بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
சர்வதேச பிறை என்பது விஞ்ஞானம் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் ஒருவருக்கொருவர் ஏமாற்றிக்கொள்ளும் ஒரு தத்துவமாகும். இதில் படித்தவர்களும் உண்டு படிக்காதவர்களும் உண்டு. இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கு விஞ்ஞானம் தெரிவதில்லை. இஸ்லாமிய விஞ்ஞானிகள் தெரிந்து கொண்டே உண்மையை மறைகின்றனர். சர்வதேச பிறை என்பது சாத்தியம் இல்லை என்று சொல்லிக்கொண்டே சில விஞ்ஞானிகள் சர்வதேச நாட்காட்டிகான தீர்வை வழங்குவதை என்னவென்று சொல்வது.
இறைவன் சூரியனையும் சந்திரனையும் காலங்காட்டிகளாக அமைத்துள்ளான். சூரியனை ஒரு நாளை கணக்கிடவும், அதன் உட்பகுதிகளை கணக்கிடவும் மேலும் ஒரு நாளின் அடிப்படையிலான வாரத்தை கணக்கிடவும் நமக்கு ஏற்படுத்தியுள்ளான். சந்திரனை ஒரு மாதத்தையும் அதன் அடிப்படியிலான ஒரு வருடத்தையும் கணக்கிடவும் இறைவன் அமைத்துள்ளான். காலத்தை மட்டும் கணக்கிட இவைகளை அல்லாஹ் நமக்கு தரவில்லை. நமக்கு தெரியாத பல நன்மைகளை இவை மனித சமூகத்திற்கு நாள்தோறும் செய்கின்றன.
சந்திரனின் இயக்கத்தை கொண்டு சர்வேச பிறையை பின்பற்ற இயலாது. அப்படி கூறுபவர்கள் தங்களை முட்டாளாக்கி அடுத்தவர்களையும் முட்டாளாக்குகிறார்கள். சர்வதேச பிறை என்பது ஒரு மாயை. இதை யார் தொடங்கி வைத்தார் அவர்களுக்கு என்ன லாபம் என்பதை இறைவன் மட்டுமே அறிவான். சர்வதேச பிறை, சர்வதேச நாள்காட்டி என்பவை ஒவ்வொருவரின் மனோ இச்சையே. அப்படி ஒன்று மார்க்கத்திலும் இல்லை சந்திரனிலும் இல்லை. சர்வதேச பிறை மற்றும் சர்வதேச நாள்காட்டி தொடர்பாக நான் செய்த ஆய்வை இங்கே காணலாம் bit.ly/astrohilal இதில் சர்வதேச பிறை சாத்தியமா என்பதை மிகுந்த விஞ்ஞான விளக்கங்களுடன் தெளிவுபடுத்தி உள்ளேன்.
இறைவன் சந்திரனை படைத்த போது அதன் இயக்கத்தில் சர்வதேசம் என்றொரு வார்த்தை இல்லாதவாறு படைத்து விட்டான். இதை நாம் சந்திரனின் இயக்கத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். இதை பின் வரும் இறை வசனங்களும் தெளிவு படுத்துகின்றன.
2:185 .... உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்....
55:5 சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.
