بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
தன் கடையில் இருக்கும் சரக்கு விற்க வேண்டுமனில் பக்கத்துக்கு கடைக்காரனின் சரக்கு மிக மோசமானது என்று பிரச்சாரம் செய்யும் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இந்த நிலைமை கமிட்டிக்கும் வந்தது வேதனைக்குரியது. இது இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம் என்ற தலைப்பில் ஹிஜ்ரி நாட்காட்டியின் தேவையை விளக்கி கமிட்டியினர் வெளியிட்ட புத்தகத்தை ஆய்வு செய்யும் கட்டுரையாகும். கிருத்தவ நாள்காட்டியை முஸ்லிம்கள் பயன்படுத்த கூடாது என்பதற்கு குர்ஆன் வசனம் 2:189 ஐ மட்டும் எடுத்துக்காட்டினால் போதுமானது. “இறைவன் கூறுவது சந்திர நாள்காட்டி; கிருத்துவ நாள்காட்டி என்பது சூரிய நாள்காட்டி எனவே நாம் அதை நம் மார்க்க தேவைகளுக்கு பயன்படுத்த கூடாது” என்பது மிக பலமான ஆதாரமாகும். அதை விட்டுவிட்டு கிரிகோரியன் நாட்காட்டியை பொய்களைச்சொல்லி விமர்சிப்பது தேவையற்ற செயல்.
இவர்களின் அறியாமை வாதங்களுக்கு செல்லும்முன் நாள்காட்டிகளை பற்றி தெரிந்துகொள்வோம். கீழே இருக்கும் அட்டவணைதான் நாட்காட்டிகளின் அடிப்படை.
சூரிய நாட்காட்டி
|
சந்திர நாட்காட்டி
| |
நாள்
|
ஒரு சூரிய உதயம் முதல் மறு சூரிய உதயம் வரை, அல்லது ஒரு சூரிய மறைவு முதல் மறு சூரிய மறைவு வரை. விஞ்ஞான மொழியில் பூமி ஒரு முறை சுழலும் நேரம். இது தோராயமாக 24மணி நேரமாகும்.
|
சந்திரனின் இயக்கத்தில் ஒரு நாள் என்பது இல்லை. சந்திரனை கொண்டு ஒரு நாளை கணக்கிட இயலாது.
|
வாரம்
|
சந்திரன், சூரியன் எனும் இரண்டு கோள்களின் இயக்கங்களிலும் ஒரு வாரம் என்பது இல்லை. எப்படி அல்லாஹ்விடத்தில் ஒரு வருடத்திற்கு 12 மாதம் என்று அவன் கூறுகிறானோ அதே போல் வாரம் என்பதும் அவனிடத்தில் இருந்து வந்திருக்கவேண்டும். எனவேதான் மிக்க சமூகங்களிலும் கலாச்சரங்களிலும் வாரம் என்பது 7 நாட்களாகவே இருக்கிறது. கால் பிறை என்பது 7.4நாள்கள் கொண்டது. இதன் காரணமாகவும் வாரத்திற்கு 7 நாள்கள் வந்திருக்கலாம்.
| |
மாதம்
|
மாதம் என்பது சூரியனின் இயக்கத்தில் இல்லை. சூரியனை கொண்டு மாதத்தை கணக்கிட இயலாது.
|
ஒருமாதம் என்பது ஒரு பௌர்ணமியிலிருந்து மறு பௌர்ணமி வரை உள்ள நாட்களாகும். விஞ்ஞான மொழியில் சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றி வர ஆகும் நேரம். இது சரா சரியாக 29.530589 நாட்கள் ஆகும்
|
வருடம்
|
ஒரு வருடம் என்பது ஒரு கோடைக்கால தொடக்கத்திலிருந்து மறு கோடைக்கால தொடக்கம் வரை உள்ள நாட்களாகும். விஞ்ஞான மொழியில் பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் நேரம். இது சராசரியாக 365.2421897 நாட்கள் ஆகும்
|
சந்திரனின் இயக்கத்தில் ஒரு வருடம் என்பது இல்லை. சந்திரனை கொண்டு ஒரு வருடத்தை கணக்கிட இயலாது.
|
சூரிய நாட்காட்டி:
சூரிய நாட்காட்டி என்பது பூமி சூரியனை சுற்றி வரும் கால அளவுகளை கொண்டு உருவாக்கப்பட்ட நாட்களை கணக்கிடும் முறை.
பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வர ஆகும் காலம் ஒரு வருடம் என அறியப்படுகிறது. இது கால அளவு வருடா வருடமும் மாறிக்கொண்டிருக்கும். இந்த வருடம்பூமி சூரியனை சுற்றிவர 365 ¼ நாட்கள் எடுத்துகொண்டால் அடுத்த வருடம் 365 ½ நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். இதை சராசரியாக 365.2421897 நாட்கள் என கணக்கிட்டுள்ளனர். வருடம் என்பது முழுநாட்களின் எண்ணிகையை கொண்டதாக இருக்கவேண்டும். ஒரு வருடத்திற்கு 365 ¼ நாட்கள் என்ற கணக்கில் நாட்காட்டி அமைக்க இயலாது. எனவே சாதரணமாக வருடத்திற்கு 365நாட்கள் எனவும் 4வருடத்திற்கு ஒரு முறை 366நாட்கள் எனவும் கணக்கிடுகிறோம். இப்படி செய்ய காரணம் 4 வருடங்கள் 365 நாட்கள் என கணக்கிடுவதன் மூலம் கிட்டத்தட்ட நான்கு முறை கால் நாட்களை விட்டு விடுகிறோம் (0.2421 என்பதை 0.25 என தோரயமாக்கி ¼ ). இப்படி தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கால் நாட்களை விடுவதால் நான்காவது ஆண்டில் ஒரு நான் விடுபட்டிருக்கும். நான்காவது ஆண்டில் விடுபட்ட அந்த ஒரு நாளை கூட்டி 366 நாட்களாக கணக்கிடுகிறோம். இப்படி வரும் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளும் “லீப் ஆண்டு” என்று அழைக்கப்படுகிறது. நூற்றாண்டுகள் லீப் வருடங்கள் ஆகாது இதில் நான்கு நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வரும் நூற்றாண்டு விதிவிலக்கு. (அதாவது 1600, 2000 மற்றும் 2400 ஆண்டுகள் லீப் ஆண்டுகள் ஆகும். 1700, 1800, 1900, 2100, 2200 மற்றும் 2300 ஆண்டுகள் லீப் ஆண்டுகள் அல்ல).
