بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
கமிட்டியின் முரண்பாடுகள்:
1. ஹிஜ்ரி கமிட்டியின் கிப்லா - (Greenwich) க்ரெனிச்
சர்வதேச நேரம்:
பூமி ஒரு முறை சுழல்வதற்கான சராசரி நேரம் 24மணிக்கூறு. Mean solar day= 24hr. இதுவே ஒரு நாள் எனப்படுகிறது. பூமி மேற்கு கிழக்காக சுற்றுவதால் பூமியில் இருக்கும் நெடுக்கைகள் சூரிய நேரத்திற்கு இணையானதாக இருக்கும். Geographical longitude is analogues to time zones. பூமியின் விட்டதை 360 டிகிரிகளாக பிரித்தால் அதற்கு இணையான 24மணி நேரத்தை இவ்வாறு பிரிக்கலாம். 360 ÷ 24 = 15டிகிரி/மணி. அதாவது பூமி 24மணி நேரத்தில் 360டிகிரி சுற்றினால் ஒரு மணி நேரத்தில் 15டிகிரி சுற்றும். எனவே பூமியில் ஒவ்வொரு 15டிகிரி நெடுக்கைக்கும் ஒரு மணிநேர வித்தியாசம் இருக்கும். இதுவே நேர மண்டலம் எனப்படுகிறது.
ஏற்கனவே (Greenwich) க்ரெனிச்சை முதன்மை நெடுக்கையாக தேர்ந்தெடுத்துவிட்டதால் அதையே சர்வதேச நேரத்திற்கான முதன்மை நெடுக்கையாகவும் முடிவுசெய்தனர். இதனடிப்படையில் க்ரெனிச்சை ௦hr நேரமண்டலாமாகவும் அதன் கிழக்கே ஒவ்வொரு 15டிகிரியையும் +1 hr அதிகரிக்கும் நேரமண்டலங்களாகவும், அதன் மேற்கே ஒவ்வொரு 15டிகிரியையும் -1 hr குறையும் நேரமண்டலங்களாகவும் வகுத்தனர். எனவே நாம் சர்வதேச நேரம் என்பது க்ரெனிச்சின் சராசரி சூரிய நேரமாகும் (mean solar time)
இப்படிப்பட்ட க்ரெனிச்சை நஸ்ரானிகளின் கிப்லா என்று கமிட்டியினர் விமர்சனம் செய்கின்றனர். இன்றுவரை எந்த நஸ்ரானியோ எந்த நஸ்ராணி அமைப்போ க்ரெனிச்சை தங்களது கிப்லா எனக்கூறவில்லை. அப்படி பிரச்சாரம் செய்வது கமிட்டியினர் மட்டுமே. அப்படி பிரச்சாரம் செய்துவிட்டு அந்த சர்வதேச நாளை பின்பற்றுவதையும் அதே நஸ்ராணி கிப்லாவை மையமாக கொண்ட IDLஐ அல்லாஹ்வின் அத்தாட்சி என்று கூறுவதும் இவர்களே.
2. சங்கமம் தான் கும்ம-வின் நாள், மாதத்தின் இறுதி நாள் என்று சொல்லிவிட்டு அப்படி அல்லாஹ் ரசூல் சொன்னார்களா என கேட்பது
இந்த படம் தெளிவாக கூறுகிறது சங்கமம் என்பதுதான் பழைய மாதத்தையும் புதிய மாதத்தையும் பிரிக்கும் நிகழ்வாகும். மேலும் இதை உறுதிப்படுத்தும் விதாமாக இவர்களின் பின்வரும் எழுத்துக்கள் உள்ளன
“நபி(ஸல்) அவர்கள் பிறை பிறக்கும் அந்த மறைக்கப்படுகின்ற தினத்தை பழைய மாதத்தில் கூட்டி அடுத்த நாளில் இருந்து புதிய மாதத்தைத் துவங்க நமக்கு வழிகாட்டியுள்ளார்கள் என்ற விரிவான விளக்கங்களை பிறையும் புறக்கண்ணும் என்ற நமது ஆய்வு நூலில் பார்க்கலாம்”
“உர்ஜூஃனில் கதீம் என்ற புறக்கண்ணால் பார்க்க இயலும் பிறையின் இறுதிப் படித்தரத்திற்கு அடுத்தநாள் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) உடைய தினமாகும். சங்கமம் என்பது ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும் சூரியன்,சந்திரன், பூமி இம்மூன்றும் ஒரு கோட்டில் அல்லது ஒரே நேர்கோட்டில் சங்கமிக்கும் தினமாகும்.”
