Thursday, 3 November 2022

QSF10. மூக்கின் மேல் அடையாளமிடப்பட்டுள்ளதா?

 

இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்


ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்


QSF ஆய்வுக்குழு


அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும். அறிமுகத்தை வாசிக்க https://www.piraivasi.com/2022/11/zina-ul-abdeen-intro.html




QSF10 மூக்கின் மேல் அடையாளமிடப்பட்டுள்ளதா?


وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ ﴿١٠﴾ هَمَّازٍ مَّشَّاءٍ بِنَمِيمٍ ﴿١١﴾ مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ ﴿١٢﴾ عُتُلٍّ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ ﴿١٣﴾ أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ ﴿١٤﴾ إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ ﴿١٥﴾ سَنَسِمُهُ عَلَى الْخُرْطُومِ ﴿١٦﴾


10. அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவனாகிய எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்!

11. அவன் குறை கூறுபவன்; கோள் சொல்லித் திரிபவன்.

12. நன்மையைத் தடுப்பவன்; வரம்பு மீறுபவன்; குற்றம் புரிபவன்.

13. முரடன். இதற்கு மேல் தவறான வழியில் பிறந்தவன்.

14. செல்வமும், ஆண் மக்களும் உடையவனாக அவன் இருக்கிறான் என்பதால் (அவனுக்குக் கட்டுப்படாதீர்.)

15. அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் "முன்னோர்களின் கட்டுக் கதைகள்'' எனக் கூறுகிறான்.

16. அவனது மூக்கின் மேல் அடையாளம் இடுவோம்.


தஃப்சீர் விளக்கக் குறிப்பு:- 371-மூக்கின்-மேல்-அடையாளம்


இவ்வசனத்தில் (68:16) ஒவ்வொரு மனிதனையும் தனியாகப் பிரித்துக் காட்டுவதற்கு மூக்கின் மேல் அடையாளமிடுவோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.


கைரேகை மூலம் ஒருவரைக் கண்டுபிடிப்பதை விட மூக்கைப் பல கோணங்களில் ஸ்கேன் செய்வதன் மூலம் எந்த மனிதரையும் துல்லியமாகக் கண்டறியும் போட்டோ பேஸ் என்ற தொழில் நுட்பம் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஆனால் மனிதனைத் தனித்து அடையாளம் காண்பது பற்றி மனிதனின் மூக்கில் அடையாளம் இடுவோம் என்று இவ்வசனம் (68:15,16) கூறுகிறது.


கைரேகைகள் நம் கண்களுக்குத் தெரிகிறது. இதை வெளிப்படையாக நாம் பார்த்து அறிந்து கொள்கிறோம்.


ஆனால் மனிதனின் மூக்கில் ஏதாவது அடையாளம் இடப்பட்டிருப்பது நமக்குத் தெரிகிறதா என்றால் நிச்சயமாக இல்லை எனலாம்.


மூக்கில் எந்த அடையாளமும் போடப்பட்டது நமக்குத் தெரியாவிட்டாலும் மூக்கில் அடையாளம் போடப்பட்டுள்ளதை இப்போது நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


இது பற்றி டாக்டர் அட்ரியன் ஈவன்ஸ் கூறுகையில் கைரேகை ஸ்கேனை விட மூக்கு ஸ்கேன் மூலம் ஒருவரை எளிதாக அடையாளம் கண்டுபிடிக்கலாம். அதன் மூலம் குற்றவாளியின் தாயகம், இனம் ஆகியவற்றுடன் கைரேகையைப் போல் ஒவொருவரது மூக்கு அமைப்பும் வேறுபடுவதால் அடையாளம் காண்பது எளிது.


மூக்கின் மேல் அடையாளமிடுவோம் என்ற சொல் பொருத்தமாகக் கையாளப்பட்டுள்ளது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.

