بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
நம்பிக்கைக் கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது.
அல்குர்ஆன் 4:103
குர்ஆனில் ஐவேளை தொழுகைகள்
11:114 பகலின் இரு ஓரங்களிலும் (ஃபஜ்ர், அஸர்), இரவின் பகுதிகளிலும் (மக்ரிப், இஷா) தொழுகையை நிலை நாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை
17:78 சூரியன் சாய்ந்ததிலிருந்து (லுஹ்ர்) இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் (மக்ரிப்) பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலை நாட்டுவீராக! பஜ்ரு (தொழுகையில்) குர்ஆன் சாட்சி கூறப்படுவதாக இருக்கிறது
20:130 (முஹம்மதே!) அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! சூரியன் உதிப்பதற்கு முன்பும் (ஃபஜ்ர்), அது மறைவதற்கு முன்பும் (அஸ்ர்), இரவு நேரங்களிலும் (மக்ரிப், இஷா) உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக! பகலின் ஓரங்களிலும் (ஃபஜ்ர், அஸர்) துதிப்பீராக! இதனால் (கிடைக்கும் கூலியில்) நீர் திருப்தியடையலாம்.
30:17,18 நீங்கள் மாலைப் பொழுதை அடையும் போதும் (அஸ்ர்), காலைப் பொழுதை அடையும் போதும் (ஃபஜ்ர்), அந்தி நேரத்திலும் (மக்ரிப்), நண்பகலிலும் (லுஹ்ர்) அல்லாஹ்வைத் துதியுங்கள்! வானங்களிலும், பூமியிலும் அவனுக்கே புகழனைத்தும்.
50:39 அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! சூரியன் உதிப்பதற்கு முன்பும் (ஃபஜ்ர்), மறைவதற்கு முன்பும் (அஸ்ர்) உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக!
24:58 நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
தொழுகையின் முக்கியத்துவத்தை முஸ்லிம்களுக்கு விளக்க தேவை இல்லை. தொழுகை இல்லாதவருக்கும் அதன் முக்கியத்துவம் தெரியும். அவ்வாறான தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதும் மிக முக்கியமாகும். அதை பறைசாற்றுவதுதான் மேலே உள்ள இறை வாக்கியம். தொழுகையின் முக்கியத்துவத்தை விளக்கும் இஸ்லாம் அதை எந்த நேரத்தில் தொழவேண்டும் என்பதையும் மிக தெளிவாக கற்றுத்தந்துள்ளது. நபிகளாரின் பொன்மொழிகளையும் அவர்களது செயல்களையும் விளக்கும் ஹதீஃதுகளை புரட்டினால் தொழுகைக்கான நேரங்களை தெரிந்துகொள்ளும் முறைகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன.
தொழுகை
|
ஆரம்ப நேரம்
|
முடியும் நேரம்
|
ஆதாரம்
|
தொழக்கூடாத நேரங்கள்
முஸ்லிம் (1512)
|
ஃபஜ்ர்
|
அதிகாலையில் கிழக்கு தொடுவானம் நீளவாக்கில் ஒளிரும் நேரம்
|
சூரியன் உதிக்க துவங்கும் நேரம்
|
முஸ்லிம் 1075
|
அடிவானத்தில் செங்குத்தாக தெரியும் ஒளியை விடியல் என எண்ணி ஃபஜ்ர் தொழக்கூடாது. (முஸ்லிம் 1994) சூரியன் உதிக்க ஆரம்பித்து உதித்து முடியும் வரை தொழக்கூடாது.
|
ளுஹர்
|
சூரியன் உச்சத்தை கடந்த உடன்
|
ஒரு பொருளின் உயரத்தின் அளவு மற்றும் சூரியன் வானின் உச்சத்தில் இருக்கும்போது அந்த பொருளின் நிழளின் அளவு; ஆகிய இந்த இரண்டு அளவுகளுக்கு சமமாக அந்த பொருளின் நிழல் வரும் நேரம்.