“அந்த புவிமைய சங்கம (Geocentric Conjunction Day) தினத்தில் தேய்பிறை மற்றும் வளர்பிறையைப் பொதுவாக பார்க்க முடியாதவாறு புறக்கண்களுக்கு அது மறைக்கப்பட்டிருக்கும். இதற்குத்தான் கும்மிய, உஃமிய, கபி(F)ய, க(G)ம்மிய,ஹஃபிய கும்ம உடைய அல்லது குபிய உடைய நாள் என்கிறோம்.”
மேலும் இவர்கள் முஹம்மத் அஉதா (ஒதே) விற்கும் காலித் ஷவுகதிற்கும் எழுதிய பல ஈமெயில்களில் சங்கம தினம் தாம் கும்ம-வின் தினம் என்று ரசூலுல்லாஹ் சொல்லிவிட்டார்கள் அன்று பிறை தெரியும் என்பது அவர்களை பொய்யாக்குவது என்றும் எழுதி வருகின்றனர்.
சங்கமம்தான் புதிய மாதத்தின் துவக்கத்தை குறிக்கிறது என்று விளக்கி விட்டு அதன் அடிப்படியில் ஒரு நாட்காட்டியையும் உருவாக்கிவிட்டு அப்படிதான் அல்லா, ரசூல் சொன்னார்களா என கேட்பது இறையச்சம் உள்ள செயலா?
இதோ கமிட்டியினரின் கேள்வி:
(Geocentric Conjunction) புவிமைய சங்கமம் நிகழ்ந்ததை அறிந்தபின் நோன்பு வையுங்கள், சங்கமம் நிகழ்ந்ததை அறிந்தபின் நோன்பை விடுங்கள். உங்களுக்கு சங்கமம் நிகழும் முன் அடுத்த நாள் விடிந்து விட்டால், அந்த நாளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள் என்று அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களோ நமக்குக் கட்டளை இட்டிருந்தால் மேற்படி கேள்வியில் ஒரு அர்த்தம் இருக்கும்.
நிச்சயமாக அல்லாஹ்வும் ரசூலும் அப்படி கூறவில்லை. அப்படி கூறுவது நீங்கள்தாம். சங்கமத்தை துல்லியமாக கணக்கிட்டு ஒரு துல்லியமான நாள்காட்டி உருவாக்கிவிட்டோம் என பிரச்சாரம் செய்வது கமிட்டியினர்தான். இப்படி ஒரு கேள்வி எழுப்பி இவர்களே இவர்களை முரண்படுகிறார்கள்.
3. கிரிகோரியன் நாள்காட்டி மாசுபட்டது பிழையானது எனக்கூறிவிட்டு அதன் மீது ஹிஜ்ரி எனும் போர்வையை போர்த்துவது?
