Sunday, 26 June 2016

பிறை எங்கே உதிக்கிறது?


பிறை எந்த நாட்டில் முதன் முதலாக உதிக்கிறது? என்பது பலரும் அடிக்கடி நேர்கொள்ளும் ஒருகேள்வி. இதை என்னிடம் பலர் கேட்டுள்ளனர். கேட்பவர்கள் எல்லோரும் தலைப் பிறை எந்தநாட்டில் முதன்முதலாக தென்படும் எனும் பொருளிலியே இதைக் கேட்டனர். மக்கள் பிறையின் உதயம் எனும் வாசகத்தை தலைப்பிறைக் கண்ணுக்கு தெரிவதையே குறிப்பிடுகின்றனர். இதை சற்று விரிவாக பார்ப்போம்.
தலைப்புக்குள் செல்வதற்கு முன் பிறை என்றால் என்ன அதற்கும் சந்திரனுக்குமுள்ள வேறுபாடு என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும். அது தெரியாமல் இதைத் தொடர்வது பயனளிக்காது. பிறை என்றால் என்னவென்று இக்கட்டுரையை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள் piraivasi.com/2016/02/8.html
பூமியிலிருந்து வானைப் பார்க்கும்போது நம் கண்ணுக்கு தெரியும் அனைத்துமே உதித்து மறைகின்றன. பகலில் சூரியனைப் பார்ப்போம். அதிகமாக இரவிலே நிலவைப் பார்ப்போம். இரவில் எண்ணிக்கையில் அடங்கா பல நட்சத்திரங்களைப் பார்ப்போம். இவை அனைத்துமே உதித்து மறைகின்றன என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. நமக்கு தெரிந்ததெல்லாம் சூரிய உதயமும் மறைவும் மட்டுமே.
சூரியன் கூட உதிப்பதுமில்லை மறைவதுமில்லை. சூரியன் ஓடிக்கொண்டிருந்தாலும் பூமியையையும் சேர்த்து இழுத்துக்கொண்டு ஓடுவதால், பூமியைப் பொறுத்தவரை சூரியன் நிலையாகவே இருக்கிறது. ஆனால் நம் கண்களுக்கோ சூரியன் உதித்து மறைவதுபோல் ஒரு காட்சி ஏற்படுகிறது. பூமியில் சூரியன் உதித்து மறையவேண்டுமெனில் சூரியன் பூமியை சுற்றி வரவேண்டும். ஆனால் பூமிதான் சூரியனை சுற்றி வருகிறது.
பூமி தானே சுழல்வதால் சூரியன் உதித்து மறைவது போன்ற காட்சி நமக்கு தோன்றுகிறது. நிலவு உதித்து மறைவதைப் போன்ற காட்சியும் நட்சத்திரங்கள் உதித்து மறைவது போன்ற காட்சியும் கூட பூமி தானே சுழல்வதால் ஏற்படுவதாகும்.
ஆக உதயம் என்பதே பூமி சுழல்வதால் ஏற்படும் காட்சியாகும். உண்மையில் எதுவும் உதிப்பதுமில்லை மறைவதுமில்லை
அடுத்ததாக உதயமறைவை எப்படி கணக்கிடுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளவேண்டும்.
