இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்
ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்
QSF ஆய்வுக்குழு
அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும். அறிமுகத்தை வாசிக்க https://www.piraivasi.com/2022/11/zina-ul-abdeen-intro.html
QSF20. பன்றி தடை செய்யப்பட்டதன் காரணம் என்ன?
தப்சீர் குறிப்பு 407. பன்றியை உண்ணத் தடை
இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:145, 16:115) பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான். இதற்கான காரணத்தை திருக்குர்ஆனும் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை.
பன்றிகள் மலத்தை உண்பதாலும், சாக்கடையில் புரள்வதாலும் பன்றி தடை செய்யப்பட்டுள்ளது என்று சிலர் கூறுகின்றனர்.
இதுதான் காரணம் என்றால் மலத்தை உண்ணும் மாடு, கோழி போன்ற எத்தனையோ உயிரினங்கள் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தடை செய்யப்படவில்லை. பன்றிகள் மலத்தை உண்பது தான் தடை செய்வதற்குக் காரணம் என்றால் சாக்கடையில் புரளாமல் பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றி அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எந்தப் பன்றியும் உண்ண அனுமதிக்கப்படவில்லை. எனவே பன்றியின் மாமிசம் தடுக்கப்பட்டதற்கு இவை காரணமாக இருக்க முடியாது. பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்பதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன.
பொதுவாக உணவுகளில் அதிகமான கொழுப்பு இருக்கும்போது அது மனித உடலுக்குக் கேடு செய்கிறது. குறிப்பாக இதய நோயாளிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதய நோயாளிகள் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றைக் கூட உண்ண வேண்டாம் என்கின்றனர்.
100 கிராம் ஆட்டிறைச்சியில் 17 கிராம் கொழுப்பு உள்ளது. 100 கிராம் மாட்டு இறைச்சியில் 5 கிராம் கொழுப்பு உள்ளது. ஆனால் 100 கிராம் பன்றி இறைச்சியில் 50 கிராம் கொழுப்பு உள்ளது. சரி பாதி கொழுப்பு உள்ள பன்றியின் இறைச்சி நிச்சயம் நல்ல உணவாக இருக்க முடியாது.
மேலும் எல்லாக் கால்நடைகளுக்கும் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. உடல் அதிகமாகச் சூடாகும்போது வியர்வை சுரந்து, உடல் சூட்டைத் தணிப்பதுடன் உடலிலுள்ள கெட்ட நீரும் இதன் மூலம் வெளியேறுகின்றது. ஆனால் பன்றிக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது. மனிதர்கள் சாதாரணமாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தைத் தாங்கிக் கொள்கிறார்கள். மற்ற கால்நடைகள் இதை விட அதிகமான வெப்பத்தைத் தாங்கிக் கொள்கின்றன. ஆனால் பன்றியினால் 29 டிகிரி வெப்பத்துக்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாது. வியர்வைச் சுரப்பிகள் இல்லாததே இதற்குக் காரணம். இதனால் தான் 29 டிகிரியை விட வெப்பம் அதிகமாகும்போது சாக்கடையில் புரண்டு, வெப்பத்தைத் தணித்துக் கொள்கிறது.
பன்றியின் இறைச்சியில் மனிதனுக்குக் கேடு செய்கின்ற நாடாப் புழுக்கள் என்ற நுண்கிருமிகள் உள்ளன. எவ்வளவு உச்ச வெப்பத்திலும் இந்தப் புழுக்கள் சாவதில்லை. மூளைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், இதய வீக்கம் உள்ளிட்ட 66 நோய்கள் பன்றி இறைச்சியை உண்பதால் ஏற்படுவதை மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.
பன்றி உணவு சாப்பிடாத இஸ்லாமிய நாடுகளில் இதய வீக்கம் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட, பன்றியை உணவாகக் கொள்ளும் ஐரோப்பாவில் இதய வீக்கம் உள்ளவர்கள் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளனர்.
இது போன்ற காரணங்களால், வருமுன் காக்கும் நோக்கில் பன்றி உண்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.
∙∙∙∙∙·▫▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ end of tafseer ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫▫·∙∙∙∙∙
//இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:145, 16:115) பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான். இதற்கான காரணத்தை திருக்குர்ஆனும் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை.//
என்று துவங்கும் தஃப்ஸீர்...
//இது போன்ற காரணங்களால், வருமுன் காக்கும் நோக்கில் பன்றி உண்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.//
என்று முடிவடைகிறது.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொல்லாத ஒரு காரணத்தை தான் தஃப்ஸீர் சொல்கிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம். அல்லாஹ்வும் தூதர் ﷺ அவர்களும் காரணம் சொல்லாத ஒரு விஷயத்திற்கு இதுதான் காரணம் என்று நாம் சொல்லக்கூடாது. அடுத்ததாக, பன்றி இறைச்சி தடை செய்யப்பட்டதற்கு மூன்று காரணங்களை தஃப்ஸீர் சொல்கிறது.
