Sunday, 15 October 2017

மனாஸிலில் தடுமாறும் ஹிஜ்றா

மனாசில் என்ற வார்த்தை குர்ஆனில் 10:5 மற்றும் 36:39 ஆகிய வசனங்களில் இடம்பெற்றிருக்கிறது. இந்த வார்த்தையை மொழிபெயர்த்தவர்கள் அவர்களுக்குத் தெரிந்த நியாயத்தின் அடிப்படையில் மொழிபெயர்த்திருக்கின்றனர். குர்ஆனை தாய் மொழியில் படிப்பவர்களுக்கு அந்த மொழிபெயர்ப்பு போதுமானதாக இருக்கிறது. அந்த மொழிபெயர்ப்புகளில் தவறான புரிதல் ஏதும் இருக்கிறதா என்று யாரும் ஆராயவில்லை.
சமீபகாலத்தில் அந்த வார்த்தையை மார்க்க சட்டமாக மாற்றுவதற்கு ஒரு குழு முயல்வதால் மனாசில் என்ற வார்த்தையின் சரியான புரிதலை நோக்கி பயணிக்க வேண்டிய தேவை பிறைவாசிகளுக்கு ஏற்பட்டது. அந்த வார்த்தையின் விளக்கத்தை ஹதீஸ்கள், தப்ஸீர்கள், வரலாறு மற்றும் விஞ்ஞான ரீதியாகவும் நாம் விளக்கியிருக்கும் நிலையில் நம் மீது அவதூறுகளை வீசுவதிலேயே அந்த குழுவினர் குறியாக இருப்பதால் அதை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டிய ஒரு நிர்பந்த நிலை நமக்கு இருக்கிறது, எனவே "மனாசில்" என்ற வார்த்தையை தெளிவாக விளக்க முயல்கிறோம். இன்ஷா அல்லாஹ்.
10:5 மற்றும் 36:39 ஆகிய இரண்டு  வசனங்களில் "மனாசில்" என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கிறது.
"முந்தைய உர்ஜுனைப்போல திரும்பும் வரை சந்திரனுக்கு மனாசிலை நாம் நிர்ணயித்திருக்கிறோம்" (36:39)
சந்திரனுக்கு மனாசில் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக குர்ஆன் வசனம் 36:39 கூறுகிறது. அவ்வாறு மனாசில் நிர்ணயிக்கப்பட்டது எதற்காக என்றும் வசனம் 10:5 தெளிவுபடுத்துகிறது.
"சூரியனை பிரகாசமாகவும் சந்திரனை வெளிச்சமாகவும் அவனே அமைத்தான். மேலும், அதற்கு (சந்திரனுக்கு) மனாசிலை நிர்ணயித்தான், ஆண்டுகள் மற்றும் (காலக்)கணக்கை அறிந்து கொள்வதற்காக..." (10:5)
சந்திரனுக்கு நிர்ணயிக்கப்பட்ட மனாசில் மூலம் ஆண்டுகளையும் காலக்கணக்கையும் அறிந்து கொள்ள முடியும் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. முதலில் நமக்கு தெரிய வேண்டியது சந்திரனுக்கு நிர்ணயிக்கப்பட்ட அந்த மனாசில் எது?
மனாசில் என்ற வார்த்தையை
**படித்தரங்கள்
**நிலைகள்
**தங்குமிடங்கள்
என பலவாறாக மொழிபெயர்த்துள்ளனர்.
இங்கு பிரச்சனை என்னவென்றால் "மனாசில்" என்ற வார்த்தையை மொழிபெயர்த்ததில் உள்ள புரிதல் குறைபாடுதான். பொதுவாக தமிழில் மொழிபெயர்க்க முடியாத குர்ஆன் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவதற்கு நாம் தயங்குவதில்லை.
"ஸலாத்" என்ற வார்த்தையை "தொழுகை" என்று மொழிபெயர்க்கிறோம். "சதக்கா" என்ற வார்த்தையை "தர்மம்" என்று மொழிபெயர்க்கிறோம்.
ஆனால் "ஸக்காத்" என்ற வார்த்தையை "செல்வ வரி" என்றோ "அபிவிருத்தி வரி" என்றோ மொழிபெயர்ப்பதில்லை.
"ஜிஸ்யா" என்ற வார்த்தையை "காபிர் வரி" என்றோ "பாதுகாப்பு வரி" என்றோ மொழிபெயர்ப்பதில்லை.
"ருகூவு" என்ற வார்த்தையை "குனிதல்" என்றோ "முதுகை வளைத்தல்" என்றோ மொழிபெயர்ப்பதில்லை.
ஆக, நேரிடையாக மொழிபெயர்க்க முடியாத குர்ஆன் வார்த்தைகளை அரபு பெயரிலேயே அழைப்பதில் நமக்கு பிரச்சினை ஏதுமில்லை.