|
முஸ்லிம் 1075
|
சூரியன் அதன் உச்சத்தை கடக்கும் நேரத்தில் தொழக்கூடாது
|
அஸ்ர்
|
ஒரு பொருளின் உயரத்தின் அளவு, சூரியன் வானின் உச்சத்தில் இருக்கும்போது அந்த பொருளின் நிழளின் அளவு ஆகிய இந்த இரண்டு அளவுகளுக்கு சமமாக அந்த பொருளின் நிழல் வரும் நேரம்.
|
சூரியன் மறையத் துவங்கும் வரை
|
திர்மிதீ 138
முஸ்லிம் 1076
நஸாஇ 529
|
அஸ்ர் தொழுதபின் மக்ரிப் வரை தொழக்கூடாது.
|
மக்ரிப்
|
சூரியன் முழுமையாக மறைந்ததிலிருந்து
|
மேற்கு தொடுவானத்தின் செம்மை மறையும் வரை
|
முஸ்லிம் 1076
|
சூரியன் மறைய தொடங்கி முழுமையாக மறையும் வரை தொழக்கூடாது
|
இஷா
|
மேற்கு தொடுவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து
|
இரவின் பாதி வரை
|
முஸ்லிம் 1079
முஸ்லிம் 1074
|
ளுஹர் நேரம்:
மேலே அட்டவணையில் உள்ள தொழுகை நேரங்களை வானியலின் உதவியை கொண்டு கணிதமாக மாற்ற வேண்டும். முதலில் நாம் கணக்கிடவேண்டியது ளுஹர் தொழுகைக்கான நேரம். ளுஹர் நேரத்தை விஞ்ஞான மொழியில் சூரியன் நமது தீர்க்க ரேகையை கடக்கும் நேரம் என்கிறோம். அதாவது நாம் தொழுகை நேரம் கணக்கிடும் பள்ளிவாசலின் தீர்க்க ரேகையை சூரியன் கடக்கும் நேரத்தைத்தான் வானில் சூரியன் உச்சத்தில் இருப்பதாக கூறுகிறோம். இந்த நேரத்தில் தொழக்கூடாது சூரியன் உச்சத்தை முழுமையாக கடந்த உடன் ளுஹர் தொழுக்கைகான நேரம் ஆரம்பமாகிறது.
நாம் கணக்கிட போகும் நாளை ஜூலியன் நாளாக முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். ஜூலியன் நாள் என்பது கிரகோரியன் நாட்காட்டியைப்போல சூரிய இயக்கத்தை மையமாக கொண்ட நாட்களை எண்ணும் ஒரு சூரிய நாட்காட்டியாகும். இது வானியல் கணிதத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஜூலியன் நாளும் ஜூலியன் நாட்காட்டியும் வெவ்வேறு. இரண்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜூலியன் நாட்காட்டி ஜுலியஸ் சீசர் எனும் மன்னராலும் ஜூலியன் நாள் என்பது பிற்காலத்தில் ஜூலியஸ் ஸ்காலிகர் என்பவரின் மகன் ஜோசப் ஸ்காலிகர் என்பவரால் உருவாக்கப்பட்டது.
ஒரு சூரிய நாட்காட்டி இல்லாமல் நம்மால் தொழுகை நேரங்களை கணக்கிட இயலாது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. இதை ஏற்கனவே அல்லா குர்ஆனிலும் கூறிவிட்டான்
[6:96] அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதிக் களமாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.
ளுஹர் நேரம்;
சூரியன் உச்சத்தைக் கடப்பதே லுஹ்ர் நேரம். சூரியன் உச்சத்தைக் கடக்கும் பார்முலா:
Dhuhr = 12 + TimeZone - Lng÷15 - EqT.
இதில் TIMEZONE எனப்படுவது நேர மண்டலம். இந்தியாவிற்கு இது 5.5.
