உலகத்தில் எங்கு பிறை தெரியாவிட்டாலும் கேரளாவில் தெரிந்துவிடுகிறது. இது காலம் காலமாக நடப்பதுதான். இந்த விஷயத்தில் சவுதிக்கு போட்டியாக இருக்கும் ஒரே இடம் கேரளா தான். கடந்த காலங்களில் கேரள பிறைகளின் உண்மை நிலையை அறிய மக்கள் ஆர்வம் காட்டவில்லை. சமீபகாலங்களில் மக்கள் அதனை ஆராயத் துவங்கிவிட்டனர். கேரளப் பிறைகளைப் பற்றி இங்கே அலசுவோம். வரும் காலங்களில் வரும் கேரளப் பிறை அறிவிப்புகளின் நிலையையும் இதே பக்கத்தில் பதிவேற்றுவோம்.
கேரளாவின் பல இயக்கங்களும் அவற்றின் கொள்கைகளை மறந்து பிறை விஷயத்தில் “ஹிலால் கமிற்றி HILAL COMMITTEE” எனும் கூட்டமைப்பின் மூலம் ஒன்றுபட்டுள்ளனர். இந்த ஹிலால் கமிற்றிதான் கேரளத்திற்கான பிறை அறிவிப்பை வெளியிடுகிறது. கேரள செய்திதாள்களில் இந்த அறிவிப்பு வருகிறது. இந்த ஹிலால் கமிற்றியின் அறிவிப்பைதான் சுன்னிகள் (சுன்னத் ஜமாஅத்), முஜாஹித்கள், சலபிகள், ஜின் கூட்டத்தினர் என அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்கின்றனர்.
முற்காலங்களில் கேரளாவில் பிறை பார்த்ததாக தகவல் வந்த தேதிகள் நம்மிடம் இருப்பின் அவற்றை ஆய்வு செய்ய இயலும். அத்தகைய தகவல்கள் கைவசம் இருப்பவர்கள் அவற்றை நமக்கு அனுப்பித்தரவும். அந்த தகவல்கள் இல்லாததால் கடந்த இரண்டு பிறை அறிவிப்புகளை மட்டும் ஆராய்வோம்.
முஹர்ரம் – 1437
முஹர்ரத்தில் (13/10/2015): கோழிக்கோட்டில் சூரியமறைவின்போது பிறையின் வயது 12 மணி 35 நிமிடம். சூரியன் மறைந்து 22 நிமிடத்தில் சந்திரன் மறைந்து விட்டது.
அக்டோபர் 13 2015 அன்று மாலை பிறை தெரிந்ததாகவும் அன்று மக்ரிபிலிருந்து மாதம் பிறந்துவிட்டதாகவும் கேரளாவில் அறிவிப்பு வந்தது. இந்த அறிவிப்பு சரிதானா உண்மையில் அன்று பிறை தெரிந்ததா என்று நமது சகோதரர் ஒருவர் ஹிலால் கமிற்றியின் செயர்மேனை அழைத்து விசாரித்தார்.
நம் சகோதரர் அன்று பிறை தெரிந்ததா என்று வினவினார். நாங்கள் நோன்பிற்கும் பெருநாட்களுக்கு மட்டுமே பிறையை தேடுவோம் மற்ற மாதங்களுக்கு நாங்கள் பிறை பார்ப்பதில்லை, மற்றவர்கள் பார்த்ததாக செய்தியை நாங்கள் ஏற்றோம் என்றார் செயர்மேன். அன்று பிறை தெரிய வாய்ப்பே இல்லாத நாளல்லவா. பிறை தெரிய வாய்ப்பில்லாதபோது பிறை பார்த்ததாக வந்த வந்த தகவலை புறக்கணிக்க வேண்டுமல்லவா என்றார் நம் சகோ. ஆம்! பிறை தெரிய வாய்ப்பில்லாத நாளில் பிறை பார்த்ததாக தகவல் வந்தால் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாதுதான். ஆனால் அக்டோபர் 13 அன்று சூரியன் மறைந்து 22 நிமிடங்களுக்குப் பின் தான் சந்திரன் மறைந்தது எனவே பிறை உறுதியாக தெரியும் என்றார் செயர்மேன். நாங்கள் பிறையைப் பற்றிய அறிவியலை தெரிந்துகொண்டும், மேலும் 2 சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டும்தான் பிறையை அறிவிக்கிறோம் என்றும் கூறினார். நீங்கள் முதலில் பிறையின் அறிவியலைப் படித்துவிட்டு என்னுடன் பேசுங்கள் என்று நமது சகோதரருக்கு செயர்மேன் அறிவுரையும் வழங்கினார்.