மேலும் 0.2421 நாளை 0.25 நாளாக தோராயப்படுதுவதால் 3,300 ஆண்டுகளுக்கு ஒரு நாள் தவறாக வருகிறது. அதாவது 3300 ஆண்டுகள் தாண்டும்போது 1 நாளை நாம் அதிகமாக கணக்கிட்டிருப்போம். இந்த பிழையும் நவீன விஞ்ஞானத்தால் விடை அளிக்கப்பட்டுள்ளது. பூமியின் அச்சில் ஏற்படும் மாற்றத்தாலும் பூமி சுழலும் வேகம் குறைந்து வருவதாலும் 3300 ஆண்டுகளுக்கு ஒரு நாளை அதிகரிக்கும் இந்த பிழை சரிகட்டப்பட்டு 7700 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சூரிய நாட்காட்டியை யார் கண்டுபிடித்தார் என்று பார்ப்போம். இது காலம் காலமாக ரோமானியர்கள் பயன்படுத்திவந்த ஒரு நாட்காட்டியாகும். அதை மன்னர் ஜூலியஸ் சீசர் கி.மு.45இல் முறைப்படுதினார் எனவே அன்று முதல் அது ஜூலியன் நாட்காட்டி என அழைக்கப்பட்டது. ஜூலியன் நாட்காட்டியிலும் வருடத்திற்கு 365 நாட்களும் லீப் வருடங்களுக்கு 366 நாட்களும் அமைந்திருந்தது. இப்படி செய்வதால் 365.2421897 நாட்கள் உள்ள ஒருவருடத்தில் ஒவ்வொரு 128 ஆண்டுகள் ஆகும்போதும் 1 நாள் அதிகமானது. இந்த பிழையை அலோசியஸ் லிலியஸ் எனும் இத்தாலிய மருத்துவர் கண்டுபிடித்தார். அதை சரி செய்யும் முறையையும் கண்டு பிடித்தார். ஈஸ்டர் எனும் கிருத்துவபண்டிகை வசந்தகாலம் தொடங்கிய பின் ஏற்படும் பௌர்ணமிக்குப்பின் வரும் ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும். சூரிய நாள்காட்டி காலநிலையை பிரதிபலிப்பதாக இருப்பதால் எல்லா வருடமும் மார்ச்21 வசந்த காலம் (SPRING EQUINOX) தொடங்குவதை அது காட்டியது. ஆனால் மேலே நாம் சொன்ன பிழையால் மார்ச் 21க்கு சில நாட்கள் முன்னாலேயே வசந்த காலம் தொடங்கியதை கத்தோலிக்க கிருத்தவ உலகம் உணர்ந்தது. 128 வருடங்களுக்கு ஒரு நாள் அதிகமானதால் 15ம் நூற்றாண்டில் மார்ச் 10இலேயே வசந்த காலம் தொடங்கிவிட்டது. இதை உணர்ந்த கத்தோலிக்க கிருத்தவ உலகம் தங்கள் ஈஸ்டர் பண்டிகைகளை முறையாக கொண்டாட ஜூலியன் நாட்காட்டியை சீர் செய்ய முடிவு செய்தது. அன்று கத்தோலிக்க மத தலைவராக இருந்த போப் எட்டாம் க்ரிகோரியின் தலைமையில் கிபி1582ம் ஆண்டு “நூற்றாண்டுகள் லீப் வருடங்கள் ஆகாது இதில் நான்கு நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வரும் நூற்றாண்டு விதிவிலக்கு” எனும் லீப் வருட சீர்திருத்தம் செய்யப்பட்டது. இதை கண்டு பிடித்தது அலோசியஸ் லிலியஸ் என்றாலும் அதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட க்ரிகொரியனின் பெயரில் அன்றிலிருந்து ஜூலியன் நாட்காட்டி க்ரிகோரியன் நாட்காட்டி என்றே அழைக்கப்பட்டது.
இந்த நாட்காட்டியின் மாதங்களின் என்பது ரோம கடவுள்களின் பெயர்களாலும், அரசர்களின் பெயர்களாலும் அமைக்கபெற்றவை. வருடத்திற்கு 12மாதம் என்பதும் மாதத்திற்கு 30 அல்லது 31நாட்கள் என்பதும் காலம் காலமாக அவர்கள் பின் பற்றிய முறை. இதற்கு எந்த வரையறையும் இல்லை. ரோம நாட்காட்டி கிரேக்க நாட்காட்டியை மேம்படுத்தி அமைக்கப்பட்டது. கிரேக்க நாட்காட்டியில் மாதங்கள் 30 நாட்களை கொண்டதாக இருந்தது. வருடம் 36௦ நாட்களை கொண்டதாக இருந்தது. கிரேக்க நாட்காட்டியை 365 ¼ நாட்கள் கொண்ட சூரிய நாட்காட்டியாக மாற்றியபோது மாதநாட்களின் எண்ணிக்கை 30 & 31 ஆக மாறியது. மாதங்களின் எண்ணிக்கைக்கும் மாதநாட்களின் எண்ணிக்கைக்கும் சூரிய இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. வருடத்திற்கு 12மாதங்கள் என்பதும் மாதத்திற்கு 30 அல்லது 31 நாட்கள் என்பதும் இந்த கிருத்துவ நாட்காட்டி பண்டைய சந்திர நாட்காட்டியை சூரிய நாட்காட்டியாக மாற்றியதால் ஏற்பட்டதாகும்.
சீசர் கி மு 45 இல் அமைத்த காலண்டரில் க்ரிகோரி கி பி 1582இல் சிறிய மாற்றம் மட்டுமே செய்தார். சீசர் ஈசா நபிக்கு (ஸல்) முன்னால் வாழ்ந்தவர் என்பதால் இந்த நாட்காட்டிக்கும் கிருத்துவ மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஈசா நபி உயர்த்தப்பட்டு பல வருடங்களுக்கு பிறகு அறிமுகப்படுதப்பட்டதுதான் கிருத்துவ மதம். கி.மு. கி.பி. எனும் பிரிவு வரக்காரணம் வருடங்களை எண்ண வேண்டிய தேவை ஏற்பட்டதால்தான். கி.பி. 1ஆம் ஆண்டு சரியாக கிருத்து பிறந்த ஆண்டல்ல. அவர் கி.மு. 4 – 6 இல் பிறந்ததாக நம்பப்படுகிறது. மேலும் ஜனவரி 1 வருடப்பிறப்பு கிருத்துவிற்கு முன்னரே நடை முறையில் இருந்தது. ஜானஸ் எனும் கிரேக்க கடவுளின் நாளாக அது கொண்டாடப்பட்டது. அதை கிருத்துவின் விருத்தசேன தினமாக அனுசரிப்பது ஒரு சில கிருத்துவர்கள் பிரிவுகள் ஏற்படுதிக்கொண்டதே. இந்த நாட்காட்டியின் பிழைதிருத்தலிலும் எண்ணிடுதலிலும் கிருத்தவர்கள் பங்கெடுத்ததால் இது அதிகமாக கிருத்துவ நாள்காட்டி எனவே நம்பப்படுகிறது.
சூரிய நாள்காட்டியின் முதல் மாதம் மார்ச் மாதமாக அமைத்திருக்க வேண்டும்.
1. கிரிகோரியன் நாள்காட்டி சூரிய இயக்கத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. அதன் துவக்கம் விஞ்ஞான அடிப்படியிலும் வரலாற்று அடிப்படையிலும் கோடைகாலம் தொடங்கும் "SUMMER EQUINOX" ஆகும். கோடைகாலம் மார்ச்சில் துவங்குவதால் மார்ச் மாதமே முதல் மாதமாக அமைத்திருக்க வேண்டும்.
