Thursday, 3 November 2022

QSF04. துல்கர்னைன் உலகை சுற்றினாரா?

 

இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்


ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்


QSF ஆய்வுக்குழு


அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும். அறிமுகத்தை வாசிக்க https://www.piraivasi.com/2022/11/zina-ul-abdeen-intro.html


QSF04 துல்கர்னைன் உலகை சுற்றினாரா?

தஃப்சீர் விளக்கக்குறிப்பு:- 274. பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம்

وَيَسْأَلُونَكَ عَن ذِي الْقَرْنَيْنِ ۖ قُلْ سَأَتْلُو عَلَيْكُم مِّنْهُ ذِكْرًا ﴿٨٣﴾ إِنَّا مَكَّنَّا لَهُ فِي الْأَرْضِ وَآتَيْنَاهُ مِن كُلِّ شَيْءٍ سَبَبًا ﴿٨٤ فَأَتْبَعَ سَبَبًا ﴿٨٥ حَتَّىٰ إِذَا بَلَغَ مَغْرِبَ الشَّمْسِ وَجَدَهَا تَغْرُبُ فِي عَيْنٍ حَمِئَةٍ وَوَجَدَ عِندَهَا قَوْمًا ۗ قُلْنَا يَا ذَا الْقَرْنَيْنِ إِمَّا أَن تُعَذِّبَ وَإِمَّا أَن تَتَّخِذَ فِيهِمْ حُسْنًا ﴿٨٦ قَالَ أَمَّا مَن ظَلَمَ فَسَوْفَ نُعَذِّبُهُ ثُمَّ يُرَدُّ إِلَىٰ رَبِّهِ فَيُعَذِّبُهُ عَذَابًا نُّكْرًا ﴿٨٧ وَأَمَّا مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَهُ جَزَاءً الْحُسْنَىٰ ۖ وَسَنَقُولُ لَهُ مِنْ أَمْرِنَا يُسْرًا ﴿٨٨ ثُمَّ أَتْبَعَ سَبَبًا ﴿٨٩ حَتَّىٰ إِذَا بَلَغَ مَطْلِعَ الشَّمْسِ وَجَدَهَا تَطْلُعُ عَلَىٰ قَوْمٍ لَّمْ نَجْعَل لَّهُم مِّن دُونِهَا سِتْرًا ﴿٩٠ كَذَٰلِكَ وَقَدْ أَحَطْنَا بِمَا لَدَيْهِ خُبْرًا ﴿٩١ ثُمَّ أَتْبَعَ سَبَبًا ﴿٩٢ حَتَّىٰ إِذَا بَلَغَ بَيْنَ السَّدَّيْنِ وَجَدَ مِن دُونِهِمَا قَوْمًا لَّا يَكَادُونَ يَفْقَهُونَ قَوْلًا ﴿٩٣ قَالُوا يَا ذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَىٰ أَن تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا ﴿٩٤ قَالَ مَا مَكَّنِّي فِيهِ رَبِّي خَيْرٌ فَأَعِينُونِي بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا ﴿٩٥ آتُونِي زُبَرَ الْحَدِيدِ ۖ حَتَّىٰ إِذَا سَاوَىٰ بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انفُخُوا ۖ حَتَّىٰ إِذَا جَعَلَهُ نَارًا قَالَ آتُونِي أُفْرِغْ عَلَيْهِ قِطْرًا ﴿٩٦ فَمَا اسْطَاعُوا أَن يَظْهَرُوهُ وَمَا اسْتَطَاعُوا لَهُ نَقْبًا ﴿٩٧قَالَ هَـٰذَا رَحْمَةٌ مِّن رَّبِّي ۖ فَإِذَا جَاءَ وَعْدُ رَبِّي جَعَلَهُ دَكَّاءَ ۖ وَكَانَ وَعْدُ رَبِّي حَقًّا ﴿٩٨ 

18:83. (முஹம்மதே!) துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "அவரைப் பற்றிய செய்தியை நான் உங்களுக்குக் கூறுவேன்'' என்று கூறுவீராக!

18:84. அவருக்குப் பூமியில் (ஆட்சி செய்ய) நாம் வாய்ப்பளித்தோம். ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவருக்கு வழியை ஏற்படுத்தினோம்.

18:85. அவர் (துல்கர்னைன்) ஒரு வழியில் சென்றார்.

18:86. சூரியன் மறையுமிடத்தை அவர் அடைந்தபோது சேறு நிறைந்த தண்ணீரில் அது மறைவதைக் கண்டார். அங்கே ஒரு சமுதாயத்தைக் கண்டார். "துல்கர்னைனே! அவர்களை நீர் தண்டிக்கலாம்; அல்லது அவர்களிடமிருந்து அழகிய முறையில் (வரியை) பெற்றுக் கொள்ளலாம்'' என்று கூறினோம்.