. “சூரியனும் சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன” எனும் இறை வசனத்திற்கேற்ப இயங்கும் சந்திரனின் கணக்கை நாம் படித்தால் அது ஒரு ஆச்சரியமான உண்மையை வெளிப்படுத்துகிறது. மாதத்தின் துவக்கத்தை குறிக்கும் சங்கமத்தை (அமாவாசையை) இந்த மாதம் சந்திரன் பூமியின் ஒரு இடத்தில இருந்து துவக்கினால் அந்த மாத இறுதியில் அதே இடத்தில சந்திரன் மாதத்தை முடிப்பதில்லை. உதா; இந்த மாதம் மொரோக்கோவில் அமாவாசை ஏற்பட்டு, மாதம் மொரோக்கோவிலிருந்து தொடங்கினால் அடுத்த மாதம் மீண்டும் மொரோக்கோவிலிருந்து தொடங்காது. அடுத்த மாதம் ஜப்பானில் தொடங்கும். எனில் மொரோக்கோவிலிருந்து மேற்கு நோக்கி ஜப்பான் வரை உள்ள பகுதிகளுக்கு மாதம் 30 நாட்களாகவும், மொரோக்கோவிலிருந்து கிழக்கு நோக்கி ஜப்பான் வரை உள்ள பகுதிகளுக்கு மாதம் 29 நாட்களாகவும் இருக்கும். மாதத்தை மொரோக்கோவில் தொடங்கிய சந்திரன் அதை மொரோக்கோவில் முடிக்காமல் இடையில் வைத்து ஜப்பானில் முடித்துவிட்டதால் ஜப்பான் முதல் மொரோக்கோ வரையுள்ள நாடுகளுக்கு மாதம் ஒரு நாள் குறைவாக அமைந்துவிடுகிறது. இப்படித்தான் எல்லா மாதமும் சந்திரன் மாதத்தை தொடங்கிய இடத்தில் முடிக்காமல் அதற்கு முன்னரே வேறொரு இடத்தில் முடித்து விடுகிறது. மேலும் இதனால் மொரோக்கோவிலிருந்து மேற்கு நோக்கி ஜப்பான் வரை உள்ள பகுதிகளுக்கு மாதம் திங்கள் கிழமையிலும் மொரோக்கோவிலிருந்து கிழக்கு நோக்கி ஜப்பான் வரை உள்ள பகுதிகளுக்கு மாதம் ஞாயிற்றுக்கிழமையிலும் தொடங்கும். இதுதான் இறைவனின் கணக்கு. இதைதான் யார் அம்மாதத்தை அடைகிறார்களோ என்று கூறி எல்லோரும் அந்த மாதத்தை ஒரே நேரத்தை அடைய மாட்டார்கள் என்று இறைவன் தெளிவுபடுத்துகிறான். இதைதான் இன்றைய விஞ்ஞானம் சாட்சி கூறுகிறது. இதனால் ஒரே நாளில் நோன்பு நோற்பதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவதும் சாத்தியமன்று. இப்படி வாதிடுபவர்கள் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் எனும் அவர்களின் மனோ இச்சைக்காக மட்டுமே செய்கிறார்கள். இவர்களின் மனோ இச்சையை இறைவன் பின் வரும் வசனத்தில் மிக தெளிவாக கண்டிக்கிறான்.
إِنَّمَاالنَّسِيءُزِيَادَةٌفِيالْكُفْرِ
9:37: . . .நசீஉ இறை மறுப்பை அதிகப்படுத்தும். . .
நசீஉ என்றால் முன் பின் மாற்றுவது என்று மொழியாக்கம் செய்யப்படுகிறது. நபி (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த அரபிகள் அவர்களின் தேவைக்காக இறைவன் புனிதமாகிய மாதங்களை மாற்றினார். சில வருடங்களில் அவர்கள் இறைவன் கூறாத வேறு மாதங்களை புனிதம் என்றனர். சில வருடங்களில் மீண்டும் புனித மாதங்களை புனிதம் என்றனர். இதை தான் இறை நிராகரிப்பை அதிகப்படுத்தும் என்று எச்சரிக்கிறான்.
பல இறைவசனங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்கள் உடையதாக இருக்கும். அதன் இரண்டாவது அர்த்தம் இந்த காலத்திற்கு விளங்கவில்லை என்றால் மனிதன் அறிவில் வளரும் வேறொரு காலத்தில் சிறந்த விளகமாக அமையும். குர்ஆனில் இருக்கும் பல அறிவியல் சான்றுகள் இதற்கு உதாரணமாக கூறலாம். அப்படிப்பட்ட ஒரு வார்த்தைதான் நசீ இதற்கு முன்பின் மாற்றுவது என்ற பொருளை தவிர INTERCALARY என்றொரு பொருளும் உள்ளது. INTERCALARY என்பது நாட்காட்டிகள் கால நிலை மாற்றத்தை சரியாக பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக சில வருடங்களில் ஒரு நாளையோ அல்லது ஒரு மாதத்தையோ அதிகப்படுதுவதாகும். உதா: இப்போது புழக்கத்தில் இருக்கும் ஆங்கில நாட்காட்டியில் 4 வருடங்களுக்கு ஒரு முறை பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளை அதிகப்படுத்துவது.