2. எந்த ஒன்றையும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டுமெனில் அதை கடைசியில் வைப்போம். உலகின் வேறு எல்லா நாள்காட்டியிலும் லீப் நாள் சேர்க்கப்படும் மாதம் கடைசியில் இருக்கிறது. பிப்ரவரியும் சூரிய நாள்காட்டியின் கடைசியில்தான் இருந்திருக்க வேண்டும்
3. செப்டம்பர் என்றால் SEPTEM=7 ஏழாவது மாதம் என்று பொருள். அக்டோபர் என்றால் OCTA =8; எட்டாவது மாதம் என்று பொருள். நவம்பர் NOVEM=9 ஒன்பதாவது மாதம். டிசம்பர் DECA=10 பத்தாவது மாதம். இந்த மாதங்கள் மட்டுமே தற்போது எண்வரிசையில் உள்ளன. ஆரம்பத்தில் ஜூலை மாதம் QUINTILIS எனும் பெயரில் இருந்தது. அதாவது ஐந்தாவது மாதம் என்று பொருள். பின்னர் ஜூலியஸ் என்னும் மன்னனின் பெயரில் அது ஜூலை என்று மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் ஆகஸ்ட் மாதம் SEXTILIST எனும் பெயரில் இருந்தது. அதாவது SIX TH ஆறாவது மாதம் என்று பொருள். பின்னர் அகஸ்டஸ் என்னும் மன்னனின் பெயரில் அது ஆகஸ்ட் என்று மாற்றப்பட்டது. இவைகள் முதல் மாதம் எது என்பதற்கான ஆதாரங்கள். இந்த அடிப்படையில். ஜனவரி 11வது மாதம். பிப்ரவரி 12வது மாதம். மார்ச் முதல் மாதம்.
4. 10 மாதங்களை கொண்ட ஆரம்ப ரோமர்களின் நாள்காட்டியில் மார்ச் மாதம்தான் முதல் மாதமாக இருந்தது. பின்னர் இரண்டு மாதத்தை சேர்த்தவர்கள் கடைசியில் சேர்க்காமல் ஆரம்பத்தில் சேர்த்தனர்.
மாதம்
|
பெயர் காரணம்
|
ஜனவரி
|
ஜானஸ் எனும் கிரேக்க கடவுளின் பெயர்
|
பிப்ரவரி
|
FEBRUUMஎனும் சுத்திகரிக்கும் சடங்கு இந்த மாதத்தில் நடைபெற்றதால் ரோமர்கள் இந்த பெயர் இட்டனர்
|
மார்ச்
|
மார்ஸ் எனும் கிரேக்க கடவுளின் பெயர்
|
ஏப்ரல்
|
APHROS எனும் கிரேக்க கடவுளின் பெயர்
|
மே
|
MAIA எனும் கிரேக்க கடவுளின் பெயர்
|
ஜூன்
|
JUNO எனும் ரோமக்கடவுளின் பெயர்
|
ஜூலை
|
ஆரம்பத்தில் QUINTILIS அதாவது 5வது மாதம் என்ற பெயரில் இருந்தது. பின்னர் ஜூலியஸ் சீசர் மன்னர் பிறந்த மாதம் என்பதால் அவரை சிறப்பிக்க இந்த மாதத்திற்கு இப்பெயர் இடப்பட்டது.
|
ஆகஸ்ட்
|
ஆரம்பத்தில் SIXTILI அதாவது 6வது மாதம் என்ற பெயரில் இருந்தது. பின்னர் அகஸ்டஸ் மன்னரை சிறப்பிக்க இந்த மாதத்திற்கு இப்பெயர் இடப்பட்டது.
|
செப்டம்பர்
|
ஏழாவது மாதம்
|
அக்டோபர்
|
எட்டாவது மாதம்
|
நவம்பர்
|
ஒன்பதாவது மாதம்
|
டிசம்பர்
|
பத்தாவது மாதம்
|
பிப்ரவரி 28 ஆனதும் ஆகஸ்ட் 31 ஆனதற்கும் எந்த குடும்ப சண்டையும் காரணமல்ல. தங்கள் காலண்டரை விற்க இந்த ஹிஜ்ராவினர் எத்தகைய பொய்களையும் துணிந்து சொல்வர்.
சூரிய நாட்காட்டியின் சிறப்பு:
பூமி தன் அச்சில் 23.45 டிகிரி சாய்வாக சுழலுவதாலும் மேலும் அது சூரியனை சுற்றி வருவதாலும் தான் பூமியில் காலநிலை மாறுபாடுகள் ஏற்படுகின்றன. பூமி சூரியனை சுற்றி வர ஒரு வருடம் என கணக்கிடுவதால் ஒவ்வொரு வருடமும் கால நிலை மாற்றங்கள் அந்தந்த மாதங்களிலே ஏற்படுகின்றன. இது விவசாயத்திற்கும், விடுமுறைகளை அறிவிப்பதற்கும் ஏதுவாக இருக்கிறது. உதாரணமாக நமது நாட்டில் பள்ளி விடுமுறை ஏப்ரல் மே மாதங்களில் உள்ளது. இதற்கு காரணம் கோடை காலம் ஏப்ரல் மே மாதங்களில் தான் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகின்றன. மேலும் விவசாயம் காலநிலை மாற்றத்தை பொறுத்தே நடை பெறுவதால் இது விவசாயத்திற்கும் உதவியாக உள்ளது.
சந்திர நாட்காட்டி:
சந்திரன் பூமியை சுற்றிவருவதற்கான காலத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட நாட்காட்டி. அல்லது ஒரு பௌர்ணமி முதல் மறு பௌர்ணமி வரை உள்ள நாட்களை கணக்கிட்டு உருவாக்கப்படும் நாள்காட்டி. அல்லது ஒரு அமாவாசை முதல் மறு அமாவாசை வரை உள்ள நாட்களை கணக்கிட்டு உருவாக்கப்படும் நாள்காட்டி. இந்த கால அளவு ஒரு மாதம் எனப்படுகிறது. இந்த மாதத்தின் கணக்கை நாம் அளந்தால் அது ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டிருக்கிறது ஒரு மாதத்தில் 29நாள்கள் 7மணிக்கூறுகள் இருந்தால் அடுத்த மாதத்தில் 29நாள்கள் 10மணிக்கூறுகள் இருக்கும். இப்படி 29நாட்கள் 6 மணிக்கூறுகள் முதல் 29 நாட்கள் 19 மணிக்கூறுகள் வரை மாறலாம், இரண்டு மாதங்களுக்கு இடையே 13 மணிநேர வித்தியாசம் வரை வரலாம். இதை சராசரியாக 29.530588853 நாள்கள் என கணக்கிடலாம். கிட்டத்தட்ட 29 ½ நாட்கள். சந்திரனின் இயக்கத்தில் ஒரு வருடத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. எனவே சந்திர இயக்கதைகொண்டு ஒரு வருடத்தை கணக்கிட இயலாது. வருடத்திற்கு 12மாதம் அல்லது 13மாதம் என்பது ஒவ்வொரு மதம் மற்றும் சமூகம் சார்ந்த வரையறைகள் ஆகும்.
