பூமி சூரியனை ஒருமுறை சுற்றுவதே ஒரு ஆண்டு எனப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பூமி சூரியனை சுற்றுவதற்கு ஆகும் காலம் சற்றே மாறுகிறது.
ஆண்டு : நாட்கள்
2011 : 365.24583333
2012 : 365.24097222
2013 : 365.24652778
2014 : 365.24166667
2015 : 365.24027778
2016 : 365.24861111
2017 : 365.24027778
2018 : 365.23819444
2019 : 365.24444444
2020 : 365.24097222
ஆனால் இவ்வாறு மாறுவதை கணக்காக எடுத்துக் காலண்டர் இட இயலாது. எனவே அதன் சராசரி கணக்கை எடுக்கின்றனர். ஒரு வருடத்திற்கு சராசரியாக 365.24217 நாட்கள் என்கிறது விஞ்ஞானம்.
ஒரு வருடத் துவக்கமும் முடிவும் ஒரு முழு நாளாக இருக்க வேண்டும். டிசம்பர் 31 ம் தேதி காலை 9:32 க்கு புது வருடம் துவங்குவதாக கணக்கிட முடியாது. ஒரு வருடத்தை ஒரு நாள் துவங்குவதுடன் சேர்ந்தே துவங்க வேண்டும். ஒரு நாளுக்கு இடையில் துவங்குதல் ஆகாது. இதனால் 365 வருடத்திற்கு அதிகமாக இருக்கும் (0.24217 நாட்களை) 5 மணி, 48 நிமிடம் 43 விநாடிகளை ஒரு வருடத்திற்குள் அடைக்க இயலாது. வருடத்திற்கு 365 நாட்கள் என்று கணக்கிட்டால் கணக்கில் எடுக்காமல்விட்ட 0.24217 நாட்களை என்ன செய்வது? இவ்வாறு நான்கு ஆண்டுகள் (365 நாட்கள் என்று கணக்கிடப்பட்டு) கடந்தால் கணக்கிடாமல் விட்டுவிட்ட மணித்துளிகள் ஒரு முழு நாளாக மாறியிருக்கும். அதை நான்காம் வருடத்தில் ஒரு நாளாக கணக்கிட வேண்டும். இது பிழையல்ல, இதுவே நாட்களை சரியாக எண்ணும் முறை. இதை பிழை என்பவர் எண்ணிக்கை தெரியாதவரும் காலண்டர் என்றால் என்னவென்று அறியாதவருமாகவே இருப்பார். இவ்வாறு, சூரிய ஆண்டுகளை அறிந்துகொள்ள ஜூலியஸ் சீசர் எனும் மன்னர் ஒரு காலண்டரை வெளியிட்டார். ஜூலியஸ் சீசர் எனும் மன்னரானவர் கிருத்து என்று அறியப்பட்ட ஈசா நபிக்கும் 50 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர். அதாவது கிமு 50 களிலேயே சூரிய காலண்டர் வெளியிடப்பட்டுவிட்டது. ஈசா நபி உயர்த்தப்பட்டு பல வருடங்களுக்கு பின்னால் தான் கிருத்தவ மதம் தோன்றியது. எனவே ஜூலியஸ் மன்னர் வெளியிட்ட சூரிய காலண்டருக்கும் கிருத்தவ மதத்திற்கும் தொடர்பிருப்பதாக நினைப்பவர் வரலாறு அறியாதவரே.
ஜூலியஸ் சீசர் வெளியிட்ட ஜூலியன் காலண்டரில் வருடத்திற்கு 365 நாட்களும் லீப் வருடத்திற்கு 366 நாட்களும் இருந்தன. அதாவது வருடத்திற்கு சராசரியாக 365.25 நாட்கள் என்று கணக்கிடப்பட்டது. 365 நாட்கள் 5 மணி, 48 நிமிடம் 43 விநாடிகளைக் கொண்ட சராசரி வருடத்தை 365 நாட்கள் 6 மணி நேரம் என்று சில நிமிடங்கள் அதிகமாகவே கணக்கிட்டது ஜூலியன் காலண்டர்.
சராசரி சூரிய வருடத்திற்கும் ஜூலியன் வருடத்திற்கும் வித்தியாசம் 365.25 – 365.24217 = 0.00783 நாட்கள். சராசரி வருடத்தை விட 0.00783 நாட்களை அதிகமாக ஜூலியன் காலண்டர் கணக்கிட்டது. இதனால் ஒரு வருடத்திற்கு 11 நிமிடங்களும் 16 வினாடிகளும் அதிகமாக கணக்கிடப்பட்டது.
அதாவது (1 ÷ 0.00783 =) 127.71 ஆண்டுக்கு ஒரு முறை ஒரு நாளை அதிகமாக கணக்கிட்டிருப்பார்கள். எனவே 128 ஆண்டுகள் ஆகும்போது ஒரு நாளைக் குறைக்கவேண்டும்.