மனாசில் என்ற வார்த்தையை தெளிவாக விளங்கிக்கொள்ள இயலாத நிலையில் அதை "மனாசில்" என்று அழைப்பதே சிறந்தது.
மனாசில் என்ற வார்த்தையின் விளக்கத்தை அறிந்துதான் அதை மொழிபெயர்த்தோம் என்று கூறுவார்களேயானால் அப்போதுதான் அதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய தேவையும் நமக்கு ஏற்படுகிறது. அதையும் பார்ப்போம்.
10:5 மற்றும் 36:39 ஆகிய வசனங்களில் இருந்து நாம் அறிவது...
**சந்திரனுக்கு மனாசில் இருக்கிறது.
**அந்த மனாசிலைக் கொண்டு ஆண்டுகள் மற்றும் காலங்களை அறிந்துகொள்ள முடியும்.
மனாசில் என்ற வார்த்தையை மனிதர்களோடு இணைத்தால் வீடுகள், தங்குமிடங்கள் மற்றும் தகுதிகள் என்ற அர்த்தங்கள் கிடைக்கிறது. இதே அர்த்தங்களில் ஹதீஸ்களிலும் கையாளப்பட்டுள்ளது.
ஆனால், மனாசில் என்ற வார்த்தையை சந்திரனோடு இணைத்து சொல்லும்போது கிடைக்கின்ற ஒரே வார்த்தை "மனாசிலுல் கமர்" என்ற சொல்லாடல் மட்டுமே. இதை ஆங்கிலத்தில் Mansions of the moon என்றும் தமிழில் "சந்திர நட்சத்திரங்கள்" அல்லது "ராசி நட்சத்திரங்கள்" என்றும் அழைக்கின்றனர்.
உலகின் அனைத்து சமுதாயங்களும் "ஆண்டு" என்று சொல்வது பருவங்கள் (Seasons) மாறுவதைத்தான். நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் பருவங்கள் மாறிமாறி வருவதையே மக்கள் "ஆண்டு" என்று அழைத்தனர்.
(தங்களுக்கு ஏதுவான பருவத்தில் ஹஜ் கிரியை நடத்துவதையே அரபுகள் விரும்பினர். அதனால் ஒவ்வொரு ஹஜ்ஜும் அந்த  பருவத்திலேயே வருவதற்கு ஏதுவாக சந்திர மாதங்களை நஸிய்யு செய்தனர். அதனால் "துல்ஹஜ்" மாதம் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட பருவத்திலேயே வந்து கொண்டிருந்தது. 12 சந்திர மாதங்களை கணக்கிட்டு அதுதான் "ஒரு ஆண்டு" சொல்லும் பழக்கம் அவர்களிடம் அப்போதைக்கு இல்லை. அவர்கள் அறிந்திருந்த ஆண்டு என்பது பருவங்கள் மீண்டும் மீண்டும் வரக்கூடிய நிகழ்வே ஆண்டு என்பதை மட்டுமே)
இவ்வாறு பருவங்கள் மாறுவதை நட்சத்திரங்களை அடையாளப்படுத்தி முன்கூட்டியே அறிந்து கொண்டனர். வானத்தில் தெரியும் எல்லா நட்சத்திரங்களும் பருவங்கள் மாறுவதை காட்டுவதில்லை. பூமியில் இருந்து வானத்தை பார்க்கும்போது சூரியன் மற்றும் சந்திரன் ஒரு குறிப்பிட்ட பாதையில் மட்டுமே பயணிப்பதை அறிய முடியும். அந்த பாதையில் இருக்கும் பல நட்சத்திரங்களுள் தங்களுடைய பருவங்களுக்கு ஏற்ற சில நட்சத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு உருவங்களும் பெயர்களும் இட்டு அழைத்து வருகின்றனர். இந்த நட்சத்திரங்கள் மட்டுமே பருவங்கள் மாறுவதைக் காட்டும். இந்த நட்சத்திரங்கள்அரபு மொழியில் "மனாசிலுல் கமர்" என்றழைக்கப்படுகிறது.
இந்த நட்சத்திரங்களை வைத்து நாம் எந்த பருவத்தில் இருக்கிறோம் என்பதை அறிய முடியும். அது மட்டுமல்லாமல் ஒரு பருவம் துவங்குவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன என்பதையும், துவங்கிவிட்ட ஒரு பருவம் இன்னும் எத்தனை நாட்களில் முடியும் என்ற காலக்கணக்கினையும் அறியமுடியும். அதாவது, ஒரு ஆண்டு துவங்குவதையும் அது முடிவடைய இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது என்பதையும் இந்த நட்சத்திரங்களைக் கொண்டு துல்லியமாகவே அறிய முடியும். உலகில் இருக்கும் அனைத்து சமுதாயங்களும் இந்த நட்சத்திரங்களைக் கொண்டே அவரவர் ஆண்டுகளை அறிந்து வருகின்றனர்.
