Saturday, 10 October 2015

தொழுகை நேரங்களை மட்டும் கணக்கிடலாமா?

بِسْــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم

தொழுகை நேரங்களை மட்டும் ஏன் கணக்கிடுகிறீர்கள்? குச்சியை நட்டு நிழலைப் பார்த்து தொழவேண்டியதுதானே?

மேற்கண்ட கேள்விகள் சாதரணமாக கணக்கீடு சகோதரர்கள் நம்மை நோக்கி கேட்பவை. நாம் ஏன் தொழுகை நேரங்களை மட்டும் நபி வழியில் குச்சியை நட்டு நிழலை பார்த்து செய்யாமல் கணக்கீட்டை கொண்டு செயல்படுத்துகிறோம். அதையே பிறையை பொறுத்தவரை நபி வழியை பின்பற்றுவதில் அடம்பிடிக்கிறோம். இவற்றிற்கான விடைகளை பார்ப்போம்.

தொழுகை நேரங்களை எவ்வாறு தெரிந்துகொள்வது என்பது தொடர்பாக வரும் ஹதீஸ்களை பார்த்தோமேயானால் எந்த ஹதீஸிலும் குறிப்பிட்ட ஒரு வரையறையை கூறி இதை நீங்கள் பார்க்காத வரை தொழுகையை தொடங்காதீர்கள் என்ற கட்டளையே இல்லை. மாறாக தொழுகை நேரங்களை எப்படி அறிந்துகொள்ளலாம் என்பதை பல்வேறு முறைகளில் கற்றுத்தந்திருக்கிறார்கள்.

தொழுகை நேரங்கள் தொடர்பான ஹதீஸ்கள் பின்வருமாறு

ஃபஜ்ர்
அடிவானம் வெளுக்கும் பொது; நஸாயி 529
அடிவானம் வெளுத்து நட்சத்திரங்கள் பிரகாசிக்கும்போது; நஸாயி 514

லுஹ்ர்:
சூரியன் சாய்ந்தபின் ; திர்மிதி 151
நிழல் செருப்பின் வார் அளவுக்கு வரும்போது ; திர்மிதி 149

அஸ்ர்
நிழல் ஒரு மடங்கு வரும்போது ; திர்மிதி 149
நிழல் ஒரு மடங்கு + செருப்பின் வார் அளவுக்கு வரும்போது ; நஸாயி 529
நிழலின் நீளம் கோடையில் மூன்று முதல் ஐந்தடி வரை. குளிர் காலத்தில் ஐந்து முதல் ஏழடி வரை ; நஸாயி 507
சூரியன் பொன்னிறமாகும் வரை அசர் தொழுகையின் நேரமுள்ளது.; அபு தாவூத் 396
நிழல் இருமடங்கு வரும் வரை அஸ்ர் தொழுகையின் நேரமுள்ளது. ; திர்மிதி 149

மக்ரிப்:
சூரியன் மறைந்த பின் ; திர்மிதி 149
அடிவானத்தின் செம்மை மறையும் வரை மக்ரிபின் நேரம் உள்ளது ; நஸாயி 529
நட்சத்திரங்கள் பிரகாசிக்கும் வரை ; அபு தாவூத் 418

இஷா:
அடிவானத்தின் செம்மை மறைந்த பின் ; நஸாயி 529
இரவின் மூன்றில் முதல் பகுதியில் ; நஸாயி 529
மூன்றாம் பிறை மறைந்தபின் ; அபு தாவூத் 419

மேற்கண்ட ஹதீஸ்களில் ஒரு தொழுகை நேரத்திற்கே வெவ்வேறு கால வரையரையரைகளை நபி ஸல் காட்டிதந்துள்ளர்கள். ஓன்று ஆரம்ப நேரம் மற்றொன்று இறுதி நேரம் என்று வைத்துகொண்டாலும் ஆரம்ப நேரத்திற்கே பல வரையறைகளை கற்று தந்துள்ளதை காணலாம். குறிப்பாக இவர்கள் குச்சியை நட்டு நிழலை பார்த்துதான் ரசூலுல்லாஹ் தொழுதார்கள் என்று சொல்லும் அஸ்ர் தொழுகை நேரத்தை பாருங்கள். ஒரு முறை சூரியனின் நிழல் உயராத போதே அஸ்ர் தொழுதிருக்கிறார்கள். ஒரு முறை ஒரு மடங்கு நிழல் வரும்போது அஸ்ர் தொழுதிருக்கிறார்கள். மற்றொரு முறை ஒருமடங்கு நிழலுக்கு அதிகமாக செருப்பின் வார் அளவுக்கு நிழல் வந்தபின் அஸ்ர் தொழுதிருக்கிறார்கள். பல ஹதீஸ்களில் அஸ்ர் தொழுகைக்கான நேரத்தை பற்றி சொல்லப்படும்போது நிழல் பற்றிய பேச்சே இல்லை. இஷா தொழுகை நேரத்தை பற்றிய ஹதீஸ்களை கவனிக்கவும். இவற்றையெல்லாம் அலசும்போது காலத்தை அறிந்து கொள்ள சில அழகிய யுக்திகளை நபி ஸல் காட்டிதந்தார்கள் என்பது மட்டுமே தெளிவாகிறது. அவற்றை கண்ணால் பார்த்து ஊர்ஜிதப்படுதியபின்தான் தொழ வேண்டும் என்ற எந்த கட்டளையும் இல்லை.