இதை சீர்செய்ய போப் கிரிகோரி என்பவர் லீப் வருட சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார். அம்முறைப்படி ஜூலியன் அறிமுகப்படுத்திய வருடத்திற்கு 365 நாட்கள் லீப் வருடத்திற்கு 366 நாட்கள் என்ற கணக்கு அவ்வாறே இருந்தது. ஆனால் நூற்றாண்டுகள் லீப் வருடங்கள் ஆகாது என்றும் நான்கு-நூற்றாண்டுகள் லீப் வருடங்கள் என்றும் சீர்திருத்தினார். ஒவ்வொரு நான்கு வருடங்களும் லீப் வருடங்கள் தாம். ஆனால் 1800, 1900, 2100, 2200 போன்ற நூற்றாண்டு வருடங்கள் லீப் வருடங்கள் இல்லை என்றார். இவ்வருடங்களில் பிப்ரவரி 28 நாட்களை கொண்டதாகவே இருக்கும். மேலும் நான்கு-நூற்றண்டுகள் அதாவது 400ஆல் மீதமின்றி வகுபடும் ஆண்டுகள் லீப் வருடங்கள் என்றார். 1600, 2000, 2400 போன்ற வருடங்களில் பிப்ரவரி 29 ஆக இருக்கும்.
இம்முறைப்படி வருடத்திற்கு (365.25 - 1÷100 + 1÷400 =) 365.2425 நாட்கள் என்றானது. இப்போது இதை சராசரி ஆண்டுடன் ஒப்பிட்டால்.
365.2425 – 365.24217 = 0.00033 நாட்கள்
இது சராசரி ஆண்டுக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டது.
கிரிகோரியன் காலண்டரிலும் ஒரு வருடத்திற்கு 28 விநாடிகளை அதிகமாக கணக்கிட்டிருப்பார்கள் (0.00033 நாட்கள்). இதனால் 3030 வருடத்திற்கு ஒரு நாளை அதிகமாக கணக்கிட்டிருப்பர். போப் கிரிகோரி கிபி 1582 இல் ஜூலியன் காலண்டரை சீர்திருத்தினார். எனவே அன்றிலிருந்து 3030 ம் ஆண்டு ஆகும்போது, 4612ஆம் ஆண்டில் ஒரு நாளைக் குறைக்க வேண்டும். ஆனால் இதன் தேவையில்லை என்கிறது விஞ்ஞானம். பூமியின் வேகம் குறைவதாலும், வெர்னல் இகுனாக்ஸ் எனப்படும் வசந்த கால துவக்கம் ஒவ்வொரு வருடமும் மாறுவதாலும் நியுடேஷன் என்று அறியப்படும் பூமியின் சுழல் அச்சில் ஏற்படும் மாற்றத்தாலும் 3030 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு நாளைக் குறைக்க வேண்டும் என்ற நிலை 7700 வருடங்களாக மாறுகிறது. எனவே கிபி 9282 இல் ஒரு நாளைக் குறைத்தால் போதும் என்கிறது விஞ்ஞானம்.
இன்றைய சூரியக் கணக்கீடுகள் அனைத்தும் 50 வருடங்களுக்கு மட்டுமே துல்லியமானவை. சந்திரக் கணக்கீட்டின் துல்லியம் இதைவிடக் குறைவு. இவ்வாறு இருக்கையில் கிபி 9282 இல் நடக்க இருப்பதைப் பற்றி இப்போது யாருமே கவலைப்படத் தேவை இல்லை.
ஆக, கிரிகோரியன் காலண்டர் பிழைகள் எதுவும் இல்லாமல் துல்லியமாக காலநிலையை காட்டுவதுடன், ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காட்டுகிறது.
நிலைமை இவ்வாறு இருக்க ஹிஜ்ரா கமிட்டியின் காலண்டரில் இருக்கும் பிறைப் படங்களுக்கும் வானில் தெரியும் வடிவங்களுக்கும் தொடர்பில்லை என்று ஹிஜ்ரா கமிட்டியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்ற ஒரு கூட்டம் கிரிகோரியன் காலண்டரில் 127 ஆண்டுப்பிழை இருப்பதாக பல வருடங்களாக எழுதி வருகின்றனர். ஹிஜ்ரா கமிட்டிக்கு போட்டியாக தாங்கள் வெளியிடும் அமாவாசை பஞ்சாங்கத்திலும் “4 ஆண்டுகளுக்கு ஒரு நாள் கூட்டலும் 127ஆண்டுகளுக்கு ஒரு நாள் கழித்தலும் இல்லா பிழையற்ற சந்திர நாட்காட்டி” என்று அச்சிட்டு விலையில்லாமல் விற்கின்றனர். நாமும் இந்த 127 ம் ஆண்டு விவகாரம் வேறு ஏதோ காலண்டரைப் பற்றியது என்று எண்ணி அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம். ஆனால் இப்போது விசாரித்தபோதுதான் விளங்குகிறது. ஜூலியன் காலண்டரில் இருந்த 128 ஆண்டுகளுக்கு ஒரு நாள் பிழை என்பதைத்தான் திருச்சிக்கூட்டம் தவறாக எங்கோ இணையதளத்தில் வாசித்த நினைவில் இன்றும் 127 என எழுதி வருகின்றனர். அல்லது இவர்கள் போப் கிரிகோரிக்கு முன்னரே பிறந்திருக்கக் கூடும். கிரிகோரி பின்னாளில் ஜூலியன் காலண்டரை சீர்த்திருத்தியத்தை இவர்கள் அறியாமல் இருந்திருக்கக் கூடும். 127 க்கும் 128க்கும் கூட வித்தியாசம் தெரியாமல் இருப்பது ஆச்சரியமில்லை.
