலில் கலந்துகொண்டுதான் இருக்கின்றன. இது சிலருக்கு புரிந்துகொள்வதில் குழப்பத்தை ஏற்படுத்துவது உண்மையே. ஏற்கனவே இரு கடல்கள் கலக்காமல் இருப்பதாக நம் மனதில் பதிந்துவிட்டதால், அல்லாஹ் தடையை ஏற்படுத்தியுள்ளான் அந்த தடையை அவை மீறாது என்று சொல்வதை ஆறுகள் கடலில் கலக்கவே கூடாது என்று நாம் விளங்கி விடுகிறோம்.
ஆறுகள் கடலுடன் கலப்பதால் ஆற்று நீர் உப்புநீராக ஆகிவிட்டதா? சிந்துப்பாருங்கள். எல்லா ஆறுகளும் கடல்களில் கலக்கின்றன. இதன் காரணத்தால் எந்த ஆறாவது உப்புநீர் ஆனதாக வரலாறு உண்டா? ஆறுகள் கடலில் கலந்துவிட்டபிறகு அதனை நாம் ஆறு என்று சொல்ல மாட்டோம் கடல் என்றே சொல்வோம். ஆறுகள் கடலில் கலந்துகொண்டே இருக்கின்றன இன்றுவரை எந்த கடலாவது குடிநீராக மாறியதுண்டா?
ஆறுகள் சுதந்திரமாக ஓடிய பிறகும் ஆறு ஆறாகவும் கடல் கடலாகவும்தானே உள்ளது.
சரி... ஆறுகள் எப்படி உருவாகின்றன. உப்பு நீராக இருக்கும் கடல்நீர் ஆவியாகி அவை மழையாக பொழிந்து அவையே ஆறுகளாகின்றன. ஆறு கடலாக மாறியதைப் போல கடல்தான் மீண்டும் ஆறுகள் ஆகின்றன. எனினும் ஆறுகள் குடிநீராகவும் கடல்கள் உப்பு நீராகவுமே பூமியின் வரலாற்றில் பதிவாகியுள்ளன. இவ்வாறு சிந்தித்தால் இரு நீர் நிலைகளுக்கு இடையே அல்லாஹ் ஏற்படுத்திய தடை எதுவென்று புரியும்.
கடல்கரையை ஒட்டியுள்ள கிராமங்கள் அல்லது முற்றிலும் கடலால் சூழப்பட்ட தீவுகளில் நிலத்தடி நீர் உப்பு நீராக இல்லாமல் நன்னீராக இருப்பதைப் பார்க்கிறோம். நிலத்தடி நீருடன் கடல் நீர் கலக்காமல் அல்லாஹ் தடுத்து வைத்துள்ளான். கடல் நீரின் அழுத்ததையும் நிலத்தடி நீரின் அழுத்தத்தையும் அல்லாஹ் சமன்படுத்தி கடல் நீர் நிலத்தடி நீருடன் கலக்காமல் அல்லாஹ் தடுத்துள்ளான்.
மொத்ததில் உலகில் உள்ள மொத்த (ஆறுகள், குளங்கள், ஏரிகள், நிலத்தடி நீர்) குடிநீரையும் ஒரு பஹராகவும் மொத்த (கடல்) உப்பு நீரையும் ஒரு பஹராகவும் எடுத்துகொண்டு சிந்தித்தால் அல்லாஹ் நமக்கு செய்துள்ள அருளை விளங்கிக்கொள்ளலாம் அந்த தடுப்பு எதுவென்றும் விளங்கிக்கொள்ளலாம்.
முடிவுரை:
- தண்ணீரால் ஆன இரு திரவங்கள் கலந்தே தீரும். எல்லா கடல்களும் ஒன்றுடன் ஒன்று கலக்கின்றன. எல்லா ஆறுகளும் கடலில் இரண்டறக் கலக்கின்றன
- அல்லாஹ் ஏற்படுத்தியத் தடுப்பைத் தாண்டி ஒரு சொட்டு நீர் கூட கலக்கவே இயலாது
- ஆறும் கடலும் கலக்காமல் இருப்பதைப் பற்றியோ, இரு கடல்கள் கலக்காமல் இருப்பதைப் பற்றியோ குர்ஆன் பேசவில்லை.
மற்ற தலைப்புகளை வாசிக்க https://www.piraivasi.com/p/zina-ul-abdeen.html