1. //மேலும் எல்லாக் கால்நடைகளுக்கும் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. உடல் அதிகமாகச் சூடாகும்போது வியர்வை சுரந்து, உடல் சூட்டைத் தணிப்பதுடன் உடலிலுள்ள கெட்ட நீரும் இதன் மூலம் வெளியேறுகின்றது. ஆனால் பன்றிக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது //
2. //பாதி கொழுப்பு உள்ள பன்றியின் இறைச்சி நிச்சயம் நல்ல உணவாக இருக்க முடியாது//
3. //பன்றியின் இறைச்சியில் மனிதனுக்குக் கேடு செய்கின்ற நாடாப் புழுக்கள் என்ற நுண்கிருமிகள் உள்ளன. எவ்வளவு உச்ச வெப்பத்திலும் இந்தப் புழுக்கள் சாவதில்லை//
வியர்வைச் சுரப்பி:
இது ஒரு காரணமாக இருந்தால் பல உயிரினங்கள் உண்ணத்தகாதவை ஆகிவிடும். உடும்புக்கு வியர்வை சுரப்பி கிடையாது (https://www.livescience.com/32585-how-do-lizards-cool-off-.html). கோழி மற்றும் எந்த பறவை இனத்திற்கும் வியர்வை சுரப்பி இல்லை (https://www.heatstress.info/HeatStressExplained/BodyHeatregulationinPoultry.aspx). வியர்வை சுரப்பி எனும் காரணம் மார்க்கம் சொல்லாத ஒன்று அறிவுக்கும் ஒவ்வாத ஒன்று.
https://en.wikipedia.org/wiki/Uromastyx
கொழுப்பு:
கொழுப்பு தொடர்பாக தஃப்ஸீர் சொல்லும் புள்ளி விபரங்கள் ஆதாரமற்றவையாகும். கொழுப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் பல்வேறு மதிப்பீடுகளைக் கொடுக்கின்றன. ஆய்வு செய்யும் இடம் இனத்தைப் பொருத்து அளவிடப்படும் கொழுப்பின் அளவு மாறும். இந்திய ஆடுகளை விட ஆஸ்திரேலிய ஆடுகள் அதிக கொழுப்புடையவை. மேலும் ஒரே விலங்கின் ஒவ்வொரு பகுதியிலும் அதன் கொழுப்பின் அளவு மாறுபடுகிறது. Lean meat எனும் முறையில் பன்றியின் உடலில் கொழுப்பு குறைந்த பகுதியை எடுத்து, அதனுடன் சாதரணமான ஆட்டின் கொழுப்பு மிக்க பகுதியை எடுத்து ஒப்பிட்டால் பன்றி இறைச்சி மிகமிகக் கொழுப்பு குறைந்ததாக இருக்கும். பன்றியின் லீன் மீட் உணவை உண்பவர் ஆட்டிறைச்சி மாட்டிறைச்சி உண்பவரை விட கொழுப்பில் குறைந்தவராக இருப்பார்.
உடல் கொழுப்பைக் குறைக்கவும் நீரிழிவு நோயுடையோருக்கு பெரிய ஆறுதலாகவும் இருக்கும் ஒரு (diet) உணவு திட்டம்தான் keto கீற்றோ ஆகும். கார்போஹைட்ரேட் உணவுகளாக அரிசி, கோதுமை, உருளை போன்றவற்றை தவிர்த்து கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்த இயற்கை உணவுகளை உண்பதன் மூலம் உடலை கீற்றோசிஸ் எனும் நிலைக்கு எடுத்து சென்று உடலில் உள்ள கொழுப்பைக் கரைப்பதே கீற்றோ உணவுப்பழக்கம் ஆகும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதுடன் இதன் மூலம் பயனடைந்தவர்களை நாம் கண்முன்னே கண்டும் வருகிறோம். இத்தகைய ஒரு ஏற்பாட்டை மனித உடலில் ஏற்படுத்தியவன் அல்லாஹ்வே. ஆக, கொழுப்பைக் காரணம் காட்டி இதுவே பன்றி இறைச்சி தடைக்குக் காரணம் என்று சொல்ல இயலாது.