Lng எனப்படுவது பள்ளிவாசலின் தீர்க்கரேகை (longitude)
EqT எனப்படுவது நேரச்சமன்பாடு (equation of time). இதை கணக்கிடும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கே ளுஹர் நேரம் ஒரு எண்ணாகவே கிடைக்கும். ளுஹர் நேரம் 12:30 எனில் 12.5 என விடை கிடைக்கும். 12:15 எனில் 12.25 என விடை கிடைக்கும். இதை நாம்தான் நேரக்குறியீடாக மாற்றவேண்டும். விடையில் இருக்கும் தசம பின்னத்தை 60ஆல் பெருக்கினால் போதுமானது. (உதா: 0.5 x 60 = 30; 0.25 x 60 = 15)
ஃபஜ்ர் நேரம்:
ஃபஜ்ரின் ஆரம்ப நேரத்தை விஞ்ஞான மொழியில் கூற வேண்டுமெனில் சூரியன் கிழக்கு தொடுவானத்திற்கு கீழே 18 டிகிரியில் வரும் நேரமாகும். சூரியன் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வரும் நேரத்தை கண்டுபிடிக்க பயன்படும் சூத்திரம்.
T (F) = 1÷15 COS⁻¹[(-SIN F – SIN Lat x SIN d)÷(COS Lat x COS d)]
இதில் F க்கு பதில் 18 ஐ இட்டு கணக்கிட்டால் ளுஹரிலிருந்து ஃபஜ்ர் வரையுள்ள நேர வித்தியாசத்தை கணக்கிட்டுவிடலாம். பின்னர் அந்த நேர வித்தியாசத்தை ளுஹர் நேரத்திலிருந்து கழிப்பதன் மூலம் ஃபஜ்ர் நேரம் கிடைக்கும். இங்கே Lat என்பது நமது ஊரின் குறுக்கை. d என்பது declination of sun. சூரியனின் சாய்வு
Fajr = Dhuhr - T(18)
சூரிய உதயம்:
சூரிய உதயத்தையும் மேலே உள்ள சூத்திரத்தை பயன்படுத்தி கண்டுபிடித்துவிடலாம். கிழக்கே சூரியன் -0.833 டிகிரியில் வரும்போது அதன் மேல் முனை நமக்கு கண்ணுக்கு தெரியும். F க்கு பகரமாக 0.833 ஐ இட்டு கணக்கிட்டால் ளுஹரிலிருந்து உதயம் வரையுள்ள நேர வித்தியாசத்தை கணக்கிட்டுவிடலாம். பின்னர் அந்த நேர வித்தியாசத்தை ளுஹர் நேரத்திலிருந்து கழிப்பதன் மூலம் உதயத்தின் நேரம் கிடைக்கும்.
Sunrise = Dhuhr - T(0.833)
மக்ரிப்:
மக்ரிபின் நேரம் சூரியன் முழுமையாக மறைந்ததிலிருந்து துவங்குகிறது. இதை மேற்க்கே சூரியன் 0.833 க்கு கீழ் செல்லும் நேரத்தை அறிவதை மூலம் கணக்கிடலாம். சூரிய உதயதிற்கும் இதே கணக்கென்பதால் அந்த நேர வித்தியாசத்தை ளுஹர் நேரத்துடன் கூட்டுவதன் மூலம் மக்ரிபின் நேரம் கிடைக்கும்.
Sunset = Dhuhr + T(0.833)
இஷா:
இஷாவின் ஆரம்ப நேரத்தை விஞ்ஞான மொழியில் கூற வேண்டுமெனில் சூரியன் மேற்கு தொடுவானத்திற்கு கீழே 18 டிகிரியை அடையும் நேரமாகும். இதே தான் ஃபஜ்ர் நேரத்தின் கணக்கென்பதால் அதே விடையை ளுஹர் நேரத்துடன் கூட்டுவதன் மூலம் இஷாவின் நேரம் கிடைக்கும்.
Isha = Dhuhr + T(18)
அஸ்ர்:
ஒரு பொருளின் உயரத்தின் அளவு, சூரியன் வானின் உச்சத்தில் இருக்கும்போது அந்த பொருளின் நிழளின் அளவு ஆகிய இந்த இரண்டு அளவுகளின் கூட்டுதொகைக்கு சமமான நீளத்தை அப்பொருள் அடையும் நேரமே அஸ்ர் நேரமாகும்.
