Sunday, 1 May 2022

பிறை தெரியாது என்பதை கணிக்க இயலும் பிறை தெரியும் என்பதை கணிக்க இயலாதா? இதென்ன அநியாயம்?

பிறை தெரியாது என்பதை கணிக்க இயலும் பிறை தெரியும் என்பதை கணிக்க இயலாதா? இதென்ன அநியாயம்?

 

*பிறை விஷயத்தில் கணிப்பை ஏற்றுக்கொள்ளாத நீங்கள் பிறை சாட்சி விஷயத்தில் கணிப்பை ஏற்றுக்கொண்டு சாட்சிகளை நிராகரிப்பது ஏன்?* என்ற கேள்விக்கு நாம் ஏற்கனவே விடையளித்துள்ளோம். பார்க்க https://www.piraivasi.com/2022/05/01-02.html .. அதனைத் தொடர்ந்து வரும் கேள்விதான் பிறை தெரியாது என்பதை துல்லியமாக கூற இயலுமாம் ஆனால் பிறை தெரியும் என்பதைத் துல்லியமாக கூற இயலாதாம். இதென்ன வேடிக்கை?”

 

நியாயமான கேள்விதான். ஆனால் உண்மை இதுவே.

 

- ஒருமாதம் பிறை தேடும் நாளில் இலங்கையில் பிறை தெரிய வாய்ப்பில்லை என்று சொல்வதாக இருந்தால் இதை அறுதியிட்டு சொல்ல இயலும்.


- ஆனால் மற்றொரு மாதம் பிறை தேடும் நாளில் பிறை தெரிய வாய்ப்புள்ளது என்பதை “வாய்ப்புள்ளது” என்று சொல்ல இயலுமே தவிர, நிச்சயமாக பிறை தெரியும் என்று சொல்ல இயலாது.

 

அதாவது பிறை தெரியாது என்ற நிலை இருந்தால் அதை அறுதியிட்டு சொல்ல இயலும். ஆனால் பிறை தெரிய வாய்ப்புள்ளது என்ற நிலை இருந்தால் அதனை “வாய்ப்புள்ளது” என்று சொல்ல இயலுமே தவிர அறுதியிட்டு சொல்ல இயலாது.

 

பிறை தேடும் நாளில் பிறை கண்ணுக்கு தெரியாமல் போவதற்கான காரணங்களை நாம் தெரிந்துகொள்வோம்.

 

- சூரியன் மறைவது வரை நிச்சயமாக தலைப்பிறையை பார்க்க இயலாது. ஏனென்றால் சூரிய வெளிச்சம் பிறையை மிகைத்துவிடும்.


- சூரியன் மறைந்த பின்னரும் 20 நிமிடத்திற்கு சூரிய ஒளி அடிவானத்தை ஆக்கிரமித்திருக்கும். இந்த அந்தி வெளிச்சமும் பிறையை மறைத்துவிடும்.


- நல்லக் காற்றடித்தது புழுதி ஏற்பட்டால் அந்த புழுதியும் தலைப்பிறையை மறைக்கும்.


- வெப்பமான காலங்களில் ஏற்படும் காற்றழுத்த மாற்றமும் பிறையை மறைக்கும்.


- குளிர்காலத்தில் காற்றில் அதிகமாக இருக்கும் ஈரப்பதமும் பிறையை மறைக்கும்.


- மழைக்காலத்தில் காணப்படும் கார்மேகம் மட்டுமல்லாமல் மற்ற பருவ காலங்களில் காணப்படும் வெண்மேகங்கள் கூட பிறையை மறைக்கும்.

 

இவற்றுள் முதல் இரண்டு காரணிகள் வானியல் சார்ந்தது இவற்றை நாம் முன்கூட்டியே கணக்கிட்டு அறிந்துகொள்ள இயலும். இதன் அடிப்படையில் சூரியன் மறைந்து குறைந்தது 35 நிமிடங்களுக்காவது வானில் நிலவு மறையாமல் இருந்தால் மட்டுமே பிறையை பார்க்க இயலும். அதற்கு முன்னதாக நிலவு மறைந்துவிட்டால் பிறை தெரியாது என்று அறுதியிட்டுக் கூற இயலும். இதை நாம் ஏற்கனவே முந்தைய கட்டுரையில் விளக்கி இருந்தோம். பார்க்க https://goo.gl/1ADGvr. ஆக பிறை தெரியாது என்ற நிலை இருந்தால் அதனை அறுதியிட்டு கூற இயலும்.