நாடாப் புழுக்கள்:
போதிய தகவல்களை சேகரிக்காமல் செவி வழி செய்திகளின் அடிப்படையில் இந்த தஃப்ஸீர் எழுதப்பட்டுள்ளது. அமெரிக்க உணவுக் கட்டுப்பாட்டு நிறுவனம் வெறும் 71℃ வெப்பநிலையில் பன்றி இறைச்சியை வேகவைத்தாலே அதிலிருக்கும் அனைத்து கிருமிகளும் சேர்ந்து இறந்து விடும் என்கிறார்கள். பார்க்க https://en.wikipedia.org/wiki/Pork#Disease_in_pork. இதனை ஆதாரம் எதுவுமில்லாமல் சிந்திக்க இயலும். உலகில் சாகடிக்க இயலாத உயிரினம் எதுவுமில்லை.* உலகில் உள்ள அனைத்து வகைப் புழுக்களும் நீரின் கொதிநிலையான 100℃ வெப்பத்தில் இறந்துவிடும். மேலும் இத்தகைய புழுக்கள் பன்றியில் மட்டுமே காணப்படுவதில்லை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் ஆடு மாடுகளின் சாணத்தில் இருந்துகூட அவற்றின் இறைச்சியின் வழியாக இப்புழுக்கள் வந்துவிடும். பன்றி ஹராமக்கப்பட்டதற்கு நாடாப்புழுவை காரணமாக சொல்ல இயலாது.
* சில பாக்டீரியா மட்டுமே அதிக வெப்பநிலையில் உயிர்வாழும் தன்மையைப் பெற்றுள்ளன. https://en.wikipedia.org/wiki/Thermophile . இவற்றை மனிதன் புழங்கும் இடங்களில் காண இயலாது. இவை மனிதனுக்கு கேடுவிளைவிப்பவையும் அல்ல.
பார்க்க https://en.wikipedia.org/wiki/Pork#Disease_in_pork
பன்றி இறைச்சியால் ஏற்படும் நோய்கள் அதனை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படுவதே. நன்றாக வேகவைத்து சாப்பிட்டால் பன்றியில் நோய் எதுவும் இல்லை. சில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் பறவைக் காய்ச்சல் நோயால் கோழிகள் பாதிக்கப்பட்டன. அப்போது மக்கள் கோழி உண்பதைத் தவிர்த்தனர். கோழியை நன்றாக வேகவைத்து சாப்பிடுவதால் எந்த கெடுதலும் இல்லை என்று அரசு அறிக்கை வெளியிட்டது நம்மில் பலருக்கும் நினைவிருக்கலாம்.
புதிய அறிக்கையை இங்கே காண்க: - https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2019/08/2019080186.pdf
தமிழக அரசு அறிக்கையிலும் அமெரிக்க உணவுக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் பரிந்துரையிலும் 70℃ வெப்பத்தில் வேக வைத்தாலே கிருமிகள் இறந்துவிடும் என்கிறார்கள். ஆனால் நீரின் கொதி நிலை 100℃ ஆகும். எண்ணெயின் கொதிநிலை 150℃ ஆகும். ஆக அவித்த அல்லது பொரித்த இறைச்சியில் எந்த உயிரினமும் உயிர்வாழாது.
அடுத்ததாக மூளைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல் பன்றியால் ஏற்படும் நோய்கள் எனும் பெயரில் சில நோய்களை பட்டியல் இடுகிறது தப்சீர். எப்படி பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழியை நன்றாக வேகவைத்து உண்டால் பறவைக் காய்ச்சல் ஏற்படாதோ அதே போல பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றியை நன்றாக வேகவைத்து உண்டால் பன்றிக் காய்ச்சல் ஏற்படாது. உயிரோடுள்ள பாதிக்கப்பட்ட பறவையை மனிதன் தொட்டால் பறவையின் திரவங்கள் மூலம் மனிதனுக்கு பறவைக் காய்ச்சல் பரவும். அதேபோல உயிரோடுள்ள பன்றியுடன் புழங்குவதன் மூலம் பன்றிக் காய்ச்சல் எனும் நோய் மனிதனுக்கு தொற்றியதால் அதற்கு பன்றிக் காய்ச்சல் என்று பெயர் வைத்தார்கள். H1N1 எனும் பன்றிக் காய்ச்சல் வைரஸ் மட்டுமே பன்றியிடமிருந்து மனிதனுக்கு தொற்றியுள்ளது. பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் வேறு வைரஸ்கள் பன்றியே இல்லாத இடங்களில் வாழும் மக்களை பாதித்துள்ளது. எடுத்துக்காட்டிற்கு, பன்றியும் பன்றி இறைச்சியும் இல்லாத கத்தரில் பன்றியை உண்ணாத முஸ்லிம்களுக்கு பன்றிக் காய்ச்சல் வருகிறது. பன்றி இறைச்சியை உண்பதால் பன்றிக் காய்ச்சல் ஏற்படுவதில்லை.
மஞ்சள் காய்ச்சல் எனும் நோய் கொசுக்கள் மூலம் பரவுவதாகும். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படுவதாக சொல்வது அறியாமை ஆகும்.