4 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு நாளை அதிகமாக கணக்கிடுவதை பிழை என்கின்றனர் அமாவாசையை பின்பற்றும் கூட்டத்தினர். தங்கள் காலண்டரில் இருக்கும் பிழைகளை சரி செய்வதற்காக கிரிகோரியன் இதுபோல செய்வதாக பரப்புரை செய்கிறார்கள். அவ்வாறு பரப்புபவர்கள் தங்கள் காலண்டரில் இத்தகைய பிழைகள் இல்லாதிருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். விஞ்ஞானத்தின்படி அமாவாசை நடந்த மறுவினாடியே பிறை பிறப்பதாக இவர்கள் நம்புகிறார்கள். எனில் இவர்கள் அந்த வினாடியே மாதத்தை துவங்க வேண்டும். சராசரியாக ஒரு அமாவாசை முதல் மறு அமாவசைக்கு 29.5380588 நாட்கள் ஆகிறது. இவர்கள் காலண்டர் பிழையில்லாத துல்லிமான அமாவாசைக் காலண்டர் எனில் இவர்கள் காலண்டரில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை நடக்க எவ்வளவு நேரம் தேவையோ அதை அப்படியே வெளியிட்டிருக்க வேண்டும். இவர்களின் காலண்டர் சரியாக இருந்தால், 29 1⁄4 நாட்களைக் கொண்ட மாதம், 29 1⁄4 என்றே காலண்டரில் இருந்திருக்க வேண்டும். அதே போல 29 1⁄2 நாட்களைக் கொண்ட மாதம், 29 1⁄2 என்றே காலண்டரில் இருந்தால் அது துல்லியமான சந்திர காலண்டர். ஆனால் இவர்களோ 29.55, 29.28, 29,71 என்று ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டிருக்கும் அமாவாசை மாதத்தை 29 என்றும், 30 என்றும் சரிகட்டுகின்றனர். அதாவது இம்மாதம் அமாவாசை கணக்கு 29 1⁄4 நாட்கள் என்றால் இவர்கள் இதை இம்மாதம் 29 நாட்கள் என்பார்கள், கணக்கிடாமல் விட்ட 1⁄4 நாளை அடுத்த மாதத்தில் சேர்ப்பார்கள். அடுத்த மாதம் இந்த 1⁄4 ஐ சேர்த்தாலும் சில மிச்ச சொச்சம் இருக்கும். இதை சரிகட்ட தொடர்ந்து இரு மாதங்கள் 29 ஆக வைப்பார்கள். இதனால் சில மணிக்கூறுகளை அதிகமாக குறைத்திருப்பார்கள். இவ்வாறு குறைவதை சரி கட்ட தொடர்ந்து இரு மாதங்களில் 30 ஆக வைப்பார்கள். இவ்வாறு பல error corrections செய்த பின்னரும். சில வினாடிகள் பிழைகள் மிஞ்சியிருக்கும். அதை சரிகட்ட, சில மூன்று மாதங்கள் தொடர்ந்து 29 ஆகவும் சில மூன்று மாதங்கள் தொடர்ந்து 30 ஆகவும் மாற்றுவார்கள். இதைதான் நபிகளார் மூன்று முறை கையை மடக்கி விரித்து காட்டி மாதம் இப்படியும் அப்படியும் இருக்கும் என்று சொன்னதாக இவர்களின் விஞ்ஞானக் கோமாளி சொன்னது இந்தக் கூட்டத்தின் மார்க்க அறிவின்மையை வெளிச்சமிட்டு உலகிற்கு காட்டியது.
கிரிகோரியன் காலண்டரில் 4 வருடங்களுக்கு ஒரு முறை விடுபட்ட மணித்துளிகளை கணக்கெடுப்பதை பிழை என்றவர்கள் தங்கள் காலண்டரில் மாதாமாதம் இந்த பிழை வருவதை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏனோ? இதை கண்மூடி பின்பற்றுவதற்கு ஒரு கூட்டமும் இருப்பதென்பது நமது சமூகத்தின் கல்வியறிவின்மையை காட்டுவதாகவே இருக்கிறது.