18:87. "அநீதி இழைத்தவனைப் பின்னர் தண்டிப்போம். பின்னர் அவன் தனது இறைவனிடம் கொண்டு செல்லப்படுவான். அவன் கடுமையாகத் தண்டிப்பான்'' என்று அவர் கூறினார்.

18:88. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோருக்கு அழகிய கூலி உண்டு. நமது கட்டளைகளில் எளிதானதை அவருக்குக் கூறுவோம்.

18:89. பின்னர் ஒரு வழியில் சென்றார்.

18:90. முடிவில் சூரியன் உதிக்கும் திசையை அடைந்தபோது ஒரு சமுதாயத்தின் மீது அது உதிக்கக் கண்டார். அவர்களுக்கு அதிலிருந்து எந்தத் தடுப்பையும் நாம் ஏற்படுத்தவில்லை.274

18:91. இவ்வாறே அவரிடம் உள்ளதை முழுமையாக அறிவோம்.

18:92. பின்னர் ஒரு வழியில் தொடர்ந்து சென்றார்.

18:93. முடிவில் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பகுதியை அவர் அடைந்தபோது, அதற்கப்பால் எந்தப் பேச்சையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தைக் கண்டார்.

துல்கர்கணைன் என்ற மன்னர் மேற்கொண்ட ஒரு நீண்ட பயணத்தைப் பற்றி இவ்வசனம் (18:90) கூறுகிறது. துல்கர்னைன் கிழக்கு நோக்கித் தன் பயணத்தைத் துவக்குகிறார். கிழக்கு நோக்கிச் சென்றவர் திடீரென மேற்கு நோக்கிச் சென்று விடுகிறார் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. உலகம் உருண்டையாக இருந்தால் மாத்திரமே இது சாத்தியமாகும். அப்போதுதான் கிழக்கு நோக்கிப் புறப்பட்டவர் மேற்கு நோக்கி வந்து சேர முடியும். உதாரணமாக ஒரு பெரிய உருண்டையை ஒரு சட்டத்தில் நிறுத்தி வையுங்கள். உங்கள் விரலை அதன் மேற்புறத்தில் வைத்து விரலை நகர்த்திக் கொண்டே ஆரம்பித்த இடத்துக்குக் கொண்டு வாருங்கள். கிழக்கிலிருந்து மேற்காக விரலைக் கொண்டு சென்றால் பாதி உருண்டை வரை மேற்கு நோக்கிச் சென்ற உங்கள் விரல் உருண்டையின் சரிபாதியைக் கடந்த பின் கிழக்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்து துவங்கிய இடத்தை அடையும். சென்னையில் உங்களுடன் இருக்கும் ஒருவர் கிழக்கு நோக்கி நேர்கோட்டில் பயணிக்கிறார். அவர் பயணித்துக் கொண்டே இருக்கிறார். நீங்களும் அவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறீர்கள். 180 டிகிரி அதாவது சென்னைக்கு நேர்கீழே உள்ள பகுதிவரை கிழக்கு நோக்கியே சென்ற அவர் 180 டிகிரியை அடைந்ததும் மேற்கே திரும்ப ஆரம்பித்து விடுவார். மேற்குத் திசையில் இருந்து தான் அவர் உங்களை அடைவார். ஒரு மணி நேரத்தில் உலகைச் சுற்றும் வேகத்தில் பயணிக்கும் ஒரு வாகனம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். சென்னயில் இருந்து உங்களுடன் இருந்த ஒருவர் கிழக்குத் திசையில் நேர்கோட்டில் பயணிக்கிறார். ஒரு மணி நேரத்தில் புறப்பட்ட இடத்துக்கு அவர் வந்து விடுவார். அவர் எந்தத் திசையில் புறப்பட்டாரோ அந்தத் திசையிலிருந்து அவர் உங்களை அடைய மாட்டார். எதிர்த்திசையிலிருந்து தான் வந்து சேர்வார். பூமி உருண்டை என்பதால் பாதியைக் கடந்ததும் திசை மாறிவிடும். சாதாரணமாக எந்த உருண்டையை நீங்கள் பார்த்தாலும் பாதி உருண்டை ஒரு திசையை நோக்கினால் மீதி உருண்டை எதிர்த் திசையைத் தான் நோக்கும். அப்படி நோக்காவிட்டால் அது உருண்டையாக இருக்காது. ஒரு வரலாற்று நிகழ்ச்சியைக் கூறும்போது கூட மிகக் கவனமாக இந்த அறிவியல் உண்மையைக் கூறியிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்கு மற்றொரு சான்று.

