Monday, 8 December 2014

கஅபா பூமியின் மையத்தில் உள்ளதா?

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم


அக்கால மக்களால் விளங்க இயலாத, இன்றைய அறிவியலாளர்களால் மட்டுமே விளக்க இயன்ற பல அறிவியல் உண்மைகளை குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ளான். இவை குர்ஆன் இறைவேதம்தான் என சாட்சி அளிப்பவை என்பதில் மாற்றுகருத்து இல்லை. ஆனால் சிலர்  அவசர கோலத்தில் தங்களுக்கு தெரிந்த அறிவியலை வைத்தோ அல்லது குர்ஆனில் தாங்கள் விளங்கியதிலிருந்தோ சிலவற்றை எடுத்து இந்த குர்ஆன் வசனம் இந்த அறிவியலைப் பற்றி பேசுகிறது என்று தவறாகப் பொருத்தி விடுகின்றனர். இதை செய்பவர்கள் அனைவரும் இது நன்மை தரும் என்ற நோக்கில்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் அறிவியல் எந்த அளவுக்கு உண்மையானது என்றும் அப்படி அது உண்மையாகவே இருந்தாலும் குறிப்பிட்ட அந்த குர்ஆன் வசனம் அல்லது ஹதீஸ் இதைதான் கூறுகிறதா என்று சிந்திக்காமலும் இதை செய்துவிடுகின்றனர். இதன் பின்விளைவு எதிரிகள் இதை ஒரு விமர்சனமாக எடுக்கிறார்கள். ஒவ்வொரு முஸ்லிலும் அதற்கு பதில் சொல்லும் நிலைமைக்கு தள்ளப்படுகிறான். அப்படிப்பட்ட தகவல்கள் நமது பார்வையில் வரும்போது அதன் உண்மை நிலையை ஆராய்ந்து தொடர்புடைய சகோதரருக்கு விளக்கி வருகிறோம். அதனடிப்படையிலான ஒரு கட்டுரைதான் இது. 

கிருத்துவருடன் நடந்த விவாதித்ததில் “வேதாகமம் உலகத்தை வட்டம் என்கிறது தட்டை என்கிறது. அப்படியானால் உலகம் நாணயத்தின் வடிவில் உள்ளதா” எனக்கேட்டு அனைவரின் கைதட்டல்களையும்களையும் பெற்று நமது மனதில் இடம்பிடித்த ஜாகிர் நாய்க் கஅபாவைமுஸ்லிம்கள் வழிபடுகிறார்களா எனும் கேள்விக்கு என்ன பதில் அளிக்கிறார் என பாருங்கள்.