அஸ்ர் நேரம் = (சூரியன் உச்சத்தில் இருந்தபோது நிழலின் நீளம்) + (அப்பொருளின் உயரம்)
எடுத்துக்காட்டாக: ஒரு மீட்டர் நீளமுள்ள குச்சியை செங்குத்தாக நட்டுவைத்துள்ளோம். அதன் நிழல் சூரியன் உச்சத்தில் இருந்தபோது 10 சென்றிமீட்டர் நீளம் கொண்டதாக இருந்தது. எனில் நிழலின் நீளம் ஒரு மீட்டர் 10சென்றிமீட்டர் அளவுக்கு வளரும் நேரமே அஸ்ர் நேரம். 1m + 10cm = 1.1m
இதற்கு பின்வரும் சூத்திரம் பயன்படுகிறது. இதன் மூலம் ளுஹரிலிருந்து அஸ்ர் வரையுள்ள நேர வித்தியாசத்தை கணக்கிட்டுவிடலாம். பின்னர் அந்த நேர வித்தியாசத்தை ளுஹர் நேரத்துடன் கூட்டுவதன் மூலம் அஸ்ர் நேரம் கிடைக்கும்.
A= 1÷15 COS⁻¹{[SIN(COT⁻¹(1+TAN(Lat-D))– SIN Lat x SIN d)]÷(COS Lat x COS d)}
Asr = Dhuhr + A
இஷா முடியும் நேரம்:
இஷாவின் இறுதி நேரம் இன்றைய சூரிய மறைவுக்கும் நாளைய சூரிய உதயத்திற்கும் நடுவேயுள்ள நேரமாகும். இதை பின்வரும் சூத்திரம் மூலம் கணக்கிடலாம்.
Midnight = sunset + (tomorrow’s Sunrise – today’s Sunset) ÷2
மேலே உள்ள சூத்திரங்களில் இருக்கும் D மற்றும் EqT ஆகியவற்றை கணக்கிடும் முறையை கீழே தந்துள்ளோம். விருப்பமுள்ளவர்கள் வாசிக்கவும்.
D மற்றும் EqT நாளுக்கு நாள் மாறுபடும். எனவே நாம் கணக்கிடப்போகும் நாள் மற்றும் நாம் கணக்கிடப்போகும் பள்ளிவாசலின் தீர்க்க ரேகை ஆகிவற்றைக் கொண்டே இதை செய்ய முடியும்.
நாம் கணக்கிடபோகும் ஆங்கில நாளை வருடம்-மாதம்-நாள் எனும் வரிசையில் வைத்துக்கொள்ள வேண்டும். உதா YEAR = 2015 MONTH = 4 DATE = 18.
பின்னர், பின் வரும் கணக்கை பயன்படுத்தி ஜூலியன் நாளை கண்டுபிடிக்க வேண்டும்
A = |(14-MONTH)÷12|
y = YEAR + 4800 - A
m = MONTH + 12 A - 3
JD = DAY + |(153m+2)÷5| + 365y + |y÷4| - |y÷100| + |y÷400| - 32044.5
மேலே உள்ள கணக்கில் |....| எனும் குறியீடு வகுத்தலில் கிடைக்கும் தசம எண்களை விட்டுவிடவேண்டும் என்பதை குறிப்பதாகும். அதாவது விடை 12.34 என இருப்பின் 0.34 ஐ விட்டுவிட்டு 12 ஐ மட்டும் எடுக்க வேண்டும்
ஜனவரி 1, 2000 மதியம் 12 இலிருந்து குறிப்பிட்ட அந்த தேதிவரை கடந்துள்ள ஜூலியன் நாட்களின் எண்ணிகையை கண்டு பிடிக்க வேண்டும்.