ரமளானில் (05/06/2016): கோழிக்கோட்டில் சூரியமறைவின்போது பிறையின் வயது 10 மணி 19 நிமிடம். சூரியன் மறைந்து 20 நிமிடத்தில் சந்திரன் மறைந்து விட்டது.
இந்தப் பிறை தொடர்பாகவும் நமது சகோதரர்கள் பலரும் ஹிலால் கமிற்றியின் வெவ்வேறு நிர்வாகிகளை தொடர்பு கொண்டு விசாரித்தனர். எல்லோரும் கூறிய ஒத்தக் கருத்து “பிறையை காப்பாடு கடற்கரையில் பலர் பார்த்தனர். பிறை 20நிமிடம் காட்சியளித்தது”. இனி இந்த தகவல்களின் நிலையை அலசுவோம்.
பல காலமாக பிறைப் பார்த்த தரவுகளின் அடிப்படைகளிலும் ஆய்வுகளின் அடிப்படையிலும் கண்ணுக்கு தெரியும் பிறையின் வரம்புகளை மனிதன் கண்டுபிடித்துவிட்டான். அந்த வரம்புகளை சந்திரன் கடந்தால் பிறை தெரியும் வாய்ப்புகள் அதிகம். அதே வேளையில் அந்த வரம்புகளை சந்திரன் அடையவில்லை எனில் பிறை கண்ணுக்கு தெரியாது என்பதை உறுதியாக சொல்ல இயலும். அவ்வரம்புகள் பின்வருமாறு:-
1. சூரிய-சந்திர எலாங்கேஷன் 12டிகிரியை கடந்திருக்கவேண்டும் (sun-moon elongation)
2. சூரிய மறைவின் பொது சந்திரன் 10டிகிரி உயரத்தில் இருக்கவேண்டும் (moon altitude)
மேலுள்ள கணித வரம்புகளை பின்வருமாறு எளிமையாக கூறலாம்
1. சூரிய மறைவின்போது பிறையின் வயது 2௦ மணி நேரத்தை கடந்திருக்க வேண்டும் (இது சந்திரன் இருக்கும் இடத்தைப் பொருத்து 18 முதல் 24வரை மாறும்) (moon age)
2. சூரியன் மறைந்து 48 நிமிடத்திற்குப்பின் சந்திரன் மறையவேண்டும். (lagtime)
இந்த இரண்டு வரம்புகளையும் கடக்காத சந்திரனின் பிறையை கண்ணால் பார்க்க இயலாது. முதல் வரம்பு பிறை எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதைக் குறிக்கும். பிறை 1% வளரும் வரை கண்ணுக்கு தெரியாது. 1% வளர்வதற்கு 18 முதல் 24 மணி நேரம் வரையாகும். இரண்டாம் காரணி சூரிய வெளிச்சத்தைப் பற்றியதாகும். சூரியன் மறைந்தாலும் அதன் வெளிச்சம் அடிவானத்திலிருந்து மறைய 20 நிமிடத்திற்கு மேல் ஆகும் அதன் பின்னும் 25 நிமிடத்திற்கு வானில் சந்திரன் இருந்தால்தான் அதன் பிறையை பார்க்க இயலும்.
(13/10/2015): கோழிக்கோட்டில் சூரியமறைவின்போது
Moon Age : 12Hr 35Min
Sunset : 6:10 PM
Moonset : 6:32 PM
Moon Lag Time: 22Min
Elongation : 5.21°
Moon Altitude: 4.21°
Illumination : 00.21 %
(13/10/2015)க்கான லண்டன் வானியல் கழகத்தின் பிறைக் கணிப்பு வரைபடம் http://astro.ukho.gov.uk/assets/F2015Oct13.png
(05/06/2016): கோழிக்கோட்டில் சூரியமறைவின்போது
Moon Age : 10Hr 19Min
Sunset : 6:48 PM
Moonset : 7:08 PM
Moon Lag Time: 20Min
Elongation : 07.01°
Moon Altitude: 3.5°
Illumination : 00.39 %
(05/06/2016)க்கான லண்டன் வானியல் கழகத்தின் பிறைக் கணிப்பு வரைபடம் http://astro.ukho.gov.uk/assets/F2016Jun05.png
மேலே நாம் சொன்ன இரண்டு வரம்புகளில் ஒன்றைக் கூட முஹர்ரத்தின் பிறையும் ரமளானின் பிறையும் அடையவில்லை. ஆனால் பிறையைப் பார்த்ததாக கேரள ஹிலால் கமிற்றி அறிவித்தது. இது பொய்யன்றி வேறில்லை. 13/10/2015 மற்றும் 05/06/2016 மாலையில் பிறைகளை தொலைநோக்கியால் கூட பார்க்க இயலாது. அத்தகைய மெல்லியப் பிறைகள் அவை. இந்தப் பிறைகளைப் பார்க்கவே இயலாது என்கிறது அறிவியல். அறிவியல் பிறை தெரியாது என்கிறது என்று நாம் சொன்னபோது இது அறிவியல் தான் ஆனால் நாங்கள் பிறை பார்த்ததை முஸ்லிம்கள் சாட்சி சொன்னதால் என்றுக் கொள்கிறோம் என்று நமது வாதத்தை மறுக்கின்றனர். இது அறிவியல் மட்டுமா என்று பார்ப்போம்.
