Sunday, 15 October 2017

ஹிஜ்ராவின் நாளின் ஆரம்பம்

நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் என்று ஹிஜ்ரா கமிட்டியினர் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் அவர்களது நாட்காட்டியில் நாளின் ஆரம்பம் நள்ளிரவு 12 மணியாக உள்ளது. இதை ஏற்கனவே நிறுவியுள்ளோம். பார்க்க http://www.piraivasi.com/2015/10/17.html
ஆங்கில காலண்டரில் நள்ளிரவு 12 மணிக்கு நாள் மாறும். ஹிஜ்ரா காலண்டரில் ஃபஜ்ரில் நாள் மாறவேண்டும். அதாவது ஆங்கில காலண்டரில் இரவு 11:59 (23:59Hrs) வரை திங்கள் கிழமை என்றால் இரவு 12:00 (00:00Hrs) ஆன உடனே செவ்வாய்க்கிழமை என்று மாறிவிடும். ஆனால் ஹிஜ்ரா காலண்டரின் கொள்கை உண்மை எனில் இரவு 12:00 (00:00Hrs) ஆன பிறகும் நாளை மாற்றாமல் அவர்கள் காலண்டரில் திங்கள் கிழமையாகவே இருக்க வேண்டும். ஃபஜ்ர் வரை திங்கள் கிழமையாகவே இருக்க வேண்டும். ஃபஜ்ருக்கு பிறகுதான் செவ்வாய்க் கிழமையாக மாறவேண்டும். இவ்வாறு இவர்களின் காலண்டர் இயங்குகிறதா என்று பார்ப்போம்.
ஃபோன் அல்லது கைக் கடிகாரத்தில் மணி ஓடிக்கொண்டிருக்கும். தேதியும் குறிப்பிட்ட தருணத்தில் மாறும். எந்த நேரத்தில் நாள் மாறுகிறது என்பதைப் பார்த்து அறிந்துகொள்ளலாம். ஆனால் அச்சடிக்கப்பட்ட காலண்டரில் இது சாத்தியமில்லாமல் போகிறது. எனினும், எந்த குற்றவாளியும் ஒரு தடையத்தை விட்டு செல்வான் என்று சொல்லப்படுவதைப் போல இவர்கள் காலண்டரிலும் நாளின் ஆரம்பத்தை கண்டுபிடிக்க சில துணுக்குகள் உள்ளன. அமாவாசை, முதல் அரைப்பிறை, பவுர்ணமி, இறுதி அரைப்பிறை ஆகியவற்றின் நேரங்களை இவர்கள் காலண்டரில் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிகழ்வுகளை அவற்றின் நேரத்தை அடிப்படையாக கொண்டு இவர்கள் எந்த நாளில் அவற்றை பதிவு செய்கிறார்கள் என்பதை ஆராய்ந்தால் இவர்கள் காலண்டரின் நாளின் ஆரம்பத்தைக் கண்டுபிடித்து விடலாம்.
உதாரணமாக...
ஒரு ரயில் பயணச் சீட்டில் இவ்வாறு இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள்:-
புறப்படும் நேரம்: திங்கள் 11:30 மணி
சேரும் நேரம்: செவ்வாய் 12:30 மணி
பயண நேரம்: 60 நிமிடங்கள்.
11:30 க்கும் 12:30க்குமிடையே நாள் மாறியுள்ளதை தெளிவாக அறிந்துகொள்ளலாம். அது 12 மணிதான் என்பதையும் தெளிவாக அறியலாம்.
அல்லது... ஒரு ரயில் பயணச் சீட்டில் இவ்வாறு இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள்:-
புறப்படும் நேரம்: திங்கள் 5:30 மணி
சேரும் நேரம்: செவ்வாய் 6:30 மணி
பயண நேரம்: 60 நிமிடங்கள்.
இதை பார்த்து டிக்கட் தப்பாக அச்சடிக்கப்பட்டுள்ளதாக நினைக்கக் கூடாது. நாம் கற்பனைக்காக எடுத்துக்கொண்ட நாட்டில் இருக்கும் காலண்டரில் 5:30 க்கும் 6:30க்கும் இடையே நாள் மாறியுள்ளதாக பொருள். அதாவது 6 மணிக்கு நாள் மாறுகிறது. இதே போல நேரம் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு நிகழ்வையும் இவர்களது காலண்டரில் எந்த நாளில் பதிவு செய்துள்ளார்கள் என்பதை ஆராய்ந்து இவர்களின் நாளின் ஆரம்பத்தைக் கண்டுபிடிப்போம். இவற்றை மனதில் நிறுத்திக்கொண்டு தொடர்ந்து வாசியுங்கள்.
> ரபிஉல் ஆகிர் 1436 இல் இறுதியில் நடக்கும் அமாவாசை ஆங்கில காலண்டரில் பிப்ரவரி 2ம் தேதி 2015 புதன் கிழமை இரவு 11:46 PM (23:46Hrs) க்கு நடந்தது. இவர்கள் காலண்டரில் அமாவாசை நிகழ்வை 11:46 PM (23:46Hrs) என்று நேரத்துடன் புதன் கிழமையில் பதிவு செய்துள்ளனர். 11:59 (23:59Hrs) வரை ஆங்கில காலண்டரில் தேதியும் நாளும் மாறாது, இவர்கள் காலண்டரிலும் மாறவில்லை. இதில் நமக்கு பிரச்சனை இல்லை.