D = JD – 2451545.0
Mean anomaly of the Sun:
g = 357.529 + 0.98560028 D
Mean longitude of the Sun:
q = 280.459 + 0.98564736 D
Geocentric apparent ecliptic longitude of the Sun:
L = q + 1.915 sin g + 0.020 sin 2g
இதில் g, q, L ஆகியவை டிகிரியில் கிடைக்கும். டிகிரி கோணக்கணக்கு 0க்கும் 360க்கும் இடையில் இருக்கவேண்டும். g, q, L 360 க்குள் இல்லையெனில் இவற்றை 360ஆல் வகுத்து 360 க்குள் கொண்டு வரவேண்டும்.
சூரியக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தொலைவை வானியல் அலகில் கண்டுபிடிக்க, Distance between sun and earth in AU, இது தொழுகை நேரக் கணக்கிற்கு தேவையற்றது
R = 1.00014 – 0.01671 cos g – 0.00014 cos 2g
mean obliquity of the ecliptic, in degrees:
e = 23.439 – 0.00000036 D
right ascension, in 0 – 24hr:
RA = 1÷15 TAN⁻¹(cos e x sin L ÷ cos L)
சூரிய சாய்வு, declination, in degrees:
d = SIN⁻¹(sin e x sin L)
நேரச்சமன்பாடு, The Equation of Time, in 0 – 24hr:
EqT = q÷15 – RA
இரு நூற்றாண்டுகளுக்கு சூரிய ஓட்டத்தை சில வினாடிகள் துல்லியமாக இம்முறை கணக்கிடுகிறது
ஏன் இந்த கணக்கு:
இதில் ஃபஜ்ருக்கும் இஷாவுக்கும் 18 டிகிரி எனும் கணக்கு சரியானதா?
விடியல் அல்லது அந்தி எனப்படும் மஞ்சள் நிற ஒளி நிறைந்த பொழுதை ஆங்கிலத்தில் ட்வைலைட் (twilight) என்பர். இந்த விடியலின் ஆரம்ப நேரம்தான் ஃபஜ்ரின் ஆரம்ப நேரமாகும். எப்போது அடிவானம் வெளுக்கிறது என்று விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்தால் அது சூரியன் அடிவானத்திலிருந்து 18டிகிருக்கு வரும்போது ஏற்படுவதாக அறியலாம். ஆனால் இது பூமியின் எல்லா பகுதிக்கும் பொருந்துமா என வினவினால்! இல்லை! பூமி 23.45 டிகிரி சாய்வாக சுழல்வதால் ஒவ்வொரு கால நிலையிலும் அந்தி மற்றும் விடியல் பொழுதுகளின் நேரம் மாறும். விடியல் மற்றும் அந்தியில் ஏற்படும் இந்த நேர வித்தியாசம் வெப்பமண்டல பகுதி அல்லது டிராபிக்கல் பகுதி என அறியப்படும் பூமத்தியரேகைக்கு வடக்கே 23.45 டிகிரியிலிருந்து தெற்க்கே 23.45 டிகிரி வரை உள்ள பகுதிகளில் ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே இருப்பதால் நிலையான 18 டிகிரி எனும் கணக்கு வெப்பமண்டல பகுதிக்கு பொருந்தும்.
பூமத்திய ரேகையிலிருந்து விலக விலக காலைநிலை மாறும்போது விடியல்/அந்தி நேரங்கள் அதிகமாக பாதிக்கப்படும். குறிப்பாக 48.5 டிகிரிக்கு மேலுள்ள நாடுகளில் கோடைகாலத்தில் சூரியன் மறைந்து மறுநாள் சூரியன் உதிக்கும் வரையிலும் வானின் வெண்மை மாறாமல் இருக்கும் இதற்கு காரணம் சூரியன் மறைந்தாலும் அது அடிவானத்திலிருந்து 15டிகிரிக்கு கீழே போகாது. இத்தகைய பகுதிகளில் இஷா தொழுகையும் ஃபஜ்ர் தொழுகையும் மிகச்சிரமமானதான ஒன்றாக இருக்கும். இத்கைய நாடுகளில் மற்று கணித முறைகளை பின்பற்ற வேண்டும்.