சராசரியாக 29 ½ நாட்கள் வரும் மாதத்தில் அரை நாளை நடைமுறையில் பயன்படுத்த இயலாததால் ஒரு மாதத்திற்கு 29 நாட்கள் எனவும் அதன் அடுத்த மாதத்திற்கு 30 நாட்கள் எனவும் கணக்கிடலாம். 29.530589 நாட்களை 29.5 என சுருக்குவதால் 0.030589 நாட்களை கணக்கில் விடுகிறோம். எனவே ஒரு சந்திர நாட்காட்டியை முன் கூட்டியே அச்சடித்து பின் பற்ற வேண்டுமெனில் “லீப் மாத” முறை இங்கேயும் தேவை படுகிறது. சூரிய கணக்கின்படி உள்ள வருடத்தை ஒத்திருக்க வேண்டுமெனில் சந்திர வருடத்திற்கு 12 மாதங்கள் எனும் கணக்கை கொள்ள வேண்டும். அப்போது சந்திர நாட்காட்டியில் ஒரு வருடத்திற்கு 354.3670 நாட்கள் என வரும். சந்திர நாட்காட்டிக்கும் சூரிய நாட்காட்டிக்கும் சராசரியாக 11 நாட்கள் வித்தியாசம் வரும். எனவே சந்திர நாட்காட்டி காலநிலை மாற்றங்களை பிரதிபலிக்காது.
சந்திர-சூரிய நாட்காட்டிகள்:
சந்திர மற்றும் சூரிய நாட்காடிகளுக்கிடையேயான 11நாள் வித்தியாசத்தை குறைத்து சந்திர நாட்காட்டியை சூரிய நாட்காட்டியுடன் ஒத்துப்போகும்படி செய்தால் சந்திர நாட்காடியிலேயே காலநிலை மாற்றங்களையும் அறிந்து கொள்ளலாம் எனும் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நாட்காட்டி “சந்திர-சூரிய நாட்காட்டி”. இதற்கு இரண்டு அல்லது முற்று வருடங்களுக்கு ஒரு முறை ஒரு மாதத்தை திணிப்பார். அதாவது மாதங்களின் எண்ணிக்கை அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும். இரண்டு வருடங்கள் 12மாதமாகவும் இடையில் ஒரு வருடம் 13மாதமாகவும் இருக்கும். இதற்கு சிறந்த உதாரணம் யூதர்களின் நாட்காட்டி ஆகும்
நட்சத்திர நாட்காட்டி: இப்படி ஒரு நாட்காட்டி நடைமுறையில் இல்லை. மேலே கூறப்பட்ட மாத நாட்களின் எண்ணிக்கையையும் வருட நாட்களின் எண்ணிக்கையும் நட்சத்திரங்களை மையமாக வைத்து கணக்கிடும் முறையாகும். மேலே நாம் கூறிய சூரியனை அடிப்படையாக கொண்ட வருட கணக்கும் சந்திரனை அடிப்படையாக கொண்ட மாத கணக்கும் சிநோடிக் ஓட்டம் என்றழைக்கப்படுகிறது.
பூமி 23.5டிகிரி சாய்வாக சுழல்வதால் சூரியன் எல்லா நாட்களிலும் சரியாக கிழக்கிலிருந்து உதிப்பதில்லை. வருடத்திற்கு இரு முறை மட்டுமே சரியாக கிழக்கிலிருந்து உதிக்கிறது. மற்றுள்ள நாட்களில் சூரியன் வடகிழக்கிலிருந்தோ தென் கிழக்கிலிருந்தோ இருந்தோதான் உதிக்கிறது. சூரியன் வடக்கு எல்லையிலிருந்து உதிக்க ஆரம்பித்து தெற்கு எல்லை வரை சென்று மீண்டும் வடக்கு எல்லையில் உதிக்கும் வரை உள்ள காலம் ஒரு சிநோடிக் வருடம் எனப்படுகிறது. இதற்கு ட்றோபிகல் வருடம் என்றும் பெயருள்ளது. இது காலநிலை மாற்றத்தை அடிப்படையாக கொண்ட வருடமாகும். இதே சூரிய இயக்கத்தை நட்சிதிரத்தின் அடிப்படியில் கணக்கிட்டால் அது சிடேரியல் வருடம் எனும் நட்சத்திர நாட்காட்டியை குறிக்கும். சூரியன் இன்று உதிக்கும் இடத்தில இருக்கும் ஒரு நட்சத்திரத்தை அடிப்படியாக கொண்டால் மீண்டும் சந்திரன் அதே நட்சத்திரத்தில் உதிப்பதற்கு எடுத்துக்கொளும் காலம் ஒரு சிடேரியல் வருடம் எனப்படுகிறது. ஒரு சிடேரியல் வருடம் ஒரு ட்றோபிகல் வருடத்தை விட 20நிமிடங்கள் அதிகமானது. இந்த வித்தியாசம் காரணமாக சிடேரியல் வருடம் காலநிலை மாற்றத்தை பிரதிபலிப்பதில்லை.
ஒரு அமாவாசை முதல் மறு அமாவாசை முதல் வரையுள்ள நாட்கள் ஒரு சிநோடிக் மாதம் என்றழைக்கபடுகிறது. இந்த கால அளவில் சூரியனை மையமாக கொண்டு பூமியை சந்திரன் ஒருமுறை சுற்றி வருகிறது. மேலும் இதே கால அளவில் சந்திரனும் தனது அச்சில் ஒரு முறை சுழன்று விடுகிறது. சந்திரன் இன்று வானத்தில் இருக்கும் இடத்தை ஒரு நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு குறியிட்டால் மீண்டும் அடுத்த முறை அதே இடத்தில சந்திரன் வருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் ஒரு சிடேரியல் மாதம் எனப்படுகிறது. இது சராசரியாக 27.32நாட்கள் கொண்டதாக உள்ளது. இது சிநோடிக் மாதத்தை விட 2¼ நாட்கள் குறைவாக இருப்பதால் சிடேரியல் மாதம் பிறைகளை பிரதிபலிக்காது. அதாவது சிடேரியல் மாதத்தின் இறுதியில் அமாவாசையோ சிடேரியல் மாதத்தின் நடுவில் பௌர்ணமியோ ஏற்படாது.
இந்துக்கள் பயன்படுத்தும் நாட்காட்டி சந்திரன்-சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தையும் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட நாட்காட்டியாகும்.