              ********************************


நமது மறுப்பு:-

208 ம் தஃப்ஸீர் குறிப்பில் 

//மனிதனின் எந்த அங்கமாக இருந்தாலும் அந்த அங்கம் குறிப்பிட்ட மனிதனுடையது தான் என்று அடித்துச் சொல்ல முடியாது. ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் முழுமையாக வேறுபடுவது *விரல்களில் அமைந்திருக்கும் ரேகைகளால் தான்.//* என்றும்  371 ம் தஃப்ஸீர் குறிப்பில் //கைரேகை மூலம் ஒருவரைக் கண்டுபிடிப்பதை விட மூக்கைப் பல கோணங்களில் ஸ்கேன் செய்வதன் மூலம் எந்த மனிதரையும் துல்லியமாகக் கண்டறியும் போட்டோ பேஸ் என்ற தொழில் நுட்பம் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.// என்றும் முரட்டு முரண்பாடாக எழுதிவைத்துள்ளார்.


இந்த விளக்கத்தையும் நாம் இரண்டு கோணத்தில் அணுகுவோம். 


1. உண்மையாகவே இப்படி ஒரு தொழில்நுட்பம் இருக்கிறதா? அது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதா? அந்த தொழில்நுட்பத்தைப் பற்றி ஆசிரியர் சிலாகித்து கூறியிருப்பது உண்மைதானா?


2. அரபு மொழி இலக்கண விதியின் படி இவ்வாறு பொருள் கொள்ள வழியுள்ளதா?


1 >>>>


ஆசிரியரின் இந்த அடிக்குறிப்பு முழுக்க முழுக்க  பிபிசி யின் இந்த http://news.bbc.co.uk/2/hi/science/nature/8543292.stm செய்தியைத் தழுவியதாக உள்ளது. இதை  முழுமையாக வாசியுங்கள்.


Page last updated at 00:22 GMT, Tuesday, 2 March 2010


"This initial work is _#nowhere as good as iris identification#_ but the nose has pros and cons," said Dr Evans.


"There's no magic biometric that solves all your problems. _#Irises are a powerful biometric#_ but can be difficult to capture accurately and can be easily obscured by eyelids or glasses. People can easily cover up their ears, with their hair for example.


"Of course you can have a broken nose or wear a false nose or have plastic surgery but to have nose surgery to change your identity is fairly drastic.


_#"Irises are very good for recognition#_ but you can put in dilation drops which change the iris completely. No technique is infallible," he said.


Dr Evans hopes the method can be proven to be effective on this larger sample. "The technique certainly shows potential, _#perhaps to be used in combination with other identification methods,"#_ he said.


2010ல் இந்த செய்தி வெளிவந்துள்ளது. இப்போது 2018, இன்றுவரை மூக்கை பயோமெட்ரிக் அடையாளத்திற்காக வெற்றிகரமாக பயன்படுத்தியதாக எந்த தகவலும் இல்லை. இன்றுவரை விமானநிலையங்கள் உட்பட எந்த security அமைப்புகளிலும் கண் மட்டுமே பயோமெட்ரிக் அடையாளத்திற்காக பயன்படுகிறது. 


அடுத்து மேலே # அடையாளமிடப்பட்டதை மட்டும் சற்று கவனமாக வாசியுங்கள். மூக்கை அடையாளத்திற்கு பயன்படுத்தலாம் என்ற ஆய்வை மேற்கொண்ட  இவான்ஸ் கூறுகையில் கண்கள் தான் சக்திவாய்ந்த அடையாளங்களாக பயன்படுகின்றன என்றும் இறுதியாக அவர் கூறுகையில் ஒருவேளை மூக்கை பயன்படுத்துவதில் வெற்றியடைந்தால் கூட அதை தனித்து பயன்படுத்த இயலாது கைரேகை அல்லது கண் போன்ற அடையாளங்களுடன் சேர்த்துதான் பயன்படுத்த இயலும் என்கிறார்.


இது வெற்றிபெறாத ஆய்வு.


ஆய்வுகள் தினமும் நடப்பவை. பல ஆய்வுகள் வெற்றி பெறும். ஆனால் எல்லா ஆய்வுகளும் பயன்படுத்தும் அளவுக்கு வெற்றி பெறுவதில்லை. வெற்றி பெறாத ஓர் ஆய்வை நமது ஆசிரியர் பெரிய ஆதாரமாக எடுத்துவிட்டார்.