வெப்பமண்ட பகுதிகளை தவிர வேறு பகுதிகளில் ஃபஜ்ர் மற்றும் இஷா தொழுகை நேரங்களின் முறைகள் மாறுவதால் அந்தந்த பகுதிகளில் அவர்கள் ஆய்வு செய்ததன் அடிப்படையில் ஃபஜ்ர் மற்றும் இஷா நேரக் கோணங்களை மாற்றி இருப்பார்கள். இந்த அடிப்படையில் பின் வரும் பிரபலமான முறைகளை தொழுகை நேரங்களை கணக்கிடும் மென்பொருட்களில் நீங்கள் காணலாம். இதில் வெப்பமண்டலத்தில் இருக்கும் நமக்கு பொருந்தும் வகையில் இருப்பது University of Islamic Sciences, Karachi ஆகும். அதையே தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். Jafari, Tehran அல்லது shia எனும் முறைகள் இருப்பின் தவிர்த்துக்கொள்ளுங்கள். இவை ஷியா மதத்தினர் பயன்படுத்துபவை
Convention
|
Fajr Angle
|
Isha Angle
|
Muslim World League
|
18
|
17
|
North America
|
15
|
15
|
Egyptian General Authority of Survey
|
19.5
|
17.5
|
Umm al-Qura University, Makkah
|
18.5
|
90 min after Maghrib 120 min during Ramadan
|
University of Islamic Sciences, Karachi
|
18
|
18
|
அஸ்ர் தொழுகையின் நேரம் ஒரு பொருளின் நிழல் ஒரு மடங்கு வரும்போதுதான் தொடங்குகிறதா?
அஸ்ர் தொழுகையை பற்றிய அதிகமான ஹதீஸ்கள் “ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்திற்கு சமமாக வரும்போது அஸ்ர் தொழுகையின் நேரம் தொடங்குகிறது” என்றே வருகிறது. ஏகத்துவ ஆலிம்களால் எழுதப்பட்ட எல்லா தொழுகை புத்தகங்களிலும் இவ்வாறே காண்பீர்கள். ஆனால் அஸ்ருக்கு பாங்கு சொல்லும்போது ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்திற்கு சமமாக வருகிறதா எனப்பாருங்கள். வருடத்திற்கு இரண்டு நாட்கள் (மார்ச்21 செப்டம்பர்21) மட்டுமே அவ்வாறு வருவதைக் காண்பீர்கள். மற்ற நாட்களில் ஒரு பொருளின் உயரத்தை விட அதன் நிழல் மிக அதிகமாகவே இருக்கும். டிசம்பர் மாதம் 22ம் தேதி ஒரு பொருளின் நிழல் அந்த உயரத்தில் ஒன்றே முக்கால் மடங்கு வரும்போதுதான் நாம் அஸ்ருக்கு பாங்கு சொல்கிறோம். இதற்கு என்ன காரணம்.
உலகில் பல பகுதிகளில் நண்பகல் நேரத்தில் அதாவது சூரியன் அவர்களது தீர்கரேகையை கடக்கும் நேரமான ளுஹர் நேரத்தில் நிழல்களானது அந்த பொருட்களின் உயரத்திற்கு சமமாக இருக்கும். அதாவது ளுஹர் நேரத்திலேயே நிழல் ஒரு மடங்கு வந்து அஸ்ர் நேரத்தையும் குறிக்கும். இப்போது ளுஹர் தொழுவதா அஸ்ர் தொழுவதா எனும் குழப்பம் வரலாம். எனவே ளுஹர் தொழுகைகான நேரத்தில் நிழல் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவும் அதற்கு மேலாக அந்த பொருளின் உயரம் அளவிற்கும் நிழல் வளரும்போதுதான் அஸ்ர் தொழுகைகான நேரத்தை கணக்கிட வேண்டும். இப்படி செய்வது மார்க்க விரோதமாகாதா? இல்லை!