புவிமைய சங்கமத்தின் 3000வருட கணக்கை நாஸா வெளியிட்டுள்ளது. அவர்களே இவர்களுக்கு இஸ்லாமிய நாட்காட்டியை அமைத்து கொடுத்துள்ளதாகவும் பிரச்சாரம் செய்கின்றனர். உண்மைதான்! நாசாவின் 3000 வருடத்திற்கான சங்கம அட்டவணையானது கிரிகோரியன் நாட்காட்டியின் அடிப்படையில், நஸ்ராணி கிப்லாவை அடிப்படையாக கொண்ட சர்வதேச நாளில், அதே நஸ்ராணி கிப்லாவை அடிப்படையாக கொண்ட சர்வதேச நேரப்படி வெளியிடப்பட்டுள்ளது. அதே கிரிகோரியன் நாட்காட்டியில் சங்கமம் நிகழும் சர்வதேச நாளின் அடுத்தநாளில் இஸ்லாமிய மதத்தின் முதல் நாள் என அச்சிட்டால் அதுவே இவர்களது ஹிஜ்ரி கமிட்டி காலண்டர். எதை அசுத்தம் என்று விமர்சிக்கிறார்களோ அதையே அடிப்படையாக கொள்வது அறியாமையா திட்டமிட்ட செயலா?
4. குறைப் (ரலி) சொன்னது சம்பவம்! உமர் (ரலி) செய்தது இஸ்லாமா?
குறைப் சொல்வதை ஹதீஸ் அல்ல சம்பவம் என்கின்றனர். ரசூலுல்லாஹ் அங்கீகரித்த யானை ஆண்டை மாற்றி அவர்களது மறைவுக்குப்பின் ஹிஜ்ரி ஆண்டு என்று புதிய ஆண்டை கொண்டுவந்த உமர் (ரலி) இன் செயல் குர்ஆன் சுன்னவா?
நபித்தோழர்கள் சங்கமத்தை வினாடி துல்லியமாக கணக்கிட்டு ஹிஜ்ரி காலண்டரை உருவாக்கினார்களா? நபித்தோழர்கள் கணக்கிட்ட முறை (algorithm) எங்கே?
5. சந்திர தேதிக்கோடு:
உங்கள் காலண்டர் சர்வதேச காலண்டரா? உலகில் உள்ள எல்லோரும் இதை பயன் படுத்தலாமா? என கமிட்டியினரிடம் கேட்டால் ஆம் என்கின்றனர். சர்வதேச சந்திர தேதிக்கோடு இல்லாமல் சர்வதேச சந்திர நாட்காட்டியை நிறுவ முடியாதே உங்கள் சந்திர தேதிக்கோடு எனக்கேட்டால் எங்களுக்கு சந்திர தேதிக்கோடு இல்லை என்கின்றனர்.
இந்த பதில் இவர்களுக்கு சந்திர தேதிக்கோடு என்றால் என்ன என்பதே தெரியவில்லை என்பதை காட்டுகிறது. அல்லது தெரிந்துகொண்டே மறைகின்றனர். இவர்களது நாட்காட்டி அளவுகோலை அலசினால் இவர்களது சந்திர தேதிக்கோடு எது என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
க்ரீன்விசில் சூரியன் உச்சத்தில் இருக்கும் பொது IDL இலிருந்து நாளை துவங்குவது சர்வதேச சூரிய தேதிக்கோடு. சந்திர தேதிக்கோடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் சங்கமம் நிகழும்போது அதன் எதிர் நெடுக்கையிளிருந்து மாதத்தை துவங்க பயன்படும் கோடு ஆகும். ஆனால் ஒவ்வொரு மாதமும் ஒரே இடத்தில சங்கமம் நிகழ்வதில்லை. எனவே பூமியில் ஒரு நிலையான இடத்தில சந்திர தேதிக்கோட்டை கற்பனை செய்ய முடியாது. எனினும் அப்படி ஒரு கோடு இல்லாவிட்டால் மாதத்தை சர்வதேச அளவில் துவங்க இயலாது என்பதால் பலரும் பல கோட்டை கற்பனை செய்தனர். சிலர் தங்களது ஊரின் நெடுக்கையை கற்பனை செய்தனர். உதா சவுதி & லிபியா. (ஆனால் அவர்கள் அதை சர்வதேச நாட்காட்டி என சொல்லவில்லை)
கமிட்டி கலண்டரில் மாதம் எங்கிருந்து தொடங்குகிறது என்று கண்டு பிடித்தால் அவர்களது சந்திர தேதிக்கோட்டை கண்டு பிடித்துவிடலாம். அவர்களது மாதமும் நாளும் 180 டிகிரி IDLஇலிருந்தே துவங்குகிறது என்பதை நாம் ஆய்வு செய்து தெரியவேண்டியதில்லை. அவர்களே பல முறை சொல்லிவிட்டனர். அப்படியானால் அதன் எதிர் நெடுக்கையான க்ரெனிச்தான் இவர்களது தேதிக்கோடு. அங்குதான் எல்லா மாதமும் சங்கமம் நிகழ்வதாக கற்பனை செய்கின்றனர். இப்போது விளங்குகிறதா எங்களுக்கு சந்திர தேதிக்கோடு இல்லை என்று ஏன் சொல்கிறார்கள் என்று. ஆம்! அதுதான் இவர்கள் பிரச்சாரம் செய்யும் நஸ்ரானிகளின் கிப்லா!!!