astronomical sunrise & apparent sunrise என்று இரண்டு வித சூரிய உதயங்களைப் பற்றி அறிவியல் பேசுகிறது. முதலில் சொல்லப்பட்ட astronomical sunrise வானியல் சூரிய உதயமாகும். இது அடிவானில் சூரியன் எழுவதைப் பேசுகிறது. இரண்டாவதாக சொல்லப்பட்டது apparent sunrise. இது சூரியன் ஒரு நாளில் முதன்முதலாக கண்ணுக்கு தெரிவதைப் பற்றி பேசுகிறது. இரண்டிற்கும் என்ன வேறுபாடு? வானியல் உதயம் என்பது நாம் கிழக்குக் கடற்கரையில் நின்று பார்க்கும்போது சூரியனின் மேல் விளிம்பு அடிவானில் வருவதாகும். ஆனால் சூரியனின் மேல் விளிம்பு அடிவானில் வருவதற்கு முன்பாகவே பூமியின் வளிமண்டலத்தின் காரணத்தால் அது நம் கண்களுக்கு காட்சியளித்து விடுகிறது. இதற்கு காரணம் என்னவெனில்:  வளிமண்டலத்தின் காற்றழுத்த மாறுபாட்டால் சூரிய ஒளி நேர்கோட்டில் பயணிப்பதில்லை. வளைந்துதான் பயணிக்கிறது. இதை தமிழில் ஒளிச்சிதறல் என்றும் ஆங்கிலத்தில் refraction effect என்றும் அழைப்பர். எனவே சூரியன் தொடுவானத்தை அடையும் முன்பே அதன் ஒளி நமது கண்களை அடைந்துவிடுகிறது. இவ்வாறு சூரியன் அடிவானத்தை அடையும் முன்பே அதன் காட்சி நமது கண்களை வந்தடைவது apparent sunrise எனப்படும். இந்த apparent sunrise மட்டுமே மனிதனால் பயன்படுத்தப்படுகிறது. வானியல் உதயம் வானியல் ஆய்வாளர்களால் ஆய்வுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இதை வாழ்வியல் எடுத்துக்காட்டுடன் விளக்கவேண்டுமென்றால். வானியல் உதயத்தை எடுத்து நாம் தொழுகை நேரங்களைக் கணக்கிடுவதில்லை. கண்ணுக்குத் தெரியும் apparent sunrise ஐ வைத்துதான் தொழுகை நேரங்களைக் கணக்கிடுகிறோம். சூரியன் கிழக்கில் எழுவதற்கும் 3 நிமிடங்களுக்கும் முன்பே நமது கண்களுக்கு காட்சியளித்துவிடுகிறது. நமது தொழுகை நேரக்கணக்குகள் அனைத்தும் சூரியன் கண்ணுக்கு தெரியும் கணக்கை வைத்துதான் செய்யப்படுகிறது. எப்படியெனில், பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனின் ஆரம் அதன் மையத்திலிருந்து 0.26டிகிரி. எனில் 0.26டிகிரி வரும்போதுதான் அதன் விளிம்பு அடிவானத்தை அடையும். ஆனால் சூரிய உதய கணக்குகளில் 0.866டிகிரி வரும்போதே உதயமாகிவிட்டதாக எடுத்துக்கொள்வர். 0.866 – 0.27 = 0.6 டிகிரி அளவுக்கு முன்னரே சூரியன் உதித்தாக கணக்கிலெடுக்கப்படுகிறது. சூரியன் அடிவானத்தை அடைவதற்கும் 3 நிமிடங்களுக்கு முன்னரே உதித்து விடுகிறது.
இந்த கணக்குகளை தெளிவாக இங்கே தந்துள்ளோம் piraivasi.com/2015/04/PrayerTimes.html
சூரிய உதயம் என்று நாம் அழைப்பதே சூரியன் நம் கண்களுக்கு காட்சியளிக்கும் நேரத்தைத்தான். இனி பிறைக்கு வருவோம்.
பிறை என்று பொதுவாக மக்கள் பேசுவது தலைப்பிறையைதான். பிறை தெரிந்ததா? எனும் கேள்வியே தலைப்பிறை நோக்கிதான். இந்த தலைப்பிறை எங்கே உதிக்கும் எனும் கேள்வி, தலைப்பிறை முதன்முதலாக எந்த ஊரில்/நாட்டில் தெரியும் என்பதைப் பற்றியது. ஆனால் ஒரு புதுக் கூட்டம் பிறை எங்கே உதிக்கிறது எனும் கேள்வியைக்கேட்டு மக்களை வழி கெடுக்கவும், தாங்கள் வைத்திருக்கும் இரண்டும்கெட்டான் ஹிஜ்றா காலண்டரை வைத்து பிழைப்பு நடத்தவும் முயற்சிக்கிறது.
பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுழல்வதால் பூமியில் இருந்து வானில் பார்க்கும் எந்த பொருளுமே கிழக்கில் எழுந்து மேற்கில் வீழ்வதைப் போலவே காட்சியளிக்கும். நிலவும் அவ்வாறுதான், கிழக்கு அடிவானில் எழுந்து  எழுந்து மேற்கு அடிவானில் வீழும். ஆனால் இதை நாம் எல்லா நாளும் கண்ணால் பார்க்க இயலாது. அமாவாசை நாளில் நான் சந்திர உதயத்தைப் பார்த்தேன் என்று யாராவது சொன்னால் வயதில் பெரிய மக்கள் நம்மை முட்டாள் என்பர். ஏனெனில் அமாவாசை நாளில் நிலவை பார்க்கவே இயலாது. பவுர்ணமி அன்று நிலவு கிழக்கில் உதித்து மேற்கில் மறைவதை கண்ணால் பார்க்கலாம். இதை எல்லா நாளிலும் பார்க்க இயலாது. குறிப்பாக தலைப்பிறையை மேற்கு திசையில் மாலை வேளையில் சூரியன் மறைந்த பின்னரே பார்க்க இயலும். தலைப்பிறை கிழக்கில் உதிப்பதை பூமி படைக்கப்பட்ட நாளிலிருந்து எந்த மனிதனும் பார்த்ததே இல்லை. தலைப்பிறை மாலை வேளையில் மேற்குதிசையில் காட்சியளிப்பதைதான் மனித சமூகம் இன்றுவரை பிறையின் உதயம் என்று கூறி வருகிறது.
நபி ஸல் தலைப்பிறையைத் தவிர வேறு எந்தப் பிறையைபும் பார்த்து வணக்க வழிபாடுகளை செய்ததில்லை. தலைப் பிறை மேற்கில்தான் தெரியும். மாலை வேளையில்தான் தெரியும்.
நபி (ஸல்) அவர்கள் ஏனைய மாதங்களுக்கு வழங்காத முக்கியத்துவத்தை ஷஅபான் பிறைக்கு வழங்குபவர்களாக இருந்தார்கள். பிறகு ரமலானின் பிறையை கண்ணால் கண்டு நோன்பு நோற்பார்கள். அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தால் முப்பதாக கணக்கிட்டு பிறகு நோன்பு நோற்பார்கள். நூல் : அஹ்மத் (25202)
"முஹர்ரம் மாதத்தின் பிறையை நீர் கண்டதும் (அன்றிலிருந்து நாட்களை) எண்ணிக்கொள்வீராக! ஒன்பதாவது நாள் காலையில் நீர் நோன்பாளியாக இருப்பீராக!" முஸ்லிம் 2087.
நீங்கள் துல்ஹஜ் பிறையைக் கண்டு, உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணினால், அவர் தமது முடியையும் நகங்களையும் அகற்றாமல் இருக்கட்டும்!    நூற்கள்: முஸ்லிம் (3999), நஸாஇ (4285), நஸாஇ (4361), திர்மிதி 1523
நபி பெருமானார் எல்லா மாதங்களையும் அந்த மாதத்தின் பிறையைப் பார்த்துதான் தொடங்கியிருக்கிறார்கள். எனில் அது அந்த மாதத்தின் தலைப்பிறையைத் தவிர வேறு எந்தப் பிறையாக இருக்க முடியும். நபிகளார் தலைப் பிறையைப் பார்த்தே வணக்க வழிபாடுகளை அமைத்துகொண்டார்கள். தலைப்பிறை மேற்கில்தான் தெரியும். கண்ணுக்கு தெரிவதைத்தான் மனித சமூகம் உதயம் என்கிறது. அறிவியலும் அதைதான் உதயம் என்கிறது.