10:5 மற்றும் 36:39 ஆகிய வசனங்களில் உள்ள மனாசில் என்ற வார்த்தை சந்திரனுடன் இணைந்து "மனாசிலுல் கமர்" ஆக மாறி ஆண்டுகளையும் காலக்கணக்கையும் கச்சிதமாக அறியத்தருகிறது. 10:5 மற்றும் 36:39 ஆகிய வசனங்களில் இடம்பெற்றிருக்கும் மனாசில் என்ற வார்த்தை சந்திரனின் நட்சத்திரங்களான "மனாசிலுல் கமர்" என்பதை மட்டும்தான் குறிக்கிறது.
இதுவரை செய்யப்பட்டது பிறைவாசிகளின் ஆய்வு.


இனி பார்க்கப்போவது ஹிஜ்ரா கமிட்டியின் ஆய்வு...
ஹிஜ்ரி கமிட்டி அறிஞர்கள் / ஆய்வார்கள் ஒவ்வொருவரும் மனாஸில் பற்றி என்ன பேசியுள்ளனர் என்று நாம் ஆய்வு செய்தோம்.
அறிஞர்-1
ஒவ்வொரு நாளும் வானில் நிலவு ஒரு வடிவில் காட்சியளிக்கும். ஒரு நாளில் நிலவு காட்சியளிக்கும் வடிவமே அதன் மன்சில்.
அறிஞர்-2
ஒவ்வொரு நாளுக்கும் ஒரு படித்தரம் இருக்கும். ஒவ்வொரு படித்தரமும் ஒரு மன்ஸிலில் காட்சியளிக்கும். ஒரு நாளில் தெரியும் படித்தரம் இருக்கும் மன்சிலே அந்நாளில் நிலவு இருக்கும் மன்சில்.
அறிஞர் -3
Manazil = stages
Ahilla = Phases
மனாசிலும் அஹில்லாவும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை எனவே அவற்றை பிரித்துப் பார்க்கக் கூடாது.
அறிஞர் -4
பூமியை சுற்றிலும் நிலவு வட்டப்பாதையில் 360 டிகிரி சுற்றி வருகிறது. ஒரு நாளில் சராசரியாக நிலவு 360 ÷ 29.5 = 12.19 டிகிரி கடக்கிறது. ஒரு நாளில் நிலவு அதன் சுற்றுப்பாதையில் கடக்கும் தூரமே அதன் மன்சில்.
அறிஞர் – 5
சூரியன் மறையும்போது நாம் பிறையை பார்க்கும்போது பிறை அடிவானத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதை விரல்களை வைத்து அளக்க வேண்டும். ஒரு விரல் என்பது ஒரு மனாஸில். 4 விரல்கள் உயரத்தில் இருந்தால் நிலவு நான்காம் மன்ஸிலில் இருக்கிறது.
அறிஞர் – 6
சூரியனும் நிலவும் விலகி இருக்கும் விலகல் கோணமான எலோங்கேசன் தான் மன்சில்.
இவ்வாறு ஒவ்வொரு அறிஞரும் ஒவ்வொரு விளக்கத்தைக் கொடுக்கின்றனர். ஓர் அறிஞர் வடிவங்கள் தாம் மனாஸில் என்கிறார். மற்றொருவர் 360 டிகிரியை 29.53ஆல் வகுக்கக்கிடைப்பதே மன்சில் என்கிறார். எத்தனை விரல்கள் அளவுக்கு உயரத்தில் நிலவு இருக்கிறதோ அத்தனை விரல்களின் எண்ணிக்கை தாம் மன்சில்கள் என்கிறார் மற்றொருவர். வடிவங்களும் மன்சில்களும் வெவ்வேறு விஷயங்கள் தான் ஆனால் அவரை பிரித்து பார்க்க கூடாது, ஏனென்றால் அவை ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை என்று சொல்கிறார் வேறொரு கணக்கீட்டு அறிஞர். எலோங்கேசன் தான் மன்சில் என்கிறார் ஓர் அறிஞர். இவ்வாறாக ஆளுக்கொரு விளக்கத்தைக் கொடுக்கின்றனர்.
மன்சில்களில் இருந்து ஆண்டுகளின் எண்ணிக்கையை அறிய முடியும் என்கிறான் அல்லாஹ். அதாவது ஆண்டுகளை எண்ணிக்கையில் அறிய இயலும் என்கிறான் அல்லாஹ். ஹிஜ்ரா அறிஞர்கள் சொல்லும் எந்த விளக்கதிலாவது ஆண்டுகளை எண்ணிக்கையில் அறிந்துகொள்ள இயலுமா? அவர்களிடமே கேட்டோம்.