நஸாஇ 529 இல் வரும் ஹதீஸில் மாநபி தொழுகை நடத்தியதை பற்றி வருகிறது. ளுஹர் நேரத்தில் செருப்பின் வார் அளவிற்கு நிழல் இருந்ததாகவும் எனவே அஸ்ர் தொழுகையை அந்த பொருளின் உயரம் மற்றும் செருப்பின் வார் அளவுக்கு அதன் நிழல் வரும்போது மாநபி தொழுததாக செய்தி வருகிறது.
உங்கள் சாப்ட்வேரில் அஸ்ர் நேரத்திற்கான முறையை தேர்ந்தெடுக்கும் வசதி இருப்பின் எச்சரிக்கையாக அதில் standard அல்லது shafi’i எனும் முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். Hanafi, Ashari அல்லது shia முறைகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்
தொழக்கூடாத நேரங்கள்:
தொழக்கூடாத நேரங்களையும் மாநபி தெளிவாக சொல்லித்தந்து விட்டார்கள். அதிகாலையின் செம்மை கிழக்கு வானத்தில் தெரியும் முன்பே சில காலங்களில் ஒரு செங்குத்தான வெண்மை நிற ஒளி வானத்தில் தோன்றலாம். இதை சோடியாக்கல் லைட் (zodiacal light) என்றழைகின்றனர். சூரியமண்டலத்தில் பூமிக்கு வெளியே இருக்கும் தூசி மண்டலத்தில் சூரிய ஒளிபட்டு எதிரொளிப்பதால் இந்த செங்குத்தான ஒளி ஏற்படுகிறது. முஸ்லிம் 1994, 1995, 1996, 1997 & 1998 ஆகிய ஹதீஸ்களில் இந்த பொய்யான விடியலையும் (ஸுபுஹ் காதிப்) உண்மையான விடியலையும் (ஸுபுஹ் ஸாதிக்) மாநபி வேறுபடுத்திக் காட்டியுள்ளார்கள். கீழே வலப்புறம் இருப்பது உண்மையான விடியல். செம்மையான வெளிச்சம் நீளவாட்டில் பரவி இருப்பதை காணலாம். இடப்புறம் இருப்பது பொய்யான விடியல், செங்குத்தான வெண்மையான ஒளியை காணலாம்.
* சூரியன் உதிக்க தொடங்கி முழுமையாக வெளிப்படும்வரை தொழக்கூடாது
* சூரியன் உச்சத்தை கடக்கும் நேரத்தில் தொழக்கூடாது
* அஸ்ர் தொழுது விட்டு மக்ரிப் நேரம் வரை தொழக்கூடாது
* சூரியன் மறைய ஆரம்பித்து முழுமையாக மறையும் வரை தொழக்கூடாது.
இவற்றிற்கான ஆதாரங்களை முஸ்லிம் 1512 இல் பார்க்கலாம்.
மேலே இருக்கும் தொழக்கூடாத நேரங்களின் காரணமாக தொழுகை நேரங்களை கணக்கிட்டபின் பேணுதலுக்காக சூரிய உதயத்தில் ஒரு நிமிடம் குறைத்தும், நண்பகலில் ஓரிரு நிமிடங்கள் கூட்டியும் மறைவில் ஒரு நிமிடம் தாமதப்படுதியுமே சாப்ட்வேர்களில் குறிப்பிட்டிருப்பார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்! MS Excelஇல் இந்த பார்முலாக்களை பயன்படுத்தி தொழுகை நேரம் மற்றும் கிப்லாவை கணக்கிடும் முறை ஆகியவற்றை வடிவமைத்துள்ளோம். அனைவருக்கும் இது குறித்த கல்வி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அதை இங்கே வெளியிடுகிறோம்.
இங்கே க்ளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
நன்றி:
National Oceanic and Atmospheric Administration Website
The United States Naval Observatory Website
Help file of Prayer Time Calculator 3.0, by Dr. Monzur Ahmed http://www.mooncalc.talktalk.net/ptc/
US Naval observatory website: http://aa.usno.navy.mil/faq/docs/SunApprox.php
stargazing.net http://www.stargazing.net/kepler/sunrise.html