6. நாளின் ஆரம்பம்:
என்னதான் நீங்கள் நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் என்று கூறினாலும் நோட்டீஸ் அடித்தாலும் மேடையில் பேசினாலும் உங்கள் நாட்காட்டியில் நாளின் ஆரம்பம் தேதிக்கோட்டில் பகல் 12மணியாகும்போதுதான் அல்லது (நீங்கள் கிருத்துவர்களின் கிப்லா என்று சொல்லிக்கொண்டே அதை உங்களுக்கும் கிப்லாவாக ஆக்கிக்கொண்டீர்களே அந்த) க்ரெனிச்சில் இரவு 12மணி ஆகும்போதுதான் உங்கள் காலண்டரில் நாளும் மாதமும் துவங்குகிறது. இதற்கு நீங்கள் இந்த வருடத்திற்கு இட்ட காலண்டரே சாட்சி ஆகிவிட்டது.
ரபிஉல் அவ்வல் 1436இன் இறுதியில் நடக்கும் அமாவாசை 18.02.15 புதன் கிழமை 23:46:54 க்கு நடந்தது. நள்ளிரவு ஆவதற்கு 13மூன்று நிமிடங்களும் 7 நொடிகளுமே இருந்த நிலையில் நள்ளிரவுவரை காத்திருந்து 12 மணிக்கு பின்வரும் அடுத்தநாள் வியாழக்கிழமையில் மாதத்தை துவங்கினீர்கள்.
அதே போல் துல் ஹிஜ்ஜா 1436இன் இறுதியில் நடக்கும் அமாவாசை 13.10.15 செவ்வாய் கிழமை 00:05:34 க்கு நடக்க இருக்கிறது. நள்ளிரவு கடந்து 5நிமிடம் ஆகிவிட்டதால் மீதம் இருக்கும் 23மணி 55நிமிடத்தையும் சேர்த்து ஒரு நாளை இறுதி நாளாக கணக்கிட்டுவிட்டீர்கள்.
ஒரு மாதத்தில் 13நிமிடங்களுக்கு பின் வரும் நள்ளிரவை காத்திருந்து நாளையும் மாத்தியும் துவங்கினீர்கள். அது பரவாயில்லை. இன்னொரு மாதம் நள்ளிரவு கழிந்து 5நிமிடம் ஆகிவிட்டதற்காக அந்த முழுநாளையும் கடைசி நாளாக மாற்றி விட்டீர்கள். இந்த இரண்டு உதாரணங்களில் மிகதெளிவாக தெரிகிறது “5 நிமிடங்கள் ஆனாலும் பரவாயில்லை துல்லியமாக க்ரெனிச்சில் நள்ளிரவு 12 ஆகும்போதுதான் நாங்கள் நாளையும் மாதத்தையும் துவங்குவோம்” என்பது தான் உங்கள் நாட்காட்டியின் அளவுகோல்.
இன் ஷா அல்லாஹ் தொடரும்......