இஸ்லாமிய நாட்காட்டி:
இஸ்லாமிய நாட்காட்டி ஒரு பரிசுத்த சந்திர நாட்காட்டி. முதல் பிறையிலிருந்து அடுத்த முதல் வரை உள்ள நாட்கள் ஒரு இஸ்லாமிய மாதம் எனப்படுகிறது. இது ஒரு சிநோடிக் மாதம் என்பதில் மாற்றுகருத்தில்லை. மேலும் ஒரு வருடம் என்பது 12 மாதங்களை கொண்டதென்பதும் குர்ஆனில் தெளிவாக்கப்பட்டுள்ளது. மேலும் மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களை கொண்டதாக இருக்கும் என்பதும் நபி மொழிகளில் மற்றுக்கருத்தின்றி தெளிவாக்கப்பட்டுள்ளது. இதை தவிர வேறு எந்த கணிதமும் இஸ்லாமிய நாட்காட்டியில் இடம்பெறாது. மற்ற சந்திர நாட்காட்டிகளை போல சந்திர ஓட்டத்தின் சராசரி கணக்கை எடுத்துவிட்டு மாதங்களை 29 நாட்களாகவும் 30 நாட்களாகவும் மாற்றி மாற்றி அமைத்து விட்டு, விடுபட்ட மணித்துளிகளை கூடி சில வருடங்களுக்கு இடையில் லீப் நாட்களை சேர்ப்பது இஸ்லாமிய நாட்காட்டி இல்லை. இதை இஸ்லாத்தின் பெயரால் இன்றளவும் பயன்படுத்தும் மக்களும் இருக்கின்றனர். மேலும் சந்திர இயக்கம் மற்றும் சூரிய இயக்கம் ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கும் சந்திர-சூரிய நாட்களிகளும் இஸ்லாமிய நாட்காட்டி ஆகாது. இஸ்லாமிய மாதத்தின் முதல் நாள் முதல் பிறையினுடைய நாள். இஸ்லாமிய மாதத்தின் கடைசி நாள் அடுத்த மாதத்தின் முதல் பிறையின் முந்தய நாள். மாதங்கள் என்பது 29 அல்லது 30 நாட்களை கொண்டதாக இருக்கும். இஸ்லாமிய வருடத்தில் 12 மாதங்கள் இருக்கும். இவை மட்டுமே இஸ்லாமிய நாட்காட்டியின் வரையறை.
நாட்காட்டிகளை பற்றிய வரலாறுகளையும் அறிவியலையும் கற்றுக்கொண்டோம். இனி ஹிஜ்ரி கமிட்டி அறியாமை வாதங்களை பார்போம். இவர்கள் முதலில் எடுத்து வைப்பது கிரிகோரியன் நாட்காட்டி நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டு செயல்படுவது என்பதுதான். இதற்கு ஆதாரமாக “நுஜூமியா” எனும் நட்சத்திரவியலை இஸ்லாம் தடைசெய்துள்ளது என்ற தகவலையும் சொல்கிறார்கள். இவர்கள் சொல்லும் முதல் அறியாமை வாதம் கிரிகோரியன் நாட்காட்டி நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டது என்பதுதான். அதாவது கிரிகோரியன் நாட்காட்டி சிடேரியல் நாட்காட்டியாம்.
அறியாமை #1
கிரிகோரியன் காட்காட்டி என்பது நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்ட சிடேரியல் நாட்காட்டி
இன்று புழக்கத்தில் இருக்கும் கிரிகோரியன் நாட்காட்டி முழுக்க முழுக்க பூமி சூரியனை சுற்றும் சிநோடிக் இயக்கத்தை அடிப்படையாக கொண்டது என்றும் அது நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்ட சிடேரியல் நாட்காட்டி அல்ல என்பதை ஏற்கனவே விளங்கி இருப்பீர்கள். கிரிகோரியன் நாட்காட்டி நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டிருந்தால் அது காலநிலை மாற்றங்களை பிரதி பலிக்காது என்பதே இதற்கு மிகச்சிறந்த ஆதாரம். கிரிகோரியன் நாட்காட்டி சிடேரியலாக இல்லாமல் சிநோடிக்காக இருப்பதால்தான் காந்தி மண்டபத்தில் எல்லா வருடமும் அக்டோபர் மாதத்தில் 2ம் தேதி சூரிய ஒளி விழுகிறது. கிரிகோரியன் நாட்காட்டி சிடேரியலாக இல்லாமல் சிநோடிக்காக இருப்பதால்தான் எல்லா வருடமும் மே 18 மற்றும் ஜூலை 16 ஆகிய நாட்களில் கஅபாவின் நிழல் பூமியில் விழாமலிருக்கிறது.
அறியாமை #2
இஸ்லாம் கூறும் நுஜூமியா என்பது சிடேரியல் எனப்படும் நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்ட வானியல்.
வானியல் என்பதற்கான அறபி பதம் இல்முல் ஃபலக். இது ஒட்டுமொத்த வானியலையும் படிக்கும் அறிவியல் ஆகும். நுஜூமியா என்பது நட்சத்திரங்களின் இயக்கத்தை மட்டும் படிக்கும் அறிவியலாகும். நட்சத்திரங்கள் மட்டுமே அன்று வழிகாட்டும் கருவியாக இருந்தது. நட்சத்திரங்களை கொண்டு மட்டுமே அன்று கிப்லாவை முஸ்லிம்கள் நிர்ணயித்தனர். மேலும் இத்தகைய நட்சத்திரவியல் பயன்பாட்டிற்கு குர்ஆனின் அனுமதி இதோ:
[16:16] அடையாளங்களையும் நட்சத்திரங்களைக் கொண்டும் அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள்.
நுஜூமியா எனும் வார்த்தைக்கு வேறொரு பொருளும் உள்ளது. நட்சதிரங்களின் அமைப்பை கொண்டு மனிதனின் எதிர்காலம் அல்லது எதிர்கால நிகழ்வுகளை கணிக்கும் கல்விக்கும் நுஜூமியா என்றே பெயர். ஜோதிடம், ஜாதகம், நட்சத்திரம், ராசிபலன் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பது எனும் நட்சத்திரத்தை பயன்படுத்தி செய்யப்படும் எல்லா மூடப்பழக்கங்களையும் இஸ்லாம் ஷிர்க் எனும் மாபெரும் பாவமாக காண்கிறது. இந்த இரண்டு நுஜூமியாவின் வித்தியாசங்களை எளிமையாக கூறவேண்டுமெனில் ஆங்கில வார்த்தைகளான ASTRONOMY ASTROLOGY என்பவையாகும். ASTRONOMY என்பது பரிசுத்த வானியலாகும் ASTROLOGY என்பது நட்சத்திரங்களை பயன்படுத்தி செய்யப்படும் பொய் விஞ்ஞானமான (pseudo-science) மூட நம்பிக்கையாகும். இதில் ஒன்றை இஸ்லாம் அனுமதித்தும் மற்றதை இஸ்லாம் தடை செய்துள்ளது. கிரிகோரியன் நாட்காட்டி நட்சத்திரங்கள் அடிப்படையிலானது அல்ல. சூரிய ஓட்டத்தின் அடிப்படையிலானது என்று விளங்கி இருப்பீர்கள். அப்படியே அது நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டிருந்தாலும் அப்படி ஒரு நாட்காட்டி மனிதனுக்கு பயன்படுமெனில் அதற்கு மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை. எதிர்காலத்தை கணிக்கவோ மழை போன்ற அல்லாஹ் மட்டுமே அறிந்த மறைவான விஷயங்களை கணிப்போம் என்ற பெயரிலோ இல்லாமல் அமைந்த ஒரு நட்சத்திர நாட்காட்டியை இஸ்லாம் ஒரு போதும் தடை செய்ததில்லை.