“உதயம் என்பது எழுச்சி மறைவு என்பது வீழ்ச்சி. நபி ஸல் எழுச்சியை எடுத்து நாளையும்/மாதத்தை துவங்காமல் வீழ்ச்சியை எடுத்து நாளையும்/மாதத்தை துவங்கியிருப்பார்களா” என்று இந்த கூட்டம் கேள்வி எழுப்புகிறது. நிலவானது மாதத்தின் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு நேரத்தில் உதயமாகும். அமாவாசையன்று நிலவானது காலையில் எழும் அதை யாரும் பார்க்கவே மாட்டார்கள். முதல் அறைப்பிறை நாளில் நிலவு நண்பகலில் எழும். இந்த ஹிஜ்றா கூட்டம் அரைப்பிறை நாளில் நண்பகல் வேளையில் நாளைத்துவங்குவார்களா? பவுர்ணமி வரை நிலவானது பகல் பொழுதிலேயே எழும். பவுர்ணமி அன்று சூரியன் மறையும் வேளையில் நிலவு எழும். அன்றைய தினம் இவர்கள் மாலை வேலையில் நாளைத்துவங்குவார்களா? இறுதி அரைப்பிறை நாளில் நிலவு நள்ளிரவில் உதிக்கும். இவர் கொள்கைப்படி நள்ளிரவில் நாள் துவங்கிறது. எனில் இவர்களுக்கு கடைசி அரைப்பிறை நாளில் மட்டுமே நாள் துவங்க வேண்டும். மற்ற நாட்களில் நாள் துவங்குவதே இல்லை. சந்திர உதய மறைவுக்கும் நாள்/மாத துவக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக மனநிலை சரியாக இருக்கும் எந்த மனிதனும் கூறமாட்டான். பிறைக்கும் நிலவுக்கும் உள்ள வித்தியாசத்தையும் நீங்கள் விளங்கியிருப்பீர்கள். நிலவின் உதயத்தை எப்போதும் பார்க்க இயலாது. நாம் பார்ப்பது பிறைகளின் காட்சிகளைமட்டுமே.
நிலவு எங்கே உதிக்கிறது என்பது எந்த பயனுமற்ற கேள்வி. நிலவின் உதயம் நாளின் துவக்கதையோ மாதத்தின் துவக்கதையோ பாதிப்பதே இல்லை. இன்று வரை தலைப்பிறை கிழக்கில் உதித்ததை யாரும் பார்த்ததே இல்லை. இஸ்லாத்திலும் நிலவின் உதய மறைவுகள் எந்த முக்கியத்துவமும் இல்லாத ஒன்றாக உள்ளது. நிலவின் உதய மறைவை வைத்து நாளைதுவங்கியதாகவோ நாட்காட்டியை உருவாக்கியதாகவோ இன்று வரை எந்த சமூகமும் அறியப்படவில்லை. நிலவின் உதய மறைவை வைத்து நாளைத்துவங்கவும் இயலாது நாட்காட்டியை அமைக்கவும் இயலாது. எனவே இந்த மூடத்தனமான கேள்வியை மக்கள் அலட்சியம் செய்யவும் இந்த ஹிஜ்றா கூட்டத்தின் சதிவலையில் சிக்கி இபாதத்களை பாழாக்கிக் கொள்ளாமலும் இருக்க மக்களை அறிவுத்துகிறோம்.
சுருக்கம்.
1. உதயம் மறைவு என்பதே பூமி சுழல்வதால் ஏற்படும் காட்சித் தோற்றம்தான். சூரியனோ நிலவோ உதிப்பதுமில்லை மறைவதுமில்லை.
2. உதயமென்பதே காட்சிதான். சூரிய உதய மறைவு கணக்குகள் கூட அது கண்ணுக்கு தெரிவதை அடிப்படைய வைத்துதான் செய்யப்படுகிறது.
3. பிறைக் கண்ணுக்கு காட்சியளிப்பதைதான் மனித சமூகம் உதயம் என்று இன்றுவரை சொல்கிறது
4. தலைப்பிறை மேற்கில் தான் உதிக்கும்.

5. நபி பெருமானார் மேற்கில் உதிக்கும் தலைப்பிறையைத் தவிர வேறு எந்தப் பிறையையும் பார்த்து மாதத்தை துவங்கவில்லை