மூளைக் காய்ச்சல் ஒரு நோயல்ல. வேறு நோய்களால் மூளையில் ஏற்படும் பாதிப்பை மூளைக் காய்ச்சல் என்கிறார்கள். எந்தெந்த நோய்களால் மூளைக் காய்ச்சல் ஏற்படும் என்கிறார்களோ அந்த நோய்களுக்கும் பன்றிக்கும் தொடர்பில்லை.
வைரஸ் vs பாக்டீரியா:
நோய்த் தொற்றுதலைப் பற்றி விளங்காமல் மேலுள்ள தகவல்களை விளங்குவது சிரமம். எனவே நோய்த் தொற்றுதலைப் பற்றி சிறிதளவு பார்ப்போம். அதிகமாக மனிதனை நோய்வாய்ப்படுத்துபவை பாக்டீரியாக்கள் ஆகும். இவை உயிருள்ள பொருட்களிலும் வாழும் உயிரற்ற பொருட்களிலும் வாழும். ஆக்சிஜன் இல்லாமல் கூட வாழும் பாக்டீரியாக்கள் உள்ளன. எனவே இவை எளிதில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றிக்கொள்ளும். ஆனால் பாக்டீரியக்காளைப் பொறுத்தவரை அவற்றை அழிப்பது சுலபம். நாம் உண்ணும் ஆடு மாடு கோழி இறைச்சியிலும் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. வேகவைப்பதன் மூலம் அவற்றை நாம் கொன்ற பிறகே உண்கிறோம்.
மனிதனுக்கு நோய் தருவதில் பாக்டீரியாக்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவை வைரஸ்கள். வைரஸ்களை பொறுத்தவரை அவை சுயமாக உயிர்வாழாது. உயிருள்ள செல்களுக்குள் மட்டுமே அவை பெருகும். எந்த உயிருள்ள செல்லில் வைரஸ் குடியமர்ந்துள்ளதோ அந்த உயிருள்ள செல் இறந்துவிட்டால் அந்த வைரசும் அழிந்துவிடும். இந்நிலையில் இறந்து போன இறைச்சியில் வைரஸ்கள் இருக்காது. அதுவும் வேக வைத்த இறைச்சியில் நிச்சயம் வைரஸ்கள் இருக்காது.
https://en.wikipedia.org/wiki/Virus
66 நோய்கள் அல்ல கிருமிகளால் ஏற்படும் நோய்கள் எத்தனை பட்டியல் இட்டாலும் அவை வேக வைக்கும்போது இறந்துவிடும்.
Cardiomyopathy எனும் இதயவீக்க நோய்க்கும் பன்றிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
பன்றிக் காய்ச்சல்
https://www.webmd.com/cold-and-flu/flu-guide/h1n1-flu-virus-swine-flu#1
https://en.wikipedia.org/wiki/Swine_influenza
பறவைக் காய்ச்சல்:
https://www.webmd.com/cold-and-flu/flu-guide/what-know-about-bird-flu
https://en.wikipedia.org/wiki/Avian_influenza
மஞ்சள் காய்ச்சல்
https://www.healthline.com/health/yellow-fever
https://en.wikipedia.org/wiki/Yellow_fever
மூளைக் காய்ச்சல்
https://en.wikipedia.org/wiki/Brain_fever
சிவப்புக் காய்ச்சல்
https://en.wikipedia.org/wiki/Scarlet_fever
இதயவீக்க நோய்:
https://www.heart.org/en/health-topics/cardiomyopathy/what-is-cardiomyopathy-in-adults
https://en.wikipedia.org/wiki/Cardiomyopathy#Causes
அறிவியலைக் கொண்டு எந்த உணவையும் ஹலால்/ஹராம் என்று நிறுவ இயலாது.பன்றியால் ஏற்படும் தீங்குகளை நாம் பட்டியல் இட்டால் அதனை உண்பதால் ஏற்படும் நன்மைகளை இன்னொருவர் பட்டியல் இடுவார். பன்றியில் இருக்கும் விட்டமின்களும் தாதுச் சத்துக்களும் வேறெந்த உணவிலும் காணப்படுவதில்லை. பார்க்க https://en.wikipedia.org/wiki/Pork#Nutrition. பன்றியை அல்லாஹ் ஹராம் என்கிறான் அதனால் அது ஹராம். அவனோ அவனது தூதர் ﷺ அவர்களோ காரணத்தை சொல்லி இருந்தால் அதனை நாம் சொல்லலாம். அவர்கள் சொல்லாத காரணத்தை நாமாக கண்டுபிடிக்கும்போது இதுபோன்ற சறுக்கல்கள் ஏற்படும்.
மற்ற தலைப்புகளை வாசிக்க https://www.piraivasi.com/p/zina-ul-abdeen.html