கிரிகோரியன் நாட்காட்டி சூரிய அடிப்படையிலானது என்பதும் அது இஸ்லாமிய வழிபாடுகளுக்கு பயன்படுத்த இயலாதென்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. இன்றுவரை எந்த மார்க்க அறிஞரும் கிரிகோரியன் நாட்காட்டியை பயன்படுத்தி நோன்பு வையுங்கள் பெருநாள் கொண்டாடுங்கள் என்று சொல்லவில்லை. கப்ர் வணங்கும் ஆலிம்கள் கூட எல்லா வருடமும் உரூஸை இந்த கிருத்துவ காலண்டர் தேதியில் கொண்டாடுங்கள் என்றோ மவ்லீதை இன்ன கிருத்துவ காலண்டர் தேதியில் கொண்டாடுங்கள் என்றோ இன்று வரை சொன்னதில்லை. தமிழக இமாம்கள் அப்படி பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது மாபெரும் பொய். எனினும் சூரிய அடிப்படையிலான ஒரு நாட்காட்டியை மார்க்க தேவைகளுக்கல்லாமல் வேறு தேவைகளுக்கு பயன் படுத்துவதில் மார்க்கம் எந்த தடையும் விதிக்கவில்லை. மாறாக அனுமதியும் வழங்கியுள்ளது. பின்வரும் இறை வசனங்கள் அதற்கு சான்றாக அமைகின்றன.
[6:96] அவனே பொழுது விடியச் செய்பவன்; அமைதிபெற அவனே இரவையும்; காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.
[10:5] ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். அவைகளுக்கு பல நிலையங்களை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.
எப்படி நட்சத்திரத்தை ஜோதிடத்திற்கு பயன்படுத்தாமல் வழிகாட்ட பயன்படுத்தலாமா அதே போல் சூரிய நாட்காட்டி நமக்கு நன்மை தருமெனில் அதை பயன்படுத்துவதில் எந்த தடையும் இல்லை. குறிப்பாக இன்று நமது மார்க்க தேவைகளுக்கு ஒரு சூரிய நாட்காட்டியின் தேவை இன்றியமையாதது. பின்வரும் இரண்டு மார்க்க தேவைகளுக்கு ஒரு சூரிய நாட்காட்டியை பயன்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை.
1. தொழுகை நேரங்கள்:
தொழுகை நேரங்கள் முழுக்க முழுக்க சூரியனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. முன்வரும் நாட்களின் தொழுகை நேரங்களை கணக்கிட இன்று சூரிய நாட்காட்டியை பயன்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. இன்று நாம் பள்ளிகளில் எழுதியிடும் தொழுகை நேரங்களும் இன்டர்நெட்டில் இருந்து கணக்கெடுக்கும் தொழுகை நேரங்களும் மற்றும் நமது மொபைல் போன்களில் இருக்கும் தொழுகை நேரங்காட்டிகளும் கிரிகோரியன் நாட்கையின் நாட்களில் மட்டுமே நேரம் காட்டுபவை. அதில் ஹிஜ்ரி நாட்காட்டியும் உள்ளதல்லவா என்று நீங்கள் கேட்கலாம். ஹிஜ்ரி கமிட்டி காலண்டர் எப்படி ஒரு கிரிகோரியன் – ஹிஜ்ரி மாற்றியோ (கண்வர்ட்டர் converter) அதே போல் ஒரு கன்வர்டர் தான் இந்த எல்லா சாப்ட்வேர்களிலும் பயன்படுத்தப்படுகிறது. நேரடியாக ஹிஜ்ரி நாட்காட்டியின் அடிப்படையில் அல்லது சந்திர ஓட்டத்தின் அடிப்படையில் நம்மால் தொழுகை நேரங்களை கணக்கிட இயலாது.
2. கிப்லா நிர்ணயம்:
இன்று கிப்லாவை நிர்ணயிக்கும் மிக துல்லியமான முறை சூரிய நாட்காட்டியை பயன்படுத்துவதாகும். மேலே நாம் கூறிய மே 18 மற்றும் ஜூலை 16 ஆகிய நாட்களில் கஅபாவின் நிழல் பூமியில் விழாமலிருக்கிறது. இது கிப்லா நாள் என்றழைக்கப்படுகிறது. இந்த தினங்களில் கஅபாவின் நிழல் பூமியில் விழாதிருக்கும்போது பூமியில் மற்ற பாகங்களில் உள்ள நிழல்கள் அனைத்தும் கிப்லாவை காட்டும். இந்த இரண்டு நாட்கள் அல்லாத மற்ற நாட்களில் கிப்லாவை நிர்ணயிக்க வேண்டுமெனிலும் நமக்கு ஒரு சூரிய நாட்காட்டி தேவைப்படுகிறது. மேலும் விளக்கங்களுக்கு நமது கிப்லா ஆய்வுக்கட்டுரையை வாசிக்கவும்.
இப்படி இஸ்லாமிய கடமைகளுக்கு இன்றியமையாமல் இருக்கும் மேலும் அல்லாஹ் குர்ஆனில் கூறும் ஒரு சூரிய நாட்காட்டியை செயல் படுத்தும் கடமை நமக்கு உள்ளது. அது ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் கிரிகோரியன் நாட்காட்டியாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. அப்படியே கிரிகோரியன் நாட்காட்டி கிரேக்கர்களும் கிருத்தவர்களும் பயன்படுத்தியதால் நாங்கள் பயன்படுத்தமாட்டோம் எனும் எண்ணம் இருப்பின் கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறாக ஒரு சூரிய நாட்காட்டியை இவர்கள் உருவாக்கட்டும்.
அறியாமை #3: கிரியோரியன் நாட்காட்டி கிருத்துவ மன்னர்களின் ஆளுமைக்கு உட்படுத்தப்பட்டு மாசுபடுதப்பட்டது.
இதை நாம் மேலே ஏற்கனவே விளக்கிவிட்டோம். லீப் வருடக்கணக்கில் ஒரு சிறிய மாற்றம் செய்ததை தவிர ஜூலியன் நாட்காட்டியில் கிரிகோரியன் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதைதவிர வேறு எந்த தொடர்பும் கிருத்துவதிற்கும் கிரிகோரியன் நாட்காட்டிக்கும் இல்லை. ஜூலியஸ் சீசர் மற்றும் அகஸ்டசை கிருத்தவ மன்னர்கள் என்பது இவர்கள் எப்போதும் செய்யும் வரலாற்று திரிவு. மேலும் அகஸ்டஸ் பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளை எடுத்து தன் பெயரிலிருக்கும் ஆகஸ்ட் மாதத்திற்கு 31நாளாகினார் என்பதும் வரலாற்று முரண். அகஸ்டஸ் எனும் பெயர் மாற்றம் நிகழ்வதற்கு முன்பே செக்சிலிஸ்ட் எனும் அந்த மாதம் 31நாட்களுடையதாகவே இருந்தது.