சந்திர நாள்காட்டியை பொருத்தவரை இந்த வருட றமதான் மாதம் கோடை காலத்தில் வந்தால் எட்டு வருடங்களுக்கு பின் றமதான் மாதம் வசந்த காலத்தில் வரும் அடுத்த எட்டு வருடகங்ளுக்கு பின் குளிர் காலத்தில் வரும் அடுத்த எட்டுவருடத்தில் இலை உதிர் காலத்தில் வரும். இப்படி சந்திர நாட்காட்டி காலநிலை மாற்றங்களை பிரதிபலிப்பதாக இருக்காது. ஆனால் சூரிய நாள்காட்டியில் கோடை காலத்தில் இருக்கும் மாதங்கள் எல்லா வருடமும் கோடை காலத்திலேயே இருக்கும். நபி (ஸல்) அவர்களது காலத்திற்கு முன்பு வாழ்ந்த அரபுகளும் யூதர்களும் அவர்களின் புனித பயணங்களும் பண்டிகைகளும் நல்ல காலநிலையில் வருவதை விரும்பினர் எனவே சந்திர நாள்காட்டி சூரிய நாள்காட்டியை போல் காலநிலையை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக சில வருடங்களில் அவர்கள் மாதங்களின் எண்ணிக்கையை 13ஆக ஆக்கினர்.
இதற்கும் சர்வதேச பிறைக்கும்/நாள்காட்டிக்கும் என்ன தொடர்பு என்று சிந்திக்க தோன்றும்!. இருக்கிறது!. மாதம் என்பது பூமியில் ஒரு பகுதிக்கு 29 நாட்களாகவும் மறு பகுதியினருக்கு 30 நாட்களாகவும் இருக்கும்படியாகவே அல்லாஹ் சந்திரனையும் பூமியையும் படைத்துள்ளான். இதை எனது ஆய்வில் தெளிவு படுத்தியுள்ளேன். சர்வதேச நாள்காட்டி மற்றும் சர்வதேச பிறை கொள்கை உடையவர்கள் 30 நாட்கள் மாதம் உள்ளவர்களிடம் மாதத்தை 29 நாட்களில் முடிக்க சொல்கிறார்கள் அல்லது 29 நாட்கள் மாதம் உள்ளவர்களிடம் பிறை பிறந்தும் மாதத்தை 30 ஆக நீட்ட சொல்கிறார்கள். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் ஒரு மாதத்தில் உலகின் ஒரு பகுதியினரை கும்ம-வின் நாளில் மாதத்தை துவங்க சொல்கின்றனர். அடுத்த மாதத்தில் பிறை பிறந்தும் உலகின் ஒரு பகுதியினரை மாத துவக்கத்தை ஒரு நாள் தள்ளிப்போட சொல்கின்றனர். தங்களின் வசதிக்காக யூதர்கள் மாதங்களின் எண்ணிக்கையை மாற்றினர். இவர்கள் பிறை ஒற்றுமைக்காக நாட்களின் எண்ணிக்கையை மாற்றுகின்றனர். ஒரு மாதத்தில் முந்தய மாதத்தின் கடைசி நாளை இந்த மாதத்தில் சேர்கின்றனர். அடுத்த மாதத்தில் இந்த மாதத்தின் முதல் நாளை முந்தய மாதத்துடன் சேர்கின்றனர்.அவர்கள் சூரிய நாள்காட்டியுடன் சந்திர நாள்காட்டியை இணையாக்க அதை செய்தனர். இவர்கள் சூரிய நாளுடன் சந்திர நாளை இணையாக்க இதை செய்கின்றனர். யூதர்கள் செய்த அதே காரியத்தை தான் இவர்களும் செய்கிறார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இது யூத சிந்தனைதான்.
55:5 சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. என்று இறைவன் கூறும்போது அந்த கணக்கு இவர்களின் பிறை ஒற்றுமைக்கு இசைந்து வரவில்லை. எனவே இவர்களாகவே ஒரு கணக்கை இடுகின்றனர். இறைவனின் கணக்கை மாற்ற முயலும் இவர்களின் கணக்கும் அல்லாஹ்விடமே உள்ளது.