*”ஒவ்வொரு வடிவங்களும் தேதியை காட்டும். ஒவ்வொரு மாதங்களையும் நாங்கள் எண்ணுவோம். 12 மாதங்களை நாங்கள் எண்ணும்போது இறுதியில் ஒரு வருடத்தை நாங்கள் எண்ணுவோம்”* என்ற பதிலைத் தந்தார்கள்.
சற்று கவனமாக பாருங்கள்... 12 மாதங்களை எண்ணி அதன் மூலம் ஆண்டுகளை எண்ணுவதாக இருந்தால் அதற்கு வடிவங்களின் வேலை என்ன? எலோங்கேஷனின் வேலை என்ன? விரல்களின் வேலை என்ன? 12 மாதங்களை எண்ணுவதற்கு ஹிஜ்ரா கொள்கைப்படியே 12 அமாவாசைகள் போதுமே. வடிவங்கள் ஏன்? எலாங்கேஷன்கள் ஏன்? விரல்கள் ஏன்? இரண்டு அமாவாசைகளுக்கு இடையே தான் வடிவங்கள் அல்லது எலாங்கேஷன்கள் இருக்கும். ஆக ஆண்டுகளை எண்ணுவதற்கு வடிவங்கள் தேவையே இல்லை எனும்போது அர்த்தமற்ற வார்த்தைகள் அல்லாஹ்விடமிருந்து வராது எனும் முடிவுக்கு வரலாம்.
மேலும் வடிவங்கள் அல்லது எலோங்கேஷன்கள் ஆண்டுகளை எண்ண உதவுமா?
மேலே நாம் சொன்ன விளக்கம் நேரடியாக ஆண்டுகளை எண்ணிக்கையில் காட்டும். ஆண்டின் எந்த பகுதியில் இருக்கிறோம் என்றும் அந்த ஆண்டு இன்னும் எத்தனை நாட்களில் முடியும் என்ன்ற காலக்கணக்கையும் நேரடியாகக் காட்டும். மனாசிலுல் கமர் என்றால் நட்சத்திரங்கள் தாம் என்று நாம் ஹதீஸ்கள், தப்சீர்கள், அகராதிகள், வரலாறு மற்றும் விஞ்ஞானத்தைக் கொண்டு நிறுவிவிட்டோம். ஆனால் மனாஸில் என்ற வார்த்தைக்கு என்ன விளக்கம் என்பதை ஹிஜ்ரா கமிட்டி அறிஞர்களால் சொல்ல இயலவே இல்லை. ஆளுக்கொரு விளக்கத்தை சொல்கிறார்கள். அந்த விளக்கங்கள் எந்த பொருத்தமும் இல்லாமல் எந்த விளக்கமும் இல்லாமல் தொங்கிக்கொண்டு இருக்கின்றன.
மனாஸில் என்ற வார்த்தையை “படித்தரங்கள்”, “தங்குமிடங்கள்”, “வடிவங்கள்” என்று பலவாறாக மொழிப்பெயர்த்து வந்த ஹிஜ்ரா அறிஞர்கள் தற்பொழுது வேறு வழியில்லாமல் பிரபல தவ்ஹீத் அறிஞர் என்று (?) அடைப்புக்குறிக்குள் கேள்விக்குறியை இட்டு அவர்கள் யாரை கேலி செய்வார்களோ அவரின் மொழிப்பெயர்பான “நிலைகள்” என்பதை கையாளுவது வேடிக்கையாக உள்ளது.
ஹிஜ்ரா கமிட்டி சகோதரர்களே! அவதூறுகளை அள்ளி வீசும் முன்னர், கடுஞ்சொற்களால் வசைபாடும் முன்னர் மனாஸில் என்றால் என்ன அவைகளைக் கொண்டு ஆண்டுகளை என்று எண்ணுவது எப்படி என்று கேட்டுவிட்டு வாருங்கள்...

C:\Users\Peer\AppData\Local\Microsoft\Windows\INetCache\Content.Word\நிலைகள்2.jpg

மனாஸில் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள:
திரிக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் -1 http://www.piraivasi.com/2015/08/20.html
விஞ்ஞான ஒளியில் மனாசில் http://www.piraivasi.com/2016/11/11.html
மனாziல் ஒரு பார்வை http://www.piraivasi.com/2016/03/16.html
மனாziலும் படித்தரங்களும் http://www.piraivasi.com/2016/05/11.html
உம்முல் குறாவும்! மன்ஸில்களும்!  http://www.piraivasi.com/2017/01/15.html
மனாஸில் என்றால் என்ன? http://www.piraivasi.com/2017/10/15-3.html