அறியாமை #4 Y2K PROBLEM
அறியாமை #4 Y2K PROBLEM
Y2K ப்ராப்ளத்தை பற்றி தெரியாமலிருக்க கமிட்டியினர் 2000க்கு பின் பிறகு பிறந்தவர்கள் என்று கூற இயலாது. விஞ்ஞானிகள் என்று கூறிக்கொண்டு கமிட்டியில் ஏமாற்றும் வேலையை செய்பவர்களும் ஆலிம்கள் எனும் பேரில் யூத கலண்டரை கடவுளின் காலண்டர் என்பவர்களும் இந்த பிரச்னை தலைதூக்கிய 98, 99 களில் முதிர்ச்சியடைந்தவர்களாகவே இருந்திருப்பர். மேலும் கட்டுரை எழுதும் அளவிற்கு முதிர்ச்சியுள்ள மனிதர் குறைந்தது 70, 80களில் பிறந்திருப்பார். அப்படி ஒருவருக்கு Y2K ப்ராப்ளத்தை பற்றி தெரியவில்லை என்பது வேதனைக்குரியது.
நாம் தேதிகளை 2000ம் ஆண்டு வரை 11-2-98, 21-7-99 இப்படிதான் எழுதியிருப்போம். பின்னர் 2000ம் ஆண்டு நெருங்கும் வேளையில் இனிமேல் 00 என்று எழுதவேண்டுமா என்பது சாதாரண மக்களுக்கே எழுந்த சந்தேகமாக இருந்தது. இதே சந்தேகம் கம்பியூட்டரிலும் வந்தது. 2000 ஆண்டு வரை செயல்பட்டிருந்த கணினிகள் ஆண்டுகளை கணக்கிட இரு இலக்க எங்களை பயன்படுத்தின. 2000 ஆண்டுவரை ஆண்டுகளை 96, 97, 98 என்றே எழுதிவந்தோம். கணினிகளும் பல இயங்குதளங்களும் இதையே பயன்படுத்தி வந்தன. இப்படி இரு இலக்கத்தில் ஆண்டுகளை கணக்கிட்டால் 1999க்கு பின் வரும் 2000ம் வருடத்தை 00 என்று குறிப்பிட வேண்டி வரும்.
இப்படி குறிப்பிட்டால் பல சிக்கல்கள் வரும். உதாரணமாக;- 98 க்கும் 93க்கும் இடையே எத்தனை வருடம் என்றால் 98 – 93 = 5 என்று நாம் கழித்து சொல்வோம். கம்பியுட்டரும் இப்படித்தான் கழித்தது. ஆனால் 2000க்கும் 93 க்கும் இடையே எத்தனை வருடம் என்பதை 00 – 93 என்று கழித்தால் – 93 என்று விடை வரும். இதை முழு எண்களில், 4 இலக்கங்களில் வைத்தே கழிக்க வேண்டும் 2000 - 1993 = 7. இவ்வாறு 2000ம் வருடங்களுக்கு முன்பிருந்த கணினிகளிலும் சாப்ட்வேர்களிலும் இரு இலக்க எண்களே பயன்படுத்தப்பட்டதால் பல குழப்பங்கள் ஏற்பாடலாம் என்று அஞ்சப்பட்டது. கணினியில் இருந்த பல கணக்கு கோப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலைமை வந்தது. இதனால் பல பொருளாதர இழப்பு ஏற்படும் என அஞ்சப்பட்டது. இதுவே Y2K PROBLEM ஆகும். ஆண்டுகளை இரண்டு இலக்கங்களில் எழுதி/கணக்கிட்டு வந்தோம், 2000ம் ஆண்டில் இரண்டு இலக்கங்களை எழுதினால் 00 என்று வரும். இதனால் கம்பியுட்டரில் ஏற்படும் பாதிப்பே Y2K PROBLEM.
மேலும் லீப் வருட முறை பற்றி தெரியாத பல கணினி வல்லுனர்கள் 2000ம் ஆண்டை எல்லா நூற்றாண்டுகளை போல் லீப் வருடமல்ல என்று புரோகிராம் செய்து வைத்திருந்தனர். அதாவது 2000 ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்திற்கு 28 நாட்கள் என்று சிலர் தங்களது சாப்ட்வேர்களில் எழுதிவிட்டனர். இது சில சாப்ட்வேர்களை மட்டுமே பாதித்தது
ஆனால் ஹிஜ்ராவினர் விஞ்ஞானம் என்று வழமையாக தங்கள் அறியாமையை மேடையில் அரங்கேற்றம் செய்வதைப் போல இந்த அறியாமையையும் மேடையில் அரங்கேற்றம் செய்கின்றனர். “2000 வது ஆண்டில் பிப்ரவரிக்கு 30 நாட்கள் வருமா?” என்ற சர்ச்சைக்கு பெயர்தான் Y2K PROBLEM என்று மேடை மேடையாக பேசுகின்றனர். புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.
துல்லியம் என்றால் என்ன?
துல்லியம் என்பது அளவைகளில் பயன் படுத்தும் வார்த்தை ஆகும். உதாரணத்திற்கு சொல்வதென்றால் “மாலிக் பாய் கடையில் வாங்கும் இறைச்சியை விட சாதிக் பாய் கடையில் இறைச்சியின் எடை சரியாக இருக்கும்”. இன்னும் விரிவாக சொல்வதென்றால் ஒரு நோயை கண்டுபிடிக்க “சிறுநீரில் செய்யபடும் சோதனையை விட ரத்தத்தில் செய்யப்படும் சோதனை மிக துல்லியமாக இருக்கும்”. என்பன நாம் அன்றாடம் வாழ்வில் பயன் படுத்தும் துல்லியம் தொடர்பான உதாரணங்கள்.
இப்போது துல்லியம் யாருக்கு எதற்கு எப்போது தேவை என்று பார்ப்போம். ஒரு நோய் உள்ளதா இல்லையா என்று அறிய அந்த நோய்க்கிருமி உடலில் எந்த பாகத்தில் இருந்தாலும் அந்த நோய் உள்ளது என்றே நிறுவப்படும். ஒரு சில ரத்தத்தில் வாழும் கிருமி மலத்தில் வாழாது. மலத்தை சோதனை செய்து அதில் கிருமி இல்லாதபோது ரத்த சோதனைதான் துல்லியமான முடிவை தரும் என்ற முடிவுக்கு வர முடியாது. ஆனால் சக்கரை வியாதியின் அளவை அளக்க ரத்த சோதனைதான் துல்லியமான முடிவை தரும். சிறு நீர் சோதனை தராது. ஆக, துல்லியம் என்பது அதன் தேவையை பொறுத்து மாறுகிறது.