 

பிறை தெரிய வாய்ப்பில்லை என்ற நிலையை நிலவு கடந்துவிட்டது! பிறை தெரிய வாய்ப்புள்ளது எனும் நிலையை அது அடைந்துவிட்டது!! இப்போது என்ன பிரச்சனை?

 

இலங்கையில் இன்று பிறை தேடும் நாள். சூரியன் மறைந்து 60 நிமிடங்களுக்குப் பிறகு நிலவு மறைகிறது. இன்று பிறை தெரியவேண்டும்தானே...?

 

நாம் மேலே 6 காரணிகளைக் கூறினோம். அவற்றுள் முதலிரண்டு காரணிகள் வானியல் (astronomy) சார்ந்தது என்றோம். அவற்றை முன்கூட்டியே கணக்கிட்டு அறிந்துகொள்ள இயலும் என்றோம். மீதமிருக்கும் 4 காரணிகளின் நிலை என்ன? அவை வானிலையியல் (meteorology) சார்ந்தது. இவற்றை முன்கூட்டியே கணக்கிட இயலாது. வெப்பம், காற்றழுத்தம், காற்றின் வேகம், காற்றின் திசை இவற்றை கணிக்க இயலுமே தவிர கணக்கிட இயலாது. இந்த நான்கையும் கொண்டுதான் மழைக் கணிப்பு செய்யப்படுகிறது. கணித்த நாளில் மழை வருகிறதா? புயல் காற்றும் கனமழையும் வரும் என்று கணிக்கப்பட்ட எத்தனை நாட்களில் இவை வாராமல் போயுள்ளன?

 

ஆக, 60 நிமிடங்கள் கடந்து நிலவு மறைவதாக இருந்தாலும் பிறையை மறைக்கும் முக்கிய காரணிகளை நம்மால் துல்லியமாக கணக்கிட இயலாததால் “இன்று பிறை நிச்சயமாக கண்ணுக்குத் தெரியும்” என்று சொல்லவே இயலாது. பிறை பெரிதாக இருந்தாலும் அதனை புழுதி மறைக்கலாம், காற்றில் இருக்கும் பனித்திவலைகள் மறைக்கலாம், மேகமும் மறைக்கலாம். இவற்றை கணக்கிட்டு அறிய இயலாது. மழை எங்கே எப்போது பெய்யும் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான். அதை யாராலும் அறிந்துகொள்ள இயலாது. மழையை கணக்கிட எந்த காரணிகளை நாம் கணக்கிட வேண்டுமோ அதே காரணிகள்தாம் பிறை தெரியும் என்பதை கணக்கிடவும் தேவையாக இருக்கின்றன. மழை எங்கு எப்போது பெய்யும் என்று கணக்கிட இயலும் காலம் வரையில் தலைப்பிறை எங்கே எப்போது தெரியும் என்பதைக் கணக்கிட இயலாது. ஆக. கியாமத் நாள் வரையில் உலகில் இந்த இடத்தில் இந்த நேரத்தில் முதல் பிறை தெரியும் என்று மனிதால் கூற இயலாது.

 

எதை சொன்னாலும் வஹி ஆதாரம் கேட்கும் கூட்டத்திற்கு இதோ வஹி ஆதாரம்:-

 

முதல் இரு காரணிகளைக் கணக்கிட இயலும் என்று சொல்லும் வஹி:-

 

சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இருக்கின்றன. (அல் குர்ஆன்-55:5)

சூரியனையும் சந்திரனையும் கணக்காக அமைத்தான். (அல் குர்ஆன்-6:69)

இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவற்றை உங்களுக்காக அவன் பயன்படச் செய்தான். (ஏனைய) நட்சத்திரங்களும் அவனது கட்டளைப்படி வசப்படுத்தப்பட்டுள்ளன. விளங்கும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல் குர்ஆன்-16:12)

 

அடுத்த நான்கு காரணிகளை கணக்கிட இயலாது என்று சொல்லும் வஹி:-

 

மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். -நபி மொழி; புகாரீ: 7379





நன்றி: david blanchard