மூக்கு மட்டுமே அடையாளப் பொருளா?


இல்லை! இந்த செய்தியையும் வாசியுங்கள் >> https://www.popsci.com/seven-surprising-biometric-identification-methods . மனிதனின் காதுகள் ஏன் பிட்டங்கள் வரை ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகின்றன. அவை அடையாளப் பொருளாக பயன்படுபவை என்கிறார்கள்.


2 >>>>


குறிப்பிட்ட வசனம் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதா? அதாவது எல்லா மனிதனுக்கும் அல்லாஹ் மூக்கின் மேல் அடையாளம் இட்டுள்ளானா? அல்லது குறிப்பிட்ட ஒரு நபரைப் பற்றி அவ்வசனம் பேசுகிறதா? அவ்வசனத்தை பற்றி தப்சீர்கள் என்ன சொல்கின்றன?


10. அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவனாகிய எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்!

11. அவன் குறை கூறுபவன்; கோள் சொல்லித் திரிபவன்.

12. நன்மையைத் தடுப்பவன்; வரம்பு மீறுபவன்; குற்றம் புரிபவன்.

13. முரடன். இதற்கு மேல் தவறான வழியில் பிறந்தவன்.

14. செல்வமும், ஆண் மக்களும் உடையவனாக அவன் இருக்கிறான் என்பதால் (அவனுக்குக் கட்டுப்படாதீர்.)

15. அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் "முன்னோர்களின் கட்டுக் கதைகள்'' எனக் கூறுகிறான்.

16. அவனது மூக்கின் மேல் அடையாளம் இடுவோம்.


சூரா அல் கலம் 10ம் வசனம் முதல் 16ம் வசனம் வரையில் ஒரே செய்தி தொடர்ச்சியாக கூறப்படுகிறது. இதில் இடையே ஒன்றை மட்டுமே எடுத்துக்கொண்டு விளக்கம் கொடுக்கக் கூடாது. 


وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ ﴿١٠﴾ هَمَّازٍ مَّشَّاءٍ بِنَمِيمٍ ﴿١١﴾ مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ ﴿١٢﴾ عُتُلٍّ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ ﴿١٣﴾ أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ ﴿١٤﴾ إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ ﴿١٥﴾ سَنَسِمُهُ عَلَى الْخُرْطُومِ ﴿١٦﴾


குறை கூறும், கோள் சொல்லித் திரியும், நன்மையைத் தடுக்கும், வரம்பு மீறும், குற்றம் புரியும், முரடனான, இதற்கு மேல் தவறான வழியில் பிறந்தவனான, அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவனாகிய எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்! செல்வமும், ஆண் மக்களும் உடையவனாக அவன் இருப்பதால் அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் "முன்னோர்களின் கட்டுக் கதைகள்'' எனக் கூறுகிறான். அவனது மூக்கின் மேல் அடையாளம் இடுவோம்.


பொதுவாக ஆசிரியர் மற்ற குர்ஆன் வசனங்களை மொழிபெயர்த்திருப்பதைப் பார்த்தால் 10 முதல் 13ம் வசனங்களை அவர் இவ்வாறு தொடர்ச்சியாகத்தான் மொழிபெயர்த்திருக்க வேண்டும். ஆனால் இந்த இடத்தில் அவர் அதை கவனிக்கத் தவறிவிட்டார். அவ்வாறு செய்திருந்தால் 10முதல் 16 வரையிலான வசனங்கள் குறிப்பிட்ட ஒரு மனிதனைப் பற்றி பேசுவதை உணரலாம்.