> துல் ஹிஜ்ஜா 1436இன் இறுதியில் நடக்கும் அமாவாசை ஆங்கிலக் காலண்டரில் அக்டோபர் 13ம் தேதி 2015 செவ்வாய் கிழமை இரவு 12:05 (00:05Hrs) க்கு நடந்தது. இவர்கள் காலண்டரிலும் அதை செவ்வாய்கிழமை என்றே நேரத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.
ஆங்கிலக் காலண்டரில்தான் 12:00 AM (00:00Hrs) க்கு நாள் மாறும். இவர்கள் காலண்டரில் மாறக்கூடாது. மேலுள்ள இரண்டு உதாரணங்களைப் பாருங்கள். 12:00 AM (00:00Hrs) எனும் ஆங்கில தேதியில் நாள் மாறும் நள்ளிரவுக்கு முன்பாக அமாவாசை நடந்ததால், அதை, அதே ஆங்கில நாளில் புதன் என்று ஹிஜ்ரா காலண்டரில் குறிப்பிடுகிறார்கள். அதாவது நள்ளிரவு வரை நாள்/தேதி மாறவில்லை.
00:00க்குப்பிறகு அமாவாசை நடந்தால் 00:00க்குப்பிறகு ஆங்கில காலண்டரில் மாறிய புதிய நாளில் செவ்வாய் கிழமை என்று ஹிஜ்ரா காலண்டரில் அமாவாசையை குறிப்பிடுகிறார்கள். நள்ளிரவில் நாள்/தேதி மாறிவிடுகிறது
13 அக்டோபர் 2015, 00:00மணிக்குப் பிறகு ஆங்கிலக் காலண்டரில் செவ்வாய்க் கிழமையாக மாறினாலும் இவர்களின் கொள்கைப்படி ஃபஜ்ர் வரை திங்கள் கிழமை தானே. இவர்கள் காலண்டரில் செவ்வாய் கிழமையில் எவ்வாறு அமாவாசையை பதிவு செய்தார்கள்? திங்கள் கிழமையில் தானே அமாவாசையை குறிப்பிட்டிருக்க வேண்டும்? இவர்கள் காலண்டரில் நள்ளிரவு 12 மணிக்கே நாள் மாறுகிறது.
அதே போல ஆங்கில காலண்டரில் ஜூலை 1 சனிக்கிழமை 2017 அன்று 12:51 AM (00:51Hrs) மணிக்கு அரைப்பிறை எனும் நிகழ்வு நடக்கிறது. 00:00 மணிக்கு முன்பு வரை அது வெள்ளிக் கிழமை 00:00க்குப்பின்பு அது சனிக்கிழமை என்பது ஆங்கில காலண்டரின் கணக்கு. ஆனால் இவர்களின் கணக்குப்படி 00:51 மணிக்கு சனிக்கிழமை ஆகியிருக்காது, வெள்ளிகிழமையாகவே இருக்கும். எந்த அடிப்படையில் இவர்களின் காலண்டரில் சனிக்கிழமை 12:51 AM (00:51Hrs) மணிக்கு அரைப்பிறை என்று பதிவு செய்தார்கள்? இவர்கள் கொள்கைப்படி பஜ்ரில் நாள் மாறுவதாக இருந்தால் அரைப்பிறையை வெள்ளிகிழமையில் அல்லவா பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆங்கில காலண்டரில் 11 பிப்ரவரி 2017ம் தேதி 12:33 AM (00:33Hrs) க்கு பவுர்ணமி எனும் நிகழ்வு நடக்கிறது. 00:00க் கடந்து விட்டதால் ஆங்கிலக் காலண்டரில் அது சனிக்கிழமை. ஆனால் பஜ்ரில் நாளை துவங்கும் இவர்களுக்கு அது வெள்ளிகிழமை தானே. ஏன் சனிக்கிழமை 00:33 க்கு பவுர்ணமி என்று இவர்களது காலண்டரில் குறிப்பிட்டுள்ளார்கள்?
இவர்களது காலண்டரை ஆய்வு செய்தபோது 23:59 வரை நடக்கும் நிகழ்வுகளை பழைய நாளிலும் 00:00 க்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகளை ஆங்கில காலடண்டரைப் போல புதிய நாளிலும் பதிவு செய்கிறார்கள். சந்தேகமே இல்லாமல் இவர்களின் நாளின் ஆரம்பம் நள்ளிரவு 12 மணியே!
இவர்களது கலண்டரை ஆய்வு செய்தபோது இரவு 12 (23:59 HRS) மணி வரை நடக்கும் நிகழ்வுகளை பழைய நாளிலும் இரவு 12 (00:00 Hrs) க்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகளை ஆங்கில காலண்டரைப் போல புதிய நாளிலும் பதிவு செய்கிறார்கள். சந்தேகமே இல்லாமல் இவர்களின் நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் அல்ல, க்ரிகொரியன் நாள்காட்டியின்படி நள்ளிரவு 12 மணியே!
மேலும் வாசிக்க...
மூன் காலண்டர் தயாரிப்பது எப்படி >>  http://www.piraivasi.com/2015/10/17.html
ஹிஜ்ரா காலண்டரின் அடிப்படை க்ரிகொரியன் காலண்டரே  >>  http://www.piraivasi.com/2015/11/25.html
யஹுவா காலண்டரே ஹிஜ்ரா காலண்டர் >>  http://www.piraivasi.com/2015/10/17-3.html

யஹுவா இணையதளமே ஹிஜ்ரா இணையதளம்  >>  http://www.piraivasi.com/2015/10/17-3.html