ஒரு ஊரில் பிறை தெரிந்திருந்தால் அதற்கு மேற்கிலிருக்கும் ஊர்களிலும் பிறை தெரிந்திருக்கும். அவ்வாறு அதற்கு மேற்கில் இருக்கும் ஊரில் பிறை தெரியவில்லையெனில் முதலில் அறிவித்த ஊர் பொய் சொல்வதாக அர்த்தம். உதாரணமாக தலைப் பிறையை சென்னை மக்கள் முதலில் பார்த்ததாக தகவல் வந்தால், சென்னைக்கு மேற்கில் இருக்கு கோயம்பத்தூரில் அந்தப் பிறை தெரிந்திருக்கும். அங்கு மேகமூட்டம் காரணமாக தெரியவில்லையா பெங்களூரு, மைசூரு, மங்களூரு இங்கு எங்காவது தெரிந்திருக்கும். சென்னையில் தெரிந்த பிறை மேற்கில் இருக்கும் இந்த ஊர்களில் ஒன்றிலாவது நிச்சையம் தெரியும். குறிப்பாக கோழிக்கோட்டில் தெரியவேண்டும். ஒரு ஊரில் தெரிந்த பிறை அதற்கு மேற்கில் இருக்கும் எந்த ஊர்களிலும் தெரியவில்லை என்றால் அது பொய்ப் பிறை என்று அர்த்தம்.
மேற்கே செல்ல செல்ல பிறை அதிக நேரம் காட்சியளிக்கும் என்பது கிழக்கில் சூரியன் உதிக்கும் என்பதைப் போன்ற அடிப்படை அறிவே. இது அறிவியல் அல்ல. சென்னையில் 5 நிமிடம் பிறை காட்சியளித்தால் கோழிக்கோட்டில் பிறை அதை விட நிமிடம் அதிகநேரமும் பெரிதாகவும் காட்சியளிக்கும்.
மலேசியாவில் பிறை தெரிந்தால் அந்தப் பிறை இந்தியாவில் தெரியாமல் போகாது. இந்தியாவில் தெரிந்த பிறை சூடானிலும், எதியோப்பாவிலும் தெரியாமல் போகாது. இம்முறை (ஜூன்-5-2016) இல் இந்தோனேசியா, மலேசியா, புரூனே, ஜப்பானில் பிறை தெரிந்ததாக சில மக்கள் மூட நம்பிக்கை கொண்டுள்ளனர். இங்கெல்லாம் பிறை தெரிந்தால் அந்தப் பிறை சென்னையிலும் தெரியும் என்பது அறியா மக்களுக்கு தெரியவில்லை. மேலும் இந்நாடுகள் கணக்குக்கு தாவி வருடங்கள் ஆகின்றன என்பதும் அவர்கள் கணக்கின்படியே அறிவித்தார்கள் என்பதும் இந்த உம்மி சமூகம் அறியவில்லை.
இப்போது நமது நாயகன் காப்பாடு, கோழிக்கோடு பிறைக்கு வருவோம். கேரளாவிற்கு மேற்கில் இருக்கும் சவுத் ஆப்ரிக்கா, தான்சானியா, கென்யா, எங்கும் ஜூன் 5 மாலை பிறை தெரியவில்லை. ஏன், இவற்றிற்கும் மேற்கில் இருக்கும் நைஜீரியா, மொரோக்கோ போன்ற நாடுகளிலேயே பிறை தெரியவில்லை. இன்னும் அதிகமாக நியுயார்க் மாகாணத்தில் கூட பிறை தெரியவில்லை. கேரளாவிற்கு மேற்கில் இருக்கும் எந்த ஊருக்கும் எந்த நாட்டிற்கும் எந்த கண்டத்திற்கும் தெரியாத பிறை கோழிக்கோட்டில் மட்டும் தெரிந்ததா?.