நாம் இன்று அவற்றை கணிதமாக மாற்றி பயன்படுத்துகிறோம் அவ்வளவுதான். மாறாக சூரியன் இப்படி இருப்பதை பார்த்து உறுதி செய்தபின்தான் தொழவேண்டும் அல்லது இரண்டு நீதமான் சாட்சிகள் இருந்தால் மட்டுமே மற்றவர் தொழுகை நேரத்தை பார்த்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது போல் எந்த கட்டளையும் இல்லை. மேலும் நிழலை வைத்து நேரத்தை அறிந்துகொள்வதென்பது ஒரு விஞ்ஞான யுக்தியாகும். அதற்கு பெயர் நிழல் கடிகாரம். நிழல் கடிகாரத்தில் தொழுகை நேரங்கள் மாறாது. அதாவது நிழல் கடிகாரத்தில் லுஹ்ர் தொழுகை வருடத்தின் எல்லா நாட்களிலும் 12மணிக்கு வரும். சூரிய உதயம் காலை 6 மணிக்கும் சூரிய மறைவு மாலை 6 மணிக்கும் நிகழும். இது வருடத்தின் எந்த நாளிலும் மாறாது. நிழல் கடிகாரம் காட்டும் நேரத்திற்கு பெயர் true solar time “உண்மையான சூரிய நேரம்”. இன்று நாம் பயன்படுத்தும் கடிகாரங்கள் காட்டும் நேரம் mean solar time சராசரி சூரிய நேரம். நமது தொழுகை நேரக் கணக்கீடுகள் உண்மை சூரிய நேரத்திலேயே உள்ளன. ஆனால் அந்த கணக்கீட்டின் வெளிப்பாடுகளை நம் கடிகாரத்தை பார்த்து பயன்படுத்த இயலாது. எனவே உண்மை சூரிய நேரத்தில் இருக்கும் தொழுகை நேரங்களை நாம் பயன்படுத்தும் கடிகாரங்கள் காட்டும் சராசரி சூரிய நேரத்திற்கு மாற்றினால் மட்டுமே கடிகாரத்தை பார்த்து நம்மால் தொழுகை நேரங்களை செயல்படுத்த இயலும். எனவே எல்லா தொழுகை நேரக்கணக்குகளும் அதை வெளியீடை கடிகார நேரத்திற்கு மாற்றியே தருகின்றன.

குச்சியை நட்டு நிழலைப் பார்த்து தொழவேண்டியதுதானே?

நபிகளார் குச்சியை நட்டார்கள் என்றோ ஈட்டியின் நிழலை பார்த்தார்கள் என்றோ ஹதீஸ்களை பார்க்க முடியவில்லை. நம்மை விமர்சிப்பவர்கள் ஏன் இவ்வாறு கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. மாறாக நிழலை பார்த்து நேரத்தை அறிவதென்பது மிகப்பெரிய வானியல் கலை. அந்த வானியலை நபிகளார் அறிந்திருந்தார்கள். அவர்கள் நிழலைக்கொண்டு நேரத்தை கணக்கிட்டார்கள்.

தொழுகை நேரங்களை நாசாதான் உருவாக்கித்தந்ததா?