 இதில் கஅபாவை வணங்குகிரீர்களா எனும் கேள்விக்கு சாகிர் நாயக் கூறும் விடைகளை பார்ப்போம்.
  • கஅபா கிப்லா ஆகும். உலகத்தில் உள்ள எல்லோரும் தொழும்போது நோக்க வேண்டிய திசை ஆகும். முஸ்லிம்கள் எல்லாவற்றிலும் ஒற்றுமையை நம்புவதால்  தொழும்போது ஒற்றுமைக்காக கஅபாவை நோக்க வேண்டும். இதை இறைவன் சூறா பகராவில் கூறியுள்ளான்
  • உலகத்தின் முதல் வரைபடம் ஒரு முஸ்லிமால் வரையப்பட்டது. அது வடதுருவத்தை கீழாகவும் தென் துருவத்தை மேலாகவும் கஅபாவை மையமாகவும் கொண்டிருந்தது. பின்னர் வந்த மேற்குலகத்தினர் அதை தலைகீழாக திருப்பினர். அப்போது வடதுருவம் மேலாகவும் தென் துருவம் கீழாகவும் அமைந்தது எனினும் கஅபா அதன் மையத்தில்தான் இருந்தது. உம்றா ஹஜ் போன்ற புனித பயணங்களின் போது முஸ்லிம்கள் கஅபாவை வலம் வர வேண்டும். ஒரு வட்டத்திற்கு ஒரு மையம்தான் இருக்கும். இப்படி கஅபா எனும் ஒரே  மையத்தை வலம் வருவதன் மூலம் அல்லாஹ் ஒருவன் என சாட்சி கூறுகிறோம். என ஆவேசமாக கூறுகிறார்.
  •  கடைசியாக அஜ்ருல் அஸ்வத் கல்லை பற்றி உமர் ரலி கூறுவதை குறிப்பிடுகிறார்.
  • இரண்டாம் வீடியோவில் அல்லாஹ் கூறியதால் கஅபாவை வலம் வருகிறோம் எனினும் அவர் சிந்தித்தபோது காபா பூமியின் மையப்பகுதியில் இருப்பது ஒரு காரணமாகப் படுவதாகவும் கூறுகிறார்.
அல் இத்ரீஸி தான்முதன் முதலில் உலக வரைபடத்தை வரைந்தார் என்பது தவறான கருத்தாகும். அதற்கு முன்னரே வரைபடங்களை மனிதன் வரைந்து விட்டான். நாம் அறிந்து எந்த வரைபடத்திலும் கஅபா மையத்தில் இல்லை. முதலில் தட்டையான வரைபடத்தை பார்த்து அதில் ஒரு இடம் மையத்தில் இருக்கிறது என்று சொல்வது அறிவிலித்தனம். தட்டையான உலக வரைபடத்தை பார்த்து கிப்லாவை குறிப்பதும் அதைவிட பெரிய அறிவிலித்தனம். வரைபடங்களை பற்றியும் கிப்லாவை பற்றியும் நான் எழுதிய “கிப்லா ஓர் அறிவியல் பார்வை” எனும் கட்டுரையில் இதை பற்றி தெளிவாக விவரிதுள்ளேன்.
தட்டையான வரைபடத்தில் உலகின் எந்த பகுதியை வேண்டுமானாலும் மையமாக வைத்து வரையலாம். மனிதன் வரைந்த படத்தில் இறைவனின் ஆலயம் மையத்தில் இருக்கிறது என்று கூறுவது என்ன அறிவோ? அப்படியே அது மையத்தில் இருந்தாலும் பரவா இல்லை. இப்படி கூறுவதன் மூலம் உலகம் தட்டையாக இருக்கிறது என இவர் கூறுகிறார் என்றே நினைக்க தோன்றுகிறது.
உலகம் வட்ட வடிவத்தில் இல்லை. உலகம் கிட்டத்தட்ட உருண்டை வடிவத்தில் உள்ளது. தட்டையாக வட்டமாக உள்ள ஒரு பொருளில் மையம் என்பதை அதன் புறப்பரப்பில் (surface) குறிக்கலாம். உதாரணத்திற்கு ஒரு நாணயத்தை கூறலாம். ஒரு உருண்டையில் மையம் என்பது அதன் பரப்பில் அமையுமா? உதாரணத்திற்கு ஒரு ஆரஞ்சு பழத்தின் மையம் என்ன என்று வினவினால் அதன் தோல் பகுதியில் ஒரு புள்ளியை வைத்து இதுதான் மையம் என காட்டமாட்டீர்கள். மாறாக அதை சரியாக இரண்டாக வெட்டி, வெட்டப்பட்ட துண்டின் மையத்தை காட்டுவீர்கள். ஆக ஒரு கோளத்திற்கு மையம் என்பது அதன் கருவில் அமையும். இதுதான் பூமிக்கும் பொருந்தும். பூமியின் மையம் என்பது அதன் உள்ளேயிருக்கும் பாறைக்குழம்புகளிலான கருப்பகுதில் உள்ளது. அதன் மேற்பரப்பில் அல்ல.
என்னதான் இரண்டாம் வீடியோவில் இது அவரது கருத்து எனக்கூறினாலும் முதல் வீடியோவில் இதைதான் அவர் மையக்கருத்தாக கூறுகிறார். இதனால் ஏற்படும் பின் விளைவுகளை அவர் சற்றும் சிந்திக்கவில்லை. என்னுடன் வேலைபார்த்த ஒரு இந்து சகோதரர் கேட்ட கேள்வி. “மெக்கா தான் பூமியின் மையமாமே? அதனால் தான் நீங்கள் அதை வலம் வருவதாக என் முஸ்லிம் நண்பன் கூறுகிறான். உண்மையில் நீங்கள் அதற்காக தான் அதை வலம் வருகிறீர்களா?” இது சாகிர் நாயக் எனும் அறிஞரால் பரப்பப்பட்டு முஸ்லிம்கள் அவர்களது மாற்று மத நண்பர்களுக்கு கொடுக்கும் விளக்கம்.
எல்லாவற்றிற்கும் ஒரு அறிவியல் விளக்கம் கொடுக்கவேண்டும் எனும் மனப்பாங்குதான் இதற்கு மூலகாரணம். சாகிர் நாயக் இதற்கு குர்ஆனில் விளக்கம் தேடி கிடைக்காததால் பைபிளில் இருந்து விளக்கி உள்ளார் எனவே தோன்றுகிறது. கிருத்துவரிடம் உலகம் நாணயம் வடிவமானது அல்ல உருண்டை வடிவமானது என விளக்கும் சாகிர் நாயக் முஸ்லிம்களிடம் உலகம் தட்டையாக உள்ளது எனவும் அதன் மையம் கஅபா எனவும் விளக்குகிறார். கிருத்துவருக்கு ஒரு நியாயம் முஸ்லிம்களுக்கு ஒரு நியாயம்.