இவ்வாறு பார்க்காத பிறையை பார்த்ததாக ஹிலால் கமிற்றி அதிகாரிகள் அறிவிக்கக் காரணமென்ன? எதை அடிப்படையாகக்கொண்டு இதை அவர்கள் அறிவிக்கிறார்கள்? என்பதையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்
1437 முஹர்ரத்தில் தெரியாத பிறையை எப்படி அறிவித்தீர்கள் என்று கேட்டபோது நாங்கள் பார்க்கவில்லை சூரியன் மறைந்து 22 நிமிடத்துக்குப்பின் சந்திரன் மறையும் எனும் அறிவின் அடிப்படையில் பிறையை அறிவித்தோம் என்று ஹிலால் கமிற்றி செயர்மேனே ஒப்புக்கொண்டார். இந்த ரமலான் பிறை 20 நிமிடம் காட்சியளித்ததாக கேரளா ஹிலால் கமிற்றி அதிகாரிகள் பலர் கூறியுள்ளனர். இந்த 22 நிமிடக் கணக்கும் 20 நிமிடக் கணக்கு எங்கிருந்து வந்தது தெரியுமா? அக்டோபர் 13 Sunset: 6:10 PM Moonset: 6:32 PM அன்று கோழிக்கோட்டில் சூரியன் மறைந்து 22 நிமிடத்திற்குப் பின் சந்திரன் மறைந்தது ஜூன் 5 (Sunset: 18:48 & Moonset: 19:08) அன்று கோழிக்கோட்டில் சூரியன் மறைந்து 20 நிமிடத்திற்குப் பின் சந்திரன் மறைந்தது. “சூரியன் மறைந்து அதன் பின் சந்திரன் மறைந்தால் அன்று வானில் பிறை இருக்கும்” எனும் கணக்கை கேரளப்பிறைக் கமிட்டி பின்பற்றுவதால் சூரிய சந்திர மறைவுகளுக்கு இடைப்பட்ட நேரத்தை பிறை காட்சியளிக்கும் நேரமாக இந்த ஹிலால் கமிட்டி விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். சூரியன் மறைந் பின் சந்திரன் மறைந்துவிட்டால் புது மாதம் பிறப்பதாகவும், இரண்டு மறைவுகளுக்கும் இடைப்பட்ட நேரம் முழுவதும் பிறை வானத்தில் காட்சியளிக்கும் இதுதான் அறிவியல் என்று ஹிலால் கமிற்றி அதிகாரிகள் நம்புகின்றனர்.
மக்காவில் சூரியனுக்கு பின் சந்திரன் மறைந்தால் புதுமாதம் தொடங்கிவிடுவாதாக உம்முல் குறா நாட்காட்டியின் கணக்கு கூறுகிறது. அதே கணக்கை தத்தெடுத்து கோழிக்கோட்டில் சூரியனுக்கு பின் சந்திரன் மறையுமானால் இடைப்பட்ட நேரம் முழுவதும் பிறை காட்சியளிக்கும், மறுநாள் புதுமாதம் பிறந்து விட்டது எனும் கணக்கை தான் ஹிலால் கமிட்டி பின்பற்றுவதாக உறுதியாக தெரிகிறது. சூரியனுக்குப் பின் சந்திரன் மறைந்தால் பிறை கண்ணுக்கு தெரியுமென்பது அறிவியலிலும் இல்லை இஸ்லாத்திலும் இல்லை
பல பேர் சாட்சி சொல்லி பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொண்ட செய்தியை புறக்கணிப்பதா? :
காப்பாடு பிறையை யார் பார்த்தார் எத்தனை பேர் பார்த்தார்கள் என்ற தகவல் ஏதுமில்லை. பிறை பார்த்ததன் அடிப்படையில் அதை அறிவித்தவர்களின் பெயர்கள் மட்டுமே வருகின்றன. பெரும்பான்மை மக்கள் சாட்சி சொன்னார்கள் என்பது பலர் இந்த செய்தியை சொல்லி சொல்லி பரப்பியதால் ஏற்பட்ட மாயை. பார்த்தவர்களின் பெயர்கள் கூட யாருக்கும் தெரியவில்லை.