வரலாறுகளைப்படித்தால் நவீன விஞ்ஞானத்திற்கு வித்திட்டது கவாரிஸ்மி & பிரூணி போன்ற முஸ்லிம் விஞ்ஞானிகள் என்பது தெரியும். டாலமி, இந்திய மற்றும் கிரேக்க விஞ்ஞான குறிப்புகளை மேம்படுத்தியும் புதிய விண்ணியல் கோட்பாடுகளையும், வழிமுறைகளையும் சூத்திரங்களையும் கண்டுபிடித்தவர்கள் முஸ்லிம் விஞ்ஞானிகள்தாம். ஃபஜ்ர் கோணம் 18டிகிரி என்பதை உலகில் முதன் முதலில் கூறியது பிரூணிதான். அவர்தான் உலகில் முதன் முதலில் பெரும்பான்மையான நகரங்களின் (Geo-coordinates) புவியியல் அளக்கூறுகளை அறிந்து வைத்திருந்தார். கிப்லா கணக்கிடுவதை அல் பிரூணிக்கு முன்பிருந்தவர்களே கண்டு பிடித்துவிட்டனர். அதை முக்கோணவியலின் உதவியுடன் இன்று நாம் பயன்படுத்தும் பார்முலாவாக மாற்றியது பிரூணி தான்.

நூற்றாண்டுகளுக்கு முன்பே முஸ்லிம்கள் ரசூலுல்லாஹ் கற்றுத்தந்த தொழுகை நேரங்களை அறிந்து கொள்ளும் முறைகளை கணிதமாக மாற்றிவிட்டனர். மிக அழகிய நிழல்கடிகாரங்களையும் வடிவமைத்தனர்.


இது துனிசியாவின் அல் உக்பா பள்ளியில் இருக்கும் தொழுகை நேரங்களை காட்டும் அழகிய நிழல் கடிகாரம்.


இது இஸ்தான்புல் நகரில் உள்ள மிஹ்ரிமா மஸ்ஜிதில் உள்ள ஒரு நிழல் கடிகாரம். இது நேரத்தை மட்டுமல்லாமல் ஆண்டுளின் எண்ணிக்கையையும் நேரடியாக காட்டவல்லது. முஸ்லிம் விஞ்ஞானிகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் தொழுகை நேரங்களை இஸ்லாத்திற்கு உட்பட்டு கணக்கிடும் முறைகளை மேம்படுத்தியே வந்திருக்கிறார்கள். அந்த வகையில் இன்று நமது கையில் இருக்கும் தொழுகை நேரக்கணக்கை கண்டு பிடித்தவர்கள் கிறித்தவர்கள் அல்லது யூதர்கள் என்று யாராலும் உரிமை கொண்டாட முடியாது. தொழுகை நேரக்கணக்காயினும் அல்லது வேறு எந்த கணக்காக இருந்தாலும் அதில் முஸ்லிம்களின் பங்களிப்பும் பெரிய அளவில் இருக்கிறது. அப்படியே அது முஸ்லிம் அல்லாதவர்களின் கண்டு பிடிப்புகளாக இருந்தாலும் அதை குர்ஆன் ஹதீஸ்க்கு மாற்றமில்லாதவகையில் பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. இஸ்லாத்தில் தடையில்லாத எந்த பொருளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். தொழுகை நேரங்களை கணக்கிட்டு செயல்படுத்தக்கூடாது என்று ஹதீஸ்களில் நேர்முக தடையோ மறைமுக தடையோ இல்லை. மாறாக தொழுகையை பற்றி அறிவிக்கும் ஹதீஸ்கள் தொழுகை நேரங்களை எப்படி அறிந்துகொள்ளலாம் எனும் யுக்தியை போதிப்பதாகவே உள்ளன. நபி ஸல் காலத்தில் நேரத்தை அறிந்துகொள்ள இருந்த யுக்திகளை அவர்கள் பயன்படுத்தினர். சூரியனை பார்த்தனர், சந்திரனை பார்த்தனர், நட்சத்திரங்களைப் பார்த்தனர், நிழலைப் பார்த்தனர். இன்று நாம் நம்மிடம் இருக்கும் காலத்தை அறிந்துகொள்ளும் யுக்தியை பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் முறைகள் நபி ஸல் காட்டிய தொழுகை நேரத்துடன் ஒத்துப்போகும் வரையில் அவற்றை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. தடையும் இல்லை,.

பிறையை ஏன் கணக்கிடக்கூடாது?