இதை வாசிக்கும் எவரும் ஏதோ ஒரு ஆளைப் பற்றி குறிப்பாக அல்லாஹ் பேசுகிறான் என்று விளங்கிகொள்வார்கள். மேலும் அவன் நபி ஸல் அவர்கள் காலத்தில் வாழ்ந்தவன் என்றும் விளங்குகிறது. அவனைப் பற்றி சொல்லிவிட்டு “அவனது மூக்கின் மேல் அடையாளம் இடுவோம்” என்று எதிர்கால வினைசொல்லில் அல்லாஹ் சொல்கிறான். அதாவது குறிப்பிட்ட அந்த மனிதனுக்கு அதுவரையில் மூக்கின் மேல் அடையாளம் இடப்படவில்லை. அதன் பிறகுதான் அவனது மூக்கின் மேல் அல்லாஹ் அடையாளம் இடப்போகிறான் என்று பொருள். ஆசிரியர் புரிந்துகொண்டதைப் போல //ஒவ்வொரு மனிதனையும் தனியாகப் பிரித்துக் காட்டுவதற்கு மூக்கின் மேல் அடையாளமிடுவோம் என்று அல்லாஹ்// சொல்லவில்லை.


“இதற்கு மேல் தவறான வழியில் பிறந்தவன்” என்பது மனித இனத்தை பொதுவாக குறிக்கும் சொல் அல்ல. ஆசிரியர் புரிந்துகொண்டதைப் போல //ஒவ்வொரு மனிதனையும் தனியாகப் பிரித்துக் காட்டுவதற்கு மூக்கின் மேல் அடையாளமிடுவோம் என்று அல்லாஹ்// சொன்னதாக அர்த்தம் எடுத்தால் பூமியில் பிறந்த அத்தனை மனிதரும் தவறான வழியில் பிறந்தவர்கள் என்ற அர்த்தம் வந்துவிடும்.


//ஒவ்வொரு மனிதனையும் தனியாகப் பிரித்துக் காட்டுவதற்கு மூக்கின் மேல் அடையாளமிடுவோம் என்று அல்லாஹ்// ஒட்டுமொத்த மனித குலத்தைப் பற்றியும் சொல்லவேண்டும் என்றால் அவன் படைக்கப்படும்போதே அந்த அடையாளம் இடப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் இந்த அடையாளங்கள் மாறாதவை. பிறப்பிலேயே இருப்பவை. இவ்வாறு ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் சொல்வதாக இருந்தால் “மனித குலத்திற்கு மூக்கின் மேல் அடையாளம் இட்டுவிட்டோம்” என்று இறந்தகாலத்தில் சொல்லப்படவேண்டும். அல்லது “ஒவ்வொரு மனிதனுக்கும் மூக்கின் மேல் அடையாளம் இடுகிறோம்” என்று நிகழ்காலத்தில் சொல்லப்படவேண்டும். ஒருமை பிரதிப்பெயரில், எதிர்கால வினையில் "அடையாளமிடுவோம்" என்று வரவே வராது.


ஆசிரியரின் கருத்துப்படியே மனிதனை அடையாளம் காண்பதற்காக இடப்படும் அடையாளம் என்றால் இந்த வசனம் இறங்கும் வரையில் பிறந்த அனைத்து மனிதரும் அடையாளம் இல்லாமல் பிறந்துள்ளனர் என்று அர்த்தம் வரும். காரணம், எதிர்கால வினையில் இனிமேல் தான் அடையாளம் இடுவோம் என்று இந்த வசனம் சொல்கிறது.


முடிவுரை:


1. ஆசிரியர் சொல்லியிருப்பதைப் போல மூக்கைக்கொண்டு மனிதனை அடையாளம் காணும் தொழில்நுட்பம் எதுவும் வெற்றிகரமாக நடைபெறவில்லை. மாறாக அதைவிட சிறந்த தொழில்நுட்பம் கண்களைக் கொண்டு அடையாளம் காண்பதாகும்.

2. ஒட்டுமொத்த மனித குலத்திற்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ் மூக்கின் மேல் அடையாளமிட்டு படைக்கிறான் என்ற பொருளை இவ்வசனத்தில் இருந்து எடுக்கவே முடியாது, வழக்கம்போல விஞ்ஞான மோகத்தால் ஆசிரியர் இங்கே கவனத்தை சிதறவிட்டுவிட்டார்.


மற்ற தலைப்புகளை வாசிக்க https://www.piraivasi.com/p/zina-ul-abdeen.html