நமது வாதத்தை புறக்கணிப்பவர்கள் சொல்லும் ஒரே காரணம் நாம் அறிவியலை அடிப்படையாகக்கொண்டு முஸ்லிம்களின் சாட்சியைப் புறக்கணிக்கிறோம் என்பதுதான். நாம் அறிவியலை அடிப்படையாகக் கொண்டு ஹிலால் கமிற்றியின் பிறையை குறை காணவில்லை. பிறை தேடும் நாள் என்பது திடீரென ஒரு நாள் முளைத்து வராது. என்று பிறை தேடவேண்டும் என்பது முந்தய மாதம் பிறை பார்த்ததை அடிப்படையாகக் கொண்டே அறிந்து கொள்ள முடியும். 10-02-2016 அன்று பிறை பார்த்ததன் அடிப்படையில் 10-03-2016 அன்று 29 முடிந்து வரும் 30 ஆம் இரவு ஆகும் அன்று பிறையைத் தேடினோம். 08-04-2016 அன்று பிறை பார்த்ததன் அடிப்படையில் 07-05-2016 அன்று பிறையைத் தேடினோம் பிறை தென்படாததால் மாதத்தை 30 ஆக்கி 08-05-2016 அன்று புது மாதத்தை துவங்கினோம். இது போல ஹிலால் கமிற்றியில் மாதாமாதம் பிறை பார்கிறார்களா? திடீரென ஒருநாள் இது ஷவ்வாலின் 30 ஆம் இரவு இன்று பிறையைத் தேடவேண்டும் என்று ஹிலால் கமிற்றி அதிகாரிகள் எங்கிருந்து ஞானம் பெறுகின்றனர். இந்தக் கேள்விக்கு மட்டும் ஹிலால் கமிற்றியோ அதை சரிகாண்பவர்களோ விடையளிக்கட்டும். நாங்கள் பிறமாதங்களில் பிறை பார்ப்பதில்லை என்று ஹிலால் கமிற்றி செயர்மேனே ஒப்புக்கொண்டார். மாதாமாதம் பிறை பார்க்காமல் திடீரென ஒருநாள் இன்று பிறையைத் தேடுங்கள் என்று அறிவிப்பதுதான் ஹிலால் கமிற்றி மக்களை ஏமாற்றும் முதல் செயல்.
ஹிலால் கமிற்றி ஷவ்வால் இறுதியை ஏதோ ஒரு காலண்டரைப் பார்த்து அறிகிறார்கள். (இதை செயர்மேனே ஒப்புக்கொண்டார்.) அன்று கேரளத்திற்கான சூரிய சந்திர மறைவுகளை ஏதோ இணையதளங்கள் அல்லது பிற மூலங்களிலிருந்து பெறுகின்றனர். (இது அவர்கள் மாத்யமம் பத்திரிக்கையில் வெளியிடும் செய்தியே காட்டிக்கொடுத்துவிடுகிறது.) அதில் சூரியனுக்குப் பின் சந்திரன் மறைவதாக இருந்தால் புது மாதம் பிறந்ததாக அறிவிக்கின்றனர். சூரியனுக்குப் பின் எவ்வளவு தாமதமாக சந்திரன் மறைகிறதோ அவ்வளவு நேரம் பிறை தெரிந்ததாகவும் அறிவிக்கின்றனர். (முஹர்ரத்தில் 22 நிமிடம் பிறை தெரிந்ததாகவும் ரமலானில் 20நிமிடம் பிறை தெரிந்ததாகவும் அவர்கள் சொன்னதே இதற்கு ஆதாரம்) இது ஹிலால் கமிற்றியின் இரண்டாம் ஏமாற்றுவேலை. அவர்கள் உம்முல் குரா காலண்டரில் ஷவ்வால் இறுதியை அறிகின்றனர் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. சூரியனுக்குப்பின் சந்திரன் மறைந்தால் புதுமாதம் பிறக்கும் என்பதும் உம்முல் குராவின் கணக்கே.
இன் ஷா பிற்காலங்களில் கேரள பிறை அறிவுப்புகளின் தகவல்களை இதே கட்டுரையில் பதிவேற்றுவோம். பிறை தேடும் நாள் என்று ஹிலால் கமிற்றி அறிவிக்கும் நாளில் பிறை தெரிய வாய்ப்புள்ளதா என்பதை நீங்கள் இந்த கட்டுரையின் உதவியுடன் அறிந்துகொள்ளலாம். piraivasi.com/2016/02/22.html