இஸ்லாமிய நாட்காட்டிக்கு துல்லியத்தின் தேவை என்ன? இஸ்லாமிய நாட்காட்டியில் எதை துல்லியமாக கணக்கிடுவதாக இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்? அதன் விடை இதுதான். நாசாவிடம் டேட்டாவை வாங்கி நாங்கள் காலண்டர் தயாரித்தோம் என்று பொய் சொல்கிறார்கள். இவர்கள் வைத்திருக்கும் காலண்டரின் இயற்பெயர் உம்முல் குரா காலண்டர். 1972 முதல் 1999 வரையில் சவு தி அரசின் அலுவலக காலண்டராக இருந்தது. அதைப் பார்த்து நோன்பையும் பெருநாட்களையும் சவுதி அறிவித்து உலக முஸ்லிம்களிடமிருந்து வாங்கிக்கட்டிக்கொண்டது. தவறை உணர்ந்து அதை குப்பையில் வீசி எறிந்தது சவுதி. அது 7 வருடங்களாக சவுதி குப்பையிலே கிடந்தது மட்கிய பிறகு 2007ம் ஆண்டில் அதை தமிழ்நாட்டிற்கு எடுத்து வந்து "இது அல்லாஹ்வின் காலண்டர், நாசாவிடம் டேட்டாவை வாங்கி நாங்களே இதை தயாரித்தோம்" என்றனர். நாசாவின் டேட்டாவை எடுத்து இவர்களே காலண்டர் தயாரித்ததாக வைத்துக்கொள்வோம் “1437 ம் ஆண்டின் துல் ஹஜ் மாதத்தின் இறுதியில் ஏற்படும் அமாவாசை பகல் 11மணிக்கு ஏற்படுகிறது” என்றா நாஸா தகவல் தருகிறது; இல்லை!!! நாஸா தரும் அமாவாசை பற்றிய தகவல் இப்படி இருக்கும் “கிருத்துவ நாட்காட்டியின் 2016ம் வருடம் மார்ச் 9ம் தேதி புதன்கிழமை சர்வதேச நேரப்படி 01:55க்கு அமாவாசை நிகழும்”. இந்த தகவலை இவர்கள் ஹிஜ்ரி கமிட்டி காலண்டராக மாற்றுவார்கள். இதை மிக எளிமையாக விளங்குவதென்றால் கிருத்தவ நாட்காட்டியை எடுத்துக்கொண்டு அதில் அமாவாசை நிகழும் நாளை குறித்துகொள்ளுங்கள். அதன் அடுத்த நாளில் இஸ்லாமிய மாதம் ஆரம்பமாவதாக குறித்துகொள்ளுங்கள். இப்படி ஆரம்பம் ஆகும் ஒவ்வொரு மாதத்திற்கும் வரிசை அடிப்படையில் இஸ்லாமிய மாதங்களுக்கான பெயர்களை வழங்குங்கள். இதுதான் கமிட்டி காலண்டர். இதை நீங்கள் வீட்டிலேயே செய்து பார்க்கலாம். செய்து விட்டு கமிட்டி காலண்டரை எடுத்து ஒப்பிட்டு பாருங்கள். மிகச்சரியாக பொருந்தும்.
ஆக கிருத்துவ நாட்காட்டியில் நாஸா தரும் துல்லியமான அமாவாசை நேரத்தை குறித்துக்கொண்டு அதன் மேல் இஸ்லாமிய மாதங்களின் வர்ணத்தை பூசினால் அது கமிட்டி காலண்டராக மாறிவிடுகிறது. இவர்கள் எதை கிருத்தவ மன்னர்களால் மாசுபடுதப்பட்டது என்று வசை பாடினார்களோ அதையே எடுத்து வைத்து ஹிஜ்ரி சாயம் பூசி துல்லியமான இஸ்லாமிய நாட்காட்டி என்று பிரச்சாரம் செய்கின்றனர்.
கமிட்டியின் இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம் என்ற கட்டுரையை நாம் ஆய்வு செய்ததில் தெரிந்துகொண்டவை:
1) கிரிகோரியன் நாட்காட்டி நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டது என்பது கமிட்டி தவறாக செய்து வரும் பிரச்சாரம். கிரிகோரியன் நாட்காட்டி காலநிலை மாற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டது.
2) மக்களுக்கு பயன்படும் ஷிர்க் அல்லாத, எதிர்காலத்தை கணிக்காத, மறைவானவற்றை கணிக்காத நுஜுமியாவை தவறென கமிட்டி விளங்கி வைத்திருப்பது குர்ஆன் 16:16 இல் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய நுஜுமியாவை பயன்படுத்தும் அனுமதியை மறுப்பதாகும்.
3) அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியது சந்திர நாட்காட்டி மட்டும்தான் என்பதும் இறைவார்தையான [6:96] [10:5] [17:12] ஆகிய குர்ஆன் வசனங்களை மறுப்பதாகும். இதற்கு மிகப்பெரிய நடைமுறை ஆதாரம் நாம் பயன்படுத்தும் தொழுகை நேரங்களை கணக்கிரும் முறை மற்றும் கிப்லாவை கணக்கிடும் முறைகள். இன்று தொழுகை நேரங்களையும் கிப்லாவையும் துல்லியமாக கணக்கிட ஒரு சூரிய நாட்காட்டியின் தேவை இன்றியமையாதது.
4) ஹிஜ்ரி கமிட்டியின் நாட்காட்டியை சரிகாண கிரிகோரியன் நாட்காட்டியை வசைபாடுவதற்கான தேவை என்ன. “கிரிகோரியன் நாட்காட்டியை கிருத்தவ மன்னர்கள் மாற்றினார்கள்” & “Y2K ப்ராப்ளம் என்பது பிப்ரவரிக்கு 30 நாட்கள் உண்டா எனும் குழப்பம்” எனும் வரலாற்று பொய்களையும் பொது அறிவற்ற வாதங்களையும் வைக்கும் தேவை என்ன.
5) இவற்றை கூறும் நம்மை கிரிகோரியன் நாட்காட்டி புனிதமானது எனகூறி விட்டான், கிரிகோரியன் நாட்காட்டியை இஸ்லாமிய மார்க்க வழிபாடுகளுக்கு பயன்படுத்தலாம் என்று கூறிவிட்டான் என்று இவர்கள் கூறினால் இவர்களை எப்படி அழைப்பதென்று தெரியவில்லை. நாம் மேலே கூறிய அனைத்தும் நடைமுறையில் உள்ளவை. தொழுகை நேரங்களை நாம் கிரிகோரியன் நாட்காட்டியை கொண்டுதான் கணக்கிடுகிறோம். அதை தவிர்த்தாலும் ஒரு சூரிய நாட்காட்டியின் தேவையின்றியமையாதது. கிப்லாவை துல்லியமாக நிறுவவும் ஒரு சூரிய நாட்காட்டி இன்றி அமையாதது. இன்று நாம் இத்தைகைய தேவைகளுக்கு கிரிகோரியன் நாட்காட்டியைத்தான் பயன்படுத்துகிறோம்.