நமது மறுப்பு:-

“துல்கர்ணைன் கிழக்கு நோக்கித் தன் பயணத்தைத் துவக்குகிறார். கிழக்கு நோக்கிச் சென்றவர் திடீரென மேற்கு நோக்கிச் சென்று விடுகிறார் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. உலகம் உருண்டையாக இருந்தால் மாத்திரமே இது சாத்தியமாகும். அப்போதுதான் கிழக்கு நோக்கிப் புறப்பட்டவர் மேற்கு நோக்கி வந்து சேர முடியும்.”

என்று விளக்கக்குறிப்பு சொல்கிறது, ஆனால் 18ம் சூராவில் 83 முதல் 98 வரையுள்ள வசனங்களை வாசிக்கும்போது இவ்வாதத்திற்கான முகாந்திரம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டவையே அவ்வசனங்கள். இவற்றில் கிழக்கு நோக்கி சென்ற துல்கர்னைன் அவர்கள் திடீரென மேற்கு நோக்கி செல்வதாக எந்த வாசகமும் இல்லை. “அவர் ஒரு வழியில் சென்றார். சூரியன் மறையுமிடத்தை அவர் அடைந்தபோது” என்று வருகிறது. அதன் பிறகு “பின்னர் ஒரு வழியில் சென்றார் . முடிவில் சூரியன் உதிக்கும் திசையை அடைந்தபோது” என்றும் வருகிறது. 

துல் கர்னைன் தானாகவே திசையை மாற்றி வேறு திசையில் பயணித்தாரே தவிர கிழக்கில் சென்ற துல் கர்னைன் “திடீரென” மேற்கை அடைந்தார் என்று எங்குமே இல்லை. திடீரென அடையாவிட்டாலும், திடீர் இல்லாமலும் அவர் அடையவில்லை. ஒரு வழியில் பயணித்து ஓரிடத்தை அடைந்தார். பின்னர் வேறு வழியில் பயணித்து வேறொரு இடத்தை அடைந்தார்.

சுற்றி வந்தவர் புறப்பட்ட இடத்திற்குத்தான் வருவார். ஆனால் இவர் இருவேறு வழிகளில் பயணித்து வெவ்வேறு இடங்களை அடைந்துள்ளார். 

அவர் புறப்பட்ட இடத்தை அடைந்தார் என்ற பொருள் கிடைக்குமானால் பூமி உருண்டை என்று வாதிட இயலும். மூன்று இடங்களுக்கு துல் கர்னைன் பயணம் மேற்கொண்டார். 1) கருப்பு சேற்று நீரூற்று 2) சூரியனிலிருந்து பாதுகாப்பில்லாத பகுதி 3) இருமலைகளுகிடையேயுள்ள பகுதி. அவர் புறப்பட்ட இடத்தை அடையவே இல்லை. 

முதல் இரண்டு இடங்களை அடைந்த உடனே பூமியை சுற்றிவிட்டதாக வாதிடுகின்றனர். எனில் மூன்றாம் இடத்திற்கு ஏன் துல்கர்னைன் பயணம் மேற்கொண்டார்?

சூரியன் உதிக்கும் இடத்தை அடைந்தார், சூரியன் மறையும் இடத்தை அடைந்தார் என்ற இரு வாசகங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு பூமி உருண்டை என்று வாதிடுகின்றனர். சூரியன் உதிக்கும் இடமென்று எதுவும் பூமியில் இல்லை. சூரியன் மறையும் இடம் என்றும் எதுவுமே பூமியில் இல்லை. இதை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். உதிக்குமிடமும் மறையுமிடமும் பூமியை சுற்றியுள்ள வான் வெளியில் உள்ளது. இந்த இரண்டுக்குமிடையே பூமி சுழல்கிறது. பூமியின் ஒரு பகுதி உதிக்குமிடத்தை அடையும்போது அப்பகுதி உதயத்தை பார்க்கும். அதே வேளையில் அந்த பகுதிக்கு எதிர் முனையில் பூமியில் இருக்கும் பகுதி மறையுமிடத்தை அடைந்து சூரிய மறைவைப் பார்க்கும். [மேற்கொண்டு இதை புரிந்துகொள்வதற்கு விளக்கக் குறிப்பு “335. பூமி உருண்டையானது” மறுப்பாக நாம் எழுதிய ஆய்வு இலக்கம் QSF05 வாசிக்கவும்]. ஆக, ஒரு பேச்சுக்கு உதிக்குமிடமும் மறையுமிடமும் பூமியில் இருப்பதாக வைத்துகொண்டால் கூட உதிக்குமிடத்தில் பயணத்தை தொடங்கி மறையுமிடத்தில் பயணத்தை முடித்தவர் பாதி உலகைத்தான் பயணம் செய்திருப்பார். உலகை சுற்றி வந்திருக்கவே மாட்டார்.

பூமி உருண்டை என்று வாதிடும் அளவுக்கு இந்த நிகழ்ச்சியில் எதுவும் இல்லை.



மற்ற தலைப்புகளை வாசிக்க https://www.piraivasi.com/p/zina-ul-abdeen.html