தொழுகை நேரங்களை கணக்கிட தடையில்லை என்பதை தெரிந்துகொண்டோம். ஆனால் பிறையை ஏன் கணக்கிடக்கூடாதென்பதற்கு பல ஹதீஸ்கள் சான்றாக உள்ளன. பிறையை பற்றி வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பிறையை பார்த்துதான் மாதத்தை துவங்கச்சொல்கின்றன. இன்னும் ஒரு படி மேலே சென்று “பிறையை பார்க்காமல் மாதத்தை துவங்காதீர்கள்” என்று நபி ஸல் சஹாபாக்களிடம் வாக்குறுதி பெற்றதை நம்மால் ஹதீஸ்களில் பார்க்கமுடிகிறது. 


“ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே, தலைப்பிறையைப் பார்க்காமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். தலைப்பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு  மறைக்கப்பட்டால் தவிர. அவ்வாறு உங்களுக்கு மறைக்கப்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்”
- இப்னு உமர் (ரலி) ; முஸ்லிம் 1964

நபி (ஸல்) அவர்கள் ஏனைய மாத(தலைப்பிறை)ங்களுக்கு வழங்காத முக்கியத்துவத்தை ஷஅபான் தலைப்பிறைக்கு வழங்குபவர்களாக இருந்தார்கள். பிறகு ரமலான் பிறையை கண்ணால் கண்டு நோன்பு நோற்பார்கள். அவர்களுக்கு மறைக்கப்பட்டால் முப்பதாக கணக்கிட்டு பிறகு நோன்பு நோற்பார்கள்.
- ஆயிஷா (ரலி) ; அஹ்மத் (25202)

தலைப்பிறையை கண்ணால் பார்க்கும் முன் அல்லது எண்ணிக்கையை முழுமைப்படுத்தும் வரை மாதத்தை முந்திக்கொண்டு துவங்கிவிடாதீர்கள். பின்னர் (அடுத்த) தலைப்பிறையை பார்க்கும்வரை அல்லது எண்ணிக்கையை முழுமைப்படுத்தும் வரை நோன்பு நோருங்கள்.
-ஹுதைஃபா பின் அல் யமான் (ரலி) ; நஸாஈ 2126

“அதை (பிறையை) பார்த்துதான் வணக்க வழிபாட்டைச் செய்ய வேண்டும் என்றும் அதை பார்க்கவில்லையென்றால் நீதமான இருவர் சாட்சி கூறினால் அந்த இருவரின் சாட்சியின் அடிப்படையில்தான் வணக்க வழிபாட்டை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதி மொழி எடுத்தார்கள்.
- அல்ஹாரிஸ் இப்னு ஹாதிப்(ரலி) ; அபூ தாவூத்-
1991.

“அதை (பிறையை) பார்த்துதான் வணக்க வழிபாட்டைச் செய்ய வேண்டும் என்றும் அதை பார்க்கவில்லையென்றால் நீதமான இருவர் சாட்சி கூறினால் அந்த இருவரின் சாட்சியின் அடிப்படையில்தான் வணக்க வழிபாட்டை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதி மொழி எடுத்தார்கள்.
அபூ தாவூத்-1991. அறிவிப்பவர் : அல்ஹாரிஸ் இப்னு ஹாதிப்(ரலி)

பிறையை பார்த்து இபாதத்துகளை செய்ய வேண்டும். அது கண்களுக்கு மறைக்கப்பட்டால் மாதத்தை 3௦ஆக ஆக்கிக்கொள்ளவேண்டும். இதுதான் ஹதீஸ்களில் இருந்து நாம் தெளிவாக விளங்கிகொள்பவை. பிறையை பார்த்துதான் இபாதத்துகளை அமைத்துக்கொள்ளவேண்டும் என்று மாநபி தோழர்களிடம் வாங்கிக்கொண்ட உறுதிமொழி. அந்த உறுதி மொழி நமக்கும் பொருந்தும். நாமும் அந்த உறுதிமொழியை கடைபிடிப்போமாக.

சுருக்கம்:
1. தொழுகை நேரங்கள் பற்றிய ஹதீஸ்களில் அவற்றை கணக்கிட எந்த தடையும் இல்லை. மாறாக நபி ஸல் நிழலை பார்த்தது நிழல் கடிகாரத்திலிருந்து தொழுகை நேரத்தை அறிந்துகொள்ள மட்டுமே.
2. நம்முடைய  தொழுகை நேரக்கணக்குகள் மாநபியின் நிழல் கடிகார கணக்குகள்தான் என்பதை “தொழுகை நேரங்கள்” எனும் கட்டுரையில் தெளிவாக விளக்கியுள்ளோம் பார்க்க http://hafsa13.blogspot.com